Thursday, June 2, 2016

கோபாலசுந்தரம் மாமா & ருக்கு மாமி

1996க்குப்பிறகு 19 வருடங்கள் கழித்து நேற்று எங்களது பஹ்ரைன் நண்பர் Gopala Sundaram மாமா மற்றும் ருக்கு மாமி இருவரையும் கோவையில் சந்தித்தோம். சுமார் ஐந்து மணி நேரத்தை எனக்காக ஒதுக்கி, மாமியையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு நேரே நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வந்து.. 'ஏலா உன்னாவுபா ஶ்ரீதர்!.. பாகுன்னாவா உஷா... We will be happy to spend some time with you' என அன்பொழுகச்சொல்லி எங்களை அழைத்துக்கொண்டு போனதில் நெகிழ்ந்து போனோம்.
இவரைப்பற்றி ஒரு இன்ட்ரோ...மாமா ஒரு பாங்க்கர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் குவெய்த் போன்ற நாடுகளில் வங்கிகளில் உயர் பதவிகளில் இருந்தவர். மூன்று வருடங்கள் பஹ்ரைனில் ஒரு வங்கியின் சீனியர் வைஸ் பிரெசிடென்ட்டாக இருந்தபோது நண்பன் Ganapathi Subramanian மூலம் எனக்கு பரிச்சையமானவர். நான் ஏற்கனவே எழுதியிருந்தபடி, பஹ்ரைன்வாழ் மக்களுக்கு தமிழார்வத்தை புகுத்தியவர். அதீதமான ஆங்கிலப்புலமை உடையவர். நிறைய மேடை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து தமிழ் சினிமா பாடல்கள் ( குறிப்பாக கண்ணதாசன் பாடல்கள்) பற்றிய பாடல்கள் தொகுப்பை வித்தியாசமாக அளித்தவர். ஆர்எஸ். மனோகர் ஸ்டைலில் 'தியாகய்யா' நாடகத்தை இயக்கி முப்பதுக்கும் மேற்ப்ட்ட உள்ளூர்க்கலைஞர்களுடன் அரங்கேற்றியவர். 'திரையிசைப்பாடல்களும் கர்னாடக இசை ராகங்களும்' என்ற நிகழ்ச்சி மூலம் நிறைய இளம் பாடகர்களை மேடையிலேற்றி அசத்தியவர். இராமர் பட்டாபிஷேக கதாகாலட்சேபம் நடத்தியவர். திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றி மூன்று மணி நேரங்களுக்கு மேல் உரையாற்றியவர். திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் அனுபூதி, திருப்பா என எக்கச்சக்கமான நூல்களை மேற்கோள்காட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதில் வல்லவர். கணிதம் மூலம் ராகங்களை கண்டுபிடிப்பது, திரையிசைப்பாடல்களின் ராகங்களை கண்டுபிடிப்பது, டிசம்பர் சீசனில் சென்னை இசை விழாக்கள் சென்று வந்து நண்பர்களுடன் அலசுவது, கர்னாடக இசைப்பாடல்கள், பாடகர்கள், பாடல் வரிகள், கம்போஸ் செய்தவர்களின் பெயர்கள் எல்லாமே மாமாவுக்கு அத்துப்படி. வெள்ளிக்கிழமைகளில் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மேளகர்த்தா ராகங்கள் பற்றி சொல்லிக்கொடுப்பார். அந்தப்பக்கம் டிபன் காபி சப்ளை ஜரூராக நடந்துகொண்டிருக்கும். கர்னாடக இசை சம்மந்தப்பட்ட க்விஸ் நிகழ்ச்சியும் நடத்துவார். மேடையில் கச்சேரி செய்யும் பாடகர்களும் இவர்முன் குழந்தைகள் போல அமர்ந்து கவனித்து இவரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்வார்கள்.
இவரது குழந்தைகள், பேரன் பேத்திகள் எல்லோரும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட, தன்னுடைய ஜாகையை தற்போது அமெரிக்காவிலிருந்து கோவைக்கு மாற்றிக்கொண்டார் மாமா.
நேற்று மாமாவும் மாமியும் காந்திபுரம் வந்து என்னையும் உஷாவையும் தங்கள் காரில் அழைத்துக்கொண்டு ரேஸ்கோர்ஸ் ரோடு 'அன்ன லக்ஷ்மி' சென்றடைந்தபோது மதியம் மணி இரண்டு. தக்காளி சூப்பில் ஆரம்பித்து தாம்பூலம் வரை தாலி சாப்பாட்டை பஹ்ரைன் நண்பர்கள் மற்றும் கடந்த 19 வருட வாழ்க்கை அனுபவங்களுடன் பகிர்ந்துகொண்டு மூனரை மணிக்கு கிளம்பி பேரூர் வழியாக தாழியூர் நோக்கி பயணம் செய்தோம். தெலுங்கை தாய்மொழியாகக்கொண்ட அவர்கள் நடுநடுவே படுசரளமாக பெங்காலியிலும் சம்சாரிப்பவர்கள்.
