Friday, June 20, 2025

சூயஸ் கால்வாயும் திருச்சி தென்னூரும்..

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் துறைமுகத்திலிருந்து பஹ்ரைனுக்கு நேரடியாக எங்கள் நிறுவனமான ட்ராஃப்கோ குழுமம் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்கிறோம். நெதர்லாந்தின் ஆவியாக்கப்பட்ட பால் (evaporated milk), இங்கிலாந்திலிருந்து உணவுப்பொருட்கள், துருக்கியிலிருந்து பாலாடைக்கட்டி (cheese) மற்றும் கோழி முட்டை என பிரதி மாதம் பத்து பதினைந்திற்கும் மேலான கொள்கலண்கள் (containers) இறக்குமதி செய்கிறோம். அரசாங்கம், ராணுவம், நட்சத்திர
விடுதிகள், பெரிய ஹைப்பர் மார்க்
கெட்டுகள் என எங்களது வாடிக்காளர் பட்டியல் நீளம். தரமான, தாமதமில்லா விநியோகம் நடத்த வேணும் என்பது எங்களது நிறுவனத்தின் கொள்கை.
மூன்று நாட்களுக்கு முன் சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட திடீர் முற்றுகை/அடைப்பு எங்களது இறக்குமதி தொழிலுக்கு சிக்கலை கொடுக்கிறது. இதனால் சரக்கு கப்பல்கள் வந்து சேர தாமதம், கன்டெய்னர்கள் பற்றாக்குறை, சரக்கு (freight) விலையேற்றம் என அடுக்கடுக்கான பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். தற்போது அனைத்து கப்பல்களும் ஐரோப்பாவிலிருந்து நம்பிக்கையுடன் ஆப்பிரிக்காவை பிரதட்சணம் செய்து நன்னம்பிக்கை முனையை (Cape of good hope) சுற்றிக்கொண்டு ஆசியா பக்கம் தாமதமாக வர வேண்டும், மேலும் 3000 கடல் மைல்களையும், 9 நாட்களையும் உட்கொண்டு.
பொதுவாக நம்மூரில் மாட்டு வண்டியோ காரோ சகதியில் சிக்கிக்கொண்டால் சக்கரங்களை நகர்த்துவதற்கான வழியை உருவாக்க மண்ணை கொஞ்சம் தோண்டுவோம். அல்லது சக்கரத்தின் கீழ் மரக்கட்டைகளை புதைத்து வண்டியை முன்னுக்கு தள்ளுவோம்.
அதே போலத்தான் சூயஸ் கால்வாயிலும் தரைதட்டிய கப்பலின் கீழ் மண்ணை தோண்டி, இழுபடகுகள் (tugboats) மூலம் கப்பலை தண்ணீருக்குள் மிதக்க வைக்க முயற்சிக்கிறார்கள். அதாவது கால்வாயின் இரு முனைகளையும் குறுக்கே தொட்டுக்கொண்டுள்ள கப்பலை நீளவாக்கிற்கு திருப்பி இழுப்பது இலகுவானதா?
திருச்சி தென்னூரில் 45 வருடங்கள் முன் எங்கள் வீட்டின் கீழ் அறையிலிருந்து மாடி பட்டாசாலைக்கு ஒரு பெரிய மேசையை நான், என் தம்பி மற்றும் அக்கா மூவரும் சேர்த்து படிக்கட்டு வழியாக தூக்கிக்கொண்டு போக முயற்சித்து, படிக்கட்டு லேசாக திரும்பும் இடத்தில் சுவற்றின் இருபுறமும் மேசை சிக்கிக்கொள்ள, சுமார் ஒரு மணி நேரம் படிக்கட்டில் நான் மாடிப்பகுதியிலும் மற்ற இருவர் கீழ் பகுதியிலும் இருந்துகொண்டு மேசையை நகர்த்த முயற்சி செய்தும், ஒரு இஞ்ச் கூட மேசை நகர மறுத்து, அந்த நேரம் பார்த்து எனக்கு அவசரமாக நெ.1 வர (மாடியில் பாத்ரூம் கிடையாது) மேசையை அப்படியே விட்டு விட்டு அந்த சிறிய இடைவெளியில் மேசையின் கால் பகுதி வழியாக கீழ் பகுதிக்கு என்னை அவர்கள் இருவரும் சேர்ந்து இழுத்ததை நினைத்து பார்க்கும் போது இந்த சூயஸ் நெருக்கடி ஒரு ஜுஜூபி மேட்டர் தான்.😃 நெ.1 மேட்டரை நிம்மதியாக முடித்த பின் ஒரு வழியாக மேசை மாடியை அடைந்தது. மாலை அப்பா வந்து யாரக்கேட்டு மேசையை மாடிக்கு கொண்டு போனீங்க? நாளைக்குள்ள அது கீழே இருக்கனும் என்ற போது ஏக காலத்தில் மூவரும் அலறினோம்.
சூயஸ் பிரச்னைக்கு வருவோம். சுமார் பதினெட்டாயிரம் கன்டெய்னர்கள் மற்றும் கப்பலின் எடையை கணக்கிடுங்கள். ஒரு 20 அடி கன்டெய்னரே சுமார் 25 மெட்ரிக் டன் எடை கொண்டது. கொஞ்சம் கன்டெய்னர்களை அகற்றி கப்பலின் எடையை குறைத்தால் தான் கப்பலை ஓரளவு இழுக்க முடியுமாம். மிகப்பெரிய கப்பல் ஆயிற்றே? பிரான்ஸின் ஐஃபில் டவரை நெடுஞ்சான்கிடையாக கப்பலினுள் படுக்க வைக்கும் அளவு நீளமான கப்பலாம்.
