Thursday, June 2, 2016

இந்த பிரபலம் எங்கள் வீட்டில் ....

இந்த பிரபலம் எங்கள் வீட்டில் ....
எழுத்தாளர், மேலாண்மை நிதி ஆலோசகர், நிறைய பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர். சமூகம், அரசியல் மற்றும் வரலாறு சார்ந்த நூல்கள் நிறைய எழுதியிருப்பவர். வித்தியாசமான சிந்தனையும் சமூக நல அக்கரையும் கொண்டவர். அனுபவமிக்க சிறந்த Banker என்பதால் நிதி ஆலோசனைகள், பொருளாதாரம் சம்மந்தப்பட்ட கருத்தரங்குகள், டிவி நேர்க்காணல் என நாள் முழுவதும் தன்னை முழு ஈடுபாட்டுடன் வைத்திருப்பவர்.
இவருடைய blogஐ படித்தால், மலைத்துப்போகும் அளவிற்கு அட்டகாசமான கட்டுரைகள். 'ஈர்ப்பு விசையை இசையாக கேட்கலாம்', 'என்று தணியும் இந்த தாகம்' போன்ற கட்டுரைகளே சான்று. (ramananvsv.blogspot.com)
ஏராளமான டீவி கருத்து மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை அடக்கமாக, அழகாக, ஆணித்தரமாகவும் சொல்பவர். ஜெயா டிவியில் சுதாங்கன் அவர்களின் 'நடந்தது என்ன' நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் வானதி ஶ்ரீனிவாசன் அவர்களும் இவரும், 'மோடி அரசு திட்டக்கமிஷனை கலைத்து விட்டு 'நிதி ஆயோக்' கொண்டு வந்தது சரியா இல்லையா' என்று விவாதம் செய்யும் நிகழ்ச்சி, நிதி மற்றும் பொருளாதாரத்தை பாமரரும் புரிந்துகொள்ளும் அளவிற்கு அருமை.
எனது முகநூல் நண்பர் இவர். இம்மாதம் முதல் வாரத்தில் நான் சென்னையில் இருந்தபோது இவரிடமிருந்து குறுஞ்செய்தி.. 'தினமும் முகநூலில் சந்திக்கிறோம். உங்க பஹ்ரைனுக்கு வருகிறேன்' என்று. எனது தொடர்பு எண்ணை இவருக்கு அனுப்பிவிட்டு பஹ்ரைன் வந்துவிட்டேன்.
'ஹலோ! வளைகுடா நாடுகளில் நாங்க மேற்கொண்ட ஆய்வில் நீங்க தான் சிறந்த CEOவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கீங்க. அடுத்த மாசம் லண்டனில் பாராட்டு விழா. டி.வி பேட்டி உண்டு. உங்க சேர்மனான்ட பேசியாச்சு. ஒத்துன்ட்டார். சுமார் பத்தாயிரம் பவுண்டு எங்களுக்கு உடனே அனுப்பிச்சா நாங்க மேற்படி வேலைய துடங்குவோம். மீதி காசு பொறவு கொடுத்தா போதும்' என 'பல் விளக்கும்' ஆங்கிலத்தில் லண்டன் கால்கள் வருவது இங்கு சகஜம். ' உதைப்பேன் படவா!' என்ற ரீதியில் நாம் பதிலளித்தால் போன் உடனே துண்டிக்கப்படும். 'அப்படீங்களா! இதெப்போ? தெரியாம போச்சே!' என கேட்டுத்தொலைத்தோமென்றால் போச்சு. கழிவறையில் உட்கார்ந்திருக்கும்போதும் கூட அந்த லண்டன் போன் கால்கள் வந்துகொண்டேயிருக்கும்.
இந்த கதை இப்ப எதுக்கு? அப்படியொரு கால் சமீபத்தில் எனக்கு வர, உடனே துண்டித்தேன். உஷார் பேர்வழிகள் எப்படியோ அடுத்த சில நிமிடங்களில் ஏதோ உள்ளூர் நெம்பரில் இருந்து திரும்ப திரும்ப அழைக்க, போனை எடுத்து 'ஹலோ! எத்தினி தபா போன் செய்வீங்க? என கொஞ்சம் காட்டமாக கேட்டேன். அடக்கமாக பதில் வந்தது: 'இல்லீங்க நான் xxxx பேசறேன். சென்னையிலிருந்து பஹ்ரைன் வர்றேன்னு உங்களுக்கு மெசேஜ் அனுப்ச்சேனே!' என இவர் பேசவும், வெலவெலத்துப்போய் 'சார்! மன்னிச்சுக்கோங்க.. வேற நியூஸென்ஸ் காலோன்னு நெனைச்சுக்கிட்டேன்' என பகிரங்கமாக பல முறை மன்னிப்பு கேட்டேன். 'பரவால்லீங்க..இந்த ஏரியாவுல சிக்னல் பிரச்னை.. போன்ல சத்தம் கேக்கலை... அதான் திரும்ப திரும்ப பண்ணினேன்' என சர்வ சன்னமான குரலில் பேசிய அவரது humblenessஐ நினைத்து எனது செயலுக்கு வருந்தினேன்.
பஹ்ரைனில் வங்கி ஒன்றில் Senior Vice President ஆக இருக்கும் இவரது மைத்துனர் எனக்குத்தெரிந்தவர் தான். மறுநாள் அவரது இல்லத்தில் இவரை சந்தித்தேன். அடுத்த வாரம் எனது அழைப்பை ஏற்று எங்கள் இல்லத்திற்கும் வந்திருந்தார்.
இவரா அந்த பிரமுகர்..! எவ்வளவு எளிமையாக இருக்கிறாரென வியக்க வைக்கும் உருவம். தூக்கி வாரிய தலைமுடி. சிலர் மீசையை மேலுதட்டில் வளரவிட்டு அத்தோடு விடாமல் மேல்பக்கம் அழகாக நேர்க்கோடு மாதிரி ட்ரிம் செய்வார்கள். வைகோ, எழுத்தாளர் ஜெயகாந்தன், கலைஞர், இயக்குநர் மகேந்திரன் போன்றவர்கள் வரிசையில் இவருக்கும் சீராக ட்ரிம் செய்யப்பட்ட மீசை.
சுமார் ஒரு மணி நேரம் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தார். கல்கி பத்திரிக்கை மற்றும் கல்கி குடும்பத்தினருடன் மிகவும் தொடர்புடையவர். நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அந்தக்கால ஓவியர்களைப்பற்றி எங்கள் பேச்சு திரும்ப, ஓவியர் லதா மற்றும் ம.செ, G.K. மூர்த்தி ஓவியங்களையும் வெகுவாக புகழ்ந்தார். ஓவியர் லதா அவர்கள் வரையும் பெண்கள் எப்போதும் புஷ்டியானவர்களாக இருப்பதை மெல்லிய நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். புத்தகங்கள் படிக்கும் பழக்கம் நமது இளைஞர்களிடம் குறைவது குறித்து வருந்தினார். துபாய் விமானதளத்தின் duty free கடைகளில் புத்தகங்களுக்கு தள்ளுபடி இல்லை ஆனால் மதுவிற்கு தள்ளுபடி என்ற இவரது ஆதங்கம் நியாயமானது தானே!
இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் பற்றியும், கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் (defaulters) மற்றும் அதனால் அவதியுறும் வங்கி உயர்மேலாளர்களின் அவலத்தையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். இவரது மனைவி கனரா வங்கியில் பணிபுரிந்தவர். எம்.ஏ (பிரபந்தம்) படித்துக்கொண்டிருப்பவர் என்பதால் நண்பர் Sarva Bhoumanஅவர்களது பன்னிரு ஆழ்வார்கள் புத்தகத்தை அவருக்கு அளித்தேன். கவிதை நடை நூலா என வியப்புடன் பெற்றுக்கொண்டார். அதில் இடம்பெற்ற எனது ஓவியங்களையும் மிகவும் ரசித்தார்.
