Thursday, July 16, 2026

மின்னலாய் வகிடெடுத்து.. மேகமாய் தலைமுடித்து..

 


மின்னலாய் வகிடெடுத்து.. மேகமாய் தலைமுடித்து..

சில வருடங்கள் முன்பு மல்லேஸ்வரம் பகுதி 11ஆவது க்ராஸில், ஶ்ரீ அகில ஹவ்யக மஹா சபாவில் என் நண்பர் Harish Jagannath அவர்களது தாயாரின் வைகுண்ட சமாராதனை நினைவு சந்திப்பிற்கென நண்பர்கள் 10,12 குடும்பங்கள் கூடி தாயாருக்கு அஞ்சலி செலுத்தியபின், கிளம்பியபோது அடுத்த இரண்டு வீடு தள்ளி நிறுத்தியிருந்த என் காரை எடுக்கும்போது அந்த வீட்டு வாசலில் B. சரோஜா தேவி என கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் பதிக்கப்பட்ட பெயர்ப்பலகை பார்த்ததும், இது கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவியின் வீடாக இருக்குமோவென சந்தேகம். மறுநாள் நண்பர் ஹரிஷிடம் கேட்க, அவர் அவர்களது வீடு தான் சொன்னபோது ‘ஆஹா! அபிநய சரஸ்வதி அவர்கள் வீட்டையா பார்த்தோம், அவர்கள் வீட்டின் முன் காரையும் நிறுத்தினோம் என பூரிப்பு எனக்கு.
80களில் திருச்சியில் வெறும் பழைய படங்கள் மட்டுமே விரும்பி பார்ப்பேன். அதிலும் சுப்ரமணியபுரம் சுரேஷ் டாக்கீஸ், ராமகிருஷ்ணா தியேட்டர் என எம்ஜியார், சரோஜா தேவி பட போஸ்டரை கண்டால் தவறாமல் அப்படங்களை பார்த்து விடுவேன். ஸ்டார் சினாமாவில் புதியபறவை பார்த்து வெகுநாட்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது படக்காட்சிகள்.
கண்பார்வையற்றவராக எம்ஜியாருடன் நடித்த நாடோடி படத்தின் ‘அன்றொரு நாள் இதே நிலவில்’ பாடலை பாபு ரோடு முருகன் தியேட்டரில் ஃபேன் இல்லாமல் வியர்வை புழுக்கத்துடன் மூட்டைப்பூச்சிக்கடிகளை பொருட்படுத்தாமல் ரசித்துப் பார்த்தவன்.
டூரிங் தியேட்டரின் வெளியே சோவென மழை பெய்துகொண்டிருக்க, அப்பாவின் ஆப்ரேட்டர் நண்பருடன் ஆபரேட்டர் ரூமில் இருந்தபடியே ‘கலங்கரை விளக்கம்’ பட ‘பொன்னெழில் பூத்தது’ பாடலை கண்கள் விரிய 1965இல் (4 வயசு) நீலகிரி மாவட்ட அரவேணு நகரில் பார்த்தவன்.
‘வண்டு வருகின்றது, மலரில் அமர்கின்றது’ எனும் சிவாஜியைத் தொடர்ந்து ‘உண்டு சுவைக்கின்றது, உறங்கி விழுகின்றது’ என்றபடியே சிவாஜியின் தோளில் மெல்ல சாய்வது போல போவார்.. ஆனால் சாய மாட்டார். திருமணம் ஆனபின் நடிக்க வந்த நடிகை அல்லவா! பாடல் காட்சிகளில் சட்லாக நெருக்கம் காட்டி, காட்டாமல் நடிப்பார்.
