Thursday, June 2, 2016

குஜராத்தி ரெஸ்ட்டுரன்ட்

சென்ட்ரல் கஃபே தாண்டி அமெரிக்கன் மிஷன் ஆஸ்பத்திரி சிக்னலுக்கு முன் இடது புறம் திரும்பினால் மனாமாவின் குறுகலான சந்துகள் ஆரம்பம்....வரிசையாக பளபளவென ஜொலிக்கும் நகைக்கடைகள்..'கால் இந்தியா-250 ஃபில்ஸ்' பலகையுடன் கடைகள், பங்களாதேஷிகளின் காய்கறி/பழ வண்டிகள்... வேர்க்கடலை, அவல்,பொறி தானியங்கள் மூட்டையுடன் ரோட்டில் வைத்து விற்கும் ஈரானி மளிகைக்கடைகள்..
சற்றுத்தள்ளி குறுகலான ஒரு சந்துக்குள் நுழைந்தால் பிரம்மாண்டமான கட்டிடமொன்று. உள்ளே மாடியில் கிருஷ்ணன் கோவில்..பக்கத்தில் சுமார் ஐந்நூறு பேர் அமரக்கூடிய 'தட்டாய் ஹிந்து மெர்கன்டைல் கமிட்டி' மண்டபம். தியானங்களும், சத்சங்கங்களும், ஐயப்ப பூஜை, நவராத்திரி துர்கா பூஜை, குஜராத்தி கர்பா/டான்டியா, கணேஷ் சதுர்த்தி விழா மற்றும் பரதநாட்டிய அரங்கேற்றங்கள் நடத்த ஏதுவான பெரிய இடம். மண்டபத்தையொட்டி அகண்ட வெற்றிடம்.
ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் பஹ்ரைன் அரசு இந்தியர்களுக்கு இலவசமாக கொடுத்த இடங்கள் அவை. தங்களது வியாபார நிறுவனங்கள் மூலம் பஹ்ரைனின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் பாட்டியா, கேவல்ராம், தேவ்ஜி, கஜ்ரியா,அசர்போட்டா, காவலானி போன்ற குஜராத்தி, மார்வாடி குடும்பங்களுக்கு நன்றியை தெரிவிக்கவே அப்போதைய அமீர் அவர்கள் அந்த இடங்களை இலவசமாக வழங்க, நம்மவர்கள் அங்கே பிரம்மாண்டமான கோவில் மற்றும் இரண்டு பெரிய மண்டபங்களை கட்டிக்கொண்டார்கள்.
சுமார் ஐந்நூறு அறுநூறு பேர் ப்ளாஸ்டிக் தட்டுடன் வரிசையில் நிற்க ராட்சத சைஸ் பாத்திரங்களில் ப்ரசாதம் பரிமாறும் சேவக்குகள். போதும் என சொல்ல சொல்ல வெள்ளை அரிசி முதலில் நம் தட்டில் விழும். சற்றே நகர அடுத்தவர் ஒரு பெரிய்ய்ய்ய கரண்டியில் உருண்டை வரமிளகாய் மிதக்கும் சாம்பாரை விட, அதற்கடுத்தவர் காரசேவு கலந்த இனிப்பு பூந்தியை சாம்பார் மேல் தூவி இறைக்க, சுடச்சுட இனிப்பும் காரமும் கலந்த மகாபிரசாதத்தை கலந்து கட்டி, கண்களை உருட்டி, மூக்கில் ஜலம் சொட்ட ஜனங்கள் சாப்பிடுவார்கள்.
நேற்று கோவிலில் சரியான கூட்டம். நீண்ட வரிசையில் நின்றோம். மண்டபம் முழுவதும் அப்துல் கலாம் போட்டோக்கள் மற்றும் ராக்கெட் படங்கள். மேடையில் பெரிய பிள்ளையார் சிலை. விநாயகர் சதுர்த்தியன்று மகாராஷ்டிரா மன்டல் காரர்கள் அவ்விடத்தில் பூஜை செய்து பொது மக்கள் வந்து வணங்க பெரிய விநாயகர் சிலையை வைத்திருப்பார்கள். நாற்காலி மீது ஏறி நின்றபடி 'கண்பதி பப்பா மோரியா' கோஷமிட்ட கையோடு 'விவா காலிங் கார்டு ஏக் தினார்... ஆஜ் ஏக் ஹி தீன் கேலியே' என ஒருவர் கத்திக்கொண்டிருத்தார். சற்று நேரம் சாமி கும்பிடுவதை மறந்து ஜனங்கள் 'எவ்ளோ டாக் டைம் தர்றானாம்' என விசாரிக்க, 'ஆகே படோ' என வரிசையை விரட்டினார்கள்.
கோவிலை விட்டு வெளியே வந்து நேரே குஜராத்தி ரெஸ்ட்டுரன்ட் உள்ளே நுழைந்தால் அங்கேயும் செம்ம கூட்டம். என்னுடன் நண்பர் Hariharan Subramanian மற்றும் Sudha Hariharanஇருந்தனர். அந்த உணவகத்திற்கு வயது சுமார் ஐம்பது வருடங்கள் இருக்கும். இன்னும் பழைய மேசை நாற்காலிகள்.. மராமத்து எதுவும் செய்யாமல் பழைய கட்டிடமாக இருத்தாலும் அங்கே உணவு பிரசித்தம் என்பதால் எப்போதும் கூட்டமிருக்கும்.
உட்கார்ந்த சில நிமிடங்களில் கீ (ghee) தடவி சுடச்சுட ஃபுல்க்கா, எண்ணெயில் புரண்டு ஓடும் ஆலு சப்ஜி, கடி, பச்சை சட்னி வகைகள், கேரட்/சர்க்கரை/க.மாவு கலந்த ஏதோ ஒரு பதார்த், சன்னாமசாலா, உந்தியா, கேலாபாஜி.. நிமிடத்திற்கொரு தரம் சுடச்சுட ஃபுல்க்கா ரொட்டிகள் தட்டில் விழும். 'பினா கீ..' சொன்னால் தான் சுக்கா ரோட்டி..
'ராத்திரிக்கி நானெல்லாம் ஸ்ட்ரிக்ட்டா மூனு சப்பாத்தி தான்' என பீற்றிக்கொள்ளும் ஆசாமிகள் கூட சத்தம் போடாமல் எட்டு ஒன்பது ரொட்டிகளை மொசுக்குவார்கள். 'பஸ் கரோ பையா' என வெட்கத்துடன் பெண்கள் சொல்ல சொல்ல 'ஏக் ஔர் ரோட்டி லேலோ பெஹன்ஜி' என கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பார்கள். அடுத்து சூடான மூங்தால் கிச்சடி, அதன் மேல் மொண்டு ஊற்றப்படும் நெய்..கடியுடன் கிச்சடி தொண்டையில் வழுக்கிக்கொண்டு இறங்க சடுதியில் நமக்கு ட்ரைக்ளிசரைடு எகிறும்.
சற்றே புளித்த 'ச்சாஸ்' (மோர்) குடித்தபின் 'ஏவ்' என எழுந்து கல்லாவில் காசு கொடுக்கும்போது அங்கேயும் கச்சோரி, டோக்ளா, பாக்கர்வாடி, சேவ், தூத்பேடா, மலாய் பர்ஃபி, ஏலக்காய் பொடி தூவிய மஞ்சள் வர்ண ஜிலேபி..என அநியாயத்துக்கு நம் பசியை மறுபடியும் தூண்டுவார்கள்.
நண்பர் ஹரியிடம் விடைபெற்றுக்கொண்டு காரை நோக்கி நடக்கும்போது ' இனி ஒரு மாசத்துக்கு ஹோட்டல்லயே சாப்புடக்கூடாது.. ஆமா' என மனைவி சொன்னபோது சிரிப்பை அடக்கமுடியவில்லை.

No comments:

Post a Comment