Thursday, June 2, 2016

செப்டிக் டாங்க்

விடுமுறைக்கு திருச்சி சுப்ரமணியபுரத்தில் அக்கா Hemalatha Manohar வீட்டில் தங்கியிருந்தபோது அவள் 'ஶ்ரீதர்...சுந்தர் நகர் வீட்ட கொஞ்சம் பாத்துட்டு வாயேன். செப்டிக் டேங்க்க ஒடச்சிட்டாங்களாம். 'ஞாபகமிருக்கா? அரவேனு! ..' என சொன்னதும் அறக்க பறக்க கிளம்பி ஓடினேன். அதென்ன அரவேனு? அத பத்தி கடைசி பாராவுல பாத்துக்கோங்க... உடனே சுந்தர் நகர் கிளம்பினேன்.
அம்மா அப்பா பல வருடங்கள் வாழ்ந்த வீடு.. அவர்கள் போன பின் தற்போது கீழே மேலே என இரண்டு குடித்தனங்கள். வீட்டைச்சுற்றி ஏகத்துக்கும் செடிகொடிகள் மண்டி ஒரே புதர் காடு.
கீழ்வீடு பூட்டியிருந்தது. அம்மா உணவகத்தில் சூபர்வைசராக இருக்கிறார் அந்த வீட்டம்மா. மேல் வீட்டுக்காரர் ஏதோ ஒரு மருந்துக்கம்பெனியின் விற்பனைப்பிரதிநிதி. இறுப்பிலிருந்த, காலாவதியான ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள மாத்திரை அட்டையில் உள்ள பழைய தேதிகளை அமிலம் மூலம் அழித்து புதிய தேதிகளை அச்சடித்து மறுபடியும் விற்கும்போது மாட்டிக்கொண்டு கோர்ட், கேஸ் என் அல்லாடும் ஒரு கம்பெனியில் வேலை அவருக்கு. சம்பளமே கைக்கு வராமல் எங்களுக்கு எட்டுமாத வாடகை பாக்கி.
மாடிப்பகுதி சமையலறையிலிருந்து வெளி வரும் குழாய் உடைந்து தொறதொறவென தண்ணீர் கொட்டி, வீட்டின் பக்கவாட்டில் தேங்கியிருந்தது. பாசம் பிடித்த மண்ணில் சொதசொதவென கால்கள் சேற்றில் புதைய, மெல்ல புழக்கடை பக்கம் போனேன்.
செப்டிக் டேங்க் மேல் போடப்பட்டிருந்த ஸ்லாப் உடைந்து பாதி உள்ளே சரிந்திருந்தது. கீழ்வீட்டுக்காரம்மா அப்போது வந்தார்கள்.
'செப்டிக் டேங்க் மேலே ஏறி துணி காயவைக்க குதிக்கிறப்ப ஸ்லாப் உடைச்சிருச்சுங்க'. ஸ்லாப் பாதி மட்டும் ஒடஞ்சதால உள்ள போகாமெ தப்பிச்சேன். நல்ல வேளை பக்கத்து வீட்டுக்காரவங்க பாத்துட்டு ஓடி வந்து தூக்கிவிட்டாங்க.
மூச்சு வாங்கி பேசும் அவரை மேலும் கீழும் பார்த்தேன் (இப்பிடியா குதிப்பீங்க!)
'ஸ்லாப் உடைஞ்சாலோ, துணி காய வைக்க முடியாமெ போனா கூட பரவாயில்லைம்மா. டாங்க் உள்ள அந்த அசிங்கத்துல ஆள் விழுந்தா அவுட் தான்... உயிருக்கு எவ்ள பெரிய ஆபத்து பாத்தீங்களா?' என நான் கேட்க, அந்தம்மா காதில் வாங்கிக்கொள்ளாமல் 'காவேரித்தண்ணியே சரியா வர்றதில்லீங்க' என்றார்.