‘அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே கனவான கதை கூறவா.. பொங்கும் விழி நீரை அணை போடவா’ (ஆடிப்பெருக்கு) என்றபடியே யாருக்கும் தெரியாமல் சட்டென கண்களை துடைத்துக்கொண்டு இங்குமங்கும் பார்த்துக்கொள்வார்.
‘புத்தம்புதிய புத்தகமே’ பாடலின் ஆரம்ப இசை முடியும் தருவாயில் தோட்டத்தில் ஆலமரத்தின் விழுதைப்பற்றிக்கொண்டு ஜிவ்வென அந்தப்பக்கம் பறந்து போய் குதித்த கையோடு ‘நீயும் வாயேன்’ என்பதை சைகையால் கை விரல்களைக் குவித்து எம்ஜியாரை கூப்பிடும் நளினம் கொள்ளை அழகு.
‘தாய் சொல்லை தட்டாதே’யில் தான் ஒருவரை மணக்கப்போவதாக எம்ஜியாரிடம் சொல்ல, சிஐடி போலிஸான எம்ஜியார் உடனே கோபித்துக்கொள்ள, உடனே இவர் அந்தாள் யாரென பெயரை சொல்லாமல் ‘ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்..
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்’ பாடலைப்பாட, உம்மென்ற முகத்துடன் நகரும் எம்ஜியாரை சுற்றிச் சுற்றி வந்து மான் போல் குதித்து ஆடிப்பாடியபடியே ‘இளையவள் முகத்தைப் பார்த்தானாம்
இதயத்தை அவளிடம் கொடுத்தானாம்’ என நிறைய க்ளூ கொடுத்தும் அது தான் தானொன்று எம்ஜியாருக்கு தெரியாமல் (படம் பார்க்காதவர்களுக்கே தெரியும்), கடைசி இரண்டு வரிகளில் ‘அது நீ தான்யா’ என உணர்த்தும் வகையில்
‘சாத்திரம் சரித்திரம் படித்தவனாம்
தவறு செய்பவரைப் பிடிப்பவனாம்
ராத்திரி பகலாய் அலைவானாம்
ரகசிய போலீஸ் சேவகனாம்’
என பாடலை முடித்து எம்ஜியாரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். நான் இங்கே சொல்ல வந்தது அந்த ‘தவறு செய்பவரைப் பிடிப்பவனாம்’ என்ற வரிகளில் லெஃப்ட் ரைட் போட்டு விரைப்பான போலிஸ் போல இவர் நடந்து காட்டும் அழகு!
தாமரை போன்ற மலர்ந்த வட்ட முகம், மான் விழிகள், கொஞ்சிப்பேசும் தமிழ் வசனம், நளினமான நடை, ஆடல் கலை என பன்முகம் கொண்டவர். மாடர்ன் உடைகள் இல்லாமல் பெரும்பாலும் புடவை தான்.
முகபாவங்களை காட்சிக்குத் தகுந்தபடி அனாயசமாக மாற்றி வெளிப்படுத்தும் பாங்கு இவரது சிறப்பு. குறிப்பாக..
அழுகைக்கு (கல்யாணப்பரிசு)
குற்றவுணர்வுக்கு (புதிய பறவை)
குறும்புக்கு (எல்லா படங்களும்)
கோபத்திற்கு (பெற்றால் தான் பிள்ளையா)
விரக்திக்கு (ஆடிப்பெருக்கு)
எல்லா முகபாவங்களும் (புதிய பறவை)
RIP மேடம் B. சரோஜா தேவி 🙏🙏

