Thursday, June 2, 2016

நண்பனே.. எனது உயிர் நண்பனே

கடந்த 15ஆம் தேதி அக்காவின் மகள் திருமணம் முடிந்து இரண்டாவது நாள் வயலூர் ரோடு ஶ்ரீனிவாசா நகரில் சம்மந்தி வீட்டு விருந்து முடித்த கையோடு 'ஒஸ்தானுன்டி' என ஒவ்வொருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு, காத்திருந்த டவேராவில் ஏறி கோயம்புத்தூர் கிளம்பினோம்... கோவையில் ஒரு திருமணம், மே.பாளையத்தில் சுற்றுலா ரிசார்ட் மற்றும் கோவை நண்பர்களை சந்திக்க...
கடந்த ஒரு வருடத்தில் மூன்று முறை இந்தியா வந்தபோது இவரை பார்க்க முயற்சித்தும் நேரமின்மை காரணமாக பார்க்க முடியாமல் போனது. யார் இவர்? நண்பர் Suresh Kumar S தான். இதோ இந்த முறை அந்த வாய்ப்பு கிட்டியது. ஓரிரு மாதங்கள் முன்னமே இவருக்கு எனது கோவை பயணத்தை தெரியப்படுத்தியிருந்தேன். திருச்சியிலிருக்கும்போதே குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு எனது கோவை பயண விபரங்களை தெரிந்துகொண்டார். கவிதைகள் அட்டகாசமாக எழுதுபவர். தமிழ் மட்டுமல்லாமல் இவருக்கு ஆங்கிலப்புலமையும் அதிகம். கோவை PSG போன்ற நல்ல கல்லூரிகளை விட்டுவிட்டு திருச்சியில் படிக்கும் ஆர்வத்துடன் St.Joseph's இல் படித்தவர். தற்போது இன்ஷூரன்ஸ் துறையில் இருக்கிறார்.
அடுத்து இன்னொரு நண்பர் கோவை ஶ்ரீதர் (Sridharan Srinivasan) கிட்டத்தட்ட முப்பந்தைந்து வருடங்கள் முன்பு திருச்சி பொன்மலை ரயில்வே காலனியில் இவரை பார்த்திருக்கிறேன். பிறகு இப்போது தான் பார்க்கிறேன். இவர் எனது நண்பன்Ganapathi Subramanian னின் திருச்சி கல்லூரி நண்பன். பல வருடங்கள் வங்கியில் பணி புரிந்து தற்போது கோவையில் சுயமாக பாங்க்கிங் கன்சல்டன்சி நடத்துபவர். முகநூலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவ்வப்போது காரமாக விமரிசனம் செய்பவர்... எந்த சப்ஜெக்டானாலும் சரி..
மூன்றாவது நண்பர் KM Sundar. சென்ற வருடம் இவரை கோவையில் முதன்முதலில் Cafe Coffee Dayஇல் சந்தித்தது. மருந்து கம்பெனிகளில் உயர்பதவிகள் வகித்து தற்போது இவரும் சுயமாக தொழில் செய்பவர். இவரது தமிழ்/ஆங்கில எழுத்தாற்றல் பலரை பிரமிக்க வைக்கிறதென்பது உண்மை. அரசியல், கலை, இலக்கியம், விளையாட்டு குறிப்பாக ஆங்கில இலக்கியம் மற்றும் டென்னிஸ் பற்றி இவர் எழுதும் பதிவுகள் அற்புதம்.
திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் அல்லூர், ஜீயபுரம் மற்றும் திருச்செந்துரை போன்ற ஊர்களை கடந்தபோது பஹ்ரைன் நண்பர்கள் Tiruchendurai Ramamurthy Sankar மற்றும் Srinivasn Rathinam நினைவுக்கு வந்தார்கள். கரூர் அருகே சாலையில் தண்ணீர் சொட்டச்சொட்ட ஓடும் மணல் லாரிகளின் நடமாட்டம் அதிகமென்பதால் முன்னால் போகும் வாகனங்களை முந்தமுடியாமல் டிரைவர் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் ஓட்டினார். மூன்றாவது கியரில் மெதுவாக ஓடும் வண்டியில் நாங்களும் கல்யாண பக்ஷணங்கள் முறுக்கு அதிரசம் சாப்பிட்டு, (பொழுது போகாமல்) கையில் ஒட்டியிருந்த எண்ணெயை காலில் துடைத்துக்கொண்டோம். முன்பக்கம் அலறிக்கொண்டிருந்த 'தீப்பிடிக்க... தீப்பிடிக்க..' பாடலை உடனே நிறுத்தச்சொன்னாள் மனைவி. 'ஏ.சி. பத்தலையே!' என சின்னவன் என் காதில் ஆங்கிலத்தில் முனுமுனுத்தது டிரைவர் காதுக்கு எப்படி எட்டியதோ! வண்டி ஒட்டிக்கொண்டே தலைக்கு மேல் கையை மட்டும் பின் பக்கமாக நீட்டி ஏ.சி. வென்ட்டை திருப்ப, ஜில்லென காற்று...
