செம்பூர்…
1986இல் செம்பூர் ஸ்டேஷன் அருகே திருமூர்த்தி பில்டிங்கில் கணபதி Ganapathi Subramanian தன் ஒன் பெட்ரூம் கிச்சன் ஃப்ளாட்டில் என்னை சேர்த்துக்கொண்ட அன்றே எதிர் பில்டிங்கிலிருந்து வீட்டு ஓனர் மாமி (85) வந்துவிட்டார். மற்ற ரூம்மேட்கள் குளித்தலைக்காரன் கிருஷ்ணரத்தினம் (பாங்க் ப்ரேபஷனரி ஆபிசர்) மற்றும் ஏ.எஃப். ஃபெர்கூசனில் வேலை பார்க்கும் திருவானைக்காவல் சி.ஏ நாகராஜன் இருவரும் இருந்தார்கள். மாமி படு ஸ்ட்ரிக்ட். சமையல் அலௌடு கிடையாது. கிச்சனை பூட்டி வைத்துக்கொண்டு ஒரு ரூம் தான் வாடகைக்கு. திடீரென கதவை தட்டி வீடு சுத்தமாக உள்ளதா என பார்ப்பார்கள்.
‘இவந்தானா அந்த புதுசா வந்தவன்? ஏன்டா! நோக்கு எந்த ஊரு?’ என சற்று அதட்டலுடன் மாமி என்னை கேட்க அவசரமாக மற்றவர்கள் ‘இவனும் நம்ம திருச்சி தான் மாமி!’ என பயந்தபடியே சொல்ல, ‘அப்பாடா! மாமி இனி ஒன்னும் கேக்க மாட்டாங்க’ என நினைக்கும் முன் அடுத்ததாக மாமி ஸ்ட்ரெய்ட்டாக ‘ஏன்டா நீ கவிச்சி சாப்பிடுவியா?’ எனக்கேட்க மற்ற மூவரும் ஏக காலத்தில் ‘இல்ல மாமி’ என சொல்ல, அந்த சத்தத்தில் என்னுடைய பதில் அமுங்கிப்போனாலும், அவர்களை விட பெரிய வாக்கியமாக என் பதில் தனியாக ‘ஆம்லெட்’ என்ற வார்த்தையுடன் துல்லியமாக கேட்டது. நல்ல வேளை மற்றவர்கள் எதையோ சொல்லி சமாளித்தார்கள். ‘ஆம்லெட்ன்னா என்னன்னே மாமிக்கு தெரியாது’ என விளக்கிய நாகராஜன், ஏ.பி. நாகராஜனுக்கு ஆப்போசிட். கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி என மறுநாள் தெரிந்தது.
க்ரௌண்ட் ஃப்ளோரில் கிருகிருப்பா ஸ்டோர் (குரு க்ருபா) வைத்திருக்கும் நாயக் என்ற மராட்டிய குடும்பத்தில் தற்போதைய மல்லு நடிகை பாவனா போல ஒரு பெண் இருந்தாள். லூசான டீஷர்ட்டை அடிக்கடி இழுத்து விட்டுக்கொள்வாள். சிட்னம் காலேஜாம். துச்சமாக எங்களை பார்ப்பாள். தூரத்தில் வரும்போதே என்னையும் நாகராஜனையும் பார்த்த மாத்திரத்தில் ரோட்டை க்ராஸ் செய்து அவள் அந்தப்பக்கம் போக, சட்டென நாகராஜனும் ரோட்டை க்ராஸ் செய்து அவளுக்கு நேர் எதிரே போவான், கையில் வில்ஸ் ஃபில்டருடன். மூன்று வருடங்கள் முன்பு அவனை ஒரு திருமணத்தில் சந்தித்தபோது அந்த நாயக் பாவனா பற்றி பேசி சிலாகித்தோம்.
திரும்ப செம்பூர்! காலை செம்பூர் கீதா பவனில் டிபன் கட்டுப்படியாகவில்லை என்பதால் ப்ரெட் பால் என சுறுக்கமாக முடித்தேன். பக்கத்து கட்டிடம் செம்பூர் பவனில் டீ குடிப்போம். நட்ராஜ் சினிமா (மே னே ப்யார் கியா) அவ்வப்போது போவதுண்டு.
ரூம் மேட்கள் வேலை, ஜாகை மாறிவிட, புதிய அறை நண்பர்களுடன் 20யெத் ரோட்டுப்பக்கம் நானும் மாறினேன். ஸ்டேஷன் அருகே பாரில் குளிர்ந்த கல்யாணி பீர், சைட் டிஷ்சாக மசாலா பாப்பட் ரொம்ப பிரசித்தம். மேற்பரப்பில் பனித்துளிகளுடன் செம்பட்டை கலர் பாட்டிலின் கிரீட மூடியை ப்ஸ்ஸ்ஸெக்! என திறந்து கண்ணாடி க்ளாசினுள் கவிழ்த்து, உள்சுவற்றில் தேய்த்தபடி நுரையை மேலெடுத்து வந்து கடைக்காரன் நிறுத்த, முதல் சிப்பில் எல்லோருக்கும் ஜெயகாந்தன் நுரை மீசை. ஆ..ஊ.. என்றால் நண்பர்களுக்கு ட்ரீட் அங்கே தான்.