படு சுவாரசியமானது அடுத்த பத்து கிலோமீட்டர் பயணம். தாமிரபரணியில் வளர்ந்தவரான இவர் பாரதியின் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் பற்றி மணிக்கணக்காக பேசக்கூடியவர். தன் சொந்த ஊரான தூத்துக்குடி ஶ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்ட கோயில்களைப்பற்றி பேசிக்கொண்டு வந்தார். அங்கே 1885இல் ஸ்தாபனமான ஶ்ரீகுமரகுருபரர் ஸ்வாமிகள் பள்ளியில் தான் மாமாவின் தமிழ் இலக்கண, இலக்கிய ஆர்வம் ஆரம்பமானது. பிறகு கார்னேஷன் ஸ்கூல்...ஸ்வராஜா ஸ்கூல் என புதிய நாமகரணங்களுடன் பள்ளி உயர, மாமாவின் இலக்கிய அறிவும் வளர்ந்தது. குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம் மற்றும் அக்கால சைவசித்தாந்த தத்துவங்கள், மேடை நாடகங்களில் விருத்தாபி குமரகுருபரர் பாத்திரமேற்று நடித்தது என மாமாவின் இளமைக்கால வாழ்க்கை இலக்கியத்தைச்சுற்றியே வளர்ந்தது. மு.வ அவர்கள் சான்றுதல் அளிக்க கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருபத்தியிரண்டே வயதில் மாமா தமிழ்ப்பாடம் நடத்த ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அவரது மாணவிகள் நிறைய பேருக்கு திருமணமாகியிருந்ததால் சின்னப்பையனான மாமாவை வகுப்பெடுக்க அனுமதிப்பதில் சிக்கலேற்பட அப்போதே மாமாவுக்கும் சட்டென திருமணம் செய்து வைத்தார்களாம். தகவல்: மாமி.
'நானா நானி' குடியிருப்பு வளாகத்தின் வாயிலில் ஆறு குதிரைகள் ரதம் எங்களை வரவேற்க அருகேயே புதிய மகாகணபதி மற்றும் ஶ்ரீராதா கிருஷ்ணர் ஆலயங்கள். சுமார் 180 வில்லாக்களுக்கு மத்தியில் மாமாவின் அந்த அழகான புதிய வில்லாவிற்குள் நுழைந்தோம். கீழே இரண்டு படுக்கையறைகள், வாசல் திண்ணை மற்றும் விசாலமான வரவேற்பறை, நவீன சமையலறை மற்றும் குளியலறைகள். மாடியில் மிகப்பெரிய பால்கனி, படுக்கையறை, வரவேற்பறை மற்றும் மொட்டைமாடி. நேரத்திற்கு அருமையான உணவு வழங்கும் கஃப்டீரியா, டாக்டர்கள் வசதி, தியான மண்டபம், கம்யூனிட்டி ஹால் என சகல வசதிகள் கொண்ட இடம்.
மறுபடியும் அங்கிருந்து ஐந்தரை மணிக்கு கிளம்பும்போது மாமா தானும் கூட வந்து காரில் எங்களை ராஜவீதியில் இறக்கி விட்டு வீடு திரும்பினார். இந்த வயதிலும் இவ்விருவரது விருந்தோம்பல், தமிழார்வம், நகைச்சுவை உணர்வு எங்களை பிரமிக்க வைக்கிறது. மாமா மிக அருமையாக ஜோசியம் பார்ப்பவரென்பதால் இப்போதும் மற்ற தூரதேசத்து நண்பர்களின் ஜாதகப்பொருத்த விண்ணப்பங்களும், தோஷ பரிகார ஆலோசனைக்கான ஈமெயில்கள் மூலம் குவிந்தவன்னம் இருப்பது உண்மை. இவ்வயதிலும் முகநூலில் மாமா தினமும் எழுதும் 'சுபாஷிதானி' மற்றும் 'தினம் ஒரு திருப்புகழ்' பதிவுகள் இக்கால இளைஞர்கள் அவசியம் படித்துப்பயன்பெற வேண்டியவை.
வெள்ளி பரிசுப்பொருட்களும் மாமா மாமியின் வாழ்த்துச்செய்தியுடனான 'திருப்பா' புத்தகத்தையும் அவர்கள் எங்களுக்கு அளித்தபோது திக்குமுக்காடிவிட்டோம் என்பது சத்தியம்.
மாமா மாமி இருவருக்கும் நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் மற்றும் நிம்மதியான உறக்கத்துடனான வாழ்க்கை, ஏராளமான நண்பர்கள், அனைவரும் பயன்பெறும் வகையில் மேலும் நிறைய முகநூல் பதிவுகள் எழுத ஶ்ரீவைகுண்டம் கைலாசநாதரை வேண்டுகிறேன்.

3 comments:

  1. SRI:|| A FINE PERSON , Sri Gopalasundaram, with whom we were together for abt 9 yes. We were actively connected with Bharathi Tamil Sangam , Tamil Manavar Mandram , South India Club, Udayam ( youth club ), Amateur Drama Club etc. I still remember The Rajaraja Chozhan Drama , in which he acted as Raja Rajan. A versatile personality and wee admired his moult I facet capacities. We wish him and his wife good health and peaceful life - Madhavan .

    ReplyDelete
  2. SRI:|| A FINE PERSON , Sri Gopalasundaram, with whom we were together for abt 9 yes. We were actively connected with Bharathi Tamil Sangam , Tamil Manavar Mandram , South India Club, Udayam ( youth club ), Amateur Drama Club etc. I still remember The Rajaraja Chozhan Drama , in which he acted as Raja Rajan. A versatile personality and wee admired his moult I facet capacities. We wish him and his wife good health and peaceful life - Madhavan .

    ReplyDelete
  3. Great to know your close aquaintence with Gopalasundaram mama!
    Many thks for reading my blog Mama..🙏

    ReplyDelete