லேபக்ஷி (ஆந்திரா) ஒரு நாள் ட்ரிப்..
சீதையைத்தேடிச் செல்லும் வழியில் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஜடாயுவை பார்த்து ராமன், ‘லே பக்ஷி!’ (தெலுங்கில் லே=எழுந்திரு) எனக்கேட்க அந்த இடத்திற்கு லேபக்ஷி என்ற பெயர்.
காலை 7 மணிக்கு வண்டியை கிளப்பி, ஷட்டகர் குடும்பத்தை பிக்கப் செய்துகொண்டு, பெங்களூர் ஏர்போர்ட் சுங்கச்சாவடி தாண்டியதும் லைட் டிபன் காபியை முடித்துக்கொண்டு ஆக்ஸிலேட்டரை அழுத்தினால், சிக்கபல்லாப்பூர் தாண்டி ஒரு மணி நேரத்தில் ஆந்திரா பார்டரில் லேபக்ஷி (ஶ்ரீசத்யசாய் மாவட்டம்) வந்துவிடும்.
முழுக்க பாறைகளின் மேல் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய பழம்பெரும் வீரபத்ரர் கோவில். கோவில் பிரகாரத்தையடுத்து , சிவன் பார்வதி திருமணத்திற்காக கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட மண்டபம். ராமர் பாதம் பார்க்க வந்த வட இந்தியர்கள் கூட்டமே இல்லையென்றாலும் எல்லோரையும் தள்ளிக்கொண்டு பார்த்தார்கள். துர்கா தேவிக்கென தனி சன்னதி இல்லாமல் பிரகாரத்தின் ஒரு மூலையில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து, அவளது உக்கிரமான கண்களை நேராக பார்க்க பயமென்பதால் எதிரே பெரிய கண்ணாடி வைத்து, பக்கவாட்டில் நின்றபடி கண்ணாடி பார்த்து அம்மனை தரிசிக்கலாம். நாம் நினைத்து வேண்டிக்கொண்டதை நிறைவேற்றி வைக்கிறாள் சுட்டெறிக்கும் கண்களுடன்.
மண்டப தூண்களில் ஒன்று தரையில் பதியாமல் தொட்டும் தொடாமல் உள்ளது. அதெப்படி! கீழே இடைவெளியில் சேலை தலைப்பு அல்லது துப்பட்டாவை மக்கள் இந்தப்பக்கம் விட்டு இழுத்து அந்தப்பக்கம் எடுப்பதை சென்றமுறை பார்த்து வியந்த நான், இந்த முறை முயன்று அது முடியவில்லை. விஷமக்காரன் எவனோ நாணயத்தை உள்ளே தள்ளிவிட்டிருக்கிறான். (வீடியோ பார்க்க)
பிரம்மாண்டமான நாகலிங்க பிள்ளையாரை பாறையில் வடித்திருக்கிறார்கள். இரண்டாள் உயரம் இருக்கும். கோவிலை விட்டு வெளியே வரும்போது ‘அன்னதானம் அக்கடே உந்தி.. ரெண்டி!’ என வாலண்டியர்கள் பக்தர்களை அழைக்கிறார்கள். குளிராக இருந்தாலும் இளநீர் விற்பனை அமோகம் அங்கே. ‘நீளு, கெஞ்சி காவலி’ என்றதும் நல்ல பச்சையான இளநீரை வெட்டிக்கொடுத்தார் அந்தப்பெண்மணி. நல்ல இனிப்பு இளநீர் மற்றும் தேங்காய். (கெஞ்சி=இளநீர் கஞ்சி)
பெரிய ஜடாயுவின் சிலை மலைக்கு மேல் வைக்கப்பட்டு மக்கள் படியில் ஏறி மேலே போக, நாங்கள் கீழிருந்தே பார்த்தோம். பிரம்மாண்டமான ந்ந்தி சிலை கொண்ட பூங்க பிரமிக்க வைத்தது.
‘பொருகுலு’ (பொறி) வைத்திருந்த பெண் கையில் பிளாஸ்டிக் க்ளவுஸ் அணிந்துகொண்டு பெரிய எவர்சில்வர் ஏனத்தில் நாலைந்து கைகள் பொறியை அள்ளிப்போட்டு, கார சட்னி, வெங்காயம், கடலை, காராச்சேவு, மாங்காய், வெள்ளரி அரிந்து போட்டு மசாலா பொடி தூவி பொட்டலத்தில் கொடுத்தார். 40 ரூபாய்க்கு செம்ம டேஸ்ட். அப்படியே கையில் எடுத்து சாப்பிட வேண்டும் என்றவரிடம் ‘ திக்கான பேப்பரை சதுரமாக கட் பண்ணி அதையே ஸ்பூன் போல கொடுக்கலாமே’ என்ற தமிழ்நாட்டு ஐடியாவை கொடுக்க, உடனே ஏற்றுக்கொண்டு ‘ஏ பில்லலா! அண்ணையா செப்பினட்டே பேப்பர்னி கட் செய்யண்டி!’ என மற்ற பெண்களை ஏவினார்.
அழகிய கிராமம். அரிசி மற்றும் எல்லா பருப்பு வகைகளையும் பயிர் செய்து ரோட்டோரத்திலேயே அரை கிலோ பொட்டலங்களாக கட்டி விற்கிறார்கள். கடுகு, வெந்தயம், பயறு, பாத்திரம், கத்தி, இரும்பு சாமான்கள் விற்பனை. சுகமாக கிராமத்து ஷாப்பிங் செய்தோம். அந்த எவர்சில்வர் பேசினை திருப்பி பேடிஎம்மில் ஸ்கேன் செய்யச்சொன்னார் கில்லாடி ரேவந்த் ரெட்டி.
மணி மதியம் இரண்டு.. நல்ல பசி. பெங்களூர் திரும்ப நாலு மணியாகி விடுமென்பதால் சாப்பாட்டுக்கடை தேடினோம். ‘இக்கடே ஓட்டல் எதினா உந்தா?’ எனக்கேட்க ‘நேருங்கா பொண்டி, ஒஸ்துந்தி’ என ஒருவர் கைகாட்ட, சாராயக்கடைகள் தாண்டி, அடுத்த பத்து நிமிடத்தில் கௌரிபிட்னூர் என்ற சிற்றூரில் விஷ்னு கிராண்ட் எனும் உணவகம். அவசரமாக இறங்கி ஓடினோம். பார்டர் என்பதால் கன்னடம்/தெலுங்கு பேசுகிறார்கள். பெங்களூரிலேயே தெலுங்கு மட்டும் பேசுகிற ஆளான நான் ஆந்திராவென்றால் கண்ட்டசாலா ஆகிவிடுவேன்.
தாலி சாப்பாட்டில் ராகி (முத்தே) களி உருண்டை, சப்பாத்தி மற்றும் இன்னபிற வஸ்துக்கள். எனக்கு பிடித்த ‘அன்னம்+பப்புகூற மாத்ரம் சிக்குதா?’ எனக்கேட்க அரிசியுடன் பருப்பு கீரை வைத்தான். தொட்டுக்க மதூர் வடா. அபார ருசி. இந்த மதூர் வடா என்பது நம்மூர் தட்டை போல. ரவையை ஊறவைத்து மாவாக பிசைந்து வெண்ணெய், வெங்காயம் மற்றும் ஓமம் எல்லாம் சேர்த்து தட்டையாக எண்ணெயில் பொறித்தெடுக்கிறார்கள். கொலஸ்ட்ரால் எகிறும். A to Z அல்ஃப்பெட் லிஸ்ட் போட்டு எல்லா எழுத்துகளுக்கும் ஒரு பண்டம் செய்கிறார்கள் (படம் பார்க்க!)
கௌரிபிடