Sunday, July 19, 2026

லாஜிக் இல்லன்னாலும் ரஜினி படம் பார்க்கும் சங்கம்

 அகஸ்மாத்தா நேத்திக்கி கனகபுரா ரோடு ஃபோரம் மாலுக்கு நண்பர்களோட போயிருந்தோம். ஹல்திராம் காரனோட தால் கிச்சடி, ச்சோலே பட்டூரா எல்லாம் மொஸ்க்கிட்டு பிவிஆர் சினிமா பக்கம் வந்தாக்க, கூலி படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்னு எல்லா ஸ்க்ரீன்லயும். ஆனா நாங்க ஆறு பேரும் சேர்ந்து உக்கார முடியாதபடி இங்கொன்னு அங்கொன்னுன்னு சீட்கள் இருந்தது. துன்பத்துலயும் நாங்க சேர்ந்தே இருக்கும் நண்பர்கள், எப்பிடி தனித்தனியா படம் பாப்பம்!

அப்ப ‘நாங்க நாலு டிக்கட் வச்சிருக்கோம். ஆனா படத்துக்கு போகலை, நீங்க வாங்க்கிறீங்களா?’ என ஒரு தமிழ் குடும்பம் கேட்டுச்சு. ரஜினி படத்துக்கு வாங்கின டிக்கட்ட ரிட்டர்ன் பண்றது தெய்வ குத்தமாச்சே! அப்பிடி நமக்கு வந்த டிக்கட்ட வேணாம்னு சொல்றது அத விட பெரிய குத்தம்யா!’ ன்னு உடனே அந்த நாலு டிக்கட்ட வாங்கிட்டோம். மீதி ரெண்டு டிக்கட்டும் கெடச்சி, உள்ளாற போனோம்.
இனி படம்..
முப்பது வருஷத்துக்கு முன்னால எங்கப்பா காணாமப் போயிட்டார்னு 29 வயசு ஷ்ருதிஹாசன் சொல்றப்ப ஆஆன்னு அலறிட்டோம்.
வில்லன் சௌபின்ன அடிச்சி காலி பண்ணி ரொம்ப தூரம் வண்டில பாடிய கொண்டுபோய், நட்ராத்திரி நடுகாட்ல ஆழமா குழி தோண்டி பொதச்சி, மண்ண அள்ளி குழில கொட்றப்ப, சோன்னு மழ வேற பேஞ்சி, சேறு சகதியோட மண்ண போட்டு மூடிட்டு திரும்பி பாத்தாக்க, அந்த சேத்து மேட்ல இருந்து ‘பளக்.. ப்ளக்’ன்னு காத்து/நீர்க்குமிளி வெளியே வர, உள்ளர்ந்து சௌபின் உயிரோட வெளிய வர்றத பாத்து மறுபடியும் ஆன்னு அலறி தியேட்டர் முன் சீட்ட பல்லால கடிச்சிட்டோம்..
‘மோனிகா.. மோனிகா பாட்டு டான்ஸுல வில்லன் சௌபின் போடற ஸ்டெப் இருக்கே.. செம்ம! காலை டப் டப்புன்னு தரைல தட்டி முழங்காலை நெஞ்சு வரைக்கும் உயர்த்தி ஆடற ஸ்டைல்… யப்பா! இந்தாளு பெரிய்ய ரவுண்டு வருவான்!
