'அத்தை பெற்ற பெண் இருந்தும் புத்திக் கெட்டு உன்னிடத்தில்
ஆசைக் கொண்டு போதைக் கொண்ட பிள்ளை நான்..
கட்டிவிடு வார்த்தைகளை கொட்டிவிடு ஆசைகளை
சம்மதத்தை தந்துவிட்ட மங்கை நான்...
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே...'
ஆசைக் கொண்டு போதைக் கொண்ட பிள்ளை நான்..
கட்டிவிடு வார்த்தைகளை கொட்டிவிடு ஆசைகளை
சம்மதத்தை தந்துவிட்ட மங்கை நான்...
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே...'
திருச்சி செயின்ட்.ஜோசப்ஸ் பள்ளியின் தமிழ் வாத்தியார் இராமகிருட்டிணன் அந்தப்பக்கம் பிசியாக பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது மேற்படி சிவாஜி பாட்டை சரணத்திலிருந்து ஆரம்பித்து பாடிக்கொண்டிருப்பான் கண்ணன். சிவாஜின்னா அவ்வள உசுரு அவனுக்கு. அன்பைத்தேடி, மன்னவன் வந்தானடி, டாக்டர்.சிவா, பாட்டும் பரதமும்... என எல்லா சிவாஜி படங்களையும் தவறாமல் பார்க்க வேண்டியது, சிவாஜி பாடல் வரிகள் முழுக்க அத்துப்படி செய்துகொண்டு வகுப்பறையில் சிவாஜி படங்களை விவாதிப்பது இதெல்லாம் கண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும். பி.யு.சி வரை அதே கல்லூரியில் என்னுடன் படித்தவன். மாலை வேளைகளில் சைக்கிளில் அவனது உறையூர் வீட்டிற்கு புத்தகங்கள் மற்றும் நோட்ஸ் வாங்க தவறாமல் நான் போவது வழக்கம்.
பி.யூ.சியில் நல்ல மார்க் வாங்கி தஞ்சாவூர் மெடிகல் காலேஜில் டாக்டருக்கு படிக்க அவன் போன பின் பல வருடங்கள் தொடர்பில்லாமல் போய், பிறகு அவன் உறையூரிலேயே கிளினிக் ஆரம்பித்தவுடன் நான் பாம்பேயிலிருந்து வருடாந்திர விடுமுறைக்கு போகும்போது அவனை சந்திப்பது வழக்கமாக இருந்தது.
MS மற்றும் M.Ch படிப்பெல்லாம் முடித்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் ப்ரொஃபஸர் கண்ணன் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறையின் தலைவராக இருந்தவன். தற்போது சேலம் அரசு தலைமை மருத்துவ நிலையத்தில் head of dept (plastic surgery) மற்றும் மருத்துவக்கல்லூரியில் Professorஆகவும் இருக்கிறான். தஞ்சை மருத்துவ கல்லூரியில் படிக்கும்போது என் மூத்த சகோதரி Hemalatha Manoharஇன் கணவர் டாக்டர்.மனோகருக்கு இரண்டு வருடம் ஜூனியர்.
மாம்பழச்சாலையிலிருந்து ஶ்ரீரங்கம் போகும் வழியில் பெரியார் நகர் மேம்பாலம் தாண்டியதும் ரோட்டின் மேலேயே இடதுபக்கம் ப்ரம்மாண்டமான வீடு கண்ணனுக்கு. டாக்டர் பெயர்ப்பலகை எதுவும் வைக்காத வாசல். இரண்டு வாரங்கள் முன் அவனை எங்கள் இல்லத்திருமண விழாவிற்கு அழைக்க மனைவியுடன் போயிருந்தேன். (தவறாமல் திருமணத்திற்கும் மனைவியுடன் வந்திருந்தான்). இன்னமும் அதே இளமையுடன் டீ ஷர்ட் லுங்கியுடன் வரவேற்ற கண்ணனின் மகள் டாக்டருக்கு படிக்கிறாளாம். பையன் அமெரிக்காவில் எம்.எஸ் படிக்கிறானாம். பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் பலரைப்பற்றி நேரம்போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம், குறிப்பாக எங்கள் பள்ளித்தோழன் பரஞ்சோதி உள்பட. ( பரஞ்சோதி வயலூர் உய்யக்கொண்டான் திருமலை பகுதியிலிருந்து ஸ்கூலுக்கு அலுமினிய புத்தகப்பெட்டியுடன், அப்போதே தினமும் டெரிகாட்டன் சட்டையணிந்து வருபவன். பிறகு ஜெயலலிதா அமைச்சரவையில் சிறிது காலம் மந்திரியாக இருந்து, அடுத்து ஆட்சி மாறியதும் பாதி நேரம் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தவன்(ர்)