வழியெங்கும் ஏராளமான மெஸ்கள். காங்கேயம் தாண்டி மெயின் ரோட்டிலிருந்து ஓரம் கட்டி 'அஞ்சலி மெஸ் & பேக்கரி' முன் டிரைவர் நிறுத்த, வண்டியை விட்டிறங்கி உடம்பை ஒட்டியிருந்த உள்ளாடையை இழுத்துவிட்டபடி சோம்பல் முறித்து மெஸ்ஸினுள் நுழைந்தேன். வேட்டியை மடித்துக் கட்டியபடி கழிவறை பக்கம் நிறைய பேர் ஓடினர்.
வெஜ் பஃப்ஸின் கமகம வாசனை நம்மை இழுக்க, கடைக்காரர் அதை அவனில் சூடுபண்ணி நீண்ட கத்தியால் வெட்டிக்கொடுக்க, முப்பதே வினாடிகளில் அதை கபளீகரம் செய்தான் சின்னவன். ஜீரா சொட்டச்சொட்ட மினி ஜிலேபி, பாதுஷா, அசோகா அல்வா, ஜாங்கிரி, வடநாட்டு இனிப்பு வகைகள் மற்றும் வெண்ணெய் பிஸ்கட்டுகள், சீடை, முறுக்கு, தட்டை வகையறா...பவன்டோ, மவுன்டன் டியூ, பெப்ஸி..அமோகமான விற்பனை அன்று.
'பன்னு இருக்காங்க?'... கேட்டு முடிக்கும் முன் பஞ்சுபோன்ற மென்மையான பன் ஒன்றை மாலைமலர் பேப்பரில் சுற்றி என் முன் வைத்தார் திருமாவளவன் சாயலிலிருந்த கடைக்காரர். 'பேப்பர் கப்புல ஒரு டீ குடுங்க...' மீடியம் ஷுகர் என சொல்லவில்லையென்றால் சக்கரையை ஏகத்துக்கும் கொட்டி விடுவார் டீமாஸ்டர்.
டீயை உறிஞ்சியபடி கடையை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். தின்பண்டங்கள் மட்டுமில்லாமல் பவுடர், பாடி ஸ்ப்ரே, சென்ட், சீப்பு, சோப்பு, சவரப்பொருட்கள், சீட்டுக்கட்டு, விளையாட்டு பொம்மைகள், கீச்செயின், ஷூ பாலிஷ், டைகர் பாம், ஆக்ஸ் ஆயில், சமஹன், விக்ஸ், சீடி டிஸ்க், காது குடைய பஞ்சுக்குச்சி டப்பா, நகம் வெட்டி, அலாரம், ஃப்ளாஸ்க், பிளாஸ்டிக் தட்டு, கிளாஸ்கள், உள்ளாடைகள், நண்டு லுங்கி, பெண்களுக்கான மேக்கப் சாதனங்கள், வளையல், ஃபேர் அன் லவ்லி, டெட்டால், மௌத் வாஷ், எல்லாவித மளிகை ஜாமான்கள், ரெயின் கோட்டு, சால்வை, மஃப்ளர், கைக்குட்டை, ராமராஜ் வேட்டி (ஒட்டிக்கோ கட்டிக்கோ), கோஹினூர்--(ச்சீ..), ஸ்பானர், கத்தி, சுத்தியல், மொபைல் போன்கள், போன் கவர்கள்...கடையா அது! ..கடல்ங்க..
'சார்.. வீட்ல கூப்புடறாங்க' என டிரைவர் வந்து அழைக்க வண்டியை நோக்கி ஓடினேன்.