Happy CA Day

 திருச்சி மலைவாசல், ஆண்டா ஸ்ட்ரீட், பட்டர்வொர்த் ரோடு, ஶ்ரீரங்கம், மெயின்கார்ட்கேட் பக்கம் பேயறஞ்சாமாரி இளைஞர்கள் யாராவது நடந்து போய்க்கிட்ருந்தாலோ, எதிர்ல ஹோலிக்ராஸ் அல்லது எஸ்ஸார்ஸி காலேஜ் பொண்ணுங்க வந்தாகூட அவங்கள ஏறெடுத்து பாக்காம ஏதோ யோசனைல போய்க்கிட்ருந்தாலோ நீங்க சூடம் அடிச்சு சத்தியம் பண்ணலாம், அவனுங்க சீ.ஏ ஸ்டூடண்ட்ஸ்னு.

வியாழக்கிழமை ஶ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்துல ஒக்காந்துட்டோ அல்லது சனிக்கழமை கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் பிரகாரத்துல வெறிச்சுப்போய் உக்காந்துட்ருக்கற இளைஞர்கள பாத்தவுடனே நீங்க கான்ஃபிடென்ட்டா சொல்லலாம் அவனெல்லாம் சீஏ எக்ஸாம் எழுதறவனுங்கன்னு.
‘ஜீஸஸ் நெவர் ஃபெய்ல்ஸ்’ போர்டு கீழே எவனோ ஒருத்தன் ‘ஆஸ்க் ஹிம் டு ட்ரை சீஏ எக்ஸாம்’னு எழுதி வெச்சானாம்ங்கற ஜோக்கை யாராவது சொன்னா அத ரசிக்காம பதிலுக்கு அரங்கேற்றம் பிரமிளா போல விரக்தியா ஒரு சிரிப்பு சிரிச்சான்னாக்க அவன் பல யுகங்களா சீஏ படிக்கிறான்னு அர்த்தம்.
ஹைஸ்கூல்ல நல்லா படிச்சு சீஏ படிக்க சிலபேரும், நல்ல மார்க் எடுத்து இஞ்சினீயர், டாக்டர்னு மத்தவனுங்க போக, பிஎஸ்ஸி, பிகாம் படிச்சி பி.ஜி மேற்படிப்பு, எம்.ஃபில், லெக்சரர் வேலை, பாங்க் எக்ஸாம், இன்சூரன்ஸ், கவர்ன்மென்ட் ஜாப் எக்ஸாம்னு மத்தவனுங்களும் கெளம்பி போனாவுட்டு, கிராஜுவேட்டோட நட்டாத்துல விட்ட மாதிரி நிக்கும் மீதிப்பேர் எல்லாரும் ஐசிடபிள்யூஏ, சிஏல தான் வந்து விழுவானுங்க, பின்னால பேராபத்து ஒன்னு காத்திருக்குன்னு தெரியாம.
அப்பிடி என்னா கஷ்டம் இந்த சீஏ படிப்புல? ஒரு க்ரூப்புக்கு நாலு சப்ஜெக்ட்டுன்னு இன்டருக்கு 2 க்ரூப்பு, ஃபைனலுக்கு 2. ஆக மொத்தம் 4 க்ரூப்பு-16 பேப்பர். இன்டர் முடிச்சாத்தான் ஃபைனல். க்ரூப் க்ரூப்பாத்தான் எழுதனும். நாலு சப்ஜெக்ட்லயும் பாஸ் மார்க் 40 வாங்கி மொத்த மார்க்கும் 400க்கு 200 (50%) வாங்கனும், இல்லன்னா அந்த க்ரூப்பே ஃபெயில். எப்பிடியிருக்கு பாருங்க! நாலு பேப்பர்லயும் பாஸ், ஆனால் மொத்த மார்க் 198ன்னு ரெண்டே மார்க்குல கோட்டை விட்டா மறுபடியும் அந்த நாலு பேப்பரையும் எழுதனும். கிழிஞ்சது! சரி ஒழுங்கா படிச்சி அடுத்த அட்டெம்ட் மொத்தம் 210 (50%க்கும் மேல்) வாங்கி, ஆனா ஒரு சப்ஜெக்டுல 39 மார்க். ‘தம்பி நீ ஃபெயில், திரும்ப நாலு பேப்பரையும் எழுதுடா கண்ணா!’ம்பாங்க பாவிங்க.
