Thursday, June 2, 2016

ஆண்டவனின் தோட்டத்திலே...


ஆண்டவனின் தோட்டத்திலே...
வருடம் 1996..ஒருநாள் இரவு பத்து மணிக்கு மேல் நகருக்கு வெளியே நிறைய பாகிஸ்தானி கராஜ்கள் இருக்கும் புதய்யா பகுதிக்கு நண்பனுடன் போயிருந்தேன். காத்திருந்த பலூச்சி ஒருவன் ஷட்டரை சர்ர்ரென்று உயர்த்த, கராஜ் உள்ளே நீலவானக்கலரில் அழகிய 1979 மாடல் டாட்ஸன் 120Y சலூன் கார்..
பஹ்ரைன் வந்து ஓட்டுநர் உரிமம் எடுத்தவுடன் பழைய கார் ஓன்று வாங்க ஆசை. டயோட்டா கரோனா, க்ரௌன், கரோல்லா, நிஸான் சன்னி, நிஸான் அல்டிமா, லிங்க்கன், ஷெவர்லே மாலிபு, ஜீப் ஷெரோகி என விதவிதமான கார்கள் இங்கு புழக்கம். எல்லாமே கொள்ளை விலை. அவைகளின் புராதன மாடல்களே ஆயிரம் இரண்டாயிரம் தினார்களாவது ஆகும். அதற்கும் குறைவான விலைக்கு டாட்ஸன் 120Y, 140J (பின்னால் நிஸான் ஆனது), பான்ட்டியாக், ஹையுன்டாய் ஆஸ்ஸென்ட், எலான்ட்ரா மாடல்கள் கிடைக்கும். அரதப்பழசாகவும், நிறைய சொட்டைகளுடன் இருக்கும் மனமகிழ் (!) ஊர்திகள் அவை. செம்ம க்ராஸ் இஞ்சின். பாகிஸ்தானிகளும் பிலிப்பினோக்களும் மலையாளி கள்ள டாக்சி ஓட்டுநர்களும் அதிகம் பாவிக்கும் வண்டிகள் அவை. வளைகுடாவில் முதன் முதலில் ஒரு சாதாரண டெபுடி சீஃப் அக்கவுன்டன்ட் ஆக வேலையில் சேர்ந்த எனக்கு அந்த வண்டி எதேஷ்டம்.
நான் வாங்கப்போகும் டாட்ஸன் 120Yக்கு வருவோம். 'தேக்கோ' என அந்த பலூச்சி கார் கதவை திறக்க, டாஷ்போர்டு முழுக்க விரிசல்கள்... மேலே கார்ப்பெட் ஒட்டி விரிசலை மறைத்திருந்தான். தீவின் வெயில் அப்படி. ஏசி வென்ட்கள் உடைந்து அங்கங்கே ஓட்டைகள். ரேடியோ ஓரளவு வேலை செய்தாலும் கிர்ற்ர்.. என மாவு மில் சத்தம்..நடுவே பாடல்கள். ஸ்டெப்னி இல்லையாம். கைப்பிடி இல்லாத டிக்கியின் ஓட்டைக்குள் விரலை விட்டு திறந்து காட்டினான் பலூச்சி. ஆடோமாடிக் கியர் இல்லை. மானுவல் தானாம். முன்பக்க பானைட்டை திறக்க ஒரே கெரோசின் வாடை. பாட்டரி பழசாகி பேரிச்சம்பழத்தை தொடுவது போல பிசுபுசுப்பு. 'காடி அச்சா ஹெ.. தும் பிந்தாஸ் சலாவ்.. ஸச்சீ!'.. பலூச்சி சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டான். வண்டியை வாங்கிவிடுவதென முடிவு செய்யும்போது என்னையறியாமல் உதட்டில் புன்னகை.
'பெப்ஸி பீயேகா?' என அன்புடன் விசாரித்த பலூச்சி
விலை 400 தினார் என்றான். என்னுடைய பட்ஜெட் அவ்வளவு கிடையாது. பேரம் பேசி 375 தினாருக்கு முடித்தேன். அப்போதைய மதிப்பு 30,000 இந்திய ரூபாய். கையில் 300 தினார் மட்டும் இருந்ததால் அதை அட்வான்ஸாக கொடுத்து அங்கிருந்து கிளம்பினோம். பலூச்சியும் எங்கள் பின்னால் அந்த டாட்ஸன் வண்டியில் தொடர்ந்தான். இரவு பதினோறு மணிவாக்கில் ஹூரா பகுதியில் நான் தங்கியிருந்த கட்டிடம் வந்து மீதி 75 தினாரை பெற்றுக்கொண்டபின் வண்டி பேப்பர்கள் என்னிடம் சமர்ப்பித்து விட்டு கிளம்பிப்போனான்.
ஆக, முதல் முறையாக 35 வயதில் சொந்த கார் வாங்கிவிட்டோம் என்ற பெருமிதம் எனக்கு. இரவு மணி பனிரெண்டை தாண்டினாலும் மனைவியை( Usharani Sridhar)) முன்னிறுக்கையில் அமர்த்தி வண்டியை ஸ்டார்ட் செய்தேன். 'ஏசியை போடுங்க' என அவசரமாக உஷா கேட்க 'ஏசி இல்லையாம்' என்றேன். அடுத்து 'ரேடியோ?' என அவள் கேட்க ' அதுவும் கிடையாதாம்'. 'சுத்தம்' என முனுமுனுத்தாள். 'இந்த வெலைக்கு கார் இப்பிடித்தான் இருக்கும்மா!. அல்பா ஸ்க்ராப் யார்டுல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் வாங்கிக்கிறலாம்'.
அதென்ன அல்பா ஸ்க்ராப் யார்டு? நகரை விட்டு சுமார் 15, 20 கி.மீ தள்ளியிருக்கும் புகழ் பெற்ற Aluminium Bahrain (ALBA) கம்பைனி அருகே மிகப்பெரிய, பழைய கார்கள் மற்றும் உதிரி பாகங்கள் கிடைக்கும் பிரம்மாண்டமான ஸ்க்ராப் யார்டு மிகவும் பிரசித்தம். நகரில் சாலை விபத்து நடந்து முடிந்து சில தினங்களில் வண்டிகளும் அதன் உதிரி பாகங்களும் அங்கே விலைக்கு வந்துவிடும். வசதி குறைவானவர்களும், சில உதிரி பாகங்கள் கிடைக்காத மெக்கானிக்குகளும் கட்டுசாத மூட்டையுடன் அங்கே பயனிப்பார்கள். அந்த வண்டிகளில் இருந்து எல்லா உதிரி பாகங்களையும் கழற்றி, குறைந்த விலைக்கு விற்றுவிட்டு எஞ்சிய கார்களை நசுக்கி ஸ்க்ராப் ஆக்கி சீனாவிற்கு ஏற்றுமதி செய்துவிடுவார்கள்.
ஒரு வெள்ளியன்று பாலக்காடு சுந்தரம் மாமா (மாமாஜி) மற்றும் கணபதியுடன் ( Ganapathi Subramanian) என் டாட்ஸன் வண்டியில் அங்கே போனோம். 'மிட்சுபிஷி'யில் ஸ்பேர் பார்ட்ஸ் சூப்பர்வைசரான மாமாஜி கணபதிக்கு மாமா முறை. தஞ்சாவூர் கணபதி அக்ரஹாரத்தை பூர்வீகமாகக்கொண்ட கணபதி எப்படி பாலக்காடு சாத்தபுரம் மாமாவுக்கு உறவுமுறை என்ற விளக்கம் இப்பதிவுக்கு அவசியமற்றது. மாமாஜியுடன் உட்கார்ந்தால் செம்ம அரட்டை தான். புள்ளி ஷெரிக்க லூட்டியானு. டாட்ஜ், க்ரைஸ்லர், ப்யூக் போன்ற உலகத்தரம் வாய்ந்த கார்களின் லக்னம், இருப்பு தசை மாமாஜிக்கு அத்துப்படி. ஜிதாஹ்வ்ஸ் பகுதியில் லேபர் காம்ப்பில் தனியறையில் தங்கி, தானே பொங்கி சாப்பிடும் மாமாஜிக்கு (60) காலை 4 மணிக்கெழுந்து குளித்துவிட்டு ஒரு மணி நேரம் பூஜை மற்றும் நாராயணீயம் அக்ஷரசுத்தத்துடன் சொல்லிவிட்டு விபூதி பட்டையுடன் 6 மணிக்கு வீட்டு வாசலில் கம்பெனி பஸ்ஸில் ஏறுவார்.
