சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் அன்பர்களுக்கு! ஞாயிறன்று மதியத்திற்கு மேல், ஊருக்கு போகத்தான் வேண்டும் என்கிற அவசரமில்லையென்றால், இந்த சாலையில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல் நலம். காரணம் கடைசி பத்தியில்.
கடந்த ஞாயிரன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் சுமார் 11 மணி வாக்கில் துரைப்பாக்கம் விடுதியிலிருந்து கூகிள் மேப் போட்டுக்கொண்டு கிளம்பினோம். OMRஐயும் பல்லாவரத்தும் இணைக்கும் 200 அடி ரேடியல் சாலை எனக்கு ரொம்ப பிடிக்கும். வேகமாக நகரும் போக்குவரத்து, மெட்ரோ ரயிலுக்கென பள்ளம் ஏதும் தோண்டப்படாத சாலை.
திருமுடிவாக்கம் போன்ற புறநகர்ப்பகுதிகள் கடந்து ஶ்ரீபெரும்புதூர் சாலையை பிடிக்கும்போது திடீரென சிங்கபெருமாள் கோயில் போகலாமே என ஐடியா உதித்த மறுநொடி மிளகு தோசை மற்றும் சக்கரைப்பொங்கல் பளிச்சென மனதில் தோன்ற, கூகிள் திசையை செங்கல்பட்டு பக்கம் திருப்பினோம், மேற்கொண்டு 20கிமீ அதிக தூரம் காட்டியும்.
‘சீக்கிரம் இந்த துளசி மாலையை வாங்கிட்டு போங்கய்யா! ஒரு மணிக்கு சாத்திடுவாங்க’ என கடைக்கார பெண்மணி சொல்ல, உள்ளே அவசரமாக ஓடினோம். சன்னதி வாசலில் திரை போட்டு இன்னும் அரை மணி நேரம் கழித்து தரிசனம் கிடைக்கும் என்ற பதாகையோடு. அடடா… கொஞ்சம் லேட்டாயிடுச்சே என தயங்கி நின்றபோது சில பக்தர்கள் படாரென திரையை விலக்கி உள்ளே ஓட, நாங்களும் சேர்ந்துகொண்டோம்.
பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயிலில் விஷ்ணு நரசிம்மராக காட்சி தருகிறார். சங்கு சக்கரம் ஏந்தி வலக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடக்கரத்தை தொடை மீது வைத்தும் பிரம்மாண்ட திருவுருவில் நமக்கு அருள் பாலிக்கிறார். பக்கத்தில் அஹோபிலவல்லி. பாடலாத்ரி ந்ருசிம்மரை ஆசை தீர ரசித்து சேவிக்க பத்து நொடி கூட ஆகவில்லை, ‘சார் போங்க போங்க இன்னம் அரை மணி நேரம் வெயிட் பண்ணக்கூடாதா’ என கோயில் சிப்பந்திகள் எங்களை விரட்ட, உக்கிர நரசிம்மரை மறுபடியும் பார்த்து விட்டு திருப்தியாக வெளியே வந்தோம்.
பிரசாதம் பகுதியில் நல்ல கூட்டம். அங்கே பிரதான இடம் மிளகு தோசைக்குத்தான். பெருமாளுக்கு பச்சரிசியில் தான் மிளகு தோசை செய்வார்களாம். சுக்கு, மிளகு, பெருங்காயம், வெந்தயம் மஞ்சத்தூள் சேர்த்தறைத்த மாவு நன்கு பொங்கி புளித்திருக்க வேண்டுமாம். தடிமனாக ஊத்தப்பம் போன்று வார்த்த தோசையில் வரமல்லித்தூள் சேர்த்த மிளகாய்ப்பொடி எண்ணைக்கலவையை வஞ்சனையில்லாமல் இரண்டு மூன்று ஸ்பூன்கள் விட்டுத்தடவி மந்தார இலையில் சுருட்டித்தருகிறார்கள். பார்க்கும்போதே தோசையை கடித்து சாப்பிட ஆசை வரும். கூடவே சக்கரைப்பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் மற்றும் தட்டை எல்லாம் வாங்கிக்கொண்டோம். தயிர்சாதம் சட்டென விற்று தீர்ந்து போகிறது. மிளகு தோசைக்கு மட்டும் தனியாக 3 ஆட்கள் போட்டும் கட்டுக்கடங்காத கூட்டம்.
ஶ்ரீபெரும்புதூரிலிருந்து வேலூர் வரை சுமார் 30,40 இடங்களில் சாலையை இடது பக்கம் ஓரமாக திருப்பி விட்டு பாலங்கள் கட்டுமானப்பணிகளாம். அதற்குப்பிறகு பெங்களூர் வரை அருமையான சாலை. எக்கச்சக்கமாக சரவணபவன்கள். டீ, காபி கடைகள். வழி நெடுகிலும் பனங்கிழங்கு விற்கிறார்கள். நார்ச்சத்து அதிகம், மலச்சிக்கலுக்கு நல்லதாம்.
