Thursday, June 2, 2016

ஆதூ

பஹ்ரைனில் பிறந்து வளர்ந்த சின்னவன் ஆதூ(ஆதேஷ் ப்ரணவ்) ப்ளஸ்2 முடித்து சி.ஏ.மேற்படிப்புக்கு இன்று சென்னை கிளம்பி விட்டான். சென்ற மாதம் முழுவதும் ஒரு வாரம், 10 நாட்கள் இடைவெளி விட்டு முழுப்பரிட்சை இருந்ததால் நடுவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் உஷா அவனை பக்கத்தில் உள்ள ஹயாத் மால் அழைத்துக்கொண்டு போய் அவனுக்கு வேண்டிய ஜீன்ஸ், டீ-ஷர்ட், பாக்ஸர், சாக்ஸ் என கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை வாங்கினாள். பையனும் கொஞ்சம் முன் ஜாக்ரதை பேர்வழி. ஏற்கனவே ஒரு லிஸ்ட்டை போனில் போட்டு வைத்திருந்தான். Dove சோப் (தோல் அலர்ஜியாம்), நிவ்யா ஆஃப்டர் ஷேவ் லோஷன், ஃபோன் சார்ஜர், 2TB ஃஹார்ட் டிஸ்க், ஹெட்ஃபோன், அமெசான் மூலம் இறக்குமதி செய்த ஒன் ப்ளஸ் மொபைல் மற்றும் சின்ன JBL ஸ்டீரியோ என பலசரக்குக்கடை மாதிரி பெரிய லிஸ்ட்டை அவ்வப்போது சரிபார்த்து, திருப்தியடையாமல் மேலும் ஷூக்கள், ஆங்க்கிள் சாக்ஸ், அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் ட்ரௌசர் என வஞ்சனையில்லாமல் வாங்கி குவித்தான். நேற்று இரவு வெகுநேரம் உட்கார்ந்து நூற்றுக்கணக்கில் பாடல்களையும் திரைப்படங்களையும் மடிக்கணினிக்கு தரவிறக்கம் செய்து முடித்தான்.
புதிய ஊர்.. முதன்முதலாக சென்னை போகிறான் என்பதால், கார் ஓட்டும்போது கூட பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அவனுக்கு உஷாவின் ஏகப்பட்ட உபதேசங்கள். சமீபத்தில் 'விசாரனை' படம் பார்த்தது முதல் அவளுக்கு கொஞ்சம் பயம் அதிகமானது தெரிந்தது. சென்னை வந்திறங்கியவுடன் நம் பையனையும் சந்தேக கேஸில் உள்ளே வைத்து பின்னி எடுத்துவிடுவார்களோ என்ற அவளது பயத்தை தயக்கமின்றி எனக்கும் பகிர்ந்தளித்தாள். 'ஆதூ.. பீ கேர்ஃபுல் இன் சென்னை..கீப் யுவர் மொபைல் வித் யூ.. டோன்ட் டாக் டு ஸ்ட்ரேஞ்சர்ஸ்'..கீப் யுவர் சினிமா டிக்கெட் வித் யூ வொய்ல் கமிங் பேக் இன் லேட் நைட்ஸ்' போன்ற அடுக்கடுக்காக பீதியை கிளப்பும் அவளது அறிவுரைகளை அவன் சிறிதும் சலனமின்றி உள் வாங்கிக்கொண்ட கையோடு காதில் இயர்ஃபோனை மாட்டி கட்டைவிரலை உயர்த்தி சைகை காண்பித்தான்.
வீட்டில் தெலுங்கு மற்றும் பள்ளியில் ஆங்கிலம் மட்டும் பேசிக்கொண்டிருந்த அவனுக்கு தமிழ் பேசுவது கொஞ்சம் கஷ்டமாயினும் நன்றாகவே புரியும். நேற்று அவனிடம் 'எங்க தமிழ்ல எதாவது சொல்லு பாக்கலாம்' எனக்கேட்டபோது அவன் உடனே உதிர்த்தது 'பன்னாட, பரதேசி' என்ற இரு வார்த்தைகள். உபயம்: வேறு யார்? பெரியவன் ப்ரஷாந்த் தான்.. ஐந்து வருடம் முன் பஹ்ரைனிலிருந்து முதன் முதலாக சென்னைக்கு படிக்கப்போன பெரியவன் தற்போது பரிட்சைக்கு படிக்க வந்திருக்கிறான். எங்களை சீண்டுவதற்காக சின்னவனுக்கு பகீர் பகீரென நிறைய டிப்ஸ் கொடுத்தான். நாம் கவனிக்கும் நேரத்தில் 'ஆதூ..பஸ்ஸில் ஃபுட்போர்டில் தொங்கிக்கொண்டு போனால் தான் ஜாலியாக இருக்கும்' என சொல்லி விஷமப்புன்னகையுடன் எங்களை பார்த்தான்.
