Thursday, June 2, 2016

இந்த பிரபலம் எங்கள் வீட்டில் ....

இந்த பிரபலம் எங்கள் வீட்டில் ....
எழுத்தாளர், மேலாண்மை நிதி ஆலோசகர், நிறைய பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர். சமூகம், அரசியல் மற்றும் வரலாறு சார்ந்த நூல்கள் நிறைய எழுதியிருப்பவர். வித்தியாசமான சிந்தனையும் சமூக நல அக்கரையும் கொண்டவர். அனுபவமிக்க சிறந்த Banker என்பதால் நிதி ஆலோசனைகள், பொருளாதாரம் சம்மந்தப்பட்ட கருத்தரங்குகள், டிவி நேர்க்காணல் என நாள் முழுவதும் தன்னை முழு ஈடுபாட்டுடன் வைத்திருப்பவர்.
இவருடைய blogஐ படித்தால், மலைத்துப்போகும் அளவிற்கு அட்டகாசமான கட்டுரைகள். 'ஈர்ப்பு விசையை இசையாக கேட்கலாம்', 'என்று தணியும் இந்த தாகம்' போன்ற கட்டுரைகளே சான்று. (ramananvsv.blogspot.com)
ஏராளமான டீவி கருத்து மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை அடக்கமாக, அழகாக, ஆணித்தரமாகவும் சொல்பவர். ஜெயா டிவியில் சுதாங்கன் அவர்களின் 'நடந்தது என்ன' நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் வானதி ஶ்ரீனிவாசன் அவர்களும் இவரும், 'மோடி அரசு திட்டக்கமிஷனை கலைத்து விட்டு 'நிதி ஆயோக்' கொண்டு வந்தது சரியா இல்லையா' என்று விவாதம் செய்யும் நிகழ்ச்சி, நிதி மற்றும் பொருளாதாரத்தை பாமரரும் புரிந்துகொள்ளும் அளவிற்கு அருமை.
எனது முகநூல் நண்பர் இவர். இம்மாதம் முதல் வாரத்தில் நான் சென்னையில் இருந்தபோது இவரிடமிருந்து குறுஞ்செய்தி.. 'தினமும் முகநூலில் சந்திக்கிறோம். உங்க பஹ்ரைனுக்கு வருகிறேன்' என்று. எனது தொடர்பு எண்ணை இவருக்கு அனுப்பிவிட்டு பஹ்ரைன் வந்துவிட்டேன்.
'ஹலோ! வளைகுடா நாடுகளில் நாங்க மேற்கொண்ட ஆய்வில் நீங்க தான் சிறந்த CEOவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கீங்க. அடுத்த மாசம் லண்டனில் பாராட்டு விழா. டி.வி பேட்டி உண்டு. உங்க சேர்மனான்ட பேசியாச்சு. ஒத்துன்ட்டார். சுமார் பத்தாயிரம் பவுண்டு எங்களுக்கு உடனே அனுப்பிச்சா நாங்க மேற்படி வேலைய துடங்குவோம். மீதி காசு பொறவு கொடுத்தா போதும்' என 'பல் விளக்கும்' ஆங்கிலத்தில் லண்டன் கால்கள் வருவது இங்கு சகஜம். ' உதைப்பேன் படவா!' என்ற ரீதியில் நாம் பதிலளித்தால் போன் உடனே துண்டிக்கப்படும். 'அப்படீங்களா! இதெப்போ? தெரியாம போச்சே!' என கேட்டுத்தொலைத்தோமென்றால் போச்சு. கழிவறையில் உட்கார்ந்திருக்கும்போதும் கூட அந்த லண்டன் போன் கால்கள் வந்துகொண்டேயிருக்கும்.
இந்த கதை இப்ப எதுக்கு? அப்படியொரு கால் சமீபத்தில் எனக்கு வர, உடனே துண்டித்தேன். உஷார் பேர்வழிகள் எப்படியோ அடுத்த சில நிமிடங்களில் ஏதோ உள்ளூர் நெம்பரில் இருந்து திரும்ப திரும்ப அழைக்க, போனை எடுத்து 'ஹலோ! எத்தினி தபா போன் செய்வீங்க? என கொஞ்சம் காட்டமாக கேட்டேன். அடக்கமாக பதில் வந்தது: 'இல்லீங்க நான் xxxx பேசறேன். சென்னையிலிருந்து பஹ்ரைன் வர்றேன்னு உங்களுக்கு மெசேஜ் அனுப்ச்சேனே!' என இவர் பேசவும், வெலவெலத்துப்போய் 'சார்! மன்னிச்சுக்கோங்க.. வேற நியூஸென்ஸ் காலோன்னு நெனைச்சுக்கிட்டேன்' என பகிரங்கமாக பல முறை மன்னிப்பு கேட்டேன். 'பரவால்லீங்க..இந்த ஏரியாவுல சிக்னல் பிரச்னை.. போன்ல சத்தம் கேக்கலை... அதான் திரும்ப திரும்ப பண்ணினேன்' என சர்வ சன்னமான குரலில் பேசிய அவரது humblenessஐ நினைத்து எனது செயலுக்கு வருந்தினேன்.
