சீனா செல்ல பஹ்ரைனிலிருத்து விமானம் பிடித்து துபாயில் இறங்கி, லோலோவென இருபது நிமிடம் நடந்து, விமான தளத்தின் உள்ளேயே மெட்ரோ ரயில் பிடித்து, டெர்மினல் வந்து, ட்யூட்டி ஃப்ரீ கடைகளுக்கு மத்தியில் தேடி, துபாய் மர்ஹாபா லௌஞ்சு வந்து சேரும்போது கண்ணாடி ஜன்னல் வழியே சீனப்பெருஞ்சுவரே தெரிந்தது.
மதியம் 12 மணி. கொலைப்பசி.. லவுஞ்சில் சுடச்சுட ஏஷியன் உணவு, பச்சை தேனீரை முடித்து வைஃபையை முடுக்கி கொஞ்ச நேரம் முகநூலை மேய்ந்து, சரியாக இரண்டு மணிக்கு பெய்ஜிங் விமானத்தை பிடிக்க கேட் நெ:15 வந்து சேர்ந்தபோது அங்கே ஒரு மினி சைனாவே இருந்தது. உரித்த உருளைக்கிழங்கு மாதிரி சின்னச்சின்ன குழந்தைகள். 'சிக்கு மங்கு சிக்கு மங்கு செக்க பப்பா' பாடலாம். எங்களைத்தவிர இந்தியர்களே இல்லை.
அந்த A380 விமானத்தின் உள்ளே மேல் தளமும் இருந்தது. இருக்கையில் உட்கார்ந்த இருபதே நிமிடங்களில் பட்பட்டென கதவை சாத்தி மெல்ல டாக்சியிங் செய்து ஜிவ்வென மேலே எழும்பி மணிக்கு 500 கி.மீ வேகத்தில் பறக்க ஆரம்பித்தார், ஓமக்குச்சி நரசிம்மனை விட இன்னும் ஒல்லியாக இருந்த சீன விமானி. துபாயிலிருந்து பெய்ஜிங் சுமார் ஆறாயிரம் கி.மீ. தூரம். அடுத்த சில நிமிடங்களில் மணிக்கு 1000 கி.மீ. வேகமெடுக்க சிற்றுண்டி கொடுக்க ஆரம்பித்த சீன விமான பணிப்பெண்கள் படு சுறுசுறுப்பு! . இப்பத்தானே கீழே சாப்ட்டோம்! அடுத்த 6, 7 மணி நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு முறை உணவு விநியோகம். பக்கத்தில் மனைவி Usharani Sridharஇரண்டு தமிழ் படங்கள் பார்த்துவிட்டார்.
இரவு பெய்ஜிங்கில் விமானத்தை விட்டு வெளியே வரும்போது 'சீதாபதி ஶ்ரீதர்' பெயர் பொறித்த அட்டையுடன் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணொருத்தி எங்களை வரவேற்று அடுத்த அரை மணியில் ஹோட்டலில் இறக்கி விட்டு விடைபெற்றுக்கொண்டாள். பெட்டியை போட்டுவிட்டு கீழே இறங்கி வந்து சீனத்தெருவில் சிறிது நேரம் நடந்து அருகே KFC ஒன்றில் பூண்டு ரொட்டி சாப்பிட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம்.
அழகான பெய்ஜிங் நகரம்... ஓரிடத்தில் அருகருகே நான்கு நீளமான கட்டிடங்களை சேர்த்து ராட்சத டிராகன் வடிவில் கட்டியிருந்தார்கள்.அகன்ற சாலைகளின் ஒரு பகுதி இரண்டு/மூன்று சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல. நகர் முழுக்க சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தவன்னம் இருக்கும்போது தரையின் கீழ் மெட்ரோ ரயில்கள். சுமார் 20 மில்லியன் ஜனத்தொகையாம். பிரதான வீதிகள் ஒவ்வொன்றும் குறைந்தது 5 கி.மீ நீளமாவது இருக்கும். எங்கு பார்த்தாலும் ஈசல் மாதிரி ஜனங்கள் கூட்டம்.ஆண் பெண் எல்லோருக்குமே ஒடிசலான உருவம். யாருமே மெதுவாக நடப்பதாகத்தெரியவில்லை. விசுக் விசுக் என கையை நீட்டி நடக்கிறார்கள். பல பெண்கள் கிட்டத்தட்ட நம்ம ஊர் மஞ்சுளா சாயல். மை பென்சிலால் கிழித்து விட்ட கோடுகள் மாதிரி கண்கள்.
பஹ்ரைனில் தாதாபாய் டிராவல்ஸின் மலையாள பெண்மணி சகாயமான விலையில் எங்களுக்கு மூன்று நாட்களுக்கான ஐடினெரரியை தயார் செய்து கொடுத்தாலும், மனைவி உஷா அவரை பெண்டு எடுத்து விட்டார். ஏற்கனவே வலையில் பீராய்ந்து என்னென்ன இடங்கள், எவ்வளவு தூரம் போன்ற தகவல்களை திரட்டிய உஷா 'நீங்க டியான்மன் ஸ்கொயர் கூட்டிப்போக தனியாக சார்ஜ் செய்ய வேண்டாம். அது எங்க ஹோட்டலில் இருந்து பக்கமாச்சே! நாங்க போய்க்கறோம்' என அவரது லாபத்தில் கொஞ்சம் மண்ணையும் அள்ளிப்போட்டார்.
'நோவோடெல்' என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கான கட்டனம். எல்லாம் ரிஸெஸ்ஷன் கொடுமை. இதுவரை அவ்வளவு வெரைட்டியான காலை உணவை வேறெங்கும் சாப்பிட்டதில்லை. Conjee (கஞ்சி), க்ராய்ஸோ(ன்ட்), ஆவியில் வேகவைத்த கொழுக்கட்டை போன்ற டம்ப்ளிங், கொழுப்பில்லா முட்டை ஆம்லெட்.. என வகைவகையாக காலை உணவை உண்டபின் வெளியே வந்தால் 12 seater டொயோட்டா ஹைஏஸ் வேனில் 14,15 வயது மதிக்கத்தக்க ஈவா என்ற பெண் காத்திருந்தாள். 29 வயதாம். அப்போது பேச ஆரம்பித்த அவள் அடுத்த இரண்டு நாள் கழித்து திரும்ப நாங்கள் விமானம் ஏறும் வரை ஓயவில்லை. அவளது குட்டிப்பையன் போட்டோ காட்டினாள். 'படு க்யூட்டா இருக்கானே' என சொன்னபோது அவளது முகம் பிரகாசமாகி 'ஓ.. தேங்க்ஸ்' என்றார். உலகின் எந்த ஒரு மூலையாக இருந்தாலும் அம்மா.. அம்மா தான்.
நகரத்திலுள்ள பிரதான நினைவுச்சின்னங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் அரச பரம்பரைக்கதைகள் தான். அந்தக்கால மன்னருக்கு ஆயிரம் பெண்டாட்டிகள் மற்றும் சேவை செய்ய அழகான யுவதிகள். திருநங்கைகள் தான் அரன்மனையில் சேவை செய்தார்களாம். தினமும் மன்னரின் அழைப்புக்காக அழகிகள் காத்திருக்க, அவர் தினமும் ஒரு அழகியை தேர்ந்தெடுப்பாராம். மன்னரின் திக்விஜயத்தின்போது, படை வீரர்களின் மனைவியோ பெண் குழந்தைகளோ கொஞ்சம் அழகாக இருந்து அவர் கண்ணில் பட்டுவிட்டால் போச்சு..திக்விஜய் சிங் ஆகிவிடுவாராம். நடுநடுவே ஈவாவை கொஞ்சம் தண்ணீர் குடிக்கச்சொன்னோம்.
முதல் நாள் சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்குப்பின் நாட்டின் எல்லையோரப்பகுதியில் பெரிய மலையடிவாரத்திற்குப்போனோம். அங்கிருந்து கேபிள் காரில் மலைமேல் ஏறிப்போனால் பிரம்மான்டமான சீனப்பெருஞ்சுவர். கிட்டத்தட்ட பத்தாயிரம் கி.மீ நீளமான சுவற்றின் ஒரு பகுதி தான் நாம் பார்ப்பது. நல்ல கூட்டம். விண்வெளியிலிருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரிகிறதாம். சுவற்றை உயரமான மரங்களடர்ந்த மலைகள் மேல் கட்டியிருக்கிறார்கள். ஆனால் சுவர் மேல் ஏறியவுடன் அங்கிருந்து தாவி வெளியே குதிக்கும் அளவே உயரம். 'அப்ப எதிரிகள் ஈசியா உள்ளே ஏறி குதிக்கலாமே!'என கேள்வி கேட்ட சின்னவனை அதட்டினேன்.
திரும்ப வரும் வழியில் jade factory என்ற இடத்தில் jade பவளக்கற்களைக்கொண்டு விதவிதமான ஆபரணங்கள் செய்வதை பார்த்தோம். மோதிரம், வளையல், காப்பு போன்ற அந்த ஆபரணங்களை அணிந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்குமாம். இரத்த கொதிப்பு வராதாம். விலையை கேட்டால் இன்னும் கொஞ்சம் ஆபரணங்கள் போடவேண்டி வரும்.
அடுத்து சீன தேநீர் தொழிற்சாலை ஒன்றிற்கு கூட்டிப்போனார்கள். இளைஞன் ஒருவன் பெண் சிப்பந்தியுடன் எங்களை ஒரு அறையில் அமர வைத்தான். பின் விதவிதமான கருப்பு, பச்சை மற்றும் வாசனை தேநீர் வகைகள் தயாரிக்கும் முறையை எங்கள் முன் செய்து காண்பித்து, சுவை பார்க்கச்சொன்னான். 'நீ எங்க வாரேன்னு எனக்கு தெரியும் ராசா' என நான் நினைத்தது சரி. எல்லா தேநீர் வகைகளும் அடங்கிய அட்டை டப்பாவை சல்லிசான விலையென்று நம் தலையில் கட்டப்பார்த்து நூதன முறையில் கொள்ளையடிக்கப்பார்த்த இளைஞனை வெற்றிகரமாக சமாளித்து காரில் ஏறும்போது, 'oh.. Pleasant flavor !' என வியந்த ஐரோப்பிய தாத்தா ஒருவரை 'மாட்னான்டா சேகரு.. தோ.. வாரேன்' என இளைஞன் எங்களை விட்டு ஓடினான்.
மறுநாள் காலை மழையில் நனைந்தவாறு tiannaman square. அதை அடுத்து forbidden city. அந்தக்கால அரண்மனைகள் அப்படியே பாதுகாக்கப்பட்டு இருந்தன. வாசல் உள்ளே நுழையும்போது ஒரு அரண்மனை தான் இருக்கும் என நினைத்தால் ஏழெட்டு அரண்மனைகள் உள்ளே. Large stone carving, summer palace, Imperial ancestral temple, garden of virtue and harmony என எல்லா அரண்மனை பின்னனியிலும் ஒரே அரச பரம்பரை கதைகள் கேட்க போரடித்தது.
'அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மீது எங்கள் அரசாங்கத்துக்கு எப்பவுமே பொல்லாத கோபம். நல்ல சமாச்சாரங்களை விட்டுவிட்டு எங்க நாட்டைப்பற்றி அவதூறு செய்திகளை மட்டும் பரப்புகிறார்கள். அந்த காலத்தில் எங்களது புராதன சின்னங்களை அழித்த அல்லைடு ஃபோர்ஸுகள் மீதுள்ள கோபம் இன்னும் தனியவில்லை' என ஈவா பெருமூச்சு விட்டபோது அவளது தேசப்பற்று தெரிந்தது. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளதாம். 'என்னாது!' என வடிவேலு மாதிரி கேட்டு வியந்தோம்.