ஐந்து வருடத்தில் பைக்கில் சுற்றி சென்னை முழுவதும் பெரியவனுக்கு அத்துப்படி. Learners லைசென்ஸ் காலாவதியாகியும் பர்மனென்ட் லைசென்ஸ் எடுக்காமல், பிறகு அவனை கெஞ்சி ஒரு வழியாக எடுக்க வைத்தோம். 'நடுவே போலிஸ்காரரிடம் மாட்டவில்லையா' என கேட்டபோது 'yes..I did.. I just paid him 100 bucks' என அலட்சியமாக சொன்ன அவனை உஷா மிரட்சியுடன் பார்த்தாள். போலீஸகாரர்களை அங்க்கிள் என்றும் ஆட்டோ ஓட்டுநர்களை அண்ணா என்றும் அழைக்கிறான்.
தற்காலத்தில் பயம் என்பது பையன்களுக்கு சிறிதும் இல்லை. நம்மை விட பலமடங்கு தைரியம் மற்றும் street smartness இருக்கிறது. உலக நடப்புக்கள் விரல் நுனியில். 'So what'? போன்ற உடனுக்குடன் பதில்கள். நாம் 'வேண்டியதை தந்திட வெங்கடேசன்' என்றிருக்க, அவர்களுக்கு வேண்டியதைத்தந்திட ஃப்லிப்கார்ட் மற்றும் அமெசான் இருக்கிறது. தலைமுறை இடைவெளி நம்மை வியக்க வைக்கிறது. திருச்சியில் வளர்ந்த நான் மற்றும் என் இரு சகோதரர்கள் மூவரும் பயந்தாங்கொல்லிகள். வளர்ப்பு அப்படி. அப்பாவோ அநியாயமாக பயந்த சுபாவம். காய்கறி விற்பவனிடம் கூட பயந்துகொண்டு அதிகம் பேரம் பேசமாட்டார். கேட்டால் 'தண்ணி போட்ருக்கான்டா' என்பார்.
80களில் திருச்சி மன்னார்புரம் அரசு காலனியில் நாங்கள் குடியிருந்தபோது, காலனி மாணவர்கள் இரவு ரோந்து போவோம் (அட! நாங்களா!) ஒருமுறை திருடன் ஒருவனை சில மாணவர்கள் பிடித்துவிட, உடனே போலிஸ் லாரி வந்து 'சாட்சி சொல்ல எல்லாரும் வண்டியில ஏறுங்க' என்று சொன்ன மறுநிமிடம் அந்த நள்ளிரவில் முழு கும்பலும் போலீஸ் வண்டியில் ஏறிவிட, ஜகா வாங்கி தனியே நின்ற எங்கள் மூன்று பேரையும் புழுவைப்போல பார்த்துவிட்டு போலிஸ் வண்டி கிளம்பிப்போனது.
நல்ல வேளை பசங்கள் நம்மைப்போல இல்லை...
பி.கு: பஹ்ரைன்-சென்னை விமான பயனத்தில் கால் கை குடைச்சலை மறக்க, கைப்பேசியின் airplane mode இல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு தட்டச்சு செய்ததே மேற்சொன்னவை...வெளியே குட்டி குட்டியாக கட்டிடங்கள் தெரிய ஆரம்பித்தது.. ஆஹா..சென்னை!
ஏர்போர்ட்டுக்கு அழைக்க வந்திருந்த பால்ய/ஆருயிர் நண்பன்Ganapathi Subramanian மற்றும் Durga Ganapathi Subramanian க்கு நன்றி. 'எதிர்ல தானே வீடு.. வாங்க..ரெண்டே நிமிசத்துல தோச வாத்து தற்ரேன்' என்ற துர்காவின் அன்புக்கட்டளையை வேண்டாமெனச்சொல்லி, மயிலை உட்லண்ட்ஸில் பத்தேகாலுக்கு செக்கின் செய்யும்போதே 'சார் இன்னும் 10 நிமிஷத்துல பிருந்தாவன் மூடீருவாங்க.. மொத சாப்ட்ருங்க.. பெட்டிய நாங்க ரூம்ல வெச்சுடறோம்' என எங்களை அன்போடு விரட்டிய சிப்பந்திகளுக்கு நன்றி. 'ஆயில் இல்லாமெ ஒரு சாதா தோசை' என்று சொல்லியும் சொட்டச்சொட்ட எண்ணையுடன் தோசை கொண்டு வந்த (அது கல்லுல உள்ள எண்ணெ சார்..) அன்பருக்கும் நன்றி. 'வேற அல்லாம் கலாஸ்' என முடித்துக்கொண்ட நேபாளிப்பையனுக்கும் நன்றி.
நண்பன் கணபதி பிரிய மனமில்லாமல் ஹோட்டல் ரூமிலிருந்து விடைபெற்றுக்கொண்டபோது மணி 12.30...
இரவு வணக்கங்கள்...

No comments:

Post a Comment