Sunday, July 19, 2026

90 வயதைத்தொடும் சுசிலாம்மா

 வா.. வா.. வா.. சுசிலாம்மா!

1965 இலிருந்து 70 காலக்கட்டத்தில் சுசிலாம்மாவின் குரலில் உள்ள இனிமை! அப்பப்பா! அப்ப அந்த வயதில் (30,35க்குள்) காட்சிகளுக்கேற்ப, காட்சியில் நடிக்கும் நடிகைகளுக்கேற்ப குரலை ஃபைன் ட்யூன் செய்வார். பிற்காலத்தில் 60 வயதை நெருங்கும்போது ‘முத்து மணி மால’ பாட்டில் கூட கொஞ்சம் ஸ்ரம்ப்பட்டு அதே இனிமையை கொண்டு வந்திருப்பார்.
“மனசிருக்கனும் மனசிருக்கனும் பச்சப்புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கனும் வெளித்திருக்கனும் மல்லியம்பூவாட்டம்”
டிஎம்எஸ் உச்ச ஸ்தாயியில் பல்லவியை ஆரம்பிக்க சுசிலாம்மா ‘அடி யா..யா.. யா.. யக்கூ’ என குலவை சத்தம் கொடுத்தபின்,
“புத்தியிருக்கனும் புத்தியிருக்கனும் கத்திமுனையாட்டம்
அத வச்சிப்பொழைக்கனும் வச்சிப்பொழைக்கனும் சொத்து சுகமாட்டம்” என அனுபல்லவியை தொடரும் சுசிலாம்மா, அபாரமான அந்த நாட்டுப்பாடலை கிராமத்துப்பாணியில் பாடி அசத்தியிருப்பார். அதிலும் ‘கத்திமுனையாட்டம்’இல் அந்த ‘டம்’இற்குப்பிறகு … ம்ம்…ம்ம்.. என நீண்ட ஆலாபனையில் ஒரு folk டச் கொடுப்பார் பாருங்கள்.
“அரண்மனை அறிவான் அரியணை அறிவான் அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்
வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான்
மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்”
பாடலில் (கர்ணன்) நல்ல முதிர்ந்த குரல், ஏக்கம், கொஞ்சம் விரகதாபம் எல்லாவற்றையும் கலந்து சாவித்திரிக்கு ஏற்றபடி பாடியிருப்பார் சுசிலா. அந்த இடத்தில் கீச்சுக்குரலில் ஜானகியை வைத்து கற்பனை செய்து பாருங்கள்! பொருந்தாது. ஜானகிக்கு வேறு ஜானர்.
கிராமத்து பாடல், இளம் காதல் பாட்டு ஆச்சா! அடுத்து அதே காலகட்டத்தில் (1965-70) வந்த இந்த பாடல் மத்திய வயதைக்கடந்த பாத்திரம் (வி.வீடு பத்மினி)…
பாலிருக்கும் பழமிருக்கும்
பள்ளி அறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்
சாந்தி என்றால் என்னவென்று
ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே
ராஜாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
நாற்பது வயது காதல், நாணம், சாந்தம், குறும்பு என எல்லா பாவங்களையும் பத்மினியை விட சுசிலா மேற்சொன்ன சரணத்தில் வெளிப்படுத்துவார்.
‘ஆனிப் பொன் மேனியை
ஆசையில் அணைத்திட
காணிக்கை கொடுத்ததும்
நேற்றல்லவோ
பனி மலர் அழகினில்
மயங்கிட அருகினில்
வந்தால் இன்றே வா...
