Sunday, July 19, 2026

மூர்த்தி & உமா

 மனமார்ந்த வாழ்த்துக்கள் மூர்த்தி & உமா (Uma Krishnamurthy)

94இல் பஹ்ரைனில் வேலைக்கு சேர்ந்து, ஃபேமிலி விசாவுக்காக காத்திருந்த ஒரு வருட பிரம்மச்சரிய வாழ்க்கை மறக்க முடியாதது. நான், மூர்த்தி, ஸ்வாமி மற்றும் பாலு நால்வரும் உம் அல் ஹாசம் பகுதி டூ பெட்ரூம் ஃபளாட்டில் தங்கியிருந்தோம்.
குறுகலான தெரு, நிசான் சன்னி, டாட்சன், டெயோட்டா கரோலா, கரோனா கார்கள் நிறைந்த சுற்று வட்டாரம் முழுக்க பட்டான் உடையில் பாகிஸ்தானிகளில் பெரும்போலோர் போலிஸ்காரர்கள். மலையாளிகள் இயக்கும் Cold ஸ்டோர் எனப்படும் பத்துக்கு பதினைந்தடி கடைகள் தயிர், காய்கறி, சோப்பில் ஆரம்பித்து மஃப்ளர், பொம்மைகள் வரை விற்பனை என ஒரு மினி சூப்பர் மார்கெட் போல இயங்கும். பஷ்தூன் மொழி பேசும் ஆஃப்கானிஸ்தானியர்கள் நடத்தும் குப்பூஸ் ரொட்டி தந்தூரி கடைகள், உ.பி பய்யாக்களின் லாண்டரி கடைகள்.. என பிசியாக இருக்கும் பகுதியில் எங்கள் ஃப்ளாட்.
புதனன்று மட்டும் பஹ்ரைன் டீவியில் ஒலிபரப்பும் ஹிந்திப்படத்தை அசுவாரசியமாக பார்ப்போம். மற்ற நாட்கள் எகிப்திய படங்கள்.. எல்லாமே ஆட்டம், பாட்டம், க்ளப் டான்ஸ் கிளுகிளுப்பு, தாராளமயமாக்கள் படங்கள். பாலு சிகரெட் வலித்துக்கொண்டு டீவி முன் கையில் கிளாசுடனும், கிச்சனில் சமையலில் ஸ்வாமி என பாச்சுலர்ஸ் களை தாண்டவமாடும். பாலு மற்றும் ஸ்வாமி இருவரும் பாலக்காட்டுக்காரர்கள். முதலில் வெந்நீர் வைத்து, பூசணிக்காய் நறுக்கிப் போட்டு, ஸ்வாமி அதில் மஞ்சத்தூள் அள்ளி வீசினால் அன்று மோர்க்குழம்பு என அர்த்தம்.
குக்கரிலிருந்து எடுக்கும்போதே கமகமவென மணக்கும் நீள பாகிஸ்தானிய பாசுமதி அரிசியுடன் வறுத்த வெண்டைக்காய் மிதக்கும், மஞ்சுளா நிறத்தில் மோர்க்குழம்பு திவ்யமாக இருக்கும். ஆபிசிலிருந்து மூர்த்தி உள்ளே நுழைந்தால் வீடே கலகலவென மாறும். செம்மயா எல்லோரையும் கலாய்ப்பான். ‘ஶ்ரீதர்! லெட்டர் போஸ்ட் பண்ண மனாமா போறீங்களா! ஒரு தினாருக்கு ஒரே ஸ்டாம்ப் ஒட்டுங்க, சின்ன அமௌன்ட்ல ரெண்டு மூணு ஸ்டாம்ப் ஒட்டினா வெய்ட் அதிகமாயிரும் என அவன் விஷமச்சிரிப்புடன் சொல்வதை உண்மையென நான் நம்பி விட, இடிச்சிரிப்பு சிரிப்பான். ஹூரா பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சில சமயம் சாப்பிட நால்வரும் போவோம். சேரில் உட்கார்ந்திருக்கும்போது ‘ஶ்ரீதர்! ஜாக்ரதை! காலை நீட்டிடாதீங்க, இட்லி கால்ல விழுந்துடப்போறது’ என மூர்த்தி சொல்ல மாமி செல்லமாக முறைப்பார்கள். மூர்த்தி இருந்தால் ஒரே ஜோக் மயம் தான்.
