Friday, June 20, 2025

என்ன கைம்மாறு செய்வேன் கணபதி!

 மார்ச் 1981

‘ரொம்ப நன்றி ஶ்ரீதர் உங்க நட்பு கெடைச்சதுக்கு! ஜமால் முகமது காலேஜ் சுபான்கான் சார்ட்ட சி.ஏ கோச்சிங் அக்கௌண்ட்ஸ் டியூஷன் சேர ஹெல்ப் பண்ணதுக்கு’
ஜூன் 1981
‘நாம சி.ஏ இன்டர்க்கு கம்பைன்ட் ஸ்டடீஸ் பண்ணலாமா ஶ்ரீதர்?’
ஆகஸ்ட் 1981
‘டேய் ஶ்ரீதர்! நீயும் வாடா போடான்னு கூப்புட்ரா! நீ படிக்கறதெல்லாம் பத்தாதுடா வெண்டக்கா! BB லால் புக்கு படிச்சா இன்கம்டாக்ஸ் எக்ஸாம் பாஸ் பண்ணவே முடியாது. பொன்மலை ஆர்மரி கேட்டுக்கு சாயரச்ச 5 மணிக்கு வா டெய்லி. நா சொல்லித்தறேன்’
1982
‘ஶ்ரீதர்! இன்டர் நா பாஸ் பண்ணிட்டேன். உனக்கு தான் இழுத்துண்டு இருக்கு. பரவால்ல. விட்டுடாத! நைட் ஸ்டீஸ் ஆரம்பிச்சிடலாம் வா!’
1984
‘ஶ்ரீதர்! நா பம்பாய் போறேன். ஒழுங்கா படி!’
1985
‘ஶ்ரீதர்! நா சி.ஏ பாஸ் பண்ணியாச்சு! நீயும் இன்டர் முடிச்சிட்டே! பேசாம பம்பாய் வந்துடேன். வேலைக்கி ஏற்பாடும் பண்றேன்’
1986
‘ஶ்ரீதர்! சாயங்காலம் வீட்டுக்கு போகாம, எங்கூட வாஷி வீட்டுக்கு வந்துடு! அங்க வந்து படி’
1987
‘ஶ்ரீதர்! நா இந்தோர்ல வேல கெடச்சி போறேன். மானேஜர்-ஃபைனான்ஸ். பேசாம நீயும் வந்துடேன். சீக்கிரம் ஃபைனல முடிடா வெண்டக்கா!’
1988
‘ஶ்ரீதர்! பம்பாய்ல எனக்கு நல்ல வேல கெடச்சுடுத்து. நல்ல சம்பளம். என்ன! நீயா? இங்கென்ன பண்ணப்போற! நீயும் வந்துடு!’
1989
‘ஶ்ரீதர்! எனக்கு பஹ்ரைன்ல நல்ல வேல கெடச்சிருக்கு. சீக்கிரம் பாஸ் பண்ணுடா! சும்மா ஊர் சுத்திகிட்டு.. வெண்டக்கா!’
1990
‘கன்கிராட்ஸ்பா ஶ்ரீதர்! ஒரு வழியா பாஸ் பண்ணிட்டே’
1993
‘ஶ்ரீதர்! நம்ம ஜம்புநாதன் சார்ட்ட சொல்லியிருக்கேன். அங்க்ளேஷ்வர் (குஜராத்) லைக்கா க்ரூப் ஃபாக்டரில ஜாயின் பண்ணிக்க சொல்றார்’
1994
‘ஶ்ரீதர்! பஹ்ரைன்ல உனக்கு வேல ஏற்பாடு பண்ணியிருக்கேன். விசா பத்து நாள்ல வந்துடும்’
1995
‘ஶ்ரீதர்! என்ன பண்ணிட்ருக்க! மனாமா கோயில் போலாம். ரெடியா இரு, பிக்கப் பண்ணக்கிறேன்’
1997
‘என்ன ஶ்ரீதர்! உன் பையன் பிரஷாந்த் ரொம்ப வாலுத்தனம் பண்றானே! அடுத்தது ஏற்பாடு பண்ணிடூ!’ (அடுத்த வருஷம் சின்னவன் பொறந்துட்டான்)’
1998
‘ஶ்ரீதர்! ஆபிஸ்ல ஆயிரம் பிரச்னை இருக்கலாம். அதுக்காக வேலைய விடாமெ ஃபேஸ் பண்ணுப்பா! ஒரு சத்யநாராயண பூஜை பண்ணிடலாம், எல்லாம் சரியாயிடும்’
2000
‘ஶ்ரீதர்! என்ன பண்றே! ரெண்டும் பையனா பெத்திருக்கே.. எப்ப தங்கைக்கு ஏற்பாடு பண்றே?’ (ஐயோ! போரும்பா! எப்பப்பாரு ஏற்பாடு.. ஏற்பாடு!)
2001
‘ஶ்ரீதர்! அநேகமா நான் இந்தியா திரும்பிடுவேன். விக்னேஷை ஐ.ஐ.டி கோச்சிங்ல போடனும்’
2012
‘ஶ்ரீதர்! பஹ்ரைன்லாம் எப்பிடியிருக்கு! ஜெனரல் மானேஜர் ஆனதுக்கு வாழ்த்துக்கள்!’
2017
‘ஶ்ரீதர்! Group CEO ஆனதுக்கு வாழ்த்துக்கள். உன் பெரியவன் சி.ஏ முடிச்சிட்டானே! நானும் ரிசல்ட் இங்க் பாத்துட்டேன். கன்கிராட்ஸ்! சத்யநாராயண பூஜை ஒன்னு பண்ணிடு!’
2018
‘ஶ்ரீதர்! ICAI-Bahrain Chapter சேர்மன் ஆனதுக்கு வாழ்த்துக்கள்பா! CA Toastmaters பிரெசிடென்ட்டும் ஆயிட்டியா! க்ரேட் பா! வர்ற வெள்ளிக்கிழமை சத்யநாராயண பூஜை பண்ணிடு!’
2020
‘ ஶ்ரீதர்! ஏன்டா ரிடையர்மென்ட்டெல்லாம்? இன்னும் நாலஞ்சு வருஷம் பஹ்ரைன்லயே இரேன். இப்ப 59 தானே ஆறது உனக்கு! உக்ர ரத சாந்தி ஹோமம்/பூஜை பண்ணிடு. அடுத்த வருஷம் மத்ததெல்லாம் பண்ணிடலாம். ஜாதகமெல்லாம் நல்லா இருக்கு பா உனக்கு இப்ப! அவசரமா திரும்பி வந்துடாதடா வெண்டக்கா!’
2021
‘ஶ்ரீதர்! எப்பிடி டயம் போறது பெங்களூர்ல? இந்த மாசம் மெட்ராஸ் வரலையா? டிசம்பர் சீசன் ஸ்டார்ட் ஆயிடுத்து! பாஸ் வாங்கிட்டேன். கிளம்பி வாடா வெண்டக்கா!’
2022
‘’ஶ்ரீதர்! சின்னதும் சி.ஏ முடிச்சிடுத்தா! கன்கிராட்ஸ்! 98ல அவன் பஹ்ரைன்ல பொறக்கறச்சே… ஞாபகம் இருக்கா? வலி இருக்கும், டெலிவரிக்கி இன்னும் 2,3 மணி நேரம் ஆகும்னு ஆஸ்பத்திரில சொன்னவுடனே பக்கத்துல எங்க ஆபிஸுக்கு ஓடியாந்துட்டே அரட்டையடிக்க! அதுக்குள்ள அது பொறந்துடுத்துன்னு போன் வந்து திரும்ப ஓடுனியே வெண்டக்கா!
2023
‘ஶ்ரீதர்! கச்சேரில்லாம் ஒரு மண்ணேரத்து மேல உக்காரக்கூடாதுப்பா! வா வெளிய இன்னிக்கி கோதுமை அல்வாவும் பிடி கொழக்கட்டையும் போடறா..
நாளைக்கி பார்த்தசாரதி சபா போலாம். அசோகா அல்வா நல்லா இருக்கும்’
அநேகமாக என் குடும்பத்தாருடன் வாழ்ந்ததை விட இவனுடன் கழித்த நாட்கள் அதிகம். 35 வருட வேலை அனுபவத்தில் நான் கடைசியாக இருந்த முதலும் கடைசியுமான ஒரே கல்ஃப் வேலை (27 வருடங்கள்) இவனது உபயத்தால். 1000 ஊழியர்கள் கொண்ட பஹ்ரைனின் பெரிய குழுமங்களில் ஒன்றான, ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் (Bahrain Bourse) லிஸ்ட் செய்யப்பட்ட கம்பெனியான Trafco Groupஇல் அக்கவுண்டன்ட்டாக என்னை சேர்த்துவிட்டு Group CEOவாக உயர்வதை அழகு பார்த்தவன். எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நல்ல திருப்பங்களும், உயர்வுகளும், குழந்தைகளின் மேற்படிப்பு என எல்லாமே இவனது உதவியினாலும் ஆசியினாலும்.
என்னுடைய ஜாதகம் இவன் கையில் என விளையாட்டாக சொல்ல வேண்டாம், நிஜமாகவே நல்ல நேரங்கள், தோஷங்கள், சனி/குருப்பெயற்சி என வருடம் முழுக்க பார்த்து ஜாதகபலன்களை விரல்நுனியில் வைத்திருப்பவன். ஏராளமான பூஜைகள், குறிப்பாக சத்யநாராயண பூஜைகள் என்னை செய்ய வைத்து அதன் பூஜாபலன்களைப் பெற வைத்திருக்கிறான்.
இவனுக்கு ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்!’ என சில வரிகளில் இதுபோன்ற பதிவிடுவதெல்லாம் போறாது! என்ன கைம்மாறு செய்வேன் Ganapathi Subramanian!

No comments:

Post a Comment