அடுத்த நாலைந்து கடைகள் தாண்டி ஜீவன் மெஸ்ஸில் இரவு சாப்பாடு. கொந்துரு (கோவைக்காய்) சப்ஜி, ஃபுல்க்கா, சின்ன கட்டோரியில் தயிர், சாதம், சாம்பார், அப்பளம் என திவ்யமான சாப்பாடு நாலு ரூபாய்க்கு வயிராற உண்ட பேச்சிலர்கள் வெளியே தொங்கும் கயிற்று நுணி நெருப்பு கங்கு ஜிவ்வென ஒளிர, சிகரெட் பத்த வைப்பார்கள்.
ஸ்டேஷன் வாசலில் சத்குரு ஜூஸ் சென்டர் முன் இரவு 12 மணிக்கும் கூட்டம். மாருதி 800 பானெட்டின் மேல் உட்கார்ந்தபடி மோட்டா சர்தார்ஜிகள் பாவ்பாஜி மற்றும் பியர் மக்கில் மொசாம்பி ஜூஸ். பக்கத்தில் நிற்கும் பஞ்சாபி ஸ்லீவ்லெஸ் பெஞ்சாதிகளுக்கு வாடிலால் குல்ஃபி.
கொஞ்சம் தள்ளி ஒரு ஃபாட்டக்கின் (மேம்பாலம்) கீழே எப்போதும் அடர்த்தியான கூட்டத்துடன் கடைகள். டூப்ளிகேட் சாவி செய்யும் சாயபு மற்றும் பச்சைக்கலர் பாலக் பஜியா கடைகளைத்தாண்டி ரயில் தண்டவாளம் கடந்து செட்டா நகர் போக வேண்டும்.
டயமண்ட் கார்டனுக்கு நண்பர்களுடன் போய், பாணிபூரி சாப்பிட்டு பக்கத்தில் அகோபில மடத்தில் பெருமாளை சேவிப்பது வாரம்தோரும்.
மேற்சொன்னதெல்லாம் 86 டு 94, கிட்டத்தட்ட 8 வருடங்கள்..
கடந்த நாலைந்து நாட்களாக பெரியவனுடன் தீபாவளி கொண்டாட செம்பூர் சென்றிருந்த நாங்கள் அதே டயமண்ட் கார்டன் அருகே அவனது ஃப்ளாட்டில் தங்கினோம். இந்தப்பக்கம் அகோபில மடம். அந்தப்பக்கம் சிருங்கேரி சாரதாம்பா கோவில்.
செம்பூர் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போயிருந்தோம். குளுகுளுவென மரங்கள். ஏராளமான ரோட்டுக்கடைகள். ஆட்டோ ஸ்டாண்ட், நட்ராஜ் சினிமா மற்றும் போலீஸ் சௌக்கி இப்போதும்.
சத்குரு ஜூஸ் & பாவ் பாஜி செண்டர் இப்போது சத்குரு வெஜ் டிலைட் உணவகம். தற்போது சர்தார்ஜியின் பையன் ஏறி உட்கார்ந்தாலும் கார் பானெட் சப்பையாகி இஞ்சின் சூட்டில் கீழே பாவ் போல பழுத்து விடும்.
அந்த பார் & ரெஸ்ட்ருவன்ட்டை காணோம். கல்யாணி பீர் சட்டென மனதிற்குள் வந்துபோனது. Usharani Sridhar அடி பிண்ணி விடுவாள்.
கீதா பவன் அப்படியே இன்னும். அதே செம்பூர் பவனில் ஒரு கட்டிங் சாய் அடித்து பேடிஎம்மில் பே செய்தோம். ஜீவன் மெஸ் ஆரம்ப சுகாதார நிலையம் போல ஏதோ மூலையில் ஒடுங்கி இருக்க, பாலத்தின் அடியில் நிறைய ஆட்டோக்கள். சாவிக்கடை சாயபுகளின் பையன்கள் போலும், மெஷின் வைத்துக்கொண்டு டூப்ளிகேட் சாவி செய்கிறார்கள் இப்போது (வீடியோ பார்க்க)
கடைசியாக.. அதோ! திருமூர்த்தி பில்டிங். பொலிவை இழந்து பழைய கட்டிடமாக இருந்தது. ஓனர் மாமி 125ஆவது வயதை பித்ருலோகத்தில் கேக் வெட்டி கொண்டாடக்கூடும். அதே கிருகிருப்பா ஸ்டோர். கண்கள் நாயக் பாவனாவை தேடியது. அம்மணி இந்நேரம் பேரன் பேத்தி எடுத்திருப்பார்கள்!
No comments:
Post a Comment