சரியான வெய்யில். பாலைவனத்தின் நடுவே எண்ணெய்க்கிணறுகள் மத்தியில் உள்ள அந்த ஸ்க்ராப் யார்டு கேட்டை மலையாளி ஒருவன் திறந்தான். 'ஏது மாடலானு?' என அவன் கேட்க, மாமாஜி.. '1979.. டாட்சன்.. ச்சிறிய பார்ட்ஸ் உண்டெங்கில்' என இழுக்க, அவன் ' ஓ! டோட்ஸன்! என்றபடி சிகரெட்டை தூர எறிந்து, காரி எச்சிலையும் துப்பிவிட்டு, ஸ்பானர் ஒன்றை எடுத்துக்கொண்டு 'ஆவ்' (ஹிந்தி) என முன்னே விரைந்தான். 'காடி உதர் ஹெ.. பசந்து ப்ரோ' என கை காட்டினான்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் மாடல்வாரியாக நிறுத்தப்பட்டிருந்தன. பழைய பென்ஸ், லெக்ஸஸ் கார்களைத்தாண்டி ஏதோ ஒரு கோடியில் ஆக்ஸிடென்ட் ஆகி உருக்குலைந்த பழைய டாட்ஸன் ஒன்றின் முன் நின்றோம். சற்றுநேரம் முன்னர்தான் ரௌடிகளால் மானபங்கப்படுத்தப்பட்ட 'அரங்கேற்றம் பிரமிளா' மாதிரி நின்றுகொண்டிருந்தது அந்த வண்டி. பாதி பாடியை காணோம் (வண்டிக்கு!). மலையாளியும் வண்டியை ப்ரதட்சனமாக சுற்றி வந்து 'பசந்து கரோ' என கேட்க, 'யார்ரா இவன்! பொழுதன்னைக்கும் பசந்து கரோ.. பசந்து கரோ..ன்னுகிட்டு' என மாமாஜி முனுமுனுத்தார்.
'டிக்கி லாக்' வேணும் என நான் சொன்ன மறு நிமிடம் சுத்தியால் லொடக்கென பிரமிளாவின் இடுப்பில் ஒரு போடு போட்டு டிக்கி லாக்கை உடைத்து கழற்றி, 'கழிஞ்ஞு..பின்னே.. பர?' என அவன் என்னைப்பார்க்க, நான் சுயம்வரத்தை தொடர்ந்தேன். சில பேரிங்குகள், சிறிய காய்ல், ஹார்ன், எக்ஸ்ட்ரா வைப்பர்கள் என எல்லா உதிரி பாகங்களையும் அவன்ஒரு ஷாப்பிங் பேக்கில் போட்டுக்கொடுக்க, சம்பாவனை மாதிரி பெற்றுக்கொண்டேன். எல்லாம் ஒரொரு தினார் தான் (அப்போ சுமார் 70 ரூபாய்).
அடுத்து என் புதுவண்டி டாஷ்போர்டில் ஸ்பீடாமீட்டர் வேலை செய்யாததால் அது மட்டும் அந்த பழைய வண்டியிலிருந்து கழட்டித்தர முடியுமா என கேட்டேன். பழைய வண்டிகளின் ஸ்பீடோமீட்டர் தனியாக கழட்ட முடியாதாம். தீர்க்கமாக சொன்னான் மலையாளி..'முழு டாஷ்போர்டு தன்னே கிட்டும்.. கொழப்பல்லா? ' என கேட்ட கையோடு மஞ்சுளா மேல் படரும் அசோகன் மாதிரி டாஷ்போர்டில் அப்படியே சாய்ந்து பத்தே நிமிடத்தில் அதை கழற்றி என் முன் வைத்து, சிகரெட்டை பற்றவைத்தான்.
'இந்த பார்ட்ஸையெல்லாம் அடுத்த வாரம் வெள்ளிக் கெழமை போய் காராஜ்ல குடுத்து வண்டியில ஃபிட் பண்ணிக்கலாமா மாமா?' என நான் கேட்க, உடனே மாமாஜி ' ஏன்.. இப்ப சுந்தரகாண்டம் படிக்கப்போறியா' என கேட்டார். பக்கத்திலிருந்த கணபதி விழுந்து விழுந்து சிரித்தான். 'இப்ப மணி ஒன்னு தானே! உச்சிக்கி மூனு மணிக்குள்ளாற முடிச்சுடலாம்' என மாமாஜி என்னை நேராக குதேபியா பகுதியில் பங்களாதேஷி (பங்காலி) ஒருவனிடம் கூட்டிப்போனார்.
அந்த பங்காலி என் கார் டிக்கியிலிருந்து ப்ரௌன் கலர் டாஷ்போர்டை வெளியே எடுக்கும்போது தான் கவனித்தோம், என் கார் உள்ளே எல்லாம் கருப்பு. சற்றும் மனம் தளறாத விக்கிரமாதித்தன் மாதிரி அவன் அடுத்த நிமிடம் ஏதோ ஸ்விட்சைத்தட்டி 'பூஊஊம்' என்ற சத்தத்துடனான ஸ்ப்ரேயரை கையில் எடுத்து சின்ன புலியாட்டம் ஒன்று ஆடி டாஷ்போர்டிற்கு கருப்பு கலரடித்து முடித்தான். சில நிமிடங்களில் காய வைத்து வண்டியில் மாட்டி ஸ்பீடாமீட்டரையும் ஆட்டிக்காட்டினான் கில்லாடி பங்காலி. சொற்பத்தொகையை மட்டுமே வசூலித்து அரங்கேற்றம்-பிரமீளாவை தங்கப்பதக்கம்-பிரமிளாவாக ஆக்கினான். ஆக 1979 மாடல் டாட்ஸன் 120Y தயார்.
அடுத்த ஒரு வருடம் முழுக்க அந்த வண்டிக்கு செம்ம மவுசு. நண்பர் Mohan Gopal Krishnan மற்றும் Lakshmi Mohan குழந்தைகள் சகிதம் பஹ்ரைன் முழுக்க டாட்ஸனில் சுற்றினோம். யாருமே விரும்பாத நீலக்கலர் வண்டி அந்த தொகுதியில் என்னுடையது மட்டுமே. சில பார்ட்டிகளில் யாராவது நண்பர்கள் 'ஶ்ரீதர்! உங்க வண்டி எது' எனக்கேட்க, அதோ என நான் காட்டிய திசையைப்பார்த்து லேசாக வழிந்து மனதிற்குள் 'அய்யிய்யே! இந்த வண்டியா!' என அவர்கள் நினைப்பது அப்பட்டமாகத்தெரிந்தது.
மெதுவாக, மாத வாடகை மாதிரி தனியாக ஒரு தொகையை கனிசமாக விழுங்கியது அந்த வண்டி. ஒவ்வொரு ரிப்பேருக்கும் மனைவியிடமிருந்து அர்ச்சனை. அவளுக்கு ஒரு ஸ்கூலில் புது வேலை கிடைத்து, முதல்நாள் அவளை ட்ராப் செய்ய நாங்கள் டாட்ஸனில் ஜாலியாக ஹைவேயில் போய்க்கொண்டிருக்க, 'டமார்' என பெருஞ்சத்தம். 'பாவம்..பின்னால எவனுக்கோ டயர் பஞ்சர் போல' என அலட்சியமாக நான் கியரை மாற்றும்போது கடகடவென என் வண்டியில் சத்தம். பக்கத்து வண்டி க்ரௌன் விக்டோரியாக்காரர் என்னை புழு மாதிரி பார்த்து என் சக்கரத்தை காட்டிவிட்டுப்போனார். இறங்கி ஜாக்கியை கீழே வைத்து கடகடவென சுற்றி வண்டியை மேலே உயர்த்தி, பங்ச்சர் ஆன வீலை கழற்றி, + வடிவ ஸ்பானரை சக்கரத்தில் மாட்டி அதன் மேல் ஏறி நின்று போல்ட் நட்டை டைட் செய்து, ஒரு வழியாக உஷாவை ஸ்கூலில் இறக்கிவிட்டு ஆபிஸ் விரைந்தேன். முதல் முறையே வெற்றிகரமாக ஸ்டெப்னி மாற்றி, மாமாஜியின் பாராட்டும் கிட்டியது.
அந்த ஒரு வருடத்தில் 'எக்ஸாஸ்ட்' உடைந்து சல்லிசான 'சவுதி' மேக் வாங்கி மாட்டினேன். ரேடியேட்டர் தெறித்து தொறதொறவென தண்ணீர் ரோடெல்லாம் கொட்டி என் குலத்தையே திட்டினான் பின்னால் வந்த சிறிலங்கன். பாட்டரி டவுனாகி ஜம்ப்பர் மாட்ட மற்ற கார்களை பார்த்து ரோட்டில் உஞ்சவிருத்தி செய்தேன். நெம்பர் ப்ளேட் கலர் வெளிறி, ட்ராஃபிக் பாஸ்ஸிங் போகும் முன் மார்க்கர் பேனாவினால் நம்பருக்கு கலர் அடித்தேன்.
'முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா' பாடிக்கொண்டு 60 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டு 'பர்த்டே பார்ட்டீல மத்த பசங்களை அடிக்கக்கூடாது.. சமத்தா இருக்கனும்.. புரிஞ்சுதா? ' என பின் சீட்டில் இருக்கும் என் 3 வயது பையனுக்கு அட்வைஸ் கொடுத்தபடி கழுத்தை திருப்பி பார்த்தால் பின் கதவு 'பா'வென திறந்திருந்தது. அடிச்சுப்புடிச்சு வண்டியை நிறுத்தி, ஓடிப்போய் கதவை சாத்தினேன். (சில வண்டிகள்ல சைல்ட் லாக்னு ஒன்னு இருக்காமே என மனைவி அவ்வப்போது புலம்பிக்கொண்டிருந்தாள்). சிக்னலில் நிற்கும்போது பக்கத்து வண்டி அரபி ஒருவன் 'for sale?' என கேட்டு வெறுப்பேற்றினான்.
ஒரு நாள் சடன் ப்ரேக் போடும்போது கால் தரையைத்தொட அலறிக்கொண்டு உம்மல்ஹாசம் கராஜ் ஜோர்ஜிடம் ஓடினேன். 'உன் வண்டிக்கு ஹைட்ராலிக் ப்ரேக் இல்லை. அதனால் பம்ப் பண்ணி தான் ப்ரேக் போடனுமென்றான். அப்படீன்னா? 'ஏது ஸ்தலத்தில் சடன் ப்ரேக் போடனுமோ அதற்கு கொஞ்ச தூரம் முன்னால் 'புஸ்க் புஸ்க்'னு 2,3 தடவை ப்ரேக்கை பம்ப் செய்யுங்கில் டைட் ஆகும், பின்னே ப்ரேக் பிடிக்கும்' என்று சொன்னவனை ஆலிங்கனம் செய்து கழுத்தை அப்படியே கடிக்கலாம் போலிருந்தது. வண்டியை விற்க முடிவு செய்தேன், மனசே இல்லாமல்.
அருமையான இஞ்சின். நல்ல மைலேஜ். சின்ன சின்ன ரிப்பேர்களானாலும் மன உளைச்சல், அதிக செலவு. 'வண்டி என்னா ஸ்மூத் பாரு' என யாராவது சொன்ன மறுநாளே 50 தினாருக்கு மொய். வண்டியை விற்க '4 sale' போர்டு மாட்டிய சில தினங்களில் பாகிஸ்தானியர்கள் ஓநாய் மாதிரி வண்டியை சுற்றிச்சுற்றி வந்து குசலம் விஜாரித்தார்கள். அவர்கள் கேட்ட விலை எனக்கு அழுகையை வரவழைத்தது. பனைமர உசர பலூச்சி ஒருவன் கூசாமல் 80 தினாருக்கு ( சுமார் 6000 ரூபாய்) கேட்டு கடைவாய்ப்பல் மட்டும் தெரிய விஷமப்புன்னகை புரிந்தான்.
கடைசியில் 175 தினாருக்கு உ.பி. பய்யா ஒருவனுக்கு வண்டியை தள்ளிவிட்டு, சோகத்துடன் ட்ராஃபிக் டைரக்டரேட்டில் அவன் பெயருக்கு வண்டியை மாற்றிக்கொடுத்து, பித்ரு ஸ்ரார்த்தம் முடித்துவிட்டு அம்மா மண்டபத்திலிருந்து ஈர வேட்டியைடன் திரும்பி வருவதுபோல வீடு வந்து சேர்ந்தேன், கனத்த மனதுடன்.
சமீபத்தில் இந்தியாவில் முதன்முறையாக நீலக்கலர் டாட்ஸன் கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 20 வருடங்களுக்கு முன் பஹ்ரைனில் நான் ஓட்டிய அதே நீலக்கலர் டாட்ஸன் மற்றும் வண்டியை பராமரிக்க உதவிய மாமாஜியின் நினைவுகள் மனதை இதமாக வருட, உடனே இப்பதிவு...
பி.கு: பதிவைப்படித்த பிறகு இன்று மாமாஜியின் பிறந்தநாள் என்ற உபரி தகவலை ஆருயிர் நண்பன் கணபதி கொடுக்க, மெய் சிலிர்த்தது எனக்கு.

No comments:

Post a Comment