தென்னூர் வண்டி ஸ்டாண்டு...
'வண்டி ஜங்சனுக்கு வருதாங்க?'
'வருந்தம்பி! வீடெங்க?'
'ந்தா..பாப்புச்செட்டித்தெருவுல போஸ்ட் மாஸ்டர் வீடு..'
'வற்ரேன்.. பன்னண்டனா ஆவும்..'
'வருந்தம்பி! வீடெங்க?'
'ந்தா..பாப்புச்செட்டித்தெருவுல போஸ்ட் மாஸ்டர் வீடு..'
'வற்ரேன்.. பன்னண்டனா ஆவும்..'
அடித்த சில நிமிடங்களில் தென்னூர் பாப்புச்செட்டித்தெருவில் எங்கள் தாத்தா வீட்டு வாசலில் குதிரை வண்டி வந்து நின்றது.
'ம்மா..! குர்ரம்பண்டி ஒச்சேசிந்தி' என கத்தியபடி நானும் என் தம்பியும் வாசலுக்கு ஓடுவோம்.
'ம்மா..! குர்ரம்பண்டி ஒச்சேசிந்தி' என கத்தியபடி நானும் என் தம்பியும் வாசலுக்கு ஓடுவோம்.
பழைய வண்டியில் பூட்டிய அந்த குதிரை சற்று நோஞ்சானாக இருந்தது. சவாரி ஏறும் வரை குதிரைக்கு முன்னால் கொஞ்சம் சாப்பிட புல்லை போட்டிருந்தான் வண்டிக்காரன். வண்டிக்கு அடிப்பகுதியில் தொங்கும் சாக்கில் நிறைய புல் இருக்கும். பரம சாது குதிரை. நின்றபடியே புல்லை சாப்பிட்டது. கழுத்துப்பகுதியில் கட்டியிருந்த கனமான சேணம் அதன் தோளில் உரசி உரசி அந்த இடமே ரணமாகி சிகப்புக்கலரில் சதை தெரிந்தது. குதிரையின் தலையில் புஸுபுஸுவென கலர் கொண்டை.. நெற்றியில் சீராக வெட்டிய முடி.. குட்டி பத்மினியை விட அழகாக இருந்தது.
வண்டிக்கு பக்கவாட்டின் ஒரு பகுதி 'அவசர உதவிக்கு போன் 100 'வாசகத்துடன். மற்றொரு பக்கம் சின்ன விளக்கு. சாயங்காலம் தான் அதில் கிருஷ்ணாயில் ஊற்றி விளக்கை பற்ற வைக்கனும். வண்டிக்கு அடியிலும் சிலசமயம் அரிக்கேன் விளக்கு.
வண்டிக்கு பக்கவாட்டின் ஒரு பகுதி 'அவசர உதவிக்கு போன் 100 'வாசகத்துடன். மற்றொரு பக்கம் சின்ன விளக்கு. சாயங்காலம் தான் அதில் கிருஷ்ணாயில் ஊற்றி விளக்கை பற்ற வைக்கனும். வண்டிக்கு அடியிலும் சிலசமயம் அரிக்கேன் விளக்கு.
முன்பக்கமிருந்து வரும் நீளமான தோல் பெல்ட்டை வாலுக்கு அடியில் கொடுத்து இழுத்து கட்டியிருக்கும். குதிரையின் பின்பாகம் பார்க்க அழகாக இருக்கும். வால் பகுதியில் தொங்கும் அடர்த்தியான மயிரை சீராக வெட்டியிருப்பான்.
'டேய் ஶ்ரீதர்! குதிரை பின்னால நாம தொட்டா அதுக்கு கிச்சுகிச்சு மூட்டுமாம்.. உடனே ஒன்னுக்கடிக்கும் பாரேன்!' என என் தம்பி ரவி Vijay Raghavan ஐடியா கொடுக்க, நான் மெல்ல அதன் பின் தொடையை தொட, குதிரை ப்ஹுர்ர்ர்ர் என சப்தத்துடன் உடம்பை ஒரு சிலுப்பு சிலுப்பி, கிணிகிணியென மணி சத்தத்துடன் வண்டியை குலுக்க, ' அடேய் தம்பி! அங்க தொடாத...திரும்ப தண்ணி கேக்கும் அது!' என வண்டிக்காரன் கத்திய மறுநிமிடம் சடசடவென ஒன்னுக்கு போனது ரோடெங்கும் வழிந்தோட.. 'ஹே'யென நானும் ரவியும் சிரித்தபடி முழங்கால்களை துடைத்துக்கொண்டோம். நான் அப்ப செஞ்சோசப்ல ஏழாங்கிளாஸ். ரவி புத்தூர் பாத்திமா ஸ்கூல்ல அஞ்சாப்பு..
