வாழ்த்துக்கள் கலைமாமணி ஓவியர் ஜீவநந்தன் சார்!
70,80களில் தென்னூர் பாபுசெட்டித்தெருவில் குடியிருந்தபோது பக்கத்து வீட்டுக்காரர்கள் சினிமா பேனர் வரைபவர்கள். தீபம் படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்பு இரவு பகலாக சிவாஜியின் பேனர் வரைவார்கள். கிட்டத்தட்ட இரண்டு வீடுகள் முழுவதும் மறைக்கும் அளவிற்கு ரோட்டோரத்தில் ராட்சத பேனரை சாய்த்து வைத்து ஏணி மீது ஏறி சிவாஜியின் முகத்தை வரைவதற்கு அங்கங்கே தலை, தோள், உடல் என குறிப்பிட்ட பாகங்களை மட்டும் கோடுகள் மூலம் குறித்துக்கொண்டு ஓனர் இறங்கி விட, அவரிடம் வேலை செய்யும் இளம் சிறுவர்கள் ஏணியில் ஏறி புருவம், கண் என வரைய ஆரம்பிப்பார்கள். குறுக்கா நெடுக்கா அந்தப்பக்கம் போகும் வரும்போது பார்ப்போம். கோடுகளால் வரைந்த கண்களை பச்சை பெயின்ட்டால் இன்னும் அடர்த்தியாக்கி, அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் அந்தப்பக்கம் போகும்போது கற்றை முடியை சிவாஜியின் நெற்றியில் புரள வைக்கும் சிறுவர்களை பார்த்து மலைத்துப்போவோம். முழு பேனர் வரைந்து முடிந்ததும் பச்சை கலர் சமிக்கிகளை சிவாஜியின் முகம் முழுவதும் குத்தி பளபளவென மின்ன வைப்பார்கள். பத்மாமணி தியேட்டரில் அந்த பேனரை உயரத்தில் மாட்டி விட்டதை பார்த்தால், வரையும்போது பார்த்த ராட்சத பேனரா அது என திகைக்க வைக்கும் அளவு நேர்த்தியாக இருக்கும். பக்கத்தில் சுஜாதா மற்றும் நாகேஷ் படங்கள் சிறியதாக வேறு வண்ணங்களில்.
கோவை ஒப்பணக்கார வீதிக்கு அருகில் சினி ஆர்ட்ஸ் அலுவலகம் உள்ளே நுழைந்தால் முன் வரவேற்பறை, 3 நாற்காலிகள் மற்றும் ஒரு சிறிய டெஸ்க் போடப்பட்டு. சுவற்றில் ஆணியில் அறையப்பட்ட மர அலமாரி முழுக்க இவர் வாங்கிய கோப்பைகள். அந்தக்காலத்தில் கோவையில் புகழ் பெற்ற பேனர் ஓவியங்கள் வரைபவர்கள். தந்தை திரு. வேலாயுதம் அவர்கள் அந்நிறுவணத்தை துவக்கி பல வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய பின் அடுத்த தலைமுறைக்கு கடத்தியவர்.
‘சின்னூன்டு புகைப்படத்த பாத்து எப்பிடி சார் பிரம்மாண்டமான பேனர்கள் வரைஞ்சீங்க?’ என ஆச்சரியத்துடன் கேட்டேன். ‘இருட்டு அறையில் அந்த சின்ன புகைப்படத்த ஒரு மின் விளக்கு கீழே பொருத்தப்பட்ட கண்ணாடி மேல் கவிழ்த்து வைத்து அதனின் பன்மடங்கு அதிகரிக்கப்பட்ட பிம்பத்தை வெள்ளை பேனரின் மேல் பாய்ச்சுவோம். பிறகு பேனரின் பிம்பத்தின் மேல் தலை, தோள், உடல் என குறிப்பிட்ட பாகங்களை மட்டும் கோடுகள் மூலம் குறித்துக்கொண்டு, பேனரை வெளியே கொண்டு வந்து புருவம், கண், மூக்கு என ஒவ்வொரு பாகத்தையும் துல்லியமாக வரைவோம் என அவர் சொன்னபோது, அந்தக்காலத்தில் சாலை ஒரத்தில் மிகவும் அதிக உயரத்தில் ஷோலே பட பேனர்களை அவர்கள் வரைந்து வைத்தது நினைவுக்கு வந்தது. அபாரமான ஆற்றல் வேண்டும் அப்படி வரைய. நூற்றுக்கணக்கான பேனர்கள் வரையப்பட்டு இரவில் லாரிகளில் வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுமாம்.
டிஜிடல் ஓவியங்களைப்பற்றி சிறிது நேரம் விளக்கியவர் ‘வாங்க உள்ள’ என அடுத்த அறையிலுள்ள தனது ஓவியக்கூடத்திற்குள் அழைத்துச்சென்றார். ஃபோட்டோஷாப் மென்பொருள் மூலம் படங்களை வரைவதற்கேற்ப திருத்தி, மேசையின் மேலுள்ள பேடில் இவர் டிஜிடல் பேனாவால் கொடுகள் இழுக்க எதிரே கம்ப்யூட்டர் திரையில் பளிச்சென உருவம்! அடுத்து திரையின் பக்கவாட்டில் தனக்கு வேண்டிய வர்ணங்களை தேர்வு செய்து அள்ளி ஒவியத்தினுள் வீசி கலக்கலானார். இளம் பெண்ணின் கேசம், மின்னும் உதடுகள், பளிச்சென கண்கள் என ஓரிரு நிமிடங்களில் அற்புத ஓவியத்தை என் கண் முன் கொணர்ந்தார். அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஓவியம் மட்டுமல்லாது அற்புதமான எழுத்தாளரும் கூட. ‘ஒரு பீடியுண்டோ சகாவே’ என்ற இவரது புத்தகம் பிரபலமானது நமக்கெல்லாம் தெரியும். தனது ‘திரைச்சீலை’ என்ற நூலுக்கு ஜனாதிபதி விருது பெற்றவர், அரசியல் அறிவியல் (Political Science) மற்றும் சட்டத்துறையில் பட்டப்படிப்பு படித்தவர், தமிழ் திரை உலகின் ஓர் அங்கமான CineArtsஇன் ஸ்தாபகரான தந்தை வழியில் அந்நிறுவனத்தை இன்றும் சகோதரர்களுடன் வெற்றிகரமாக இயக்குபவர் இவர்.

No comments:
Post a Comment