நாமளே பிரைவேட்டா கோச்சிங் க்ளாஸ் போய் படிச்சிக்கனும். காலேஜ்னு இதுக்கு ஒன்னுமில்ல. கொஸ்டீன் பேப்பர்ல வர்ர கேள்விங்க எந்த புத்தகத்துலயும் வந்திருக்காது. ஒரு தடவ கேட்ட கேள்விங்க அடுத்தடுத்த பரிட்சைல 99% திரும்ப கேக்க மாட்டாங்க. நாங்க படிக்கிறப்ப அக்கௌண்ட்ஸ் பேப்பர்ல மொத கொஸ்டின் கம்பல்சரி, அதுவும் 40 மார்க். கொஸ்டின படிச்சி புரிஞ்சிக்கறதுக்கே அரை மண்ணேரமாகும். மொஸ்ட்லி புரியவே புரியாது. அப்பவே சில பசங்க இது வேலைக்காவாதுன்னு வெளிநடப்பு செய்வானுங்க. தம்பி! பரிட்சை ஆரம்பிச்சு ஒரு மண்ணேரம் கழிச்சு தான் வெளிநடப்பு செய்யலாம்னு ஒரு ரூல்ல அவன வெளியவும் விடமாட்டாங்க. அவம்போறத பாத்து உருப்படியா ஓரளவு பதில் தெரிஞ்சவனும் பிதாமகன் விக்ரம் மாதிரி தலைய சிலுப்பி, மெதுவா ஒவ்வொருத்தரா அபீட் ஆவானுங்க. ஆச்சு அடுத்த 6 மாசம் திரும்ப வெய்ட் பண்ணனும். இப்பிடியே வருசக்கணக்கா போகும்.
டிகிரீ கோல்ட் மெடல், அக்கௌண்ட்ஸ், மேத்ஸ்ல செண்டம் எடுத்தவன்னு யாரா இருந்தாலும் ஒரு உலுக்கு உலுக்கி எடுத்து தான் சிஏ முடிப்பாங்க. ஆல் இண்டியா ரேங்க், ஃபர்ஸ்ட் அட்டெம்ட் பாஸ்ஸுன்னு அதுபாட்டுக்கு ஒரு க்ரூப் தனியா போயிட்டே இருக்கும். எங்க காலத்துல நூத்துக்கு அஞ்சாறு பேரைத்தான் பாஸ் பண்ண விடுவாங்க. இப்பல்லாம் போய்த்தொலைன்னு 15 அல்லது 20 பேர தள்ளி விடறாங்க.
சிஏ படிக்கிறவனுக்கு இஞ்சினீயரிங் படிச்ச தம்பி இருந்தா தம்பிக்கு கல்யாணம் ஆகறது சந்தேகம் தான். இல்ல அவன் ஓவர்டேக் பண்ணிடுவான். சில செட்டியார் பசங்களுக்கு சிஏ முடிக்கறதுக்கு முன்னால் கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க. அவனால எதையும்… ஐ ரிப்பீட்.. எதையும் உருப்படியா செய்ய முடியாது.
நம்ம சுத்தி இருக்கறவங்க என்கரேஜ் பண்ணனும். ‘நீ சிஏ பாஸ் பண்றத பாத்துட்டு தான் நா சாவேன்’னு வீட்ல பாட்டி சொன்னா மோஸ்ட்லி பாட்டி சாவாது.
இதையெல்லாம் தாண்டி, கடுமையா உழைச்சு பாஸ் பண்றவங்க நிறைய இருக்காங்க. மனச தளற விடாம படிக்கனும். நாம ஒழுங்காத்தான் படிக்கிறோமா, நம்ம அப்ரோச் சரியாத்தான் இருக்கா, எதுல நாம வீக், என்ன செஞ்சா பாஸ் பண்லாம்.. இப்பிடி செல்ஃப் அனாலிசிஸ் பண்ணி பாத்துக்கனும். யாராவது பிஸ்தா மாதிரி ஆளை கைடு மாதிரி வச்சு அட்வைஸ் கேட்டு, நல்ல கோச்சிங் க்ளாஸ்ல சேர்ந்து படிக்கலாம். எத்தினி மாசம் விழுந்து விழுந்து படிச்சாலும் பரிட்சைல அந்த மூணு மண்ணேரம் எப்பிடி எழுதறோம்கறது முக்கியம்.
ஒருவழியா பாஸ் மாத்ரம் பண்ணிட்டா போதும், நல்ல மதிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம்னு போகும். ப்ராக்டிஸ் ஆரம்பிச்சா உடம்புல தெம்பு இருக்கற வரைக்கும் சம்பாதிக்கலாம். காசு பாக்கறது மட்டுமில்ல, கர்வமில்லாம, நல்ல படியா வாழவும், நேர்மையா இருக்கவும் கத்துக்கனும்.
இன்று ஜூலை 1ஆம் தேதி Chartered Accountants Day! ஏராளமான எனது சிஏ நண்பர்களுக்கும், குறிப்பாக எங்கள் குடும்பத்தில் மகன்கள்
CA Pranav Sridhar மற்றும் அக்கா மகள்
CA Sadana Mano வுக்கும் Happy CA Day வாழ்த்துக்கள்.