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். விடை பெற்றுக்கொண்டு சென்றவுடன் மறுநாள் தனது மைத்துனர் மூலம் 'கருப்புப்பணம்', 'சீனா வல்லரசு ஆனது எப்படி', 'கடைசி கோடு' போன்ற அவர் எழுதிய புத்தகங்களை எனக்கு பரிசாக அளித்துவிட்டு துபாய் சென்றுவிட்டார். 'நினைவில் நிற்கும் ஒரு மாலைப்பொழுதை அளித்த அன்பான ஶ்ரீதர் தம்பதியினருக்கு' என்ற கைப்பட எழுதிய வரிகளுடன் புத்தகங்கள்.
உங்களுக்கு வேறொரு பிரபல பிரமுகர் முக ஜாடை இருக்கேயென நான் தயங்கி கேட்டபோது, தான் மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. மாலன் அவர்களது சகோதரர் என அடக்கமாக சொன்னார்.
நன்றி Ramanan Vsv சார்...

பெய்ஜிங் (சீனா)...

சீனா செல்ல பஹ்ரைனிலிருத்து விமானம் பிடித்து துபாயில் இறங்கி, லோலோவென இருபது நிமிடம் நடந்து, விமான தளத்தின் உள்ளேயே மெட்ரோ ரயில் பிடித்து, டெர்மினல் வந்து, ட்யூட்டி ஃப்ரீ கடைகளுக்கு மத்தியில் தேடி, துபாய் மர்ஹாபா லௌஞ்சு வந்து சேரும்போது கண்ணாடி ஜன்னல் வழியே சீனப்பெருஞ்சுவரே தெரிந்தது.
மதியம் 12 மணி. கொலைப்பசி.. லவுஞ்சில் சுடச்சுட ஏஷியன் உணவு, பச்சை தேனீரை முடித்து வைஃபையை முடுக்கி கொஞ்ச நேரம் முகநூலை மேய்ந்து, சரியாக இரண்டு மணிக்கு பெய்ஜிங் விமானத்தை பிடிக்க கேட் நெ:15 வந்து சேர்ந்தபோது அங்கே ஒரு மினி சைனாவே இருந்தது. உரித்த உருளைக்கிழங்கு மாதிரி சின்னச்சின்ன குழந்தைகள். 'சிக்கு மங்கு சிக்கு மங்கு செக்க பப்பா' பாடலாம். எங்களைத்தவிர இந்தியர்களே இல்லை.
அந்த A380 விமானத்தின் உள்ளே மேல் தளமும் இருந்தது. இருக்கையில் உட்கார்ந்த இருபதே நிமிடங்களில் பட்பட்டென கதவை சாத்தி மெல்ல டாக்சியிங் செய்து ஜிவ்வென மேலே எழும்பி மணிக்கு 500 கி.மீ வேகத்தில் பறக்க ஆரம்பித்தார், ஓமக்குச்சி நரசிம்மனை விட இன்னும் ஒல்லியாக இருந்த சீன விமானி. துபாயிலிருந்து பெய்ஜிங் சுமார் ஆறாயிரம் கி.மீ. தூரம். அடுத்த சில நிமிடங்களில் மணிக்கு 1000 கி.மீ. வேகமெடுக்க சிற்றுண்டி கொடுக்க ஆரம்பித்த சீன விமான பணிப்பெண்கள் படு சுறுசுறுப்பு! . இப்பத்தானே கீழே சாப்ட்டோம்! அடுத்த 6, 7 மணி நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு முறை உணவு விநியோகம். பக்கத்தில் மனைவி Usharani Sridharஇரண்டு தமிழ் படங்கள் பார்த்துவிட்டார்.
இரவு பெய்ஜிங்கில் விமானத்தை விட்டு வெளியே வரும்போது 'சீதாபதி ஶ்ரீதர்' பெயர் பொறித்த அட்டையுடன் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணொருத்தி எங்களை வரவேற்று அடுத்த அரை மணியில் ஹோட்டலில் இறக்கி விட்டு விடைபெற்றுக்கொண்டாள். பெட்டியை போட்டுவிட்டு கீழே இறங்கி வந்து சீனத்தெருவில் சிறிது நேரம் நடந்து அருகே KFC ஒன்றில் பூண்டு ரொட்டி சாப்பிட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம்.
அழகான பெய்ஜிங் நகரம்... ஓரிடத்தில் அருகருகே நான்கு நீளமான கட்டிடங்களை சேர்த்து ராட்சத டிராகன் வடிவில் கட்டியிருந்தார்கள்.அகன்ற சாலைகளின் ஒரு பகுதி இரண்டு/மூன்று சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல. நகர் முழுக்க சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தவன்னம் இருக்கும்போது தரையின் கீழ் மெட்ரோ ரயில்கள். சுமார் 20 மில்லியன் ஜனத்தொகையாம். பிரதான வீதிகள் ஒவ்வொன்றும் குறைந்தது 5 கி.மீ நீளமாவது இருக்கும். எங்கு பார்த்தாலும் ஈசல் மாதிரி ஜனங்கள் கூட்டம்.ஆண் பெண் எல்லோருக்குமே ஒடிசலான உருவம். யாருமே மெதுவாக நடப்பதாகத்தெரியவில்லை. விசுக் விசுக் என கையை நீட்டி நடக்கிறார்கள். பல பெண்கள் கிட்டத்தட்ட நம்ம ஊர் மஞ்சுளா சாயல். மை பென்சிலால் கிழித்து விட்ட கோடுகள் மாதிரி கண்கள்.
பஹ்ரைனில் தாதாபாய் டிராவல்ஸின் மலையாள பெண்மணி சகாயமான விலையில் எங்களுக்கு மூன்று நாட்களுக்கான ஐடினெரரியை தயார் செய்து கொடுத்தாலும், மனைவி உஷா அவரை பெண்டு எடுத்து விட்டார். ஏற்கனவே வலையில் பீராய்ந்து என்னென்ன இடங்கள், எவ்வளவு தூரம் போன்ற தகவல்களை திரட்டிய உஷா 'நீங்க டியான்மன் ஸ்கொயர் கூட்டிப்போக தனியாக சார்ஜ் செய்ய வேண்டாம். அது எங்க ஹோட்டலில் இருந்து பக்கமாச்சே! நாங்க போய்க்கறோம்' என அவரது லாபத்தில் கொஞ்சம் மண்ணையும் அள்ளிப்போட்டார்.
'நோவோடெல்' என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கான கட்டனம். எல்லாம் ரிஸெஸ்ஷன் கொடுமை. இதுவரை அவ்வளவு வெரைட்டியான காலை உணவை வேறெங்கும் சாப்பிட்டதில்லை. Conjee (கஞ்சி), க்ராய்ஸோ(ன்ட்), ஆவியில் வேகவைத்த கொழுக்கட்டை போன்ற டம்ப்ளிங், கொழுப்பில்லா முட்டை ஆம்லெட்.. என வகைவகையாக காலை உணவை உண்டபின் வெளியே வந்தால் 12 seater டொயோட்டா ஹைஏஸ் வேனில் 14,15 வயது மதிக்கத்தக்க ஈவா என்ற பெண் காத்திருந்தாள். 29 வயதாம். அப்போது பேச ஆரம்பித்த அவள் அடுத்த இரண்டு நாள் கழித்து திரும்ப நாங்கள் விமானம் ஏறும் வரை ஓயவில்லை. அவளது குட்டிப்பையன் போட்டோ காட்டினாள். 'படு க்யூட்டா இருக்கானே' என சொன்னபோது அவளது முகம் பிரகாசமாகி 'ஓ.. தேங்க்ஸ்' என்றார். உலகின் எந்த ஒரு மூலையாக இருந்தாலும் அம்மா.. அம்மா தான்.
