இந்த நெய்வேலிக்காரர்களுக்கென்றே ஒரு பிரத்யேக குணம் உண்டு. எனக்கு மொத்தமே ஏழெட்டு நெய்வேலி நண்பர்கள் தாம் உளர். சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் சாந்தஸ்வரூபிகள், பழக இனிமையானவர்கள், மண்டை நிறைய மூளை உள்ளவர்கள், நடுத்தர குடும்பங்கள் கொண்ட பின்புலம், சிறுவயதில் கடின உழைப்பு, நல்ல படிப்பு, நல்ல வேலை என உயர்ந்தவர்கள், அயல்நாட்டில் நல்ல பதவியில் இருப்பவர்கள், ஏராளமான நண்பர்களுடன் நல்ல நட்பு பாராட்டுபவர்கள். அபரிதமான ஆங்கிலப்புலமை மிக்கவர்கள். நிறைய பிரயாணம், க்ஷேத்ராடனம் என நாட்களை கழிப்பவர்கள். முக்கியமாக ஒன்று.. விளையாட்டு.. குறிப்பாக அதீத கிரிக்கெட் ரசிகர்கள்.
அதென்ன நெய்வேலிக்கு அப்படி ஒரு விசேஷம்! நிச்சயம் நல்ல பள்ளிக்கூடங்கள், கல்லூரி, விளையாட்டு மைதானங்கள், கோவில்கள் உள்ள ஊராக இருக்குமென நினைக்கிறேன்.
மேற்குறிப்பிட்ட அனைத்து கல்யாண குணங்களும் கொண்டவர் தான் இவர். எனது முகநூல் சகாகங்களில் இனிமையானவர்களில் ஒருவர். ‘இத்தினி நாள் எங்கய்யா இருந்தே!’ என வியக்கும் அளவிற்கு கடந்த மூன்று வருடங்கள் முன்பு தான் எனது முகநூல் நண்பரானவர். சென்ற வருடம் பெங்களூரில் நண்பர்களுடன் இவரை ஜெயநகர் பகுதியில் சந்தித்து இரவு உணவு, அரட்டை என மூன்று மணி நேரங்கள் போனது.
ஐ.டி துறையில் பல வருடங்கள் அமெரிக்காவில் இருக்கிறார். தற்போது வேலையை ஓரத்தில் வைத்துவிட்டு, அமெரிக்காவை மையமாக வைத்துக்கொண்டு பல நாடுகள் பறந்து போய் சுற்றிப்பார்த்து, தனது பயண அனுபவங்களை முகநூலில் பதிவிடுகிறார்.
தீவிர சிவ பக்தர் என்பது இவரது பதிவுகள் பார்த்து தெரிந்துகொள்ளலாம். சிவனைப்பற்றிய நிறைய செய்யுள்கள், பதிகங்கள், கட்டுரைகள் என எழுதுதல், உத்தரகாண்டம், கைலாசமலை என தனது ஆன்மிக விஜயங்கள் குறித்து எழுதுபவர். குறிப்பாக அபாரமான ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்தாற்றல் கொண்டவர். சஷி தரூர் போல டிக்ஷ்ணரி தேவைப்படும் ஆங்கில வார்த்தைகள் பிரயோகிக்காமல் ஸ்டைலிஷ் ஆங்கில வர்ணனைகள் பிச்சி உதறுவார்.
விதவிதமான உணவு பதார்த்தங்கள் சுவைப்பது, நானாவித சிறு உணவுக்கூடங்களுக்கு படையெடுத்து, ரசித்து உண்டு, அந்த அனுபவத்தை வார்த்தையில் வடித்து புலகாங்கிதமடைபவர்.

No comments:
Post a Comment