காலை 6 மணிக்கு மேல் எங்கள் ஃப்ளாட்டில் தூங்க முடியாது. ஃப்ளாட்டிற்கு பின் பக்கம் கடகடவென சத்தத்துடன் செம்பூரிலிருந்து மான்குர்ட் செல்லும் மின்சார ரயில்கள். பால்கனியில் நின்றுகொண்டு பார்த்தால் மக்கள் அவசரமாக ரயிலைப்பிடிக்க ஓடுவது தெரியும். தூரத்தில் இடுப்பில் துண்டுடன் தண்டவாளத்தை கடந்து பொதுக்குளியறை நோக்கிச்செல்லும் மராட்டிய இளைஞர்கள்...தண்டவாளத்திற்கு இருபுறமும் அடர்ந்த ஜோப்பர்பட்டி குடிசைகள்.
மெல்ல அறை நண்பர்கள் தூக்கத்திலிருந்து ஒவ்வொருவராக எழுந்து கொள்ள, படுக்கையிலிருந்தவாறே முதல் நாள் 12 மணிக்கு விட்ட ஆபிஸ் கதைகளை மீன்டும் தொடர்வோம். அதில் ஒருவர் பெயர் ஜெய். 'என்ன மாஷே! நல்ல தூக்கமா?' ('மாஸ்டர் என்பதன் சுருக்கம் 'மாஷே') என விசாரிப்பபார்.
அவருக்கு கன்னியாகுமரி பக்கம் மணவாளக்குறிச்சி. பாதி மலையாளம் கலந்த தமிழ்.
'தூங்கலாமா' என்பதை 'கெடந்துறங்கலாமா' என்பார். 'என்ன பண்றீங்க' எனக்கேட்டால் 'சுகம்மா கெடக்கேன்' என பதில் வரும். 'வெளிய கெளம்ப ரொம்ப 'மடியா' (சோம்பேறித்தனமாம்) இருக்கு', 'குட்டிப்பட்டி' (நாய்), 'மாஷே! அழகான சுண்டு(உதடுகள்) அவளுக்கு'... என அவர் தமிழ் பேசக்கேட்க இனிமையாக இருக்கும். கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இஞ்சினீயராக இருந்தார்.
'தூங்கலாமா' என்பதை 'கெடந்துறங்கலாமா' என்பார். 'என்ன பண்றீங்க' எனக்கேட்டால் 'சுகம்மா கெடக்கேன்' என பதில் வரும். 'வெளிய கெளம்ப ரொம்ப 'மடியா' (சோம்பேறித்தனமாம்) இருக்கு', 'குட்டிப்பட்டி' (நாய்), 'மாஷே! அழகான சுண்டு(உதடுகள்) அவளுக்கு'... என அவர் தமிழ் பேசக்கேட்க இனிமையாக இருக்கும். கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இஞ்சினீயராக இருந்தார்.
சுமார் 7 மணி வாக்கில் லுங்கியுடன் ஃப்ளாட்டுக்கு வெளியே வந்து செம்பூர் கொவான்டி ரோட்டில் நடப்போம். செம்பூர் ஸ்டேஷனிலிருந்து ஆறாவது கட்டிடத்தில் தான் தங்கியிருந்தோம். எதிரே உ.பி. பையா கடையில் இஸ்திரி போட சட்டை, பாண்ட்டை கொடுத்துவிட்டு அருகே செம்பூர்புவன் ஹோட்டலில் சாய் குடித்த பின், அயர்ன் செய்த உடைகளை திரும்ப வாங்கிக்கொண்டு ஃப்ளாட்டுக்கு திரும்புவோம்.
செம்பூரில் எக்கச்சக்கமாக தமிழ் பிரம்மச்சாரிகள். மாலை ஜீவன் மெஸ் போனால் அங்கே நண்பர்கள் எல்லோரையும் பார்க்கலாம். கன்னடக்காரர்கள் நடத்தும் மெஸ். நாலறை ரூபாய்க்கு தாலி. இரண்டு சப்பாத்தி, சுக்கா பாஜி, சாம்பார், ரசம், ராய்த்தா, அரிசி, கட்டோரியில் தயிர். கல்லாவின் அருகே மற்றொரு மங்களூர்க்காரன் நாலுக்கு இரண்டடி (அவன் நிற்பதே கடைக்கு வெளியே தான்) கல்கத்தா, பனார்ஸி பான் பீடா சிகரெட் கடை வைத்திருப்பான். கடையின் பக்கவாட்டில் தொங்கும் கயிற்றின் நுனியில் நெறுப்புக்கங்கு. கை விரல்களுக்கிடையே ஃபோர்ஸ்கொயர் மற்றும் வில்ஸ் ஃபில்டருடன் பெருவாரியான நண்பர்கள் சந்திக்கும் இடம் அது.
