Friday, June 20, 2025

QFR- கீர்த்தனா

 அடால்ஃப் சாக்ஸ் (பெல்ஜியர்) எனும் க்ளாரினெட் வத்தியக்காரரால் தயாரிக்கப்பட்ட இசைக்கருவி சாக்ஸஃபோன் ஆகும். ஒருநாள் அவர் தான் வாசிக்கும் பேஸ் க்ளாரினெட்டின் கீவொர்க் மற்றும் ஒலியியலை (acoustics) மேம்படுத்தி அதன் கீழ் வரம்பை (lower range) நீட்டித்து பல மேம்பாடுகளைச் செய்து, உயர்ந்த ஒலிக்கேற்ப ஒரு பெரிய கூம்பு வடிவ பித்தளை மணியை (Bell) இணைத்து முதன்முதலில் சாக்ஸஃபோனை தயாரித்தார்.

ராக் மற்றும் ஜாஸ் இசை உலகில் முக்கிய அங்கம் வகிக்கும் இக்கருவி இந்திய சினிமாவிலும் புகுந்து நமது இசையமைப்பாளர்கள் நம் செவிக்கு விருந்து படைக்கிறார்கள். கர்நாடக இசையிலும் அமரர் கத்ரி கோபால்நாத் போன்றவர்கள் சாக்ஸஃபோன் இசையை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர்கள்.
Subhasree Thanikachalam அவர்களின் QFR (Quarantine From Reality)யில் கீர்த்தனா ஶ்ரீராம் என்ற சிறுமி அபாரமாக இந்த Brass இசையை அளிக்கிறார்.
தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளின் இசையில் வந்த ‘நல்ல மனம் வாழ்க’ (QFR-287) பாடலின் இடையிசை முழுக்க முழுக்க ட்ரம்பெட் தான். கீர்த்தனாவை பொறுத்தவரை lower மற்றும் higher octave என எல்லாமே அவருக்கு ஜுஜூபி தான். இந்த பாடலில் அவரது ஆளுமை நம்மை வியக்க வைக்கிறது.
‘நினைவோ ஒரு பறவை’ (QFR-317) பாடலின் ஆதியில் பாடகர்கள் ஹம்மிங்குடன் மெதுவாக பாட ஆரம்பித்து, டட்டடும்டடாவென ட்ரம்ஸ் ஒலியைக்கடந்து, கமல்-ஶ்ரீதேவியின் கடற்கரை குதிரையோட்டம் முடிந்து ரதத்தில் செல்லும்போது, ஷ்யாம் பெஞ்சமினின் ‘ணங்’ மணியோசை கீபோர்டில் ஒலிக்க, அந்த காட்சிக்கு மிகப்பொருத்தமான ட்ரம்பெட் இசையை இந்த பெண் அற்புதமாக சாக்ஸஃபோனில் வாசிப்பார். சிலிர்க்க வைக்கும் இசை.
‘முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே’ (QFR-315) அனுபல்லவி முடிந்து முதல் இடையிசையில் கிடார், பேஸ், காங்கோ, ட்ரம்ஸ் புடை சூழ, மிக நீண்ட, அதாவது 21 நொடிகளுக்கு சாக்ஸஃபோன் இசையை அதிகாரப்போக்குடன் (authoritative) அசாத்தியமாக வாசிக்கிறார்!
LR ஈஸ்வரி மற்றும் TMS அவர்கள் பாடும் ‘பார்வை ஒன்றே போதுமே’ (QFR-348) யில் முதல் இன்டர்ல்யூடில் இவரது வாசிப்பு பிரமாதம்.
ஷரத் சந்தோஷ் பாடும் ‘சங்கீத மேகம்’ (QFR-358) பாடலில் சாக்ஸ் மற்றும் ட்ரம்ப் இரண்டையும் அசராமல் வாசிக்கிறர்.
QFR-318 ‘பாடவா உன் பாடலை’ விருவிருப்பான பாடல். அம்பிகா மோகனை எதிர்பார்த்து கவலையுடன் பாட, மோகன் வேகமாக ஃபியட் கார் ஓட்டி வர, அது சீரியசான காட்சி.. பாடலில் அனுபல்லவிக்குப்பின் உடனே ஷெஹ்னாய், சாக்ஸ் கலந்து கட்டிய, டென்ஷன் கலந்த இசை. பிண்ணியெடுத்து விட்டார் கீர்த்தனா.
என்னை மலைக்கச்செய்த பாடல், ‘கண்ணாலே பேசிப்பேசி கொல்லாதே’ (QFR-183) பாடலுக்கு இவர் சாக்ஸ் மற்றும் மெலோடிகா இரண்டும் வாசித்தது.
வாத்திய இசை அல்லாது பரதம் ஆடுகிறார். பியானோ இசை, பெற்றோருடன் பாடுவது, நண்பர்களுடன் Jam, என சகலகலாவல்லி இவர். அப்பா (Shriram Murthy ) மற்றும் அம்மா காயத்ரி ஶ்ரீராம் இருவரும் இசை வல்லுநர்கள்.
QFRஇல் நிறைய பாடல்கள் பாடியிருந்தாலும் மிக அநாயசமாக பாடி அசத்திய பாடல், Prof. ஜூலியன் அவர்களுடன் இவர் சேர்ந்து பாடிய தவப்புதல்வன் படத்தின் ‘நானொரு காதல் சன்யாசி’ (QFR-396).

No comments:

Post a Comment