'சரிங்க...செப்டிக் டாங்க் மூட நான் போயி கல்லு வாங்கியாறேன் என சொல்லி காரை மெயின் ரோட்டு 'நவிலு மார்பிள்ஸு'க்கு விரட்டினேன். 'நாலுக்கு ரெண்டடின்னு மொத்தம் நாலு பீஸ் கல்லு எவ்ளோங்க' என விசாரித்த எனக்கு அவர் சொன்ன விலை கேட்டதும் தலை சுற்றியது. 'ஏங்க செப்டிக் டேங்க் மூட இவ்வள வெலைக்கு கல்லா?' என்ற என்னை ஒரு மாதிரியாக பார்த்த அவர் 'சார்.. நீங்க எதுக்குன்னு சொல்லாமெ கல்லு வெலய மட்டுந்தானெ கேட்டீங்க! இங்கெ உள்ளது க்ரேனைட் கல்லு சார். செப்டிக் டேங்க்குக்கெல்லாம் கடப்பா கல்லு தான் போடனும்' என்றதும் அவசரமாக கர்சீப்பால் முகத்தை துடைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.
கே.கே.நகர் போகும் ரோட்டின் கடைசியில் இடதுபக்கம் திரும்பாமல் நேரே ஐயப்பா நகர் பக்கம் போய் உழவர் சந்தையை (இப்ப இல்ல) கடந்து லெவல் க்ராஸ் தாண்டியதும் ஒரு கடையில் கடப்பா கற்களை சீராக வெட்டி பாலிஷ் செய்து சாய்த்து வைத்திருந்தார்கள்.
கல் விலை ஆயிரம் ரூபாய்க்கு முடித்தேன். 'சார் வீட்ல கொணாந்து போட வண்டி வாடகை 250 ரூவா' என சொல்லி மீசையை சொறிந்தார் கடைக்காரர். 'ஏம்ப்பா அதோ.. தேவி கல்யாண மண்டபம் தாண்டி ரைட்ல உள்ள போனா எங்க வீடு.. அஞ்சு நிமிசங்கூட ஆகாதே! அதுக்காஇவ்ள வாடகெ?' என்ற என்னை எகத்தாளமாக பார்த்து அவர் 'கல்ல தூக்கி வண்டில வச்சாலே காசு சார்'
மினி லாரியில் நான்கு கடப்பா கல் ஸ்லாப்களை போட்டு (பக்கத்தில் அவன் மனைவி, கைக்குழந்தை) அடுத்த ஐந்தே நிமிடத்தில் வந்து இறக்கினான் மோகன் என்ற இளைஞன்.
'பழைய ஒடஞ்ச கல்ல எடுத்துட்டு, இந்த கல்ல அந்த செப்டிக் டேங்க் மேல போடுப்பா.. சுளுவான வேலை தானே!
' இவ்வள சுளுவாச்சொல்லிட்டீங்க சார்.. ஆனா வேலை நெறையா இருக்கு. பழைய ஸ்லாப்பை சுத்தி கேப்ல சிமென்ட் பூசியிருக்கு.. அத ஒடச்சு வுட்டுட்டுத்தான் புது கல்ல வைக்க முடியும்... மேஸ்திரிய கூப்டுங்க'
' ஓ.. அது வேறயா? சரி..அதையும் நீயே செய்ப்பா.. காசு தர்றேன்'
' இல்ல சார்.. மேஸ்திரி தான் வரனும். புது கல்லு வெச்சி மூடி எடவெளி இல்லாமெ திரும்பவும் கேப்ல சிமென்ட் வச்சி பூசனுமே சார்! இல்லன்னா கரப்பாம்பூஞ்சி பூந்துரும். உங்களுக்கு வேணும்னா மேஸ்திரிய கூட்டியாறவா? மேஸ்திரிக்கு அரை நாள் கூலி மட்டும் அய்நூரூவா சார். அவர் ஜாமான் இல்லாமெத்தான் வருவார்' (?)