பழம்பெரும் எஸ்ஸார் (Essar) நிறுவனம் Nayara Energy எனும் புதிய பெயரில் இயக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் நுழைந்து வண்டியை ஓரங்கட்டிவிட்டு மிளகு தோசை, சக்கரப்பொங்கல், புளியோதரையை மொஸ்க்கினோம் தட்டையை தொட்டுக்கொண்டு. திவ்யமான பிரசாதம் மதிய உணவக்கு. தூய்மையான கழிப்பறை வசதிகள் இங்கே. 70களில் துவக்கப்பட்ட இந்த Essar (SR) எனும் பெயர் இதன் ஸ்தாபகர்களான புகழ்பெற்ற Shashi Ruiya (S) மற்றும் Ravi Ruiya (R) சகோதரர்கள் பெயர்களிலிருந்து வந்தது என்பது கூடுதல் தகவல்.
8,9 மணி நேரம் வாகனம் ஓட்டும்போது டான் என இரண்டு மணி நேரத்திற்கொரு முறை வயிறு பசிக்கிறது. தூக்கம் வராமலிருக்க வயிறு முட்ட சாப்பிடாமல் வண்டி ஓட்டுவது நல்லது,. கிருஷ்ணகிரி மங்களம் ஹோட்டல், ஜமுனா பால்கோவா எனும் பெரிய பெயர்ப்பதாகைகள் எங்களை வரவேற்க, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட கார்கள். ஸ்வீட் ஸ்டாலில் ஜமுனா பால்கோவா அமோக விற்பனை.
பக்கத்தில் ஸ்நாக்ஸ் பகுதி. போளி, பனியாரம், பஜ்ஜி மற்றும் டீ,காபிக்கென 4 ஸ்டால்களிலும் தமிழர்களுடன் வடகிழக்கு மாநில குட்டி பசங்க. சுறுசுறுப்பாக அசாத்திய திறமை இவர்களுக்கு. எண்ணெயில் ரசகுல்லா போல மிதக்கும் மைதா உருண்டைகளை எடுத்து பூரணத்தை அடைத்து வாழையிலையில் தட்டி சுடச்சுட ஒருவர் போளி போட, பக்கத்தில் இரண்டு பெரிய பணியாரக்கல்லில் ஏகத்துக்கும் எண்ணெய் விட்டு அட்ய டயத்தில் 40 பணியாரங்களை கம்பியால் குத்தி வெளியே எடுக்கிறார் இன்னொரு இளைஞர். இந்தப்பக்கம் சீவிய வாழைக்காயை சரக் சரக்கென மாவில் தோய்த்து எண்ணெயில் வீசி, ஒரு வாட்டி வாழக்கா, மறுவாட்டி மிளகா என பஜ்ஜிகளை சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ள, அதை வாங்க தள்ளுமுள்ளு (வீடியோ பார்க்க!). நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் எல்லோருக்குமே மாலை 4 மணிக்கு மேல் நல்ல பசியெடுக்கும் போல. நல்ல ருசியான இஞ்சித்தேநீர் குடித்துவிட்டு கிளம்பினோம்.
கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூர் வரை போக்குவரத்து அதிகம், வாகனங்கள் சர் சர்ரென முந்திச்செல்ல, பாதுகாப்பில்லா பயணம் தான் அது. வாகனங்களை முந்தும்போதோ, இடது வலது சாலை மாறும்போதோ மக்கள் சிக்னலே போடுவதில்லை. இடது கோடியில் நாம் மெதுவாக சென்றாலும் பின்னால் ஹார்ன் ஒலியெழுப்பி இம்சை. வலது கோடி வேகப்பாதையை மரித்தபடி ‘நா இப்பிடித்தான் மெதுவா போவேன்’ என பிடிவாதமாக செல்லும் லாரிகளினால் தான் விபத்துக்கான வாய்ப்புக்கள் அதிகம். அவர்களால் மற்றவர்கள் சடாரென நடுப்பாதைக்கு மாறி மறுபடியும் வேகப்பாதைக்கு மாறுவதில் எல்லோருக்கும் போட்டி, சிக்னல் எதுவும் கொடுக்காமல்.
அதிலும் சில வாகன ஓட்டிகள் மடியில் சின்ன குழந்தைகள்.. ஈஸ்வரா! பார்க்கவே கதி கலங்குகிறது. டிவிஎஸ்-50இல் கிராமத்து தாத்தா ஒருவர் பாட்டியை பின்னால் வைத்துக்கொண்டு ஹெல்மெட் இல்லாமல்.. ஐயோ! முன்னால் பக்கமும் கால் வைக்கும் பகுதியில் ஏதோ மூட்டை மாதிரி! ஆஹா.. அது மூட்டை அல்ல.. இன்னொரு பாட்டி! பார்க்கவே பகீர் என்றது.
இரவு 9 மணிவாக்கில் பெங்களூர் நெருங்கும் முன் ‘ஶ்ரீநிதி வைபவா வெஜ்’ஜில் செம்ம கூட்டம். 200, 300 பேருக்கும் மேல் அமர வசதியாக பிரம்மாண்டமான உணவகம். மிகப்பெரிய வாகன நிறுத்தம். துரிதமான சேவை, தரமான உணவு.
வார இறுதி போக்குவரத்து நெரிசல் என்றாலும் ஓரிரவு/இரண்டு நாள் சென்னை பயணம் பாதுகாப்பாக முடிந்தது. அடுத்த வாரம் மறுபடியும் சென்னை பயணம். இனியெலாம் சுகமே!
No comments:
Post a Comment