நகரத்திலுள்ள பிரதான நினைவுச்சின்னங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் அரச பரம்பரைக்கதைகள் தான். அந்தக்கால மன்னருக்கு ஆயிரம் பெண்டாட்டிகள் மற்றும் சேவை செய்ய அழகான யுவதிகள். திருநங்கைகள் தான் அரன்மனையில் சேவை செய்தார்களாம். தினமும் மன்னரின் அழைப்புக்காக அழகிகள் காத்திருக்க, அவர் தினமும் ஒரு அழகியை தேர்ந்தெடுப்பாராம். மன்னரின் திக்விஜயத்தின்போது, படை வீரர்களின் மனைவியோ பெண் குழந்தைகளோ கொஞ்சம் அழகாக இருந்து அவர் கண்ணில் பட்டுவிட்டால் போச்சு..திக்விஜய் சிங் ஆகிவிடுவாராம். நடுநடுவே ஈவாவை கொஞ்சம் தண்ணீர் குடிக்கச்சொன்னோம்.
முதல் நாள் சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்குப்பின் நாட்டின் எல்லையோரப்பகுதியில் பெரிய மலையடிவாரத்திற்குப்போனோம். அங்கிருந்து கேபிள் காரில் மலைமேல் ஏறிப்போனால் பிரம்மான்டமான சீனப்பெருஞ்சுவர். கிட்டத்தட்ட பத்தாயிரம் கி.மீ நீளமான சுவற்றின் ஒரு பகுதி தான் நாம் பார்ப்பது. நல்ல கூட்டம். விண்வெளியிலிருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரிகிறதாம். சுவற்றை உயரமான மரங்களடர்ந்த மலைகள் மேல் கட்டியிருக்கிறார்கள். ஆனால் சுவர் மேல் ஏறியவுடன் அங்கிருந்து தாவி வெளியே குதிக்கும் அளவே உயரம். 'அப்ப எதிரிகள் ஈசியா உள்ளே ஏறி குதிக்கலாமே!'என கேள்வி கேட்ட சின்னவனை அதட்டினேன்.
திரும்ப வரும் வழியில் jade factory என்ற இடத்தில் jade பவளக்கற்களைக்கொண்டு விதவிதமான ஆபரணங்கள் செய்வதை பார்த்தோம். மோதிரம், வளையல், காப்பு போன்ற அந்த ஆபரணங்களை அணிந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்குமாம். இரத்த கொதிப்பு வராதாம். விலையை கேட்டால் இன்னும் கொஞ்சம் ஆபரணங்கள் போடவேண்டி வரும்.
அடுத்து சீன தேநீர் தொழிற்சாலை ஒன்றிற்கு கூட்டிப்போனார்கள். இளைஞன் ஒருவன் பெண் சிப்பந்தியுடன் எங்களை ஒரு அறையில் அமர வைத்தான். பின் விதவிதமான கருப்பு, பச்சை மற்றும் வாசனை தேநீர் வகைகள் தயாரிக்கும் முறையை எங்கள் முன் செய்து காண்பித்து, சுவை பார்க்கச்சொன்னான். 'நீ எங்க வாரேன்னு எனக்கு தெரியும் ராசா' என நான் நினைத்தது சரி. எல்லா தேநீர் வகைகளும் அடங்கிய அட்டை டப்பாவை சல்லிசான விலையென்று நம் தலையில் கட்டப்பார்த்து நூதன முறையில் கொள்ளையடிக்கப்பார்த்த இளைஞனை வெற்றிகரமாக சமாளித்து காரில் ஏறும்போது, 'oh.. Pleasant flavor !' என வியந்த ஐரோப்பிய தாத்தா ஒருவரை 'மாட்னான்டா சேகரு.. தோ.. வாரேன்' என இளைஞன் எங்களை விட்டு ஓடினான்.
மறுநாள் காலை மழையில் நனைந்தவாறு tiannaman square. அதை அடுத்து forbidden city. அந்தக்கால அரண்மனைகள் அப்படியே பாதுகாக்கப்பட்டு இருந்தன. வாசல் உள்ளே நுழையும்போது ஒரு அரண்மனை தான் இருக்கும் என நினைத்தால் ஏழெட்டு அரண்மனைகள் உள்ளே. Large stone carving, summer palace, Imperial ancestral temple, garden of virtue and harmony என எல்லா அரண்மனை பின்னனியிலும் ஒரே அரச பரம்பரை கதைகள் கேட்க போரடித்தது.
'அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மீது எங்கள் அரசாங்கத்துக்கு எப்பவுமே பொல்லாத கோபம். நல்ல சமாச்சாரங்களை விட்டுவிட்டு எங்க நாட்டைப்பற்றி அவதூறு செய்திகளை மட்டும் பரப்புகிறார்கள். அந்த காலத்தில் எங்களது புராதன சின்னங்களை அழித்த அல்லைடு ஃபோர்ஸுகள் மீதுள்ள கோபம் இன்னும் தனியவில்லை' என ஈவா பெருமூச்சு விட்டபோது அவளது தேசப்பற்று தெரிந்தது. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளதாம். 'என்னாது!' என வடிவேலு மாதிரி கேட்டு வியந்தோம்.
அடுத்து சீன இயற்கை மருந்து தயாரிக்கும் நிறுவனம். நிறைய சுற்றுலா பயணிகள். நல்ல கூட்டம் என்பதால் இருபது இருபது பேராக உள்ளே விட்டு உட்கார வைத்து கதவை மூடி, இளம்பெண் ஒருத்தி முதலில் சீன மருந்தின் மகத்துவத்தை விளக்க ( ஆஹா.. மறுபடியும் பணம் பிடுங்கும் உத்தி!) மற்றொரு பெண் உள்ளே வந்து 'இன்னும் சில நிமிடங்களில் டாக்டர்கள் வந்து ஒவ்வொரு குடும்பத்தின் முன் உட்கார்ந்து உங்க நாடிய புடிச்சி பார்த்து உடம்புல என்ன நோய் இருக்குன்னு கரெக்டா சொல்வாங்க' என்றார். நம் எதிரே மிக நெறுக்கமாக அவரது நாற்காலி. பர்ஸை ஒரு முறை தொட்டுப்பார்த்துக்கொண்டேன். டாக்டர் ஒருவர் வந்து என்னெதிரே அந்த பெண்ணுடன் நெருக்கியடித்து அமர்ந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியாதாம் (கிழிஞ்சது போ!) அருகே மொழிபெயர்க்க மற்றொரு பெண். எல்லோரும் அத்துனூன்டு இடத்திற்குள். நேராக என் கையை பிடித்தார் டாக்டர். கொஞ்சம் முறுக்கினார். தேவையில்லாமல் என் முகத்தை வேறு உற்று பார்த்தார். ( பக்கத்தில் சின்னவன் சிரிப்பை அடக்க முயற்சித்தான்). உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜியாரிடம் அடி வாங்கும் ஜப்பான் காரன் முகம் அவருக்கு. அடுத்து ##**##€£¥{=+<~• என சீனமொழியில் ஏதோ அவர் சொல்ல, அந்தப்பெண் 'உங்களுக்கு வயிற்றுப்பகுதியில் பிரச்சனைன்னு சொல்றார்' என்றார். 'என்னா பிரச்னைன்னு அவரை சொல்லச்சொல்லு' என பதிலுக்கு நான் கேட்டேன் ( டேய்! நாங்க திருச்சி.. ஆமா!). 'அது வந்து.. வந்து..You have many problems in this region' என அவளும் வயிற்றை தொட (அவளுடைய வயிற்றைத்தான்! 😄)..உஷா கண்களில் மிறட்சியுடன் என்னை கெட்டியாக பிடித்துக்கொண்டாள். ஐம்பது வயது ஆண்களுக்கு வயிற்று பிரச்னை மற்றும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னை என பொத்தாம் பொதுவாக சொன்னால் ஒன்றிரண்டு கேஸ் எப்படியும் மாட்டிவிடும் போலும். என்ன பிரச்னை என கடைசி வரை சொல்லாமல் பங்கஜ கஸ்தூரி மாதிரி ஒரு மருந்து டப்பாவை எடுத்தாள் அந்த யுவதி. சேலம் சிவராஜ் மூல பவுந்திர வைத்தியர் ஸ்டைலில் நடக்கும் மருத்துவம் அது என பயந்து அங்கிருந்து ஓட்டமெடுத்தோம். எங்களை அங்கே கூட்டிச்சென்ற ஈவாவிற்கு 'கட்டிங்' உண்டாம்.
