Thursday, June 2, 2016

மாநாடு

சென்ற வருடம் துருக்கியில் நடந்த வருடாந்திர ரெயின்போ விநியோகஸ்தர்கள் கூட்டம் இம்முறை துபாயில். எங்கள் விற்பனை மேலாளருடன் அந்த மாநாட்டுக்கு போயிருந்தேன். நாங்கள் பஹ்ரைனில் விநியோகிக்கும் உணவுப்பொருட்களில் ஒன்று நெதர்லாந்து நாட்டில் 'ரெயின்போ' என்ற பெயரில் தயாராகும் பால் பவுடர் மற்றும் ஆவியாக்கப்பட்ட (evacuated milk) பால். நட்சத்திர ஹோட்டல்கள், ஹைப்பர்/சூப்பர் மார்க்கெட்டுகள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் இந்நாட்டு இராணுவம் அனைவரும் எங்களிடம் கொள்முதல் செய்வதால் அமோக விற்பனை எங்களுக்கு.
மாநாடு நடத்திய நெதர்லாந்து மற்றும் துபாய் அலுவலகத்து சிப்பந்திகள் அனைவரும் பாகிஸ்தானிய இளைஞர்கள் மற்றும் நடுத்தர வந்து ஹாலந்தியர்கள். ஆண் பெண் வித்தியாசமின்றி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து வரவேற்கும் வழக்கம், இத்தனை வருடங்கள் கழித்தும் திருச்சி தென்னூரில் வளர்ந்த எனக்கு வருவதில்லை. கூச்சத்துடன் கையை மட்டும் கொடுத்தேன். 'தொடாமெ பேசுடா' என அம்மா அதட்ட, வீட்டில் அக்கா, தங்கைகளுடன் கூட தொடாமல் பேசி வளர்ந்தவன் நான். பஹ்ரைன், ஒமான், கதார், சவுதி,குவெய்த் என எல்லா நாடுகளிலிருந்தும் வந்திருந்தனர்.
எங்கள் விற்பனையை ஃபார்முலா-1 கார் பந்தயத்துடன் ஒப்பிட்டு பளீரென விளக்குகள், அரங்கமே அதிர ஆடியோ,வீடியோ மற்றும் பவர்பாயின்ட் விஷுவல்கள் கொண்டு கடந்த வருடம் எப்படி செயலாற்றினோம், அடுத்த வருடம் விற்பனை எப்படி இருக்கும், உலகளவில் என்னென்ன சவால்கள், அதை எப்படி அடுத்த வருடம் சமாளிக்கலாம் என பாகிஸ்தானிய இளைஞன் சல்மான் கார் ரேஸ் உடையில் அழகாக விளக்க, அழகிய லெபனீய யுவதி ஒருத்தி சிக்கனமான மேலுடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபின் தழைய தழைய மேடையை சுத்தமாக பெறுக்கியெடுத்துவிட்டு உயரமான குதிகால் காலணியுடன் கவனமாக மேடையை விட்டிறங்கி மறைந்தாள்.
'சென்ற வருடம் நீங்க இத்தனை மெட்ரிக் டன் விற்பனை செஞ்சீங்க, அடுத்த வருடம் இரண்டிலக்க வளர்ச்சி காட்டலாமே' போன்ற அவர்களின் ஈமெயில்களுக்கு 'அதுசரி.. போன வருஷத்துக்கும் முந்தின வருஷம் நாங்க கேட்ட அளவு கொடுக்க முடியாம அதை போன வருஷத்தோடு சேர்த்து தலையில் கட்டிட்டு , அதையே பெஞ்ச்மார்க்கா எடுத்துக்கறது நாயமா?' போன்ற எங்களது பதில்கள் (யாரு கிட்ட?)...இதெல்லாம் மாநாட்டுக்கு முன் தான். ஆனால் மாநாட்டில் எல்லா நாடுகளிலிருந்தும் வந்திருந்த விநியோகஸ்தர்கள் முன் குறைகளை தனிப்பட்ட முறையிலும் நிறைகளை அனைவர் முன்னிலையிலும் சுட்டிக்காட்டி,பாராட்டி, பரிசு வழங்கிய அவர்களது உத்தி பாராட்டும்படியாக இருந்தது.
