திருச்சி மலைவாசல், ஆண்டா ஸ்ட்ரீட், பட்டர்வொர்த் ரோடு, ஶ்ரீரங்கம், மெயின்கார்ட்கேட் பக்கம் பேயறஞ்சாமாரி இளைஞர்கள் யாராவது நடந்து போய்க்கிட்ருந்தாலோ, எதிர்ல ஹோலிக்ராஸ் அல்லது எஸ்ஸார்ஸி காலேஜ் பொண்ணுங்க வந்தாகூட அவங்கள ஏறெடுத்து பாக்காம ஏதோ யோசனைல போய்க்கிட்ருந்தாலோ நீங்க சூடம் அடிச்சு சத்தியம் பண்ணலாம், அவனுங்க சீ.ஏ ஸ்டூடண்ட்ஸ்னு.
வியாழக்கிழமை ஶ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்துல ஒக்காந்துட்டோ அல்லது சனிக்கழமை கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் பிரகாரத்துல வெறிச்சுப்போய் உக்காந்துட்ருக்கற இளைஞர்கள பாத்தவுடனே நீங்க கான்ஃபிடென்ட்டா சொல்லலாம் அவனெல்லாம் சீஏ எக்ஸாம் எழுதறவனுங்கன்னு.
‘ஜீஸஸ் நெவர் ஃபெய்ல்ஸ்’ போர்டு கீழே எவனோ ஒருத்தன் ‘ஆஸ்க் ஹிம் டு ட்ரை சீஏ எக்ஸாம்’னு எழுதி வெச்சானாம்ங்கற ஜோக்கை யாராவது சொன்னா அத ரசிக்காம பதிலுக்கு அரங்கேற்றம் பிரமிளா போல விரக்தியா ஒரு சிரிப்பு சிரிச்சான்னாக்க அவன் பல யுகங்களா சீஏ படிக்கிறான்னு அர்த்தம்.
ஹைஸ்கூல்ல நல்லா படிச்சு சீஏ படிக்க சிலபேரும், நல்ல மார்க் எடுத்து இஞ்சினீயர், டாக்டர்னு மத்தவனுங்க போக, பிஎஸ்ஸி, பிகாம் படிச்சி பி.ஜி மேற்படிப்பு, எம்.ஃபில், லெக்சரர் வேலை, பாங்க் எக்ஸாம், இன்சூரன்ஸ், கவர்ன்மென்ட் ஜாப் எக்ஸாம்னு மத்தவனுங்களும் கெளம்பி போனாவுட்டு, கிராஜுவேட்டோட நட்டாத்துல விட்ட மாதிரி நிக்கும் மீதிப்பேர் எல்லாரும் ஐசிடபிள்யூஏ, சிஏல தான் வந்து விழுவானுங்க, பின்னால பேராபத்து ஒன்னு காத்திருக்குன்னு தெரியாம.
அப்பிடி என்னா கஷ்டம் இந்த சீஏ படிப்புல? ஒரு க்ரூப்புக்கு நாலு சப்ஜெக்ட்டுன்னு இன்டருக்கு 2 க்ரூப்பு, ஃபைனலுக்கு 2. ஆக மொத்தம் 4 க்ரூப்பு-16 பேப்பர். இன்டர் முடிச்சாத்தான் ஃபைனல். க்ரூப் க்ரூப்பாத்தான் எழுதனும். நாலு சப்ஜெக்ட்லயும் பாஸ் மார்க் 40 வாங்கி மொத்த மார்க்கும் 400க்கு 200 (50%) வாங்கனும், இல்லன்னா அந்த க்ரூப்பே ஃபெயில். எப்பிடியிருக்கு பாருங்க! நாலு பேப்பர்லயும் பாஸ், ஆனால் மொத்த மார்க் 198ன்னு ரெண்டே மார்க்குல கோட்டை விட்டா மறுபடியும் அந்த நாலு பேப்பரையும் எழுதனும். கிழிஞ்சது! சரி ஒழுங்கா படிச்சி அடுத்த அட்டெம்ட் மொத்தம் 210 (50%க்கும் மேல்) வாங்கி, ஆனா ஒரு சப்ஜெக்டுல 39 மார்க். ‘தம்பி நீ ஃபெயில், திரும்ப நாலு பேப்பரையும் எழுதுடா கண்ணா!’ம்பாங்க பாவிங்க.
