மெட்ராஸ்… நல்ல மெட்ராஸ்!
சாய்ங்காலம் 5 மணிக்கி வந்தேபாரத் பிடிக்கனும். வானகரம் மேரேஜ் முடிஞ்சி பதினொன்னரைக்கி ஃபுல் கட்டு கட்டிட்டு சட்னு கேஎம் ஸ்பெக்ட்ரா வந்து ஹோட்டல் ரூமை மத்யானம் ஒரு மணிவாக்குல காலி பண்ணிட்டு மெட்ராஸை ஒரு ரவுண்டு அடிக்கலாம்னு ப்ளான் போட்டோம்.
எங்க கூட பஹ்ரைன் நண்பன் விஜயன் ராவ் & Revathi Vijayan ரேவதி கப்புள். விஜயன் ஒரு பாங்கர். ரிஸ்க் அவனுக்கு ரஸ்க் மாதிரி. பஹ்ரைன்ல பல அராபிய, அமெரிக்க பிரபல பாங்க்குகள்ல சீஃப் ரிஸ்க் ஆபிசர்னு சுமார் 30 வருஷம் இருந்துட்டு எங்களப்போல தாய்நாடு திரும்பினவன். ஒரு வீடோ நெலமோ வாங்கினாக்கூட அதுல உள்ள பிரச்னைகள், என்ன டாகுமென்டுகள் செக் பண்ணனும், வில்லங்கம் இருந்தா எப்பிடி சரி செய்யனும்னு எல்லாத்தையும் பிரிச்சு மேய்ஞ்சிடுவான். பூர்வீகம் கும்பகோணம், கன்னட மாத்வா ராவ். பெங்களூர் வாசி. டிஜி வைஷ்ணவா காலேஜ்ல படிச்சவன். மெட்ராஸ் அத்துப்படி.
டிரைவர் எங்கள பாண்டிபஜார்ல இறக்கி விட்டதும் ஏதோ ஒரு டைரக்ஷன்ல எய்ம் இல்லாம ஆறு மனமே ஆறு.. ஆண்டவன் கட்டளை சிவாஜி மாதிரி நடந்தோம். உஷாவும் ரேவதியும் சுடிதார், குர்த்தா, லெக்கீஸ்னு வாங்குன ஐட்டத்தையே திரும்ப திரும்ப வாங்க, ரோட்டோர குறத்தி கிட்ட கருப்பு பாசி ப்ரேஸ்லெட் ஒண்ணு வாங்கி கைல போட்டுக்கிட்டேன். இதுமாதிரி சொறித்தனமான ஐட்டங்கள் வாங்கறது பதிவருக்கு நெம்ப பிடிக்கும்.
கீதாபவன்ல இன்னமும் லஞ்ச் ஓடிக்கிட்ருந்தது. மாடீல சிலபேர் பாவ்பாஜி, ச்சோலே பட்டூரான்னு வெட்டிட்ருந்தாங்க. அட.. அட.. அட.. இதான்யா ஃபில்டர் காபிங்கறது. செம்ம! மத்யானம் ரெண்டரைக்கி வயித்துல கல்யாண சாப்பாடு ஏற்கனவே இருக்கறச்ச அதுல காபிய வாங்கி ஊத்தினா எப்பிடி இருக்கும்! பேண்ட் பெல்ட்டை அடுத்த ஓட்டைக்கி மாத்தி வயிறை ஜெயமாலினி மாதிரி ஆதரவா தளர்த்தி நல்லா மூச்சு விட்டேன்.
மணி மூணு. டிரைவர கூப்ட்டு நேரா மயிலாப்பூர் பக்கம் வந்தோம். அப்ப ரேவதி திடீர்னு ‘ஏய்.. நாம எங்க பளய வீட்ட பாக்கலாமா? எழுத்தாளர் இந்துமதிக்கி வித்த வீடு அது’ன்னாங்க. ‘ஆஹா.. அந்த வீட்ட இப்பவே பாக்கறோம். மழ காலத்துல தண்ணி வந்து அவங்க உடனே…’ன்னு நான் இழுக்க, ரேவதி ‘ஆமா.. துர்கா ஸ்டாலினுக்கு போன் போட்டு.. அதே வீடு தான்’ னாங்க. உட்லண்ட்ஸ் ஓட்டல் தாண்டி சிக்னல்ல லெஃட் எடுத்து உள்ள போனா மஞ்சக்கலர் கார்னர் வீடு! இப்ப தண்ணி நிக்கல. நாங்களும் நிக்கல, திரும்ப வந்துட்டோம்.
அடுத்து சிவசாமி சாலை பக்கம் வந்து தண்ணித்துரை கோவில் தாண்டி சந்துபொந்தெல்லாம் திரும்பி மத்தள நாராயணன் தெருவோ என்னவோ.. நேரா 100 வருஷ பழைய காளத்தி கடைக்கி வந்து ரோஸ்மில்க் வாங்கி பேக்ல போட்டாச்சு, வந்தேபாரத்ல குடிச்சுக்கலாம்னு. மத்தவங்களும் அந்த கடைய ஆச்சர்யமா பாத்து போட்டோ வீடியோ எடுத்தாங்க.
லஸ் பக்கம் கச்சேரி ரோடு வந்து ஹரி ஏஜென்சீஸ்ல வண்டிய நிறுத்தச்சொன்னான் விஜயன். அங்க தான் டான்டெக்ஸ் ஜட்டி பனியன்லாம் வாங்குவானாம் ரொம்ப வருஷமா! இப்பவும் வாங்குனான் அர டஜன். டான்டெக்ஸாம் இப்பவும் இருக்கா! சுடர்மணியே இருக்கானு தெர்ல. நீ வாங்கறயான்னு கேட்டான் விஜயன். ‘இல்லப்பா, நான் எப்பவும் வாங்கறது வைக்கிங், மத்ததெல்லாம் நசுக்கிங்’ னுட்டேன்.
‘நீ மெட்ராஸ்ல ரொம்ப வருசம் இருந்தியே, ஜன்னல் கடை பாத்திருக்கியான்னு கேட்டேன். இல்லன்னாங்க விஜயன் ரேவதி. கோயில்ட்ட வண்டிய நிறுத்திட்டு ப்ளூ கலர் ஜன்னல் கடை கிட்டக்க போனா சாத்தியிருந்தது. ஜன்னல் கேப்புல உள்ளாற அவங்க குடும்பம் இலை போட்டு சாப்ட்டுட்ருந்தாங்க. எப்ப கடை தொறப்பீங்கன்னு கேட்டோம். பஜ்ஜி சாப்பிடனும்னோம். இன்னிக்கி லீவாம்.
அங்கர்ந்து கபாலீஸ்வரர் கோவில் வந்ததும் அம்பிகா அப்பளம் கடைல எலந்த வடை வாங்கனும்னு உஷா ரிக்வெஸ்ட் குடுக்க, ஃபாஸ்ட்டா எலந்த வட, சாம்பார் பொடி வாங்கி காசு குடுக்கறப்ப, பாவி.. பால்கோவா பாக்கெட் கண்ல பட்டுச்சு. வாங்கி போட்டாச்சு.
டயம் இல்லாததனால டப்பா செட்டிக்கடை, ஶ்ரீவித்யா மஞ்சள் கடையெல்லாம் போக நேரமில்ல. ஏதோ வெண்ணைக்கடையும் அங்க ஃபேமஸாம். பேர் தெர்ல.
4.40க்கு சென்ட்ரல் வந்து மத்த ஃப்ரெண்ட்ஸும் அங்க வர, ப்ளாட்ஃபார்ம்லயே போட்டோ எடுத்து, வந்தேபாரத் முன்னாலயும் டக்னு போட்டோ எடுத்து வண்டில ஏறுன மறுநிமிஷம் காளத்தி கட ரோஸ்மில்க் காலியாச்சு.
வண்டி கெளம்பியாச்சு. இனி பெங்களூர் வரைக்கும் எல்லார் வீட்டுக்கதை, கூடூர்ல லேண்ட் வாங்குன கதை, ‘ஹலோ அயாம் ட்ராவலிங் டு சாண்டியாகோ டுமாரோ’ போன் பேச்சுக்கள், ‘கொளுந்தியாவ ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணோம்’ கதை, சத்தமா இன்ஸ்டா ரீல்கள், ‘பெட்டிய நேரா வைங்க, குறுக்கால வச்சா தலைல விழும்’, ‘ஹலோ க்யா ஹால் ஹெ? மெ பர்ஸோம் தில்லி போஞ்ச் தாஹூம், பாஹ்பி கைசே ஹெ?’… ஊர்க்கதை கேட்டுக்கிட்டே இதோ.. காட்பாடி வரப்போது!
No comments:
Post a Comment