பஹ்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஆசுபத்திரியில் இதய அறுவை சிகிச்சைக்கான பெரிய உபகரணங்கள்/மெஷின்கள் போன்றவற்றை பராமரிக்கும் கம்பெனியில் இஞ்சினீயர் உத்தியோகம் மூர்த்திக்கு. அப்ப வயசு 28,29 தான் இருக்கும். திருச்சியில் நாங்கள் வசிக்கும் சுந்தர் நகருக்கு பக்கம் தான் அவர்கள் வீடென்பதால் நெருக்கமானோம்.
திருச்சி நேஷனல் ஈவினிங் காலேஜில் MSc எலெக்ட்ரானிக்ஸோ ஃபிசிக்ஸோ முடித்தபின் நேரடியாக நுழைவுத்தேர்வில் கரக்பூர் IITயில் MTech படிப்புக்கு அப்போது தேர்வான மிகச்சிலரில் ஒருவன் மூர்த்தி.
ஃபேமிலி விசா கிடைத்து உஷாவும் பெரியவனும் பஹ்ரைன் வந்து சேர, மூர்த்திக்கு அடுத்த ஓரிரு வருடங்களில் திருமணம். மனைவி உமா அவனைப்போலவே செம்ம அரட்டை. வார இறுதியில் சந்தித்து அரட்டை என நாட்கள் நகர்ந்தன.
பிறகு பல வருடங்கள் அபுதாபியில் Hewlett Packard நிறுவனத்தில் உயர்பதவி, தற்போது துபாயில் ஜாகை என வெற்றிப்பாதையில் வலம் வரும் மூர்த்திக்கு 60 வயதா என ஆச்சர்யம். மாம்பலம் லக்‌ஷன் ஹாலில் விமரிசையாக நடந்தது இந்த வைபவம். மகள் அதிதி (துபாயில் வேலை) மற்றும் அமெரிக்காவில் இருக்கும் மகன் அஷ்வத் இருவரும் அழகு & சமத்துக் குழந்தைகள்.
பல்வேறு ஹோமங்கள், ருத்ரம் ச்சமகம் பாராயணம், அதிதேவதைகளுக்கு பூரண கும்பங்கள் வைத்து பூஜைகள் மற்றும் கலச பூஜையும் செய்து, கலசங்களில் பூஜிக்கப்பட்ட புனித நீரை பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் மணமக்களின் மீது ஊற்றி, சிறியவர்கள் மணமக்களின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கியும், உமா + மூர்த்தி பெரியவர்களை நமஸ்கரித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டது கண்கொள்ளாக் காட்சி.
அபுதாபியில் ப்ராக்டிஸ் செய்யும் எனது நண்பர் ஆடிட்டர் Bs Mony ஐ திருமணத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
ப்ரேக்ஃபாஸ்ட் ஸ்கிப் செய்து நேரே லஞ்ச் தான். விநாயகா கேட்டரிங் சாம்பாருக்கு தனிச்சுவை. சுழட்டி அடித்தோம். இலையில் இருந்து தனியே எடுத்து வைத்துக்கொண்ட பருப்பு போளியை பட்டர் பேப்பரில் சுருட்டி இடது கையில் சுவைத்துக்கொண்டே வலது கையால் வண்டியை செலுத்தியபடி காஞ்சிபுரம் நோக்கிய மதிய நேரப்பயணம் ஒரு சுகானுபவம்!

No comments:

Post a Comment