காலை உணவு, இரண்டு மணி நேர மாநாடு, தேநீர் இடைவேளை, மதிய உணவு, எல்லாம் முடிந்து மாலை கொண்டாட்ட உடை விருந்து (gala dinner) கருப்பு உடை அல்லது கருப்பு டை என்ற டிரெஸ் கோடுடன். இரவு ஏழு மணியில் இருந்து பதினோரு மணி வரை வட்ட மேசைகளில் உட்கார்ந்து அரட்டை. அரட்டையில்லாத விருந்தா! உங்களுக்கு 'சிவப்பு திராட்சை சாராயமா' என என்னிடம் கேட்ட சீனப்பெண்ணிடம் வெட்கத்தோடு 'நான் தண்ணியடிக்கறதில்லைங்க' என சொல்ல பக்கத்திலிருந்த ஹாலந்துக்காரன் 'all Indians are vegitarians and teetotalers.. right?' என கேட்டான். 'உன் உலக ஞானத்துல தீய வெய்க்க...இதெல்லாம் உனக்கு இப்பசத்திக்கி விளக்க முடியாது' என சொல்ல நினைக்கும் முன் அவன் ஸ்பார்க்கிள் வாட்டரை மடக்கென குடித்து முடித்தான். உயரமான கிளாஸில் அவள் சிகப்பு வொய்னை ஊற்ற 'சியர்ஸ்' சொல்லி மற்றவர்கள் தங்கள் கிளாசை உயர்த்த நானும் கையிலிருந்த மினரல் வாட்டரை உயர்த்தும்போது ஹாலந்துக்காரன் மட்டும் என்னை வினோதமாக பார்த்தான்.
அரையிருட்டில் மெல்லிய வெளிச்சம், கண்ணாடி தம்ளர்களின் ஒலி, சாரங்கி மாதிரி ஏதோ அரபிய/வயலின் இசை, எதிரே 'லைவ் குக்கிங்' சத்தம்.... தத்தம் நாட்டு கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள், குழந்தை வளர்ப்பு, உணவுப்பழக்கம் பற்றி கஜகஜவென எல்லோரும் ஒரே நேரத்தில் எச்சில் தெறிக்க அடுத்தவர் காதுக்குள் பேசிக்கொண்டிருக்க, எதிரே இருந்த விஷமக்கார ஜோர்டானியன் ஒருவன் மனைவியரின் நச்சரிப்பு பற்றி சொல்ல ஆரம்பித்தது தான் தாமதம்...அரட்டை படு சுவாரசியமாகப்போனது. ஹஹ்ஹா என பலத்த சிரிப்பு...சரக்கை இன்னும் அடுத்த இரண்டு சுற்றுக்கு கொண்டு போனார்கள், மனைவியிடமிருந்து தற்காலிக நிவாரணம் பெற்ற சிலர்.
நடு நடுவே வித்தியாசமான மெனுவை எல்லோருக்கும் பரிமாறினார்கள். உருண்டையான ஏதோ ஒரு வஸ்து தட்டில் வைக்கப்பட அடுத்த நொடி அதை இரண்டு குச்சிகளால் எடுத்து டயட் கோக்குடன் சேர்த்து உள்ளே தள்ளினாள் நமிதா சாயலில் இருந்த எகிப்து நாட்டுக்காரி. பச்சையாக மீனை மசித்து துவையல் ஆக்கி ஜப்பானிய 'சூஷி' எனச்சொல்லி சமயபுரம் மாவிளக்கு உருண்டை மாதிரி தட்டில் வைக்க அந்த சுற்றுப்பிரகாரமே கப்பு. மைதாவில் முக்கியெடுத்து எண்ணெயில் பொறித்தெடுத்து தட்டில் வைக்கப்பட்ட இறால் மீன்களை ஜோர்டான், எகிப்து மற்றும் ஹாலந்து மூன்றும் சடுதியில் கபளீகரம் செய்தன. அடுத்து கின்னங்களில் ஆவியில் வேகவைத்த பச்சை சோயாபீன்ஸ்...துக்கம் தொண்டையை அடைக்க உரித்து வாயில் போட்டுக்கொண்டேன்.