ஜெய்க்கும் எனக்கும் ஓரே வயது. ஒரே மாதிரி சராசரி உயரம். தலைமுடி ஸ்டைலில் அதிக அக்கறை, உடையலங்காரத்தில் நாட்டம், பிடித்த காலணிகள் வாங்குவது, விதவிதமான உடைகள் அணிவது, பெண்களைப்பற்றி நிறைய பேசுவது (அப்போ 1987-90ங்க), இருவருக்கும் பிடித்த நடிகை நிரோஷா, நிறைய தமிழ் சினிமா பாடல்கள் கேசட் வாங்குவது, Steve Winwood இன் Arc of the diver பாடலை வெறித்தனமாக கேட்பது, எக்ஸெல்ஸியர் சினிமாவில் பாட்ரிக் ஸ்வேய்ஸின் dirty dancing படம் பார்ப்பது, கோவிந்தாவின் ஆடலை ரசிப்பது, ஞாயிரன்று பாத்ரூமை ஆக்கிரமித்து ஜீன்ஸ் மற்றும் டீஷர்ட்டுகளை 'வர்ரக்..வர்ரக்' என ப்ரஷ்ஷால் தோய்ப்பது, செம்பூர் ஸ்டேஷன் எதிரே உள்ள கடையில் சமோசா சன்னா மற்றும் சாய் அருத்துவது, கீதா பவனில் தவறாமல் ஞாயிறன்று பொங்கல் அவியல், பைனாப்பிள் தோசா மற்றும் சரோஜ் ரெஸ்ட்டுரன்ட்டில் காஜர் ஹல்வா சாப்பிடுவது..காசிருந்தால் ஆசிஷ் தியேட்டரில் படம்.. காசில்லையென்றால் செம்பூர் ரயில்வே ட்ராக் தாண்டி ஜோப்பர்பட்டி தகர வீடுகளில் தின்னவேலி அன்னாச்சிகள் நடத்தும் வீடியோ சினிமா(புதிய பாதை, சிப்பிக்குள் முத்து..), படம் முடிந்து ஸ்டேஷன் ரோட்டோரத்தில் பரோட்டா குருமா, எக்புர்ஜி...ஞாயிரன்று செம்பூரிலிருந்து கிளம்பி மங்களூரியன்ஸ் அதிகம் வசிக்கும் பான்டிரா லிங்க்கிங் ரோட்டில் ஜீன்ஸ், டீஷர்ட் ரோட்டோரக்கடையில் வாங்குவது, சிவாஜி பார்க், வொர்லி சித்தி விநாயக் டெம்பிள், பாம்பே சென்ட்ரல் கிராண்ட் ரோடு சர்தார்ஜி கடையில் பாவ்பாஜி ( திக்கா கம்..மஸ்கா ஜ்யாதா பாய்!) எதுவுமே இல்லையென்றால் செம்பூர் டைமண்ட் கார்டன், வரும் வழியில் அகோபில மடம்... பிரம்மச்சாரிகளுக்கு நேரத்தை போக்க சொல்லியா தரவேண்டும்!
பிறகு 20th ரோடுக்கு வீடு மாறி அங்கே சில வருடங்கள். என்னுடன் பாம்பே நாட்களை கழித்த கணபதி (Ganapathi Subramanian ) மற்றும் சந்துருவுக்கும்(Balasubramaniam Chandrasekaran) ஜெய் பரிச்சயமானவர்.
திருமணமாகி அடுத்த இரு வருடங்களில் நான் பஹ்ரைன் வந்துவிட ஜெய்யும் ஓரிரு வருடங்களில் பஹ்ரைன் வந்து விட்டார். அவருக்கும் திருமணமாகி ஒரே பையன். தொடர்ந்தது எங்கள் நட்பு..குடும்பங்களுடன்.
நல்ல வேலை வாய்ப்புடன் ஜெய் துபாய் பக்கம் போக எங்கள் சந்திப்பு கடந்த பத்து வருடங்களாக வெறும் தொலைபேசியில் மட்டும்.
நல்ல வேலை வாய்ப்புடன் ஜெய் துபாய் பக்கம் போக எங்கள் சந்திப்பு கடந்த பத்து வருடங்களாக வெறும் தொலைபேசியில் மட்டும்.
சென்ற மாதம் அலுவல் பணி நிமித்தம் நான் துபாய் போகவிருந்ததால் இவருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் மறுநாள் டின்னருக்கு கராமா பகுதியில் அவரது இல்லத்தில் சந்திப்பதாக முடிவானது.மாலை ஏழு மணிக்கு ஜப்லாலியிலிருந்து தனது பெரிய்ய்ய்யய ஃபோர்டு எக்ஸ்ஃப்ளோரரில் அல்பர்ஷா வந்து நான் தங்கியிருந்த நோவோடெல் ஹோட்டலில் பிக்கப் செய்ய வந்தவரை பார்த்ததும் அதிர்ச்சி. தலைமுடி, மீசை கலரடிப்பதை நிறுத்திவிட்டாலும் இளமை குன்றாத அதே முகம். மனைவி அம்பிலி சிட்டி பாங்க்கில் ஜோலி. சீக்கிரமே வீட்டிற்கு வந்து அருமையான இரவு உணவு தயாரித்திருந்தார்.
பழைய செம்பூர் நாட்களைப்பற்றி நேரம் போவது தெரியாமல் பேசிவிட்டு இரவு பதினோரு மணிக்கு திரும்ப என்னை ஹோட்டலில் இறக்கிவிட்டு விடைபெற்றுக்கொண்ட ஜெய்யை சில விநாடிகள் உற்றுப்பார்த்தேன்.. அதே வெகுளியான முகம்.. ( அப்பிடியே இருக்கீங்க மாஷே!)
பையன் அடுத்த வருடம் MBBS முடிக்கிறானாம்
No comments:
Post a Comment