கடைசியாக பர்ல் மார்க்கெட் என்ற பல அடுக்கு கட்டிடம் வந்தோம். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் நம்ப முடியாத அளவிற்கு குறைவான விலை. ஐபோன்-6 இன் விலை சுமார் 50 டாலர்கள் தானாம். பஹ்ரைனில் 500 டாலருக்கு கிடைக்கும் GoPro காமிரா இங்கு வெறும் நாற்பது டாலருக்கும் குறைவு. வாங்கினோம். கடைக்கார பெண்ணிடம் 'ஏன் சீனாவில் இவ்வளவு குறைவான விலை' என கேட்டபோது அவள் 'உன்னிடமுள்ள ஐபோனை கீழே போடு.. ஒன்னுமாகாது.. எங்க போன் கீழே விழுந்தால்.. அவ்வளவு தான்.. கீழே விழாத வரை உன்னுடைய போனை விட என்னுது பல வருடங்கள் அருமையா வேலை செய்யும்.. நான்கு வருடங்களுக்கு மேல் என் போன் வேலை செய்கிறதே' என அடித்து சொன்னாள். அடுத்து அவள் ' பொருளாதாரங்களின் அளவு (economies of scale), குறைந்த மூலதன முதலீடு (investment), அதிக தொழிலாளர் உற்பத்தித்திறன்(efficiency), குறைவான போக்குவரத்து செலவு(freight), லாப சதவிகிதம் (profit margin %) குறைவென்றாலும் எங்க மாஸ் ப்ரொடக்‌ஷனில் லாபத்தொகை அள்ளிடும்... இப்படி நிறைய சமாசாரங்கள்' என்று பொருளாதாரம் பேசி என்னை வியக்க வைத்தாள்.
'கடைக்காரர்கள் சொல்லும் விலையில் பாதிக்கு பாதி கேட்டு பேரம் பேசினால் சாமர்த்தியம்' என யாராவது சொல்லி நீங்கள் வாங்கி விட்டால் ஏமாந்தீர்கள் என அர்த்தம். அவர்களுக்கு கோபம் வரும் அளவிற்கு கால் பங்குக்கும் குறைவாக விலை கேட்டு, பேரம் பேசி, கடைசியில் கால் பங்கிற்கு வாங்கினேன். பொருளை வாங்கிவிட்டு அடுத்த கடை போகும்போது 'இவன் விவகாரம் பிடிச்சவன்' என அடுத்த கடைக்காரிக்கு சீனமொழியில் இவள் சொல்லியிருப்பாளோ என்னவோ.. 'சாரி இங்க இல்லை' என்றார்கள், பொருளை வைத்துக்கொண்டே. பம்பாய் ஃபோர்ட் பகுதி ரோட்டோர சேட்டன்களிடம் பேரம் பேசிய அனுபவம் எனக்கு உண்டு. டெல்லி பாலிகா பஜாரில் புடவைகள் வாங்கும்போது பேரம் பேசி, சர்தார்ஜி ஒருவன் என்னை கெஞ்சி 'நீ வாங்கலைன்னாலும் பரவால்ல.. இங்கிருந்து போயிடு' என கெஞ்சியது நினைவுக்கு வந்தது.
இன்டர்நெட், மெயில், மெஸ்ஸேஜ், காமெரா, போன், ரேடியோ, யூட்யூப் அனைத்தும் உள்ளடக்கிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை நூறு டாலரில் ஆரம்பித்து இருபது டாலருக்கு வாங்கினேன். பக்கத்திலிருந்த சின்னவன் 'பஹ்ரைனிலேயே ஒரிஜினல் சோனி ஸ்மார்ட் வாட்ச் 40 தினார் (100 டாலர்) தானேப்பா!.. this is fake' என்றான்.
அடுத்தநாள் காலை நான்கு மணியளவில் நோவோடெல் ஊழியர்கள் காலை உணவுப்பொட்டலங்கள் கொடுத்து விமான தளத்தில் இறக்கிவிட்டார்கள். கடும் பாதுகாப்பு சோதனைகள். செக்கின் பாகேஜிலிருந்த பாட்டரி சார்ஜ் பாங்க்கை பிடிங்கி வைத்துக்கொண்டார்கள். மறுபடியும் துபாய் வந்திறங்கி சென்னை விமானத்தில் ஏறி அமர்ந்தோம்.
விமானத்தில் 'பர்ல் மார்க்கெட்ல வாங்கின ஸ்மார்ட் வாட்சை ஃப்ளைட்ல ஆன் பண்ணக்கூடாது. எலெக்ட்ரானிக் சாதனமாச்சே!. மெட்ராஸ் போனவுட்டு ஆன் பண்ணிக்கலாம்' என கட்டளையிட்ட உஷாவிற்கு என்னுடைய பதில்: 'அந்த வாட்ச் பர்ல் மார்க்கெட்லேயே ஆன் ஆகலை'

மாதவன் மாமா.

மாதவன் மாமா..(கோம்பூர் வாங்கீபுரம் மாதவன்)
பஹ்ரைனில் தமிழ் குடும்பங்களுக்கு மத்தியில் மாதவன் மாமா மற்றும் சந்திரா மாமி என்ற பெயர்கள் மிகவும் பரிச்சயமானது. வருடமொருமுறை இந்தியாவிலிருந்து இங்கு வந்து இரண்டு மூன்று மாதங்கள் தன் இரு புதல்வர்களுடன் தங்கி பஹ்ரைனில் அனைத்து தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகளில் கலந்துகொள்வார். வேத உபநிடத்திலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டி தமிழ், ஆங்கில மொழி அறிவையும், ஆன்மிக பற்றையும் வளர்க்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உதவுபவர்.
அனுமனைப்பற்றிய கதைகள் மற்றும் ஸ்லோகங்கள், அவ்வையாரின் விநாயகர் ஸ்துதி, ஶ்ரீமத் பாகவத்தின் அரண்யகங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை அழகாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் வடித்து நண்பர்களுக்கு ஈமெயிலில் அனுப்புவது அவரது வழக்கம். மார்கழி மாதம் 30 நாட்களும் தினமும் ஒரு பாசுரத்தை எடுத்துக்கொண்டு அதை பாமரர்களுக்கும் புரியும்படி அழகாக விளக்கி, அவற்றைப் படிக்கையிலேயே சித்திரப் பண்பு (picturesque quality) பெறுகின்ற பேரானந்தத்தை நமக்கு அளிப்பவர் மாதவன் மாமா..
மாமாவின் அபரிதமான ஆங்கில எழுத்தாற்றலுக்கு பத்திரிக்கைகளில் வரும் அவரது எழுத்துக்களே சான்று. பஹ்ரைனின் Gulf Daily News ஆங்கில நாளிதழில் வாரம் ஒரு முறையாவது 'சந்திரா மாதவன்' என்ற பெயரில் அவரது கடிதங்களை படிக்கலாம். பஹ்ரைனில் அவதியுறும் தொழிலாளர்கள் இந்தியா மற்றும் பஹ்ரைனில் வாங்கிய கடனை திருப்பசெலுத்த இயலாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ளும் அவலத்தை எழுதியதுமட்டுமல்லாமல், சமூக நற்பணியென்ற பெயரில் விளம்பரம் தேடும் செல்வந்தர்களும் சங்கங்களும் இயன்றளவு அந்த ஏழைத்தொழிலாளர்களுக்கு உதவலாமேயென வேண்டுகோளும் விடுத்திருந்தார். உண்மையான நோக்கத்துடன் அறப்பணிகள் செய்யும் சங்கங்களையும் வெகுவாக பாராட்டியிருந்தார்.
முகநூலில் இவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள். பஹ்ரைனில் பாதி தமிழ் இளைஞர்களுக்கு இவர் நண்பர். பஹ்ரைனிலிருக்கும் இவரது பையன்கள் ராம் ப்ரசாத் மற்றும் விஜய் இருவரும் எனது நண்பர்களாக இருந்தாலும், அப்பாவிடம் தான் அதிகம் சம்பாஷனை எனக்கு.
Ram Prasad ஒரு CA..அருமையான கரோக்கி பாடகர். சடாரென மைக் எடுத்தால் ' ராத் கலி எக் க்வாப்மெ ஆயெ' என கிஷோர்தா பாடல்கள் பாடுவார். அவரது மனைவி சங்கீதா ஒரு கர்நாடக சங்கீத கலைஞர். பஹ்ரைனில் ப்ரபலம் என்பது மட்டுமல்லாமல் டிசம்பர் சீசனில் சென்னையிலும் பிசியாக கச்சேரி செய்பவர். விஜய் Vijay Sagar Madhavan மற்றும் அவரது மனைவி
சரன்யா Sharan Sagar இருவரும் CA படித்தவர்கள். மாமா, ராம் மற்றும் விஜய் மூவரும் நான் படித்த திருச்சி St Joseph's மாணவர்கள்..
சேலத்தில் வெளிநாட்டிற்குச்சொந்தமான மாக்னசைட் கம்பெனியோன்றில் வேலையில் இருந்தவர். தனது வேலையின் ஆரம்ப நாட்களில் கல்கத்தாவில் இருந்தவர். நிறைய நாடகங்கள் நடத்தியவர். சரளமாக வங்கமொழியும் பேசுபவர். Gopala Sundaram மாமா இவரது நாடகத்தில் நிறைய நடித்திருக்கிறாராம்.
கடந்த இரண்டு மூன்று மாதங்கள் மாமா பஹ்ரைனில் இருக்கிறார். தமிழ் நிகழ்ச்சிகள், பூஜை போன்ற எந்தவொரு நிகழ்ச்சியிலும் முன் வரிசையில் மாமாவை பார்க்கலாம். நேற்று ஆரம்பமான வசந்த நவராத்திரி விழாவிலும் தினமும் அவரை தவறாமல் பார்க்கலாம்.
சென்ற மாதம் ஒருநாள் மாமா வீட்டிற்கு வந்திருந்தார். சுமார் ஒன்னறை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தவர், காஞ்சிப்பெரியவாளின் மகிமைகளை அழகாக விளக்கிக்கொண்டிருந்தபோது தனக்கு நேர்ந்த சுவையான அனுபவமொன்றை பகிர்ந்துகொண்டார். காஞ்சிபுரம் அருகேயுள்ள ஓரிக்கையில் காஞ்சி மாஹாஸ்வாமிகள் மணிமண்டபத்திற்கு தவறாமல் பிரயாணம் மேற்கொள்பவர் மாமா. அங்கு மஹாலட்சுமி அஷடோத்ரம் சொல்லி அர்ச்சனை செய்வது அவரது வழக்கம். அதற்கு முன் அவர் காஞ்சி வரதராஜ பெருமாளை சேவித்துவிட்டுத்தான் போவார். ஒரு முறை காஞ்சிபுரம் சென்றடைய கொஞ்சம் காலதாமதமாகிவிட, வரதராஜபெருமாளை தரிசிக்காமல் மணிமண்டப கோவில் மூடும் முன் நேராக ஓரிக்கையே போய்விடலாமாவென யோசித்தார். திடீரென அவருக்கு மகாபெரியவா கனவில் தோன்றுவதைப்போல் ஓர் உணர்வு. பெருமாளை சேவித்தபிறகு தான் ஓரிக்கை செல்லவேண்டுமென்ற கட்டளை. பிறகு தயக்கத்துடன் அவர் தாமதமாக காஞ்சிபுரம் சென்றடைந்தார். கோவிலில் கூட்டம் இருக்குமென்பதால் அங்கிருந்து கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம், மற்றும் ஓரிக்கை சென்றடைய அரை மணிநேரம் ஆகும் என யோசித்தபடி பிரகாரத்தில் நுழைய..என்ன ஆச்சரியம்! அன்று கோவிலில் யாருமே இல்லை. மாமா மற்றும் அர்ச்சகர் இருவர் மட்டுமே. உடனே பெருமாளை சேவித்துவிட்டு, நடையை சாத்தும் முன்னரேயே ஓரிக்கை போய்ச்சேர்ந்தார். ராகு காலத்துக்கு முன் நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து, பயபக்தியுடனும் மனநிம்மதியுடனும் மஹாலட்சுமி அஷ்டோத்ர பாராயணம் செய்து வெகு விமரிசையாக பூஜையை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பினார் மாமா. மெய்சிலிர்க்கும் அனுபவமது.
இந்த வயதிலும் சேலத்தில் முதியோர் இல்லமொன்றை மாமா நடத்தி வருகிறார் என்பது நம்மை வியக்க வைக்கிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியா திரும்பும் மாமா மாமி அவர்களுக்கு எனது நமஸ்காரங்கள். விடைபெறும் முன் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், சிறிய அளவில் பகவத்கீதை புத்தகமொன்றையும் பரிசாக அளித்த மாமாவிற்கு நன்றி.
மாமா விடைபெற்றுச்சென்ற பின் அவர் அளித்த கீதை நூல் பக்கங்களை புரட்டியபோது பளிச்சென என்னைக்கவர்த்த வாசகம்...
" give your mind to Me, be devoted to Me, worship Me and bow to Me. Doing so, you will come to Me alone, I truly promise you.. for, you are exceptionally dear to Me.."

ஆதூ

பஹ்ரைனில் பிறந்து வளர்ந்த சின்னவன் ஆதூ(ஆதேஷ் ப்ரணவ்) ப்ளஸ்2 முடித்து சி.ஏ.மேற்படிப்புக்கு இன்று சென்னை கிளம்பி விட்டான். சென்ற மாதம் முழுவதும் ஒரு வாரம், 10 நாட்கள் இடைவெளி விட்டு முழுப்பரிட்சை இருந்ததால் நடுவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் உஷா அவனை பக்கத்தில் உள்ள ஹயாத் மால் அழைத்துக்கொண்டு போய் அவனுக்கு வேண்டிய ஜீன்ஸ், டீ-ஷர்ட், பாக்ஸர், சாக்ஸ் என கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை வாங்கினாள். பையனும் கொஞ்சம் முன் ஜாக்ரதை பேர்வழி. ஏற்கனவே ஒரு லிஸ்ட்டை போனில் போட்டு வைத்திருந்தான். Dove சோப் (தோல் அலர்ஜியாம்), நிவ்யா ஆஃப்டர் ஷேவ் லோஷன், ஃபோன் சார்ஜர், 2TB ஃஹார்ட் டிஸ்க், ஹெட்ஃபோன், அமெசான் மூலம் இறக்குமதி செய்த ஒன் ப்ளஸ் மொபைல் மற்றும் சின்ன JBL ஸ்டீரியோ என பலசரக்குக்கடை மாதிரி பெரிய லிஸ்ட்டை அவ்வப்போது சரிபார்த்து, திருப்தியடையாமல் மேலும் ஷூக்கள், ஆங்க்கிள் சாக்ஸ், அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் ட்ரௌசர் என வஞ்சனையில்லாமல் வாங்கி குவித்தான். நேற்று இரவு வெகுநேரம் உட்கார்ந்து நூற்றுக்கணக்கில் பாடல்களையும் திரைப்படங்களையும் மடிக்கணினிக்கு தரவிறக்கம் செய்து முடித்தான்.
புதிய ஊர்.. முதன்முதலாக சென்னை போகிறான் என்பதால், கார் ஓட்டும்போது கூட பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அவனுக்கு உஷாவின் ஏகப்பட்ட உபதேசங்கள். சமீபத்தில் 'விசாரனை' படம் பார்த்தது முதல் அவளுக்கு கொஞ்சம் பயம் அதிகமானது தெரிந்தது. சென்னை வந்திறங்கியவுடன் நம் பையனையும் சந்தேக கேஸில் உள்ளே வைத்து பின்னி எடுத்துவிடுவார்களோ என்ற அவளது பயத்தை தயக்கமின்றி எனக்கும் பகிர்ந்தளித்தாள். 'ஆதூ.. பீ கேர்ஃபுல் இன் சென்னை..கீப் யுவர் மொபைல் வித் யூ.. டோன்ட் டாக் டு ஸ்ட்ரேஞ்சர்ஸ்'..கீப் யுவர் சினிமா டிக்கெட் வித் யூ வொய்ல் கமிங் பேக் இன் லேட் நைட்ஸ்' போன்ற அடுக்கடுக்காக பீதியை கிளப்பும் அவளது அறிவுரைகளை அவன் சிறிதும் சலனமின்றி உள் வாங்கிக்கொண்ட கையோடு காதில் இயர்ஃபோனை மாட்டி கட்டைவிரலை உயர்த்தி சைகை காண்பித்தான்.
வீட்டில் தெலுங்கு மற்றும் பள்ளியில் ஆங்கிலம் மட்டும் பேசிக்கொண்டிருந்த அவனுக்கு தமிழ் பேசுவது கொஞ்சம் கஷ்டமாயினும் நன்றாகவே புரியும். நேற்று அவனிடம் 'எங்க தமிழ்ல எதாவது சொல்லு பாக்கலாம்' எனக்கேட்டபோது அவன் உடனே உதிர்த்தது 'பன்னாட, பரதேசி' என்ற இரு வார்த்தைகள். உபயம்: வேறு யார்? பெரியவன் ப்ரஷாந்த் தான்.. ஐந்து வருடம் முன் பஹ்ரைனிலிருந்து முதன் முதலாக சென்னைக்கு படிக்கப்போன பெரியவன் தற்போது பரிட்சைக்கு படிக்க வந்திருக்கிறான். எங்களை சீண்டுவதற்காக சின்னவனுக்கு பகீர் பகீரென நிறைய டிப்ஸ் கொடுத்தான். நாம் கவனிக்கும் நேரத்தில் 'ஆதூ..பஸ்ஸில் ஃபுட்போர்டில் தொங்கிக்கொண்டு போனால் தான் ஜாலியாக இருக்கும்' என சொல்லி விஷமப்புன்னகையுடன் எங்களை பார்த்தான்.
ஐந்து வருடத்தில் பைக்கில் சுற்றி சென்னை முழுவதும் பெரியவனுக்கு அத்துப்படி. Learners லைசென்ஸ் காலாவதியாகியும் பர்மனென்ட் லைசென்ஸ் எடுக்காமல், பிறகு அவனை கெஞ்சி ஒரு வழியாக எடுக்க வைத்தோம். 'நடுவே போலிஸ்காரரிடம் மாட்டவில்லையா' என கேட்டபோது 'yes..I did.. I just paid him 100 bucks' என அலட்சியமாக சொன்ன அவனை உஷா மிரட்சியுடன் பார்த்தாள். போலீஸகாரர்களை அங்க்கிள் என்றும் ஆட்டோ ஓட்டுநர்களை அண்ணா என்றும் அழைக்கிறான்.
தற்காலத்தில் பயம் என்பது பையன்களுக்கு சிறிதும் இல்லை. நம்மை விட பலமடங்கு தைரியம் மற்றும் street smartness இருக்கிறது. உலக நடப்புக்கள் விரல் நுனியில். 'So what'? போன்ற உடனுக்குடன் பதில்கள். நாம் 'வேண்டியதை தந்திட வெங்கடேசன்' என்றிருக்க, அவர்களுக்கு வேண்டியதைத்தந்திட ஃப்லிப்கார்ட் மற்றும் அமெசான் இருக்கிறது. தலைமுறை இடைவெளி நம்மை வியக்க வைக்கிறது. திருச்சியில் வளர்ந்த நான் மற்றும் என் இரு சகோதரர்கள் மூவரும் பயந்தாங்கொல்லிகள். வளர்ப்பு அப்படி. அப்பாவோ அநியாயமாக பயந்த சுபாவம். காய்கறி விற்பவனிடம் கூட பயந்துகொண்டு அதிகம் பேரம் பேசமாட்டார். கேட்டால் 'தண்ணி போட்ருக்கான்டா' என்பார்.
80களில் திருச்சி மன்னார்புரம் அரசு காலனியில் நாங்கள் குடியிருந்தபோது, காலனி மாணவர்கள் இரவு ரோந்து போவோம் (அட! நாங்களா!) ஒருமுறை திருடன் ஒருவனை சில மாணவர்கள் பிடித்துவிட, உடனே போலிஸ் லாரி வந்து 'சாட்சி சொல்ல எல்லாரும் வண்டியில ஏறுங்க' என்று சொன்ன மறுநிமிடம் அந்த நள்ளிரவில் முழு கும்பலும் போலீஸ் வண்டியில் ஏறிவிட, ஜகா வாங்கி தனியே நின்ற எங்கள் மூன்று பேரையும் புழுவைப்போல பார்த்துவிட்டு போலிஸ் வண்டி கிளம்பிப்போனது.
நல்ல வேளை பசங்கள் நம்மைப்போல இல்லை...
பி.கு: பஹ்ரைன்-சென்னை விமான பயனத்தில் கால் கை குடைச்சலை மறக்க, கைப்பேசியின் airplane mode இல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு தட்டச்சு செய்ததே மேற்சொன்னவை...வெளியே குட்டி குட்டியாக கட்டிடங்கள் தெரிய ஆரம்பித்தது.. ஆஹா..சென்னை!
ஏர்போர்ட்டுக்கு அழைக்க வந்திருந்த பால்ய/ஆருயிர் நண்பன்Ganapathi Subramanian மற்றும் Durga Ganapathi Subramanian க்கு நன்றி. 'எதிர்ல தானே வீடு.. வாங்க..ரெண்டே நிமிசத்துல தோச வாத்து தற்ரேன்' என்ற துர்காவின் அன்புக்கட்டளையை வேண்டாமெனச்சொல்லி, மயிலை உட்லண்ட்ஸில் பத்தேகாலுக்கு செக்கின் செய்யும்போதே 'சார் இன்னும் 10 நிமிஷத்துல பிருந்தாவன் மூடீருவாங்க.. மொத சாப்ட்ருங்க.. பெட்டிய நாங்க ரூம்ல வெச்சுடறோம்' என எங்களை அன்போடு விரட்டிய சிப்பந்திகளுக்கு நன்றி. 'ஆயில் இல்லாமெ ஒரு சாதா தோசை' என்று சொல்லியும் சொட்டச்சொட்ட எண்ணையுடன் தோசை கொண்டு வந்த (அது கல்லுல உள்ள எண்ணெ சார்..) அன்பருக்கும் நன்றி. 'வேற அல்லாம் கலாஸ்' என முடித்துக்கொண்ட நேபாளிப்பையனுக்கும் நன்றி.
நண்பன் கணபதி பிரிய மனமில்லாமல் ஹோட்டல் ரூமிலிருந்து விடைபெற்றுக்கொண்டபோது மணி 12.30...
இரவு வணக்கங்கள்...

சுஜாதா...நினைவில் நின்றவை...

பிப்ரவரி 27...சுஜாதா அவர்கள் நினைவு தினம்...(எனது பிறந்த நாள்)
நினைவில் நின்றவை...