'என்ன எழவோ! கையோட சிமென்ட்டும் மணலும் நீயே வாங்கிட்டு வா.. எவ்வள வாங்கனும்?'
' அரை மூடை சிமென்ட்டும் பத்து பாஞ்சு சட்டி மண்ணும் சார்'
'பதனைஞ்சு சட்டி மணலா? அரைமூட்டை சிமென்ட்டுக்கு அவ்வள மண்ணு எதுக்குப்பா?'
'சார்.. சிமென்ட் கொஞ்சமாவும் மணலு ஜாஸ்தியாவும் காரை மாதிரி கலக்கனும். அப்பத்தான் பின்னாடி ஆறு மாசத்துக்கப்பறம் கல்லு ஒடைஞ்சா மறுபடியும் சிமென்ட்ட நாமளே பேக்கறது ஈசி'
'அடப்பாவி... நீயே ஆறு மாசத்துல கல்லு ஒடையும்னு முடிவு பண்ணீட்டியா?'
'பின்ன.. மறுபடியும் அந்தம்மா அது மேல ஏறி நின்னு குதிக்காதுங்களா?'
'அந்தம்மா குதிக்கறதையும் நீ இப்பவே முடிவு பண்ணீட்டியா?'
'ஒரு பேச்சுக்கு சொன்னேன் சார்' .... (மோகன் சிரிக்க வெட்கத்துடன் அவன் மனைவியும் சேர்ந்து சிரித்தாள்)
மாலை ஆறு மணிவாக்கில் செப்டிக் டேங்க் மூடப்பட்டு பளிச்சென இருந்தது. கல், மணல், சிமென்ட், கூலி என செலவு ரூபாய் 3500 ஐத்தாண்டினாலும் குடியிருப்பவர்களுக்கு இனி ஆபத்தில்லை என நிம்மதியாக இருந்தது.
மறுபடியும் அரவேனு ஞாபகம் வந்தது...அதென்ன?
1965இல் நீலகிரி மாவட்டம், படுகர்கள் அதிகம் வாழும் அரவங்காடு (அரவேனு) என்ற இடத்தில் அர்பன் கோஆபரேடிவ் பாங்க்கில் டெபுடேஷனில் அப்பாவுக்கு வேலை. காட்டுப்பகுதியில் வீடு. வீட்டிற்கு வெளியே கொஞ்சம் தள்ளி பள்ளம் தோண்டி இரண்டு கல் வைத்து மேற்கூரையுடன் தற்காலிக கழிவறை இருக்கும். சில நாட்களில் குழி நிறைந்துவிட வெறும் மண்ணால் அதை மூடிவிட்டு பக்கத்தில் இன்னொரு குழி மற்றும் மேற்கூரையுடன் மற்றொரு தற்காலிக கழிவறை கட்டிவிடுவார்கள். நாலே வயதான நான் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது ஒருநாள் அந்த பழைய மலக்குழியில் கால் வைக்க, பொதக்கென இடுப்பு வரை உள்ளே போய்... காமா கவுடா, தேவ கவுடா என அப்பாவின் நண்பர்கள் ஓடிவந்து என்னை வெளியே இழுத்துப்போட்டு காப்பாற்ற...மறுபிறவி தான். இருபது முப்பது வருடங்கள் கழித்தும் அந்த சம்பவத்தைப்பற்றி பேசும்போதே என் அம்மா அழுதுவிடுவார்கள்.
குமுதம் ஸ்டோர் அருகே ஒரு டீயை குடித்துவிட்டு கிளம்பினேன். நல்ல வேளை..கீழ் வீட்டம்மா செப்டிக் டாங்க்கிற்குள்ளே விழாமல் தப்பித்தார்கள். புதிய ஸ்லாப் போட்டதும் கொஞ்சம் நிம்மதியானது.

No comments:

Post a Comment