எதிரே இருந்த மற்றொருவர் ஹாலந்துக்காரர் தான் ஐரோப்பிய நாடொன்றில் முன்பு ப்ராக்டர் & காம்பிள் கம்பெனியின் சி.இ.ஓவாக இருந்தபோது நாட்டின் பொருளாதாரம் இறங்குமுகமாக இருந்தபோதும்கூட குறிப்பிட்ட ஒரு பொருளின் விற்பனை மட்டும் அவ்வருடம் இருமடங்காகும் அளவிற்கு மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு படையெடுத்தனர் என குறிப்பிட்டபோது எல்லோரும் அவரை உற்றுப்பார்த்தோம். ஜப்பானிய 'ஆசாஹி' பியரை வாயில் கவிழ்த்து மேலுதட்டை மறைத்த நுரையை துடைத்தபடி அவர் 'அந்த பொருள் வேறொன்றுமில்லை.. தலைமுடி கலரிங் (ஹேர் டை) தான் என்றதும் 'அதெப்பிடி!' என நாம் ஆவலுடன் அவரை பார்க்க, அவர் 'ஏன்னா தலைமுடி கலரிங் செய்ய சலூனுக்கு போனா செலவு நான்கு மடங்காகுமே... எனச்சொல்லி வெடிச்சிரிப்பு சிரிக்க, ஏக காலத்தில் எல்லோரும் 'வாவ்' என ஒலியெழுப்ப, சிறிலங்க இளைஞன் ஓடிவந்து போத்தலில் மிச்சமிருந்த சாராயத்தை கோப்பைகளில் ஆச்சமனீயம் செய்துவிட்டுப்போனான். எதிரே வைக்கப்பட்ட பெரியர் சோடா வாட்டரை எவ்வளவு நேரம் தான் நான் உறிஞ்சுவது?
அடுத்த சில நிமிடங்களில் ஐஸ்க்ரீம், பழ வகைகள் வைத்து இனிமேல் தான் மெயின் கோர்ஸ் வருமென காத்திருந்த என் நினைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு விருந்தை முடித்தார்கள்.
மறுநாள் காலை துபாயிலிருந்து பதினைந்து கி.மீ தொலைவில் பாலைவனத்தின் நடுவே உள்ள ஒரு துப்பாக்கி சுடுதல் மையம் ஒன்றிற்கு எங்களை அழைத்துச்சென்று பல அணிகளாக பிரித்து குறி பார்த்து சுடுதல் மற்றும் வில்-அம்பெய்யும் திறனுக்கான போட்டியும் வைத்து பரிசுகளுடன் தலைமுழுக்க ஐஸ் வைத்து ஊருக்கு அனுப்பினார்கள்.
பெரும்பாலும் பாகிஸ்தானியர்களும் ஹாலந்தியர்களும் நடத்திய மாநாட்டில் அதிக விற்பனையில் சாதனை செய்த கத்தார் மற்றும் ஒமானிய விநியோகஸ்தர்களுக்கு முதலிரண்டு இடங்கள்..பாராட்டுக்கள், பரிசுக்கோப்பைகள். பரிசு பெற்றதில் பெரும்பான்மை நமது இந்தியர்கள் தான்...வட இந்திய மார்வாடிகள். ஒருவர் மட்டும் மறக்காமல் என்னிடம் வந்து 'சுகந்தன்னே? ஓர்மையுண்டோ? கழிஞ்ச வருஷம் கண்டு..' என கேட்க நான் 'ண்டு' என்றேன்.
'ஶ்ரீதர்! உங்க ஃப்ளைட் ஐடினெரரியை அனுப்புங்க, ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்பறோம் என் அன்புடன் அழைப்பு விடுத்து துபாய் டெர்மினல்-3இல் இருந்து எங்களை பிக்கப் செய்து எல்லோருக்கும் ஜுமெய்ரா பகுதியின் பா(ல்)ம் தீவில் அட்லான்டிஸ் எனப்படும் ஆடம்பர ஹோட்டலில் தங்க வைத்து, எங்கள் நிறுவனத்திற்கு நேர்மறையான கருத்துக்களைச்சொல்லி பாராட்டி, பரிசுகள் கொடுத்து திரும்ப அனுப்பி வைத்த இளம் பாகிஸ்தானிய கன்ட்ரி மானேஜர்களின் அன்புமழையில் சொட்டச்சொட்ட நனைந்தபடி பஹ்ரைன் திரும்பும்போது யோசித்தேன்...இந்திய பாகிஸ்தானிய பிரச்னை எல்லாம் தொலைகாட்சி/பத்திரிக்கை ஊடகங்களில் மட்டும் தானோ!

No comments:

Post a Comment