ஶ்ரீரங்கத்தில் பள்ளிப்படிப்பு. நினைவில் இருப்பது: பக்கத்துப்பையனை சேஃப்டி 'பின்'னால் தொடையில் குத்தியபோது அவன் அலறியது. மானிட்டருடன் ஹெட்மாஸ்டரிடம் 'கேஸ்' போனது. காது சற்று மந்தமான ஹெட்மாஸ்டர், மானிட்டர் கூறியதை தவறாகப்புரிந்துகொண்டதால், 'பின்'னால் குத்தப்பட்டவன் செம்மையாக அடி வாங்கியது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பௌதிகம் பி.எஸ்.ஸி. பட்டம். கல்லூரியில் இருந்த மலைப்பாம்பும், ஃபாதர் எட்ஹார்ட்டின் மூக்கு நுனியின் ஆப்பிள் சிவப்பும் நன்றாக நினைவு இருக்கிறது. ( பாவம், சமீப வெள்ளத்தில் மூழ்கி அந்த பாம்பு இறந்துவிட்டது)
குரோம்பேட்டை எம்.ஐ.டியில் எலெக்ட்ரானிக்ஸ் படித்தபோது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி: 'ராத்திரி ஒன்பது மணி சுமாருக்கு நண்பர்கள் சினிமாவுக்கு அழைக்க, அலறி அடித்துக்கொண்டு ஓடினேன். டிக்கெட் வாங்கி விட்டதாகக்கூறி, விசில் முடிந்து புறப்பட தயாராயிருந்த எலெக்ட்ரிக் ட்ரெயினில் என்னை ஏற்றி விட்டு அவர்கள் 'டாடா' சொல்லிவிட்டு, பிளாட்பாரத்திலேயே தங்கிவிட்டார்கள். நான் டி.டியிடம் மாட்டிக்கொண்டு, சகல சொத்துக்களையும் இழந்து, பனியனுடன் பல்லாவரத்திலிருந்து நடந்தே வந்தேன். நண்பனின் அறைக்கதவை தட்டி, எழுப்பிக்கேட்டபோது வந்த பதில் 'ஸாரிடா...'
ஆனந்த விகடனில்..! 11.12.77
(விகடன் சுஜாதா மலரிலிருந்து)
பி.கு: ஓவியத்தை வரைந்த பின் அவரது கையொப்பத்திலிருந்தே எனது கையெழுத்தையும் போட ஒரு முய

கவிஞர் அப்துல் கையூம்



பஹ்ரைனில் கவிஞர் அப்துல் கையூம் அவர்களை தெரியாதவர்கள் இல்லையெனலாம்...
உருவத்தில் சிறியவராயினும் நம் உள்ளத்தில் உயர்ந்தவர்..
பஞ்சமில்லா நகைச்சுவை அவரது பேச்சிலும் எழுத்திலும்..
பணிவு, கண்ணியம் போன்ற நற்பண்புகள் கூடிய இலக்கணன்..
பாரதி தமிழ் மன்றத்தை திறம்பட நடத்தி அறக்கொடை பல செய்பவர்..
இன்று பிறந்த நாள் காணும் என் இனிய நண்பரான அவரது ஓவியத்தை வரைந்து வெளியிடுவதில் பெருமையெனக்கு..
தான் எழுதிய நூல் ஒன்றை வித்தியாசமாக சிலருக்கு இப்படி சமர்ப்பணம் செய்துள்ளார்...
சமர்ப்பணம்:
'சமர்ப்பணத்தை சாதாரணமாக நான்கே வரிகளில் வடித்து விடுவார்கள். இதில் அது சாத்தியமில்லை.
சொந்த மண்ணில் நான் சந்தித்த அந்த வித்தியாசமான மனிதர்களுக்கு இந்நூலை அர்ப்பணம் செய்கின்றேன்.
எத்தனையோ மனிதர்களை அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்க் கொள்கிறோம்.
அத்தனைப் பேர்களும் ஒட்டு மொத்தமாக நம் மனதில் நிலைப்பெற்று விடுவதில்லை.
ஒரு சிலர் மட்டும் ஏனோ நம்முள் ஒரு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்திச் சென்று விடுகிறார்கள்.
இவர்கள் மறக்க முடியாத மாறுபட்ட கதாபாத்திரங்கள். இவர்களில் பலர் நம்மை விட்டு மறைந்து போயிருக்கலாம். ஆனால் அவர்களின் நினைவுகள் நம்மைத் துரத்தி வரும்.
பேருந்துகளின் ஓசையை வைத்தே அது எந்த நேரத்துக்கு வரும் எந்த ஊருக்குப் போகுமென்று துல்லியமாக கணக்கிட்டுச் சொல்லும் கண்பர்வை இழந்த சக்தி விலாஸ் நாகப்பன்.
அஞ்சல்துறை ஊழியர்களுக்கு அழகிய முன்மாதிரியாய் சமுதாயத்தில் ஒரு அங்கமாகி விட்டிருந்த தபால்காரர் பக்கிரிசாமி.
துணியை வெளுக்க வந்து என் மனதை வெளுத்துச் சென்ற சுயமரியாதைச் சிந்தனைவாதி சின்னத் தம்பி
அணியவேண்டிய சட்டையை அக்குளில் இடுக்கிக்கொண்டு ஹாயாய் பவனிவந்து நம் கவனத்தை ஈர்த்த கப்பவாப்பா.
தைக்கால் திடலில் பலநாட்கள் மிதிவண்டி ஓட்டிச் சாதனை புரிந்த பெண் வீரங்கனை சபுரா.
ஆயிரம் எதிர்பார்ப்போடு அன்றாடம் அஞ்சல் துறை அலுவலகத்துக்கு முன் கூட்டியே வந்து மகாத்துக் கிடக்கும் அதே பழக்கப்பட்ட முகங்கள்
நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு பாடகன் அல்லது கவிஞன் காலில்தான் விழவேண்டும் என்றொரு கூற்று உண்டு.
மளமளவென்று மாற்றங்கள் காணும் பூலோகத்தில் மாறாத பண்புகளோடு மனதில் இடம் பெற்று விடும் மனிதர்களோடு இந்த ஊர் மகத்தாக திகழ்கிறது என்றால் அது இந்த மண்ணின் மகிமை.'
அப்துல் கையூம்
பஹ்ரைன்

மாஷே

காலை 6 மணிக்கு மேல் எங்கள் ஃப்ளாட்டில் தூங்க முடியாது. ஃப்ளாட்டிற்கு பின் பக்கம் கடகடவென சத்தத்துடன் செம்பூரிலிருந்து மான்குர்ட் செல்லும் மின்சார ரயில்கள். பால்கனியில் நின்றுகொண்டு பார்த்தால் மக்கள் அவசரமாக ரயிலைப்பிடிக்க ஓடுவது தெரியும். தூரத்தில் இடுப்பில் துண்டுடன் தண்டவாளத்தை கடந்து பொதுக்குளியறை நோக்கிச்செல்லும் மராட்டிய இளைஞர்கள்...தண்டவாளத்திற்கு இருபுறமும் அடர்ந்த ஜோப்பர்பட்டி குடிசைகள்.
மெல்ல அறை நண்பர்கள் தூக்கத்திலிருந்து ஒவ்வொருவராக எழுந்து கொள்ள, படுக்கையிலிருந்தவாறே முதல் நாள் 12 மணிக்கு விட்ட ஆபிஸ் கதைகளை மீன்டும் தொடர்வோம். அதில் ஒருவர் பெயர் ஜெய். 'என்ன மாஷே! நல்ல தூக்கமா?' ('மாஸ்டர் என்பதன் சுருக்கம் 'மாஷே') என விசாரிப்பபார்.
அவருக்கு கன்னியாகுமரி பக்கம் மணவாளக்குறிச்சி. பாதி மலையாளம் கலந்த தமிழ்.