‘திருச்சி பாலக்கரை மதுரை ரோடு காயலாங்கடைல கெடைக்கும் பளய இரும்புச்சேர்.. அதுல சைக்கிள் செயின் போல ஸ்க்ராப் அயிட்டங்கள சுத்தி, நடூல ஒரு பொணத்த உக்கார வச்சி ஸ்விட்ச்ச போட்டா புஸ்ஸுன்னு பொணம் அப்பிடியே பஸ்பமாகும்னு கண்டுபிடிச்ச விஞ்ஞானி சத்யராஜை வில்லன்கள் கொண்ணுட்டு (அந்த சேர்லயே அவரை ஒக்கார வச்சிருப்பாங்களோ!), அந்த சேரை எப்பிடி யூஸ் பண்ணனும்ங்கற ரகசியம் தெரிஞ்ச ரஜினி & ஷ்ருதிஹாசனை மெரட்டி அவங்கள அந்த வேலைக்கு அமர்த்தி, அதுல வர்ர சம்பளத்த ஆளுக்கு பாதியா பிரிச்சுப்பாங்களாம்… ஸ்ஸப்ப்பா! அந்த சேர்ல நாமளே ஒக்காந்துர்லாம் போலர்க்கு..
‘தேவா மேன்ஷன்’னு ஒரு ரெண்டு மூணு ஃப்ளோர்ல ரூம்புங்களோட பெரிய்ய லாட்ஜ்க்கு ஓனராம் ரஜினி. அப்ப அந்த எலக்ட்ரிக் கில்லர் ச்சேர் வேலை பார்ட் டைமா தெர்ல. ஆனா அவர் ஒருகாலத்துல கூலியா இருந்தவராம். திரும்ப ஆன்னு அலறிட்டோம்.
நாகார்ஜுனா.. ரஜினியா.. யாரு ஹீரோன்னு நெனைச்சிக்கிட்டே கண்ணு அசந்துருச்சு. ‘ஏமி! நித்தரனா?’ ன்னு வைஃப் தட்டி எழுப்பினாங்க என்னய.
ஆனா, அந்தக்கால தங்கமகன் பட ‘வா.. வா.. பக்கம் வா.. டிஸ்கோ டிஸ்கோ’ பாட்டை ரிமிக்ஸ் பண்ணி எக்ஸ்ட்ரா பேஸ் கிடார் மியூசிக்கை கூட்டி… கலக்கிட்டான் அனிருத். ப்பா.. மொட்ட ராஜா என்னமா போட்ருக்காரு. இன்னிக்கும் நிக்கிது அவரோட மியூசிக்.
ரஜினி முதுகு இட்லி மாதிரி சாஃப்ட்டா இருக்கோ என்னவோ, வில்லன் வீசற கோடாலி அவர் முதுகுல ஆழமா போய் பச்சக்குன்னு நட்ருச்சா, அவரு அதப்பத்தி கவலப்படாம சண்டை போட்டு, ராமர் அம்புக்கூட்டிலிருந்து பாணத்தை எடுக்கறாமாதிரி ஸ்டைலா கைய பின்னால விட்டு கோடாலிய வெளிய எடுத்து வில்லன்ங்க மேல வீசறார். திரும்பவும் ஆஆன்னு அலறிட்டோம்.
நாகார்ஜுனா, அவரு புள்ள, சௌபின், அவரு பொண்டாட்டி ரச்சிதா ராம், ஆமீர்கான், அவங்கப்பா, உப்பேந்திரா, ஷ்ருதி, அவங்க ரெண்டு சிஸ்டர்ஸ்… இப்பிடி கேம்பஸ் செலக்‌ஷன் மாதிரி உப நடிகர்கள், வில்லன்கள செலக்ட் பண்ணியிருக்காங்க.
படத்தோட பட்ஜெட் எவ்ளோ, ரஜினி சம்பளம் எத்தினி, சௌபின் ஷாபிருக்கு 2 கோடி மட்டுமாங்கற சமாச்சாரமெல்ராம் நமக்கெதுக்கு! அது வியாபாரம். நமக்கு வேண்டியது, குடுத்த காசுக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் கேரண்டின்னு ரஜினி படம் எப்பவும் மாஸ் தான்.
படம் முடிஞ்சி வெளிய வர்ரப்ப மட்டும் நம்ம ஒடம்பு பூரா ரத்த களரியா இருக்கறா மாதிரி ஃபீலிங்.
இவண்,
லாஜிக் இல்லன்னாலும் ரஜினி படம் பார்க்கும் சங்கம்

No comments:

Post a Comment