திருச்சி ஜீயபுரம் பகுதியில் இருந்து எனது பள்ளிப்பருவ சக மாணவர்கள் தினமும் பஸ்ஸில் வருவார்கள். திருச்சியின் சிறப்பு என்னவென்றால் நகரை விட்டு (சத்திரம் பஸ் ஸ்டாண்டை விட்டு) 2,3 கிலோ மீட்டரை தாண்டியதும் முழுக்க கிராமிய மணம் தான்.
ஜீயபுரம், முத்தரசனல்லூர், அல்லூர், கம்பரசம்பேட்டை, வாளாடி, லால்குடி, பேட்டவாய்தலை (அம்மன் கோவில்), குணசீலம்(ஆஞ்சநேயர் கோவில்), சமயபுரம், மன்னச்சநல்லூர், திருப்பளாய்த்துரை....
சின்ன வயதில் எனது அம்மா ..'குறும்பு செஞ்சே.. ஒன்ன திருப்பளாய்த்துரை ஹாஸ்டல்ல விட்டுடுவோம்.. அங்க உனக்கு மொட்ட அடிப்பாங்க.. கக்கூஸ நீ தான் கழுவனும்.. காலைல நாலு மணிக்கு எழுப்புவாங்க' போன்ற மிரட்டல்கள் நினைவுக்கு வந்தது...
நிறைய கிராமங்கள். பச்சை பசேலென வயல்கள், ஒருபுறம் நம் கூடவே பயணிக்கும் காவிரி அல்லது கொள்ளிடம்..பஸ்ஸிலிருந்து திரும்பி பார்த்தால் எப்போதும் தெரியும் மலைக்கோட்டை, மறுபுறம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்..
பஸ்ஸில் பயணிக்கும்போது ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நாம் பார்க்கும் இளநீர், நுங்கு விற்பவர்கள், ரோட்டை ஒட்டிய சிறிய குடிசை வீடுகள், வீட்டு வாசலில் கயிற்று கட்டிலில் பெருசுகள், பக்கத்தில் கட்டப்பட்ட சிறிய ஆடுகள்,பாய்லரில் டீ மற்றும் போண்டா, வடையோடு கூடிய டீ கடைகள், அருகே பரோட்டா ஸ்டால், நடுநடுவே wine ஷாப்புகள், பூக்கடை, திடீரென்று ஒரு பிள்ளையார் கோவில், அதை அடுத்து 'குமரிக்கோட்டம் -MGR படத்துடன் சினிமா கொட்டகை, ராஜா பல் மருத்துவமனை, லக்ஷ்மி மருந்தகம்.... அடடா கிராமத்து அழகே தனி..ஒரு மணி நேர பயணத்தை மிகவும் ரசித்தேன்.
ஒரு வழியாக நாம் போக வேண்டிய அல்லூர் வந்து சேர்ந்ததும் மெயின் ரோட்டில் இருந்து 50 மீட்டர் தாண்டினால் அக்ரஹாரம். கோடியில் பெருமாள் கோவில். கோவிலுக்கு இரு புறமும் வீடுகள்.
திருச்சி ICWA சாப்ட்டரில் கூட படித்த நண்பன் வீடு அதில் ஒன்று. கீழே வீடு..மாடியில் ஒரு ரூம். போனவுடன் ஒரு தம்ளரில் மோரு கொடுத்தார்கள். ஜில்லென்று தொண்டைக்கு இதமாக இருந்தது. நண்பனின் அம்மா, அப்பா மற்றும் பாட்டி எல்லோரும் அன்புடன் வரவேற்க ' ஸ்ரீதர் இப்போ பாம்பேல வேல ' என்று சம்பிரதாயங்களுக்கு பின் நாங்கள் மாடியில் பேசிக்கொண்டிருந்தோம்.
மாலை..கீழே இருந்து 'அண்ணா காபி ரெடி!' என்ற தங்கையின் குரல் கேட்டு நண்பன் கொண்டுவந்த காபி அருமை. 'இந்த தடவையும் 2nd க்ரூப் போய்டுத்து.. பயோ டேட்டா தர்றேன்.. பாம்பேல எனக்கும் கொஞ்சம் டிரை பண்ணுடா..அப்பா பென்ஷன் பத்தாது, தங்கை வேற இருக்கா.' நண்பனின் தொண்டை லேசாக கரகரத்தது.
நிறைய பேசிக்கொண்டிருந்த எங்களுக்குள் திடீரென கொஞ்சம் நேரம் மௌனம் ..
மாலை விடை பெற்று கிளம்பும்போது நண்பனின் அம்மா, தங்கையின் முகங்களில் ஒரு ஏக்கம்..கெஞ்சல்.. எதிர்பார்ப்பு... மெயின் ரோடு வரை நண்பன் கூட வந்து, பிறகு பஸ் வந்ததும் விடை பெற்றுக்கொண்டோம்.
படிக்கும்போது இருந்த அந்த குறும்பான பேச்சு, சிரிப்பு , கிண்டல் எல்லாவற்றையும் அவன் தொலைத்திருந்தான்.
பஸ்ஸில் திருச்சி திரும்பும்போது நான் அந்த கிராமத்து ரோட்டோர கடைகளை மறுபடியும் ரசிக்கவில்லை.....
I enjoy Trichy's surroundings like this when I go to Valady and Angarai. Touching end for the story. Is your friend now in good position?
ReplyDeleteThks for your comment.. By God's grace he should be in a good position I believe.
ReplyDelete