Thursday, June 2, 2016

ரேணிகுண்டா


ரேணிகுண்டா ஸ்டேஷன். இரவு 7 மணிவாக்கில் பம்பாய் மெயில் சோம்பேறித்தனமாக க்றீச்சிட்டு நின்றது.. 'ச்சாயே..காபி.. ச்சாயே ச்சாய்..டீ விற்பவர்கள் சத்தம். ஸ்டேஷனில் எங்கு பார்த்தாலும் தெலுங்கு எழுத்துக்கள். 'பயணிகள் கவனிக்க!' என தெலுங்கில் ஏதோஅறிவிப்பு.
'ரவுடி ராமுடு கொண்ட்டே கிருஷ்ணுடு' சினிமா போஸ்டரில் சமோசா மூக்குக்கு கீழே பென்சில் மீசை என்.டி.ஆர் கன்னத்தில் ஶ்ரீதேவி இச். தண்ணீர் பாட்டிலுடன் தபதபவென பெண்கள் குறுக்கே ஓடிக்கொண்டிருக்க, வயதான பெற்றோர்களை 'ஜல்தி வெள்ளு' என அதட்டி இழுத்துக்கொண்டு மக்கள் விரைந்துகொண்டிருந்தார்கள்.
கையில் சின்ன பையுடன் முதல் வகுப்பு தங்கும் அறைகள் பகுதியை நோக்கிப்போனேன். வாசலில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருந்தவன் தெலுங்கில் ஏதோ சொல்லும் முன் 'பாஆஆம்' என ஏதோ ரயில் ப்ளாட்ஃபாரத்தினுள் நுழைய மறுபடியும் அவன் 'ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் உந்தியா?' எனக்கேட்டான். பாண்ட்டிலிருந்து இரண்டு ரூபாய் எடுத்து அவனிடம் நீட்டி 'ஸ்நானம் காது..ஃபேஸ் மாத்ரம் வாஷ் செய்வாலெ!' என்றதும் மரியாதையுடன் உள்ளே விட்டான்.
அடுத்த பத்து நிமிடத்தில் ஜீன்ஸ் டீ-ஷர்ட்டுக்கு மாறிக்கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது 'செப்புறா! ஏஞ்ச்சேசுன்னாவு?' என இரு ஆந்திர போலீசார் இளைஞன் ஒருவனை அடிக்க கையை ஓங்க, அடி விழும் முன்பே பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி 'ஐயோ..ஐயோ.. லேதய்யா!' என இளைஞன் கத்திக்கொண்டிருந்தான்.
திருச்சானூர்.. திருச்சானூர்.. என கத்திக்கொண்டிருந்த காலி பஸ்ஸினுள் ஓடிப்போய் ஏறி அமர்ந்தேன். ஓரிரு நிமிடங்களில் புளுதியை கிளப்பி பலத்த அதிர்வுடன் பஸ் கிளம்பும் சமயம் பார்த்து இருபதுக்கும் மேற்ப்பட்ட கிராமத்து கும்பல் உள்ளே ஏறியது. பஸ் முழுக்க அடுத்த நொடி வேப்பெண்ணெய் நெடி.. கூட செம்மறியாடு வாடை. திம் திம் என பஸ்ஸின் மேற்புறம் மூட்டைகள் வைக்கும் சத்தம். பஸ் மெல்ல கிளம்பியது.
அடுத்த நிமிடம் 'நீ ரூபம் ஆனந்தமே..' என் ஸ்பீக்கரில் கண்டசாலா தெலுங்குப்பாட்டு அலற, முண்டாசு கட்டிய பாபுக்கள் தலையை ஆட்டி ரசித்தனர். பஸ்ஸுடன் சேர்ந்து கண்டசாலாவின் குரலும் கு..லு.. ங்கி..யது. 'இதெல்லாம் எப்பிர்றா!' என வியந்தவன்னம் பஸ் குலுக்கலில் நானும் முண்டாசுக்கள் மேல் சரிந்து ஆடிக்கொண்டே பிரயாணம் செய்தேன். வெளியே இருட்டு..அரை மணி நேரப்பயணம்.