கந்தர் சஷ்டி கவசம் போல சின்னச்சின்ன வரிகளை துரிதமாக பாடும் பாங்கு அபாரம். இந்த பாடல் இடம்பெறும் கலாட்டா கல்யாணத்தில் (மெல்ல வரும் காற்று) அந்த கடைசி ‘வா’ வை அப்படியே லேசான நடுக்கத்துடன் இழுப்பார். ஜெயலலிதாவின் காதலை சுசிலா அந்த ச்சில்லிங் ‘வா’ விலேயே வெளிப்படுத்துவார்.
“கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா”
இளம் பச்சை நிற சேலை மற்றும் ஸ்லீவ்லெஸ்ஸுடன் ஜெயலலிதா எம்ஜியாருடன், நகை ஆசாரி தங்கத்தை உரசுவது போல, உரசி உரசி பாடும் (ர.போலிஸ் 115) ‘கண்ணே கனியே முத்தே மணியே வா” பாடலில் சுசிலா தன் சன்னமான நேஸல் வாய்சில் கொஞ்சிப்பாடுவார். என்ன விசேஷம் அந்த ‘வா’ வில்! எம்ஜியார் ‘வா’ என முடிக்கும் முன்பே அவசரமாக டுட்டுடும் என போங்கோஸை அடிக்கும் எம்எஸ்வி, சுசிலாவை மட்டும் ‘வாஆஆஆஆ’ என இழுக்க வைப்பார்! மதுவை விட போதை தரும் நேர்த்தி!
“ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..”
ஆண்டவன் கட்டளை ‘அழகே வா அருகே வா’ பாடலில்..ஸ்கின்ஃபிட் சூட்டுடன் சிவாஜி விலகி விலகிப் போக, அருவி நீர்வீழ்ச்சியில் ஈரத்துணியுடன், கண்களில் காந்தம், லேசான காமம், விரகம், ஏக்கம், கெஞ்சலுடன்… யாரு தேவிகாவா கூப்பிடறாங்க? இல்லை இல்லை.. சுசிலாம்மா அழைக்கிறார் அந்த கடைசி வரி… வா..வா.. வா என! என்ன சக்தி அந்த ‘வா.. வா.. வா’ விற்கு!
“பெண் பாவம் உன்னைத் தொடர்ந்து வரும் - ஒருநிழல் போலே அது நடந்து வரும்..
கண்ணீரால் விதி எழுதி வைத்தும் - என்
கதை கேட்டால் கல்லும் கனிந்துருகும்..
கல்லும் கனிந்துருகும்..
வா அருகில் வா.. தா உயிரைத் தா..
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான்..
வாசலைத் தேடி வா.. வா.. வா.. “
மேலே குறிப்பட்ட பாடல் அதே கண்கள் படம்… பேய்ப்படங்களில் பெரும்பாலும் இரவுக்காட்சிகள் தான் ஆவியை பின் தொடர்ந்து போதல், புகை மண்டலம் என பயமுறுத்தும். துணிவே துணை, அதே கண்கள் படங்களில் உச்சிவேளை பன்னிரண்டு மணிக்கும் வெள்ளைப்புடவை, தலையில் கனகாம்பரம்.. சவுக்கு தோப்பில் நடந்து போகும் காஞ்சனாவி! ‘வா.. அருகில் வா.. தா உயிரைத் தா’ என ஈஈரி வாய்ஸில் சுசிலா பாடுவார். வேதாவின் இசை, பக்கவாத்தியங்களுடன் வாஆஆஆ என சுசிலா இழுக்க, பாடலை ரசிப்பதா, காட்சியை ரசிப்பதா என நமக்கு மட்டுமல்ல, அந்த காட்சியில் வரும் அசோகனுக்கும் ரவிச்சந்திரனுக்கும் தெரியாது!
இன்னும் நிறைய ‘வா.. வா.. வா‘ பாடல்கள்!
சுசிலாம்மா பற்றி எழுதனும்னா தினமும் அவருக்கு பிறந்தநாள் வரனும், இன்னும் 100 Ranganathan Ganeshகளும் Janarthanan KB களும் அவரைப்பற்றி எழுத வேணும்.

90 வயதைத்தொடும் சுசிலாம்மா அசால்ட்டாக இன்னும் பத்து வயதை கடக்க வேண்டி,
பென்சில் ஓவியத்துடன் வாழ்த்தும்,

No comments:

Post a Comment