2001, 2002 வாக்கில் இருக்கும்.. பஹ்ரைன் போய் ஏழெட்டு வருஷங்கள் ஆச்சு அப்ப. ஹூரா மற்றும் குதேபியா பகுதிகளில் குடியிருந்தோம். வீட்டை விட்டு வெளிய வந்தால் பர்கர் பீட்சா கடைகள், அரபி காபி ஷாப்கள், பொட்டிக்கடைகள் மற்றும் பொட்டீக் (Boutique )கடைகள், சிறிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள், கோல்ட் ஸ்டோர் எனப்படும் சிறுமளிகைக்கடைகள் பரவலாக எல்லா ரோடுகளிலும் இருக்கும்.
மாலை ஆறிலிருந்து விடிய விடிய பளீரென விளக்கொளி பாய்ச்சும் கடை வீதிகள். அண்டை நாடுகளிலிருந்து சில மணி நேரங்களில் பஹ்ரைன் எல்லை கடந்து மெதுவாக சாலையில் ஊர்ந்து செல்லும் குவெயித்தி, சவுதி, கத்தார் கார்களில் தண்ணியடிக்கும் வேட்கையில் இளைஞர்கள், இளம் எத்தியோப்பிய, ஃபிலிப்பினோ பெண்கள், ஏராளமான இந்தியர்கள்… ஊரே பிரகாசமாக இருக்க, மெக்டொனால்ட்ஸ், பீட்சா ஹட், டெய்ரி க்வீன் போன்ற கடைகளில் மிதமான கூட்டத்தில் சோம்பேறித்தனமாகவும் அதே சமயம் ரொம்ப ரிலாக்ஸ்டாக மக்கள் குழந்தைகளுடன் சோளமாவு தூவிப்பொறித்த கோழிகளை பெப்ஸியுடன் சுவைத்து கடித்துண்டு களிக்க, மேலே உத்திரத்தில் ‘ஆல் ரைஸ்’ எனும் பாப் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்.
பதிவே இந்த பாடல் பற்றியது. அந்த சின்ன வயதிலேயே பெரியவன் (9) மற்றும் சின்னவன் (3) இருவரும் அந்த பாடலை ரசித்து தலையாட்டிக்கொண்டிருக்க, நாள் முழுக்க பஹ்ரைன் ரேடியோ எஃப்எம்மில் அந்த பாடல் ஒரு நாளைக்கு நாலைந்து முறை ஒலிக்கும். பள்ளி ஆண்டுவிழாவில் பையன்கள் பாடும் பாட்டு, ஜிம்களில் ட்ரெட்மில்லில் நடந்துகொண்டே அந்த பாடலை ரசிக்கும் அரபி/இந்திய இளைஞர்கள், நடுக்கடலில் மீன் பிடிக்க உல்லாசப்படகில் வியாழன் மாலை கிளம்பி சனியன்று வீடு திரும்பும் துரை மற்றும் துரைசானிகள் விரும்பி கேட்கும் பாடல், ஏர்போர்ட் லவுஞ்ச், டியூட்டிஃப்ரீ என சகல இடங்களிலும் ஒலித்த அந்த பாடல்!
Boy band எனப்படும் இங்கிலாந்தின் பதின்ம வயது டீன்ஏஜ் இளசுகளின் ‘ப்ளூ’ எனும் ஆல்பத்தின்
All Rise எனும் முதல் பாடல் அது. இங்கிலாந்தின் டாப் 75 ஆல்ப வரிசையில் பல வாரங்கள் டேரா போட்டு கிடந்தது இந்த ஆல்பம். ரயான், கோஸ்டா, ஜேம்ஸ் மற்றும் சைமன் என்ற நால்வரணி கொண்ட குழு பாடிய பாடல் பட்டையை கிளப்பியது. பாடலின் வெற்றிக்கு மற்றுமொரு காரணம் பாடல் வரிகள். குறிப்பாக ஐந்து முறை வரும் அந்த அனுபல்லவி.
All Rise எனும் முதல் பாடல் அது. இங்கிலாந்தின் டாப் 75 ஆல்ப வரிசையில் பல வாரங்கள் டேரா போட்டு கிடந்தது இந்த ஆல்பம். ரயான், கோஸ்டா, ஜேம்ஸ் மற்றும் சைமன் என்ற நால்வரணி கொண்ட குழு பாடிய பாடல் பட்டையை கிளப்பியது. பாடலின் வெற்றிக்கு மற்றுமொரு காரணம் பாடல் வரிகள். குறிப்பாக ஐந்து முறை வரும் அந்த அனுபல்லவி.
என்ன விசேஷம் பாடல் வரியிலும் அனுபல்லவியிலும்?
காதல் தோல்வி அல்லது வெற்றி பெறாத காதலுடன் இளைஞன் ஒருவன் காதலியை கோர்ட்டுக்கு இழுத்து, நீதிபதி முன் ஆஜராகி ‘யுவர் ஆனர்’ என ஆரம்பித்து, காதலியை சாடிப்பாடுகிறானாம். ‘அடியே கள்ளி! நீ பண்ணாத அழிச்சாட்டியம் கொஞ்சமா நஞ்சமா! ஒண்ணு, எவ்ளோ தடவ ஜட்டி தெரியற மாரி குட்டைப்பாவாடை பறக்க எங்கூட ஓசி பைக்ல சுத்தியிருக்க! பட்டானி கடலை கொறிச்சிருக்க!’ ரெண்டு, எவ்ளோ கத அளந்து கப்சா வுட்ருக்க, இப்ப இல்லங்ற! மூணு, எவ்ளோ தபா போன் செஞ்சி கடல போட்ருக்க, நாலு, எவ்ளோ நடிச்சி என்னய ஏமாத்தியிருக்க! அவ்ளோ தான் சொல்லுவேன்! என சரமாரியாக விரல் விட்டுச் சொல்லி தன் தரப்பு வாத த்துடன் அங்கலாய்க்கிறான். அந்த அனுபல்லவி வரியில் (கீழே) அப்பிடி தான் இருக்கா என ஆராய வேண்டாம்).
One… for the money and the free rides
It's two… for the lie that you denied
Three… for the calls you've been making
It's four.. all the times you've been faking
All rise, I'm gonna tell it to your face
All rise, I rest my case (uh-huh)
இந்த பேண்டு தங்களது 25ஆவது ஆண்டு விழாவை கொண்டாட உலகம் முழுவதும் சுற்றி கடைசியாக இந்தியா (டிசம்பர் 14) வருகிறார்களாம். இன்று காலை செய்தி பார்த்ததும் மனம் சட்டென 25 வருடங்கள் பின் நோக்கிப்போக, உடனே ஏழெட்டு முறை இந்த பாடலை மாறி மாறி யூட்யூபில் போட்டு பார்த்ததன் விளைவே இந்த பதிவு!
பி.கு1 : பாடல் முதல் கமென்ட்டில்.
பி.கு2: அடுத்த சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சம் இதே மெட்டில் ‘ஜூன் போனால் ஜூலைக்காற்றே’ வந்து அதுவும் அட்டகாசமாக இருந்தது.
பி.கு3: பாடலை கேட்டதும் முழு பாடல் வரிகளையும் டௌன்லோடு செய்துபடியுங்கள், பாடலை இன்னும் ரசிப்பீர்கள்.

No comments:
Post a Comment