சில மாதங்கள் முன்பு இரவு உணவு முடித்தவுடன் பத்து மணிக்கு, செம்பூரில் நான் தங்கியிருந்த 20த் ரோடு வீட்டை விட்டு கிளம்பி தபால் அலுவலகத்திற்கு போனேன். எனக்கு முன்னே சிலர் தொலை பேசிக்காக காத்திருந்தனர். பொது தொலைபேசியில் விரலை விட்டு நம்பரை சுழற்ற உடனே லைன் கிடைக்க எதிர்முனையில் விசாக பட்டினத்திலிருந்து என் தம்பி ரவி என்கிற விஜயராகவன்.
' ரவி!..அவங்க மெட்ராஸ் யூனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட்ங்கற..ஆபீஸ்லயும் ரொம்ப நல்ல பேரு. பாதி ஆந்திரா இன்சார்ஜ். நீயும் ராயலசீமா, காகிநாடான்னு மீதி ஆந்திரா இன்சார்ஜ்... அவங்களும் தெலுங்கு. ரெண்டு பேரும் டிசைட் பண்ணிட்டீங்கல்ல?' சாவியினால் அங்கங்கே சுரண்டி சுவரில் எழுதப்பட்டிருந்த தொலைபேசி எண்களை பார்த்தவாறு நான் தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தேன். இருபத்தி அஞ்சு நிமிடம்... நாற்பது ரூபாய் என மீட்டர் காட்ட சீக்கிரம் போனை துண்டித்து ரூமிக்கு திரும்பினேன்.
திடீரென கிராமத்து கும்பல் கடாமுடாவென என் மண்டையில் இடித்து எழுந்துகொள்ள பழைய நினைவுகளிலிருந்து நான் மீண்டு.. பஸ் நின்றிருந்தது. வெளியே திருச்சானூர். எங்கோ எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல்...
தூரத்தில் கோயில். பக்கத்தில் எக்கச்சக்கமான திருமண மண்டபங்கள். நாதஸ்வர ஒலி காற்றில் பரவ ஒரொரு மண்டபமாக பார்த்துக்கொண்டே வந்தேன். ஆ.. எனக்கு பரிச்சயமான முகங்கள்! இன்னும் பக்கத்தில் போனேன். மண்டபத்தினுள் அம்மா! நம்ம வீட்லயும் எல்லாரும் வந்திருக்காங்களே என வியந்து நான் உள்ளே நுழைய, டும்..டும் என தவில் சத்தம்..'வாப்பா ஶ்ரீதர்! நீயும் வந்துட்டியா என அக்காக்கள் என்னை நோக்கி ஓடி வர, 'ராப்பா ஶ்ரீதர்! ஒச்சேஸ்திவா? சந்த்தோஷம். ரேப்பு தரவாத்த முகூர்த்தம்'...பதட்டமில்லாமல் முகம் நிறைய புன்னகையுடன் வரவேற்ற அம்மா.
'டேய்! பாம்பேல இருந்து வந்துட்டியா!' அப்படியே என்னை அனைத்துக்கொண்டான் என் தம்பி ரவி. சற்று தள்ளி வெள்ளை வேஷ்டியில் மூத்த அண்ணன் பாபு..
இப்போதும் நான் நினைத்து ஆச்சரியப்படுவது:
1. வளைகுடாவில் பிறந்து வளர்ந்து பஹ்ரைனில் பல வருடங்கள் தினமும் ஃபுட்பால் மற்றும் செஸ் சேர்ந்து விளையாடிய ரவியின் பையன் சித்தார்த்( தற்போது கனடாவில்), சின்னவன் ப்ரணவ் (தற்போது சென்னையில்) மற்றும் பெரியவன் பிரஷாந்த் (தற்போது பம்பாயில்).
2. மஸ்கட்டில் வளர்ந்து படித்து, ஐ.ஐ.டியில் இடம் கிடைத்தும், உலகத்தர வரிசைப்பட்டியலில் முதலிடத்திலுள்ள சிங்கப்பூர் NTU வில் படித்து சிங்கப்பூர் சிட்டி பாங்க்கில் வேலை செய்யும் அர்விந்த்(ரவியின் பெரியவன்)
27 வருடங்களுக்கு முன் ரேணிகுண்டா to திருச்சானூருக்கு நான் பஸ்ஸில் சென்ற தினம் இன்று.. நேரமும் இப்போது அதே! 

No comments:

Post a Comment