தென்னூர் சின்ன மைதானத்தில் மாதமொருமுறை மாட்டு வட்டிகளில் ராட்சத மரக்கட்டைகள் கொண்டு வந்து இறக்கி, ஆள் வைத்து கோடாலியால் கட்டைகளை பிளந்து, நாங்கள் 20 குடும்பங்கள் சேர்ந்து அந்த விறகுகளை பிரித்துக்கொள்வோம். எதிர் வீட்டு ஜமாலின் 70 வயது பாட்டி தான் தனியாளாக வயலூர் பக்கம் உய்யகொண்டான் திருமலையிலிருந்து விறகுக்கட்டைகளை வரவழைத்து மேற்படி விநியோகம் செய்வார். நடுத்தர குடும்பங்கள் மொத்தமாக சேர்ந்து இது போல அடுப்பு விறகு வாங்குவதால் செலவு குறையும். 20 கூறுகளாக விறகுகளை ரோட்டில் பிரித்து வைப்பார் ஜமால் பாட்டி. அதில் அவருக்கொன்று இலவசமாக கொடுத்து விடுவோம். அது சரி.. எப்படி வீட்டிற்கு கொண்டு போவது! காலி சாக்கை ரோட்டில் போட்டு அதில் விறகுகளை அடுக்கி நானும் என் தம்பியும் இரண்டு பக்கமும் சாக்கை பிடித்து தூக்கிக்கொண்டு பட்நூல் காரத்தெரு வழியாக போவோம். கொஞ்சம் இசகுபிசகாக சாக்கை ஆட்டினாலும் விறகுகள் முழங்காலை சிராய்த்து விடும் அபாயம். நடுவே பாரம் தாங்காமல் கை விரல்கள் சிவந்து, கட்டைகளை கொஞ்சம் அகற்றக்கூட முடியாது. அந்த அளவு பாரம். அதையெல்லாம் பார்க்கும் போது இந்த சூயஸ் நெருக்கடி ஒரு ஜிஜூபி மேட்டரே😁.
மத்தியதரைக்கடல் மற்றும் செங்கடலை இணைத்து ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் குறுகிய தூர இணைப்பைக் கொடுக்கும், இந்த 200 கி.மீ தூர சூயஸ் கால்வாய் வழியாக உலகளாவிய வர்த்தகத்தின் சுமார் 12% சரக்குகள் செல்கிறது. எகிப்த் நாட்டை இரண்டாக பிளந்து செல்லும் சூப்பர் குறுக்கு நீர்வழி. இல்லையென்றால் ஆப்பிரிக்கா கண்டத்தை சுற்றிக்கொண்டு போகனும். அதிக எரிவாயு.. அதிக நாட்கள் இரண்டையும் மிச்சம் பிடிக்கும் சுறுக்கு வழி. தற்போது ஏற்படும்
பெரும் இழப்புக்களை யார் சுமப்பார்கள்? காப்பீட்டால் ஓரளவு நிவாரணம் பெற முடியும் என்றாலும் எங்களைப்போன்ற அனைத்து வர்த்தகர்களுக்கும் கொஞ்சம் இழப்பு உண்டு. உலகளவில் ஒரு நாளைக்கு சுமார் 14 மில்லியன் டாலர்களாக இழப்பு இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகள் இந்த இடறில் சிக்கியுள்ளன.
இன்று காலை நான் எங்கள் சேர்மனிடம் இந்த இடர் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். 75 வயதான அவர் இறக்குமதி வர்த்தகத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர். மைக்கை அவர் முன் நீட்டி உலக பொருளாதாரத்தைப்பற்றி பேசச்சொன்னால் அடுத்த நொடி அரை மணி நேரம் அசத்தலாக பேசக்கூடியவர். உலகளாவிய வர்த்தகம் தொடர்பான புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். ரமதான் நோன்பு ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கும் முன் எங்கள் விற்பனை வெகுவாக உயர்ந்து பஹ்ரைன் சந்தையை முழுக்க எங்கள் தயாரிப்புகளால் நிரப்புவோம். அது பற்றி கவலையில்லை. ஆனால் ஈத் பெருநாள் முடிந்து, இறக்குமதி செய்யப்படும்போது சரக்கு விலை அதிகமாகி விடுமே என கவலை தெரிவித்தேன்.
‘தம்பி இப்பிடி உட்கார்! எல்லா கெட்டதிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கத்தான் செய்யும். அதைத்தான் நாம் தேடிப்போகனும்’ என்றவர் அடுத்து ‘ரோட்டர்டாமிலிருந்து சூயஸ் பக்கம் போகாமல் ஆப்பிரிக்கா நோக்கி கப்பல்கள் போவதால் கூடுதல் சரக்கு செலவு மற்றும் தாமதம் ஆனாலும் அதே சமயம் எகிப்திய அரசிற்கு வர்த்தகர்கள் செலுத்தும் சூயஸ் சுங்கவரித்தொகை மிச்சமாகும். கூட்டி கழிச்சி பாரு.. ஓரளவு கணக்கு சரியா இருக்கும்’ என ரஜினி போல சொல்ல, நிம்மதியாக என் அறைக்கு திரும்பினேன்.
இப்பவும் 70களில் திருச்சி தென்னூரில் மாடிப்படியில் மாட்டிக்கொண்ட மேசை மற்றும் சின்ன மைதானம் விறகு கட்டை சாக்கின் பாரமும் எனக்கு பெரிய மேட்டர் தான்..😁😁

No comments:

Post a Comment