அடுத்து சீன இயற்கை மருந்து தயாரிக்கும் நிறுவனம். நிறைய சுற்றுலா பயணிகள். நல்ல கூட்டம் என்பதால் இருபது இருபது பேராக உள்ளே விட்டு உட்கார வைத்து கதவை மூடி, இளம்பெண் ஒருத்தி முதலில் சீன மருந்தின் மகத்துவத்தை விளக்க ( ஆஹா.. மறுபடியும் பணம் பிடுங்கும் உத்தி!) மற்றொரு பெண் உள்ளே வந்து 'இன்னும் சில நிமிடங்களில் டாக்டர்கள் வந்து ஒவ்வொரு குடும்பத்தின் முன் உட்கார்ந்து உங்க நாடிய புடிச்சி பார்த்து உடம்புல என்ன நோய் இருக்குன்னு கரெக்டா சொல்வாங்க' என்றார். நம் எதிரே மிக நெறுக்கமாக அவரது நாற்காலி. பர்ஸை ஒரு முறை தொட்டுப்பார்த்துக்கொண்டேன். டாக்டர் ஒருவர் வந்து என்னெதிரே அந்த பெண்ணுடன் நெருக்கியடித்து அமர்ந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியாதாம் (கிழிஞ்சது போ!) அருகே மொழிபெயர்க்க மற்றொரு பெண். எல்லோரும் அத்துனூன்டு இடத்திற்குள். நேராக என் கையை பிடித்தார் டாக்டர். கொஞ்சம் முறுக்கினார். தேவையில்லாமல் என் முகத்தை வேறு உற்று பார்த்தார். ( பக்கத்தில் சின்னவன் சிரிப்பை அடக்க முயற்சித்தான்). உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜியாரிடம் அடி வாங்கும் ஜப்பான் காரன் முகம் அவருக்கு. அடுத்து ##**##€£¥{=+<~• என சீனமொழியில் ஏதோ அவர் சொல்ல, அந்தப்பெண் 'உங்களுக்கு வயிற்றுப்பகுதியில் பிரச்சனைன்னு சொல்றார்' என்றார். 'என்னா பிரச்னைன்னு அவரை சொல்லச்சொல்லு' என பதிலுக்கு நான் கேட்டேன் ( டேய்! நாங்க திருச்சி.. ஆமா!). 'அது வந்து.. வந்து..You have many problems in this region' என அவளும் வயிற்றை தொட (அவளுடைய வயிற்றைத்தான்!
)..உஷா கண்களில் மிறட்சியுடன் என்னை கெட்டியாக பிடித்துக்கொண்டாள். ஐம்பது வயது ஆண்களுக்கு வயிற்று பிரச்னை மற்றும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னை என பொத்தாம் பொதுவாக சொன்னால் ஒன்றிரண்டு கேஸ் எப்படியும் மாட்டிவிடும் போலும். என்ன பிரச்னை என கடைசி வரை சொல்லாமல் பங்கஜ கஸ்தூரி மாதிரி ஒரு மருந்து டப்பாவை எடுத்தாள் அந்த யுவதி. சேலம் சிவராஜ் மூல பவுந்திர வைத்தியர் ஸ்டைலில் நடக்கும் மருத்துவம் அது என பயந்து அங்கிருந்து ஓட்டமெடுத்தோம். எங்களை அங்கே கூட்டிச்சென்ற ஈவாவிற்கு 'கட்டிங்' உண்டாம்.