நாமளே பிரைவேட்டா கோச்சிங் க்ளாஸ் போய் படிச்சிக்கனும். காலேஜ்னு இதுக்கு ஒன்னுமில்ல. கொஸ்டீன் பேப்பர்ல வர்ர கேள்விங்க எந்த புத்தகத்துலயும் வந்திருக்காது. ஒரு தடவ கேட்ட கேள்விங்க அடுத்தடுத்த பரிட்சைல 99% திரும்ப கேக்க மாட்டாங்க. நாங்க படிக்கிறப்ப அக்கௌண்ட்ஸ் பேப்பர்ல மொத கொஸ்டின் கம்பல்சரி, அதுவும் 40 மார்க். கொஸ்டின படிச்சி புரிஞ்சிக்கறதுக்கே அரை மண்ணேரமாகும். மொஸ்ட்லி புரியவே புரியாது. அப்பவே சில பசங்க இது வேலைக்காவாதுன்னு வெளிநடப்பு செய்வானுங்க. தம்பி! பரிட்சை ஆரம்பிச்சு ஒரு மண்ணேரம் கழிச்சு தான் வெளிநடப்பு செய்யலாம்னு ஒரு ரூல்ல அவன வெளியவும் விடமாட்டாங்க. அவம்போறத பாத்து உருப்படியா ஓரளவு பதில் தெரிஞ்சவனும் பிதாமகன் விக்ரம் மாதிரி தலைய சிலுப்பி, மெதுவா ஒவ்வொருத்தரா அபீட் ஆவானுங்க. ஆச்சு அடுத்த 6 மாசம் திரும்ப வெய்ட் பண்ணனும். இப்பிடியே வருசக்கணக்கா போகும்.
டிகிரீ கோல்ட் மெடல், அக்கௌண்ட்ஸ், மேத்ஸ்ல செண்டம் எடுத்தவன்னு யாரா இருந்தாலும் ஒரு உலுக்கு உலுக்கி எடுத்து தான் சிஏ முடிப்பாங்க. ஆல் இண்டியா ரேங்க், ஃபர்ஸ்ட் அட்டெம்ட் பாஸ்ஸுன்னு அதுபாட்டுக்கு ஒரு க்ரூப் தனியா போயிட்டே இருக்கும். எங்க காலத்துல நூத்துக்கு அஞ்சாறு பேரைத்தான் பாஸ் பண்ண விடுவாங்க. இப்பல்லாம் போய்த்தொலைன்னு 15 அல்லது 20 பேர தள்ளி விடறாங்க.
சிஏ படிக்கிறவனுக்கு இஞ்சினீயரிங் படிச்ச தம்பி இருந்தா தம்பிக்கு கல்யாணம் ஆகறது சந்தேகம் தான். இல்ல அவன் ஓவர்டேக் பண்ணிடுவான். சில செட்டியார் பசங்களுக்கு சிஏ முடிக்கறதுக்கு முன்னால் கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க. அவனால எதையும்… ஐ ரிப்பீட்.. எதையும் உருப்படியா செய்ய முடியாது.
நம்ம சுத்தி இருக்கறவங்க என்கரேஜ் பண்ணனும். ‘நீ சிஏ பாஸ் பண்றத பாத்துட்டு தான் நா சாவேன்’னு வீட்ல பாட்டி சொன்னா மோஸ்ட்லி பாட்டி சாவாது.
இதையெல்லாம் தாண்டி, கடுமையா உழைச்சு பாஸ் பண்றவங்க நிறைய இருக்காங்க. மனச தளற விடாம படிக்கனும். நாம ஒழுங்காத்தான் படிக்கிறோமா, நம்ம அப்ரோச் சரியாத்தான் இருக்கா, எதுல நாம வீக், என்ன செஞ்சா பாஸ் பண்லாம்.. இப்பிடி செல்ஃப் அனாலிசிஸ் பண்ணி பாத்துக்கனும். யாராவது பிஸ்தா மாதிரி ஆளை கைடு மாதிரி வச்சு அட்வைஸ் கேட்டு, நல்ல கோச்சிங் க்ளாஸ்ல சேர்ந்து படிக்கலாம். எத்தினி மாசம் விழுந்து விழுந்து படிச்சாலும் பரிட்சைல அந்த மூணு மண்ணேரம் எப்பிடி எழுதறோம்கறது முக்கியம்.
ஒருவழியா பாஸ் மாத்ரம் பண்ணிட்டா போதும், நல்ல மதிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம்னு போகும். ப்ராக்டிஸ் ஆரம்பிச்சா உடம்புல தெம்பு இருக்கற வரைக்கும் சம்பாதிக்கலாம். காசு பாக்கறது மட்டுமில்ல, கர்வமில்லாம, நல்ல படியா வாழவும், நேர்மையா இருக்கவும் கத்துக்கனும்.
இன்று ஜூலை 1ஆம் தேதி Chartered Accountants Day! ஏராளமான எனது சிஏ நண்பர்களுக்கும், குறிப்பாக எங்கள் குடும்பத்தில் மகன்கள்
CA Pranav Sridhar மற்றும் அக்கா மகள்
CA Sadana Mano வுக்கும் Happy CA Day வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment