Subhasree Thanikachalam அவர்கள் ‘லக்ஷ்மண்’ என்பதை விட ‘லக்ஷ்மண் குட்டி’ என செல்லமாக அழைப்பது இந்த குட்டி பையனை. சிறு வயது முதலே பாடல் போட்டிகளில் கலந்துகொண்டு இன்று அற்புதமாக பேஸ் (bass) கிடார் வாசிக்கும் கலைஞன். நண்பர்களுடன் சேர்ந்து இசைக்குழு அமைத்து பாடுகிறான்.
இசைக்குழுவில் முக்கிய அங்கமான பேஸ் கிடார் தாளவாதிகளுக்கு தன் ஆதரவை வழங்கி, தாளத்திற்கும் மெல்லிசைக்கும் இடையில் ஒரு பாலத்தை உருவாக்குகிறது. நம் உயிர் மூச்சு போல. இருப்பது தெரியாது. ஆனால் இல்லாவிட்டால் ஏதோ ஒன்று காணாமல் போனது போல இருக்கும். பேஸ் கிடாரின் மகத்துவத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா? Stevie Wonderஇன் Supersition பாடலை கேளுங்கள். அல்லது QFR-228 பாடலை உற்று கவனியுங்கள்.
சுஜாதா கட்டுரையில், குறும்புக்கார மாணவன் ஒருவன் டெஸ்க்கில் ப்ளேடை சொறுகி ‘டொய்ங்’ என ஒலி எழுப்ப, ‘என்னடா சத்தம் அது?’ என வாத்தியார் கேட்க ‘வண்டு சார்’ என்றானாம்! கிட்டத்தட்ட அந்த வண்டு சத்தம் தான் நம்ம லக்ஷ்மண் குட்டி எழுப்பும் பேஸ் இசை.
மேம்போக்காக பேஸ் இசை கேட்காது, ஆனால் எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு மெல்லிய அதிர்வலையை (resonance) ஏற்படுத்தி நம் கால்களை தாளமிடவைக்கும். Paul McCartney மற்றும் ஆலாப் ராஜு இருவரும் பேஸ் கிடார் கலைஞர்களாகத்தான் இசை உலகில் புகுந்து பின்னாளில் பிரபலமானவர்கள்.
QFR-228 (ஓ.. வசந்த ராஜா) பாடலுக்கு வருவோம். லக்ஷ்மணுக்கு மகுடம் சூட்டிய பாடல் இது என்பது என் கருத்து. ராஜாவின் கோஷ்டி இசைக்கும் (Orchestration) இந்த QFR பாடலின் நேரடி இசை (live music)க்கும் சற்றும் வித்தியாசம் தெரியவில்லை. லலித் வாசிக்கும் ஃப்ளூட் ஆகட்டும் சு.ரேசன் சாரின் கிடார் மற்றும் அஞ்சனியின் வீணை, வெங்கட்டின் மிருதங்கம், அச்சுத குமாரின் ட்ரம்ஸ் எல்லாமே இசையின் பல பரிணாமங்களையும் அளித்து நம்மை மலைக்க வைக்கின்றன.
பாடலின் ஆரம்ப இசையே (பல்லவிக்கு முன்) பிரம்மாண்டம். லலித்தும் (ஃப்ளூட்) கோபாலும்(கீபோர்ட்) ஆரம்பிக்க, கிடாரும் (சுந்தரேசன் சார்) வீணையும்(அஞ்சனி) இம்மி பிசகாமல் ஓருசேர உலோகத்தந்தியை மீட்ட, பிரம்மாண்டமாக மேளங்களுடன் வெங்கட் மற்றும் அச்சுத்தும் சேர குழலோசையுடன் பல்லவியை சுகன்யா ஆரம்பிக்கிறார்.
முதல் சரணத்தின் பிரதான தாளவாதி வெங்கட் (மிருதங்கம்) மற்றும் அசத்தலாக பாடிய கோபால். அடுத்து இன்டர்ல்யூடில் சுந்தரேசன் சாரின் கிடாரும் கோபாலின் கீபோர்டும் லலித்தின் குழலோசையும் மாறி மாறி ஒலிக்க(திரையில் அர்ச்சனா- பானுசந்தரின் குதிரை ரதம்) அடுத்து ட்ரம்ஸ் உயரமே உள்ள சின்னப்பையன் அச்சுத் அட்டகாசமாக சேர்ந்துகொள்கிறான். என்ன ஒரு எடிட்டிங் சிவா! Just brilliant.
இரண்டாவது சரணம் முழுக்க சுகன்யா, லக்ஷ்மண் மற்றும் அச்சுத்தின் ஆளுமை தான். உற்று கேளுங்கள். சுகன்யா சற்றும் பிசிறில்லாமல் இந்த சரணத்தை பாடுகிறார். அதலுள்ள nuances ஒன்றையும் விடாமல் சரணத்தின் அழகுணர்வை கூட்டுகிறார்.
‘ஆராதனை நேரம்.. ஆலாபனை ராகம்’ வரியில் ‘ஆராதனை’யை விட ‘ஆலாபனை’க்கு சின்னதாய் ஆக்சிலேட்டர் கொடுத்து ஒரு அழுத்தம்.
அடுத்து ‘என் மேகமே வா வா.. இதழ் நீரைத் தூவு’ வரியில் அந்த ‘தூவு’ என்ற இரண்டெழுத்து வார்த்தையை பிரித்து தூ-ஊ-வு-ஊ-உ(5) .. அதே வரி மறுபடி வரும்போது சற்று மாறுபட்டு தூஊ-வுஉ(2).
Sஜானகி அவர்களைப்போலவே சங்கதிகளையும் கமகங்களை சற்றும் சிரமப்படாமல் பிரயோகிக்கிறார் சுகன்யா. அது ஜாருவா அல்லது ஸ்புரிதமா போன்ற உட்பிரிவுகளெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் கச்சிதமாக வளையும் உள்ளோசைகள். இந்த சரணத்தை மட்டும் ஜானகியம்மா அவர்கள் கேட்க வேண்டும். சிலிர்ப்பூட்டுகின்றது சுபஶ்ரீ!
இந்த இரண்டாம் சரணத்தை சற்றே தூக்கி பிடிப்பது லக்ஷ்மண் குட்டியின் பேஸ்கிடார் தான் என நினைக்கிறேன். வாத்தியக்காரர்களின் இசையையும் பாடகர்களின் குரலையும் நாம் கண்களால் கண்டும் காதால் கேட்டுக்கொண்டும் இருக்க, நம் நெஞ்சுப்பகுதியிலிருந்து எழும்பும் லக்ஷ்மணின் அந்த பேஸ் தான் பாடலுக்கே உயிர் நாடி. அதிலும் சுகன்யா இந்த சரணத்தை முடித்து (‘மன்மத கோவிலில் பாலபிஷேகம்’ வரிக்குப்பின்) பல்லவி ‘ஓ.. வசந்த ராஜா’ என தொடங்கும் அதே நேரம் (-0.29/4.33) அந்த ‘வசந்த’ விற்குப்பின்னல் லக்ஷ்மண் குட்டி ஃப்ரெட்போர்டை booom என slide செய்து எழுப்பும் subtle இசை அபாரம்.
இவ்ளோ சமாச்சாரம் இருக்கா என மீண்டும் இந்த QFR-228 பாடலை Head phone இல்லாமல் கேட்டால் பேஸ் இசை கேட்காது..ஆமாம்.
எனக்கு பிடித்த QFR பாடல்களில் ஒன்று இது என எத்தனை பாடல்களைத்தான் சொல்வது! சுகன்யா மற்றும் கோபால் ராவ் உட்பட எல்லா கலைஞர்களும் அளித்திருக்கும் best performance இது. குறிப்பாக லக்ஷ்மண் தன் பேஸ் கிடாரால் என்னை மலைக்க வைத்த பாடல்களில் ஒன்று இது. லக்ஷ்மண் குட்டியை ஓவியமாக வடிப்பதிலும் பெருமை எனக்கு.
No comments:
Post a Comment