கடைசியாக பர்ல் மார்க்கெட் என்ற பல அடுக்கு கட்டிடம் வந்தோம். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் நம்ப முடியாத அளவிற்கு குறைவான விலை. ஐபோன்-6 இன் விலை சுமார் 50 டாலர்கள் தானாம். பஹ்ரைனில் 500 டாலருக்கு கிடைக்கும் GoPro காமிரா இங்கு வெறும் நாற்பது டாலருக்கும் குறைவு. வாங்கினோம். கடைக்கார பெண்ணிடம் 'ஏன் சீனாவில் இவ்வளவு குறைவான விலை' என கேட்டபோது அவள் 'உன்னிடமுள்ள ஐபோனை கீழே போடு.. ஒன்னுமாகாது.. எங்க போன் கீழே விழுந்தால்.. அவ்வளவு தான்.. கீழே விழாத வரை உன்னுடைய போனை விட என்னுது பல வருடங்கள் அருமையா வேலை செய்யும்.. நான்கு வருடங்களுக்கு மேல் என் போன் வேலை செய்கிறதே' என அடித்து சொன்னாள். அடுத்து அவள் ' பொருளாதாரங்களின் அளவு (economies of scale), குறைந்த மூலதன முதலீடு (investment), அதிக தொழிலாளர் உற்பத்தித்திறன்(efficiency), குறைவான போக்குவரத்து செலவு(freight), லாப சதவிகிதம் (profit margin %) குறைவென்றாலும் எங்க மாஸ் ப்ரொடக்ஷனில் லாபத்தொகை அள்ளிடும்... இப்படி நிறைய சமாசாரங்கள்' என்று பொருளாதாரம் பேசி என்னை வியக்க வைத்தாள்.
'கடைக்காரர்கள் சொல்லும் விலையில் பாதிக்கு பாதி கேட்டு பேரம் பேசினால் சாமர்த்தியம்' என யாராவது சொல்லி நீங்கள் வாங்கி விட்டால் ஏமாந்தீர்கள் என அர்த்தம். அவர்களுக்கு கோபம் வரும் அளவிற்கு கால் பங்குக்கும் குறைவாக விலை கேட்டு, பேரம் பேசி, கடைசியில் கால் பங்கிற்கு வாங்கினேன். பொருளை வாங்கிவிட்டு அடுத்த கடை போகும்போது 'இவன் விவகாரம் பிடிச்சவன்' என அடுத்த கடைக்காரிக்கு சீனமொழியில் இவள் சொல்லியிருப்பாளோ என்னவோ.. 'சாரி இங்க இல்லை' என்றார்கள், பொருளை வைத்துக்கொண்டே. பம்பாய் ஃபோர்ட் பகுதி ரோட்டோர சேட்டன்களிடம் பேரம் பேசிய அனுபவம் எனக்கு உண்டு. டெல்லி பாலிகா பஜாரில் புடவைகள் வாங்கும்போது பேரம் பேசி, சர்தார்ஜி ஒருவன் என்னை கெஞ்சி 'நீ வாங்கலைன்னாலும் பரவால்ல.. இங்கிருந்து போயிடு' என கெஞ்சியது நினைவுக்கு வந்தது.
இன்டர்நெட், மெயில், மெஸ்ஸேஜ், காமெரா, போன், ரேடியோ, யூட்யூப் அனைத்தும் உள்ளடக்கிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை நூறு டாலரில் ஆரம்பித்து இருபது டாலருக்கு வாங்கினேன். பக்கத்திலிருந்த சின்னவன் 'பஹ்ரைனிலேயே ஒரிஜினல் சோனி ஸ்மார்ட் வாட்ச் 40 தினார் (100 டாலர்) தானேப்பா!.. this is fake' என்றான்.
அடுத்தநாள் காலை நான்கு மணியளவில் நோவோடெல் ஊழியர்கள் காலை உணவுப்பொட்டலங்கள் கொடுத்து விமான தளத்தில் இறக்கிவிட்டார்கள். கடும் பாதுகாப்பு சோதனைகள். செக்கின் பாகேஜிலிருந்த பாட்டரி சார்ஜ் பாங்க்கை பிடிங்கி வைத்துக்கொண்டார்கள். மறுபடியும் துபாய் வந்திறங்கி சென்னை விமானத்தில் ஏறி அமர்ந்தோம்.
விமானத்தில் 'பர்ல் மார்க்கெட்ல வாங்கின ஸ்மார்ட் வாட்சை ஃப்ளைட்ல ஆன் பண்ணக்கூடாது. எலெக்ட்ரானிக் சாதனமாச்சே!. மெட்ராஸ் போனவுட்டு ஆன் பண்ணிக்கலாம்' என கட்டளையிட்ட உஷாவிற்கு என்னுடைய பதில்: 'அந்த வாட்ச் பர்ல் மார்க்கெட்லேயே ஆன் ஆகலை'
No comments:
Post a Comment