அம்மா, பாட்டி இருவருக்கும் பெருத்த சரீரம். வீட்டை விட்டு வெளியே வந்து வண்டியின் பின்பக்கம் தொங்கும் இரும்புப்படியில் காலை வைத்து அவர்கள் ஏறும்போது, வண்டியின் முன்பக்கம் செங்குத்தாக மேலே எழும்ப, வண்டிக்காரன் குதித்து முன் பக்கம் அழுத்துவான். அவன் கால்கள் தரையிலிருந்து ஓரடி மேலே. பிறகு பின்னால் வந்து கம்பியை கொக்கியில் மாட்டுவான். நல்லா முன்னுக்கு வாம்மா என கேட்டு வண்டியை பாலன்ஸ் பண்ணுவான்.
எங்களுக்கு எப்போதும் வண்டியின் முன்பக்கம் ஏறத்தான் பிடிக்கும். முன்பக்கம் வண்டிக்கு முழுக்க வெளிப்பகுதியில் கட்டை மேல் குத்தவச்சு வண்டிக்காரன் உட்கார்ந்திருப்பான். எங்களுக்கும் அவனைப்போல அங்கே உட்கார ஆசை. ஆனால் உட்கார விடமாட்டார்கள்.
முன் சக்கரத்தின் கட்டையில் கால் வைத்து ஏறி உட்காருவோம். வண்டிக்குள்ளே மெதுமெதுவென இருக்கும் சாக்கின் அடியில் உள்ள பசும்புல் மற்றும் குதிரை சாணம் கலந்த வாசம் வீசும். வண்டி நகர நகர நம் மண்டை உள்பக்க மூங்கில் கூரையில் இடிக்கும்.
வண்டி மெல்ல ஊர்ந்து தென்னூர் கவுன்சிலர் கிருஷ்ணன் வீட்டைத்தாண்டி புத்தூர் நோக்கிப்போக, குதிரை இன்னமும் மெதுவாக நடக்கும். வண்டிக்கு உள்பக்கம் சொறுகியிருக்கும் சாட்டையை உறுவி வெளியே எடுத்து சுளீரென குதிரையின் முதுகில் அடித்து 'அய்.. த்தா' என வண்டிக்காரன் அதட்ட, குதிரை லக் லக் லக்கென லேசாக ஓட ஆரம்பிக்கும். குளம்பில் அடித்த இரும்பு லாடம் ரோட்டில் பட்டு இனிமையான சத்தம். எப்போது அவன் சாட்டைக்குச்சியை சக்கரத்தின் நடுவே விட்டு கடகடவென ஒலியெழுப்புவானென நாங்கள் காத்திருப்போம். க்ளுங்.. க்ளுங் என மணியடிக்கும் சப்தத்துடன் குதிரை வண்டி வேகம் பிடித்து புத்தூர் பெரியாஸ்பத்திரி தாண்டி ஓடும்.
இப்ப இந்த குதிரைக்கதை யாருக்காக?
கடந்த சில நாட்களாக இரவில் கை கால் குடைச்சல். அதனால் தூக்கம் குறைவு. விட்டமின் D குறைச்சலாம். முப்பதுக்கும் கீழ் காட்டிய ரிப்போர்ட்டை நேற்று பஹ்ரைனி பெண் டாக்டர் பார்த்துவிட்டு 50,000 IU க்கு 8 வாரத்துக்கு மாத்திரை சாப்பிடச்சொல்லி எழுதிக்கொடுத்தார். படுக்கையிலிருந்து நடு இரவு ஒரு மணிக்கு எழுந்து நடந்து பார்த்தேன். பிறகு நின்றுகொண்டே கொஞ்ச நேரம் தூங்கினேன். வலி பரவாயில்லை. குதிரை அல்லவா நின்றுகொண்டே தூங்கும் பிராணி!
'சிரித்து வாழ வேண்டும்' இரவுக்காட்சி ராமகிருஷ்ணாவில் பார்த்துவிட்டு தென்னூர் வண்டி ஸ்டாண்டு வழியாக நடந்து வரும்போது பார்ப்போம்.. சில நோஞ்சான் கிழ குதிரைகள் லாயத்தில் நின்றுகொண்டே தூங்கும்.
குதிரைக்கு எப்போதோ கிச்சுகிச்சு மூட்டிய பாவம் போலும். நேற்று நடுநிசி நின்றுகொண்டே கொஞ்ச நேரம் தூங்கி திடீரென விழித்தபோது, அந்த குதிரைகள் ஞாபகம் வந்ததன் விளைவு தான் அடுத்த ஒரு மணி நேரத்தில் இப்பதிவு... முடித்துவிட்டு அப்படியே தூங்கிப்போனேன்..
No comments:
Post a Comment