'தூங்கலாமா' என்பதை 'கெடந்துறங்கலாமா' என்பார். 'என்ன பண்றீங்க' எனக்கேட்டால் 'சுகம்மா கெடக்கேன்' என பதில் வரும். 'வெளிய கெளம்ப ரொம்ப 'மடியா' (சோம்பேறித்தனமாம்) இருக்கு', 'குட்டிப்பட்டி' (நாய்), 'மாஷே! அழகான சுண்டு(உதடுகள்) அவளுக்கு'... என அவர் தமிழ் பேசக்கேட்க இனிமையாக இருக்கும். கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இஞ்சினீயராக இருந்தார்.
சுமார் 7 மணி வாக்கில் லுங்கியுடன் ஃப்ளாட்டுக்கு வெளியே வந்து செம்பூர் கொவான்டி ரோட்டில் நடப்போம். செம்பூர் ஸ்டேஷனிலிருந்து ஆறாவது கட்டிடத்தில் தான் தங்கியிருந்தோம். எதிரே உ.பி. பையா கடையில் இஸ்திரி போட சட்டை, பாண்ட்டை கொடுத்துவிட்டு அருகே செம்பூர்புவன் ஹோட்டலில் சாய் குடித்த பின், அயர்ன் செய்த உடைகளை திரும்ப வாங்கிக்கொண்டு ஃப்ளாட்டுக்கு திரும்புவோம்.
செம்பூரில் எக்கச்சக்கமாக தமிழ் பிரம்மச்சாரிகள். மாலை ஜீவன் மெஸ் போனால் அங்கே நண்பர்கள் எல்லோரையும் பார்க்கலாம். கன்னடக்காரர்கள் நடத்தும் மெஸ். நாலறை ரூபாய்க்கு தாலி. இரண்டு சப்பாத்தி, சுக்கா பாஜி, சாம்பார், ரசம், ராய்த்தா, அரிசி, கட்டோரியில் தயிர். கல்லாவின் அருகே மற்றொரு மங்களூர்க்காரன் நாலுக்கு இரண்டடி (அவன் நிற்பதே கடைக்கு வெளியே தான்) கல்கத்தா, பனார்ஸி பான் பீடா சிகரெட் கடை வைத்திருப்பான். கடையின் பக்கவாட்டில் தொங்கும் கயிற்றின் நுனியில் நெறுப்புக்கங்கு. கை விரல்களுக்கிடையே ஃபோர்ஸ்கொயர் மற்றும் வில்ஸ் ஃபில்டருடன் பெருவாரியான நண்பர்கள் சந்திக்கும் இடம் அது.
ஜெய்க்கும் எனக்கும் ஓரே வயது. ஒரே மாதிரி சராசரி உயரம். தலைமுடி ஸ்டைலில் அதிக அக்கறை, உடையலங்காரத்தில் நாட்டம், பிடித்த காலணிகள் வாங்குவது, விதவிதமான உடைகள் அணிவது, பெண்களைப்பற்றி நிறைய பேசுவது (அப்போ 1987-90ங்க), இருவருக்கும் பிடித்த நடிகை நிரோஷா, நிறைய தமிழ் சினிமா பாடல்கள் கேசட் வாங்குவது, Steve Winwood இன் Arc of the diver பாடலை வெறித்தனமாக கேட்பது, எக்ஸெல்ஸியர் சினிமாவில் பாட்ரிக் ஸ்வேய்ஸின் dirty dancing படம் பார்ப்பது, கோவிந்தாவின் ஆடலை ரசிப்பது, ஞாயிரன்று பாத்ரூமை ஆக்கிரமித்து ஜீன்ஸ் மற்றும் டீஷர்ட்டுகளை 'வர்ரக்..வர்ரக்' என ப்ரஷ்ஷால் தோய்ப்பது, செம்பூர் ஸ்டேஷன் எதிரே உள்ள கடையில் சமோசா சன்னா மற்றும் சாய் அருத்துவது, கீதா பவனில் தவறாமல் ஞாயிறன்று பொங்கல் அவியல், பைனாப்பிள் தோசா மற்றும் சரோஜ் ரெஸ்ட்டுரன்ட்டில் காஜர் ஹல்வா சாப்பிடுவது..காசிருந்தால் ஆசிஷ் தியேட்டரில் படம்.. காசில்லையென்றால் செம்பூர் ரயில்வே ட்ராக் தாண்டி ஜோப்பர்பட்டி தகர வீடுகளில் தின்னவேலி அன்னாச்சிகள் நடத்தும் வீடியோ சினிமா(புதிய பாதை, சிப்பிக்குள் முத்து..), படம் முடிந்து ஸ்டேஷன் ரோட்டோரத்தில் பரோட்டா குருமா, எக்புர்ஜி...ஞாயிரன்று செம்பூரிலிருந்து கிளம்பி மங்களூரியன்ஸ் அதிகம் வசிக்கும் பான்டிரா லிங்க்கிங் ரோட்டில் ஜீன்ஸ், டீஷர்ட் ரோட்டோரக்கடையில் வாங்குவது, சிவாஜி பார்க், வொர்லி சித்தி விநாயக் டெம்பிள், பாம்பே சென்ட்ரல் கிராண்ட் ரோடு சர்தார்ஜி கடையில் பாவ்பாஜி ( திக்கா கம்..மஸ்கா ஜ்யாதா பாய்!) எதுவுமே இல்லையென்றால் செம்பூர் டைமண்ட் கார்டன், வரும் வழியில் அகோபில மடம்... பிரம்மச்சாரிகளுக்கு நேரத்தை போக்க சொல்லியா தரவேண்டும்!
பிறகு 20th ரோடுக்கு வீடு மாறி அங்கே சில வருடங்கள். என்னுடன் பாம்பே நாட்களை கழித்த கணபதி (Ganapathi Subramanian ) மற்றும் சந்துருவுக்கும்(Balasubramaniam Chandrasekaran) ஜெய் பரிச்சயமானவர்.
திருமணமாகி அடுத்த இரு வருடங்களில் நான் பஹ்ரைன் வந்துவிட ஜெய்யும் ஓரிரு வருடங்களில் பஹ்ரைன் வந்து விட்டார். அவருக்கும் திருமணமாகி ஒரே பையன். தொடர்ந்தது எங்கள் நட்பு..குடும்பங்களுடன்.
நல்ல வேலை வாய்ப்புடன் ஜெய் துபாய் பக்கம் போக எங்கள் சந்திப்பு கடந்த பத்து வருடங்களாக வெறும் தொலைபேசியில் மட்டும்.
சென்ற மாதம் அலுவல் பணி நிமித்தம் நான் துபாய் போகவிருந்ததால் இவருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் மறுநாள் டின்னருக்கு கராமா பகுதியில் அவரது இல்லத்தில் சந்திப்பதாக முடிவானது.மாலை ஏழு மணிக்கு ஜப்லாலியிலிருந்து தனது பெரிய்ய்ய்யய ஃபோர்டு எக்ஸ்ஃப்ளோரரில் அல்பர்ஷா வந்து நான் தங்கியிருந்த நோவோடெல் ஹோட்டலில் பிக்கப் செய்ய வந்தவரை பார்த்ததும் அதிர்ச்சி. தலைமுடி, மீசை கலரடிப்பதை நிறுத்திவிட்டாலும் இளமை குன்றாத அதே முகம். மனைவி அம்பிலி சிட்டி பாங்க்கில் ஜோலி. சீக்கிரமே வீட்டிற்கு வந்து அருமையான இரவு உணவு தயாரித்திருந்தார்.
பழைய செம்பூர் நாட்களைப்பற்றி நேரம் போவது தெரியாமல் பேசிவிட்டு இரவு பதினோரு மணிக்கு திரும்ப என்னை ஹோட்டலில் இறக்கிவிட்டு விடைபெற்றுக்கொண்ட ஜெய்யை சில விநாடிகள் உற்றுப்பார்த்தேன்.. அதே வெகுளியான முகம்.. ( அப்பிடியே இருக்கீங்க மாஷே!)
பையன் அடுத்த வருடம் MBBS முடிக்கிறானாம்