பல்லடம், சூளூர் நெறுங்கும் முன்பே ரோடெங்கும் டிராபிக் ஜாம்... ஒரு வழியாக 9 மணிக்கு நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டல் வந்து சேர்ந்து உடனே கல்யாண ரிஸப்ஷனுக்கு கிளம்பினோம். மறுநாள் காலை கல்யாணம், அது முடிந்து அன்றைய மதியமே பொள்ளாச்சி, அன்றிரவே கிளம்பி மேட்டுப்பாளையம் பக்கம் ஒரு ரிசார்ட், மறுநாள் இரவு கோவை திரும்பி, இரண்டாம் நாள் மதியம் முதல் மாலை வரை கோபால சுந்தரம் (Gopala Sundaram)மாமாவுடன்.. நேரமின்மையால் பஹ்ரைன் நண்பன் Vinod Rajamani ஐ சந்திக்க இயலாமல் போனில் மட்டும் சில நிமிடங்கள் பேச முடிந்தது. நண்பர் KK (Krishnamurthy Krishnaiyer )இன் தாயார் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் KKஐயும் இம்முறை சந்திக்க முடியவில்லை. அவரது தாயார் நலம்பெற்று வீடு திரும்ப என் பிரார்த்தனைகள்.
மூன்றாம் நாள் நாங்கள் ஆறு பேர் சந்திப்பதாக முடிவாகியாருந்தது. நண்பர் சுரேஷ்குமார் மற்றும் சுந்தர் இருவரும் எந்த ஹோட்டலில் சந்திக்கலாம் என ஏற்கனவே பேசி முடிவு செய்து கோவை ஶ்ரீதருக்கும் தகவல் கொடுக்க, இரவு ஏழு மணிக்கு ஶ்ரீதர் தன் வோக்ஸ்வாகனில் வந்து என்னை கூட்டிக்கொண்டு ஆனந்த் ஹோட்டல் போனார். பஹ்ரைனில் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒன்றில் துணைப்பொது மேலாளராக இருக்கும் Ramakrishnan Sundaram உம் விடுமுறைக்கு கோவையில் இருப்பதால் எங்களுடன் கலந்து கொண்டார். மற்றொரு நண்பர் Anandh Raju. சினிமாத்துறையில் காமிராமேன் மற்றும் இளம் இயக்குநருமான அவர், நண்பர் கோவை ஶ்ரீதருக்கு உறவாம்.
ஆஹா... முகநூலில் மிகவும் நெறுங்கிய நண்பர்களான நாங்கள் நேரில் சந்தித்த தருணம் மறக்க முடியாது. 'ஸ்வீட் எடு..கொண்டாடு'வில் ஆரம்பித்து தே.பால் ஆப்பம், ரவா ரோஸ்ட், இட்லி, இடியாப்பம்...சல்சல்லென எல்லாம் உள்ளே இறங்க, இந்தப்பக்கம் சுரேஷ், அந்தப்பக்கம் சுந்தர், எதிரே கோவை ஶ்ரீதர், பக்கத்தில் சுந்தரம், மற்றும் சினிமாக்கார ஆனந்த்...
'ஃபேஸ்புக்ல பாத்த மாதிரியே இருக்கீங்களே'....
'நீங்க கூட நேர்ல யங்கா தெரியறீங்க'
'எத்தினி வருஷமா அந்த நாட்ல இருக்கீங்க'
'வீட்ல எப்பிடி இருக்காங்க'
போன்ற பொய்யற்ற கரிசனமாக விஜாரிப்புக்கள்..
'இவர்ட்டயே ரொம்ப நேரமா பேசிட்ருக்கேனே! அவரு தப்பா நெனச்சுக்குவாரோ' போன்ற பயங்களுக்கு நடுவே மற்ற முகநூல் நண்பர்களைப்பற்றி பேசிக்கொண்டு நேரமே தெரியவில்லை.
சென்னையில் மழை கொட்டோகொட்டென்று கொட்டிக்கொண்டிருக்க, கோவை க்ளைமேட் குளுகுளுவென ரம்மியமாக இருந்தது.
எனக்குத்தேவையான சில மருந்து மாத்திரைகளை சுரேஷும் சுந்தரும் தேடிப்பிடித்து வாங்கி வந்திருந்தது என்னை நெகிழ்ச்சியடையச்செய்தது. இரவு பதினோறு மணிக்கு விடைபெற மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம்.
'நண்பனே.. எனது உயிர் நண்பனே' என்ற வாலியின் பாடல் நினைவுக்கு வருகிறது:
ஒரு கிளையில் ஊஞ்சலாடும்
இரு மலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்..
ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ..
இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை
இன்றும் என்றும் கேட்க வேண்டும்
எனது ஆசை..

No comments:

Post a Comment