தனது மொபைல் போனில் தான் வெற்றிகரமாக முடித்த அறுவை சிகிச்சை படங்களை கண்ணன் காட்டியபோது பயந்தே போய்விட்டேன். விபத்தில் சிக்கி, தலை முதல் கால் வரை ரத்தக்களறியில், உடம்பின் பல பாகங்கள் அங்கங்கே சிதைந்தும் வெட்டப்பட்டும் பாதி நிர்வாண நிலையில் ஆசுபத்திரியில் படுக்க வைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் ஒன்றைக்காட்டினான். பிறகு தான் சுமார் இருபது மணி நேரங்கள் ஆபரேஷன் செய்து உடம்பு முழுக்க தையல்கள்... உடம்பின் பல பாகங்களிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்ட தோலைக்கொண்டு அங்கங்கே தைத்து மறுபடியும் ஓரளவு சீராக்கப்பட்ட உடல் படங்கள்... பின் அடுத்த சில மாதங்களில் முழுவதும் குணமடைந்து சகஜநிலைக்கு மாற்றப்பட்ட அதே பெண்ணின் படங்கள்.. பார்க்க பிரமிப்பாக இருந்தது.
கல்யாணமாகி 13 வயது மகனுடன் இருக்கும் 35 வயதான மற்றொரு பெண்ணுக்கு மேலுதட்டில் கிட்டத்தட்ட எலுமிச்சம்பழ சைஸில் கட்டி. Haemangioma எனப்படும் இந்த cancerous tumor முழுக்க முழுக்க இரத்தக்குழாய்களுடன் இருக்கக்கூடியது. அறுவை சிகிச்சையின்போதே அதிக இரத்தப்போக்கில் நோயாளி இறக்க வாய்ப்புக்கள் அதிகமாம். தவிர புற்று நோய் வேறு..கத்தி வைப்பது அவ்வள சுலபமல்லவாம். அவரின் பக்கவாட்டுப்புகைப்படம் பார்க்க படு கோரமாக இருந்தது. 'இந்த கோர முகத்துடன் இருக்கும் உன்னுடன் வாழ விரும்பவில்லை. மறுமணம் செய்து கொள்வேன்' என மிரட்டும் கணவனை கெஞ்சிப்பார்த்த அவள் சிகிச்சை செய்துகொள்ள வசதியும் இல்லாமல், வேறு வழி கிடைக்காமல், தன் கணவனுடன் சேரும் ஒரே நோக்கத்துடன் அரசு மருத்துவமனைக்கு வந்து கண்ணனை பார்த்தாள். அடுத்த சில நாட்களில் கட்டியை முழுவதும் அகற்றி, புற்று நோயை குணப்படுத்தி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தடயமே இல்லாமல் குணபடுத்திய பின் கண்ணன் காட்டிய அவளது புகைப்படத்தையும் பார்த்து அசந்தே போய்விட்டேன். கணவரும்... ச்சே என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு! கணவனும் பிறகு அவளை ஏற்றுக்கொண்டானாம்.
தன்னுடன் மருத்துவமனையில் வேலை பார்த்த இவரையே மணம் செய்து கொண்டதாக மனைவியைக்காட்டி கண்ணன் சொல்ல, 'அது இப்ப அவங்களுக்கு சொல்லனும்னு ரொம்ப முக்கியமாக்கும்!' என பொய்க்கோபத்துடனான வெட்கத்துடன் அவனது மனைவி எங்களுக்கு டிபன் வைத்தார்.
'பரவால்லியேப்பா! காதலுக்கு நடுவுல இவ்வளவு பெரிய பெரிய ஆபரேஷனெல்லாம் வெற்றிகரமா செஞ்சியிருக்கியா?' என கேட்ட என்னையும் என் மனைவி உஷா 'ஜோக்கா?' என முறைத்தார்.
ப்ரொஃபசர் (டாக்டர்) கண்ணன் பல வருடங்களுக்கு முன் தன் பள்ளிப்பருவத்திலேயே சரியாகத்தான் (பதிவின் முதல் பாராவிலுள்ள) இந்தப்பாட்டை பாடியிருக்கிறான்...
No comments:
Post a Comment