பாடி ஷேம்..
சிறு வயதில் நாங்கள் என் சகோதரி Hemalatha Manohar உடன் சண்டை போடும்போது அவள் பேசுவதை இமிடேட் செய்வது, அதை குறிப்பிட்டு கேலி செய்து போன்றவைகளை கண்டால் எங்க அப்பா செம்ம கடுப்பாகி விடுவார். அதிலும் அக்கா கண்கள் ஓரம் லேசாக ஈரமாகி விட்டால் போதும், தொலைந்தோம் நாங்கள். ‘சண்டை போடு.. எதுக்காக கேலி செஞ்சு அவமானப்படுத்தறே!’ என்பதே அவர் வாதம்.
விடுமுறைக்கு பெரியவன் பஹ்ரைன் வந்திருந்த சமயம், மனைவியுடன் நான் ஏதோ சப்ஜெக்ட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது ‘ஆமா! ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசாதே!’ என்று சொன்னதுதான் தாமதம், வெகுண்டெழுந்த பையன் ‘பொதுவா பேசு, ஆர்க்யூ பண்ணு, ஆனா பெர்சனலா எதுக்கு நீ அட்டாக் செய்றே! என எச்சரித்தான். ப்ளம்பர், ஆட்டோக்காரர் போன்றவர்களுடன் பேசும்போது கூட GenZ குழந்தைகள் அண்ணா, அக்கா, தீதி என மரியாதையுடன் அழைத்து, உருவகேலி செய்யாமல் அவர்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள். ஆக, குழந்தைகள் நம்மை விட மேல்.
நம்மில் நிறைய பேர் சாதாரணமாக மற்றவர்களுடன் விவாதம் செய்யும்போது சடாரென தனிமனித தாக்குதலில் இறங்கி விடுகிறோம். காரணம் அது எதிரே இருப்பவரை சுலபமாக சாய்த்து விடுமென்ற அல்ப சந்தோஷம். ‘ சொல்றேன்னு தப்பா எடுத்துக்க வேணாம். உங்க வீட்டுப் பொண்ணே அது மாதிரி ஓடிப்போச்சுன்னா என் பண்ணுவீங்க!’ போன்ற நாகரீகமற்ற வாதங்கள்.
நண்பர் Saravanan Natarajan அவர்களை அவரது ஷார்ஜா இல்லத்தில் சந்தித்தபோது அவர் சேகரித்து வைத்திருந்த சீடி மற்றும் கேசட்டுகள் அடங்கிய மிகப்பெரிய மர ட்ரிங்க் பெட்டியைப்பற்றி குறிப்பிடும்போது எனது சமீபத்திய பதிவில் ‘இரண்டு உசிலைமணிகள் உள்ளே உட்கார்ந்து சீட்டாடத்தக்கனையான பெரிய பெட்டி’ எனக் குறிப்பிட்டுருந்தேன். நகைச்சுவைக்காக இப்படி நான் குறிப்பிட்டிருந்தாலும், உசிலைமணியவர்களை பாடி ஷேம் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை தான், அவரது உறவினர்கள் வருத்தப்பட மாட்டார்களா!
தமிழ் சினிமாவில் செந்திலை ‘பரோட்டா தலையா.. பனங்கா மண்டைய்யா!’ என கவுண்டமணி அழைக்கும் போது சிரித்து ரசிக்கும் நாம், அது எத்தனையோ பேரை ‘பாடி ஷேம்’ செய்கிறது என்பதை உணர்வதில்லை. சந்தானம் கூட கவுண்டமணி வழியை பின்பற்றியவர் தான்.
மேடையில் பேசும்போது நடிகர் ராதாரவி கூட ஒரு முறை குறைமாதத்தில் பிறந்த சிறுவன் எப்படி வாயில் எச்சில் ஒழுக, வாய் கோணியபடி, சூம்பிய ஒரு கையுடன் தன்னை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளச்சொல்லி மற்ற பையன்களிடம் கெஞ்சுவான் என நடித்துக்காட்டிய சம்பவம் வருத்தமளித்தது. அரசியல் கூட்டணி தொடர்பாக அவர் ஏதோ சொல்லவந்த போது இந்த உவமையை பயன்படுத்தினாலும் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள்!
சோப்பு சீப்பு கண்ணாடி படத்தில் ‘காதலியுடன் வீட்டில் ஒளிந்திருக்கும் நாகேஷை பார்த்து, திருடன் என நினைத்து, பேச்சுத்திணறல் உள்ள வீட்டு வேலைக்காரன் போலிசுக்கு போன் செய்து தி… தி.. தி எனச்சொல்ல முயல, வீடு தீப்பிடித்து விட்டதாக நினைத்து அவர்கள் ஃபயர் எஞ்சினை அனுப்பி விட, அதற்குள் நாகேஷ் கோதுமை மாவு டின்னை உருட்டி விட, வெண்புகை போல மாவு ஜன்னலுக்கு வெளியே பறக்க, தீயனைக்கும் வீரர்கள் சர்ரென குழாயில் தண்ணீர் அடிக்க, விழுந்து விழுந்து சிரிக்கும் நாம், அந்த படத்தை பார்க்கும் திக்கி திக்கி பேசும் ஊனமுற்றோரின் மனநிலையை பற்றி கவலைப்பட்டோமா!
‘ப்ர்ர்ர்ர்ரென’ உதட்டை பிதுக்கி நீண்ட சிரிப்பு சிரிக்கும் பிரமிளாவை (அரங்கேற்றம்) ஒரு காட்சியில் ‘ஆம்பளைன்னாலே மரத்துப் போச்சு!’ என வசனம் பேசவைத்த பாலச்சந்தர், அடுத்த நிமிடம் அப்பா எஸ்.வி சுப்பையா தன் மனைவி எம்.என். ராஜத்திடம் ‘போடி அசடு.. மறந்து போச்சுன்னு சொல்லியிருப்பா!’ என சமாளிப்பது போல இருந்தாலும் அதுவும் பெண்களை உடல்கேலி செய்யும் வகையைச்சார்ந்தது என நினைத்தாரா இயக்குநர்! ’
சமூக வளைதளங்களில், ஜீனத் அமனின் இளவயது கவர்ச்சி படம் மற்றும் தற்போதைய 73 வயது படத்தைப்போட்டு எப்பிடி இருந்தவங்க எப்பிடி ஆயிட்டாங்க போன்ற கருத்துக்களை ரசிப்பவர்கள் தங்கள் தாய் தந்தையர் எப்படி வயது மூப்பில் மாறியிருக்கிறார்கள் என்பதை சிந்திப்பார்களா! வயது ஏற ஏற நாம் அனைவருக்கும் உடலளவில் உயிரியல் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை தானே!
‘நீ ஒரு பெண்ணின் தோற்றத்தை வைத்து அவளை மதிப்பீடு செய்வாயானால், அது உன்னைத்தான் மதிப்பிடுகிறது அன்றி அவளை அல்ல’ என்கிற மேற்கோளின் அர்த்தத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் கண்கூடாக பார்த்து தெரிந்து கொண்டோம்.

No comments:
Post a Comment