பஹ்ரைனில் வங்கி ஒன்றில் Senior Vice President ஆக இருக்கும் இவரது மைத்துனர் எனக்குத்தெரிந்தவர் தான். மறுநாள் அவரது இல்லத்தில் இவரை சந்தித்தேன். அடுத்த வாரம் எனது அழைப்பை ஏற்று எங்கள் இல்லத்திற்கும் வந்திருந்தார்.
இவரா அந்த பிரமுகர்..! எவ்வளவு எளிமையாக இருக்கிறாரென வியக்க வைக்கும் உருவம். தூக்கி வாரிய தலைமுடி. சிலர் மீசையை மேலுதட்டில் வளரவிட்டு அத்தோடு விடாமல் மேல்பக்கம் அழகாக நேர்க்கோடு மாதிரி ட்ரிம் செய்வார்கள். வைகோ, எழுத்தாளர் ஜெயகாந்தன், கலைஞர், இயக்குநர் மகேந்திரன் போன்றவர்கள் வரிசையில் இவருக்கும் சீராக ட்ரிம் செய்யப்பட்ட மீசை.
சுமார் ஒரு மணி நேரம் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தார். கல்கி பத்திரிக்கை மற்றும் கல்கி குடும்பத்தினருடன் மிகவும் தொடர்புடையவர். நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அந்தக்கால ஓவியர்களைப்பற்றி எங்கள் பேச்சு திரும்ப, ஓவியர் லதா மற்றும் ம.செ, G.K. மூர்த்தி ஓவியங்களையும் வெகுவாக புகழ்ந்தார். ஓவியர் லதா அவர்கள் வரையும் பெண்கள் எப்போதும் புஷ்டியானவர்களாக இருப்பதை மெல்லிய நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். புத்தகங்கள் படிக்கும் பழக்கம் நமது இளைஞர்களிடம் குறைவது குறித்து வருந்தினார். துபாய் விமானதளத்தின் duty free கடைகளில் புத்தகங்களுக்கு தள்ளுபடி இல்லை ஆனால் மதுவிற்கு தள்ளுபடி என்ற இவரது ஆதங்கம் நியாயமானது தானே!
இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் பற்றியும், கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் (defaulters) மற்றும் அதனால் அவதியுறும் வங்கி உயர்மேலாளர்களின் அவலத்தையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். இவரது மனைவி கனரா வங்கியில் பணிபுரிந்தவர். எம்.ஏ (பிரபந்தம்) படித்துக்கொண்டிருப்பவர் என்பதால் நண்பர் Sarva Bhoumanஅவர்களது பன்னிரு ஆழ்வார்கள் புத்தகத்தை அவருக்கு அளித்தேன். கவிதை நடை நூலா என வியப்புடன் பெற்றுக்கொண்டார். அதில் இடம்பெற்ற எனது ஓவியங்களையும் மிகவும் ரசித்தார்.
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். விடை பெற்றுக்கொண்டு சென்றவுடன் மறுநாள் தனது மைத்துனர் மூலம் 'கருப்புப்பணம்', 'சீனா வல்லரசு ஆனது எப்படி', 'கடைசி கோடு' போன்ற அவர் எழுதிய புத்தகங்களை எனக்கு பரிசாக அளித்துவிட்டு துபாய் சென்றுவிட்டார். 'நினைவில் நிற்கும் ஒரு மாலைப்பொழுதை அளித்த அன்பான ஶ்ரீதர் தம்பதியினருக்கு' என்ற கைப்பட எழுதிய வரிகளுடன் புத்தகங்கள்.
உங்களுக்கு வேறொரு பிரபல பிரமுகர் முக ஜாடை இருக்கேயென நான் தயங்கி கேட்டபோது, தான் மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. மாலன் அவர்களது சகோதரர் என அடக்கமாக சொன்னார்.
நன்றி Ramanan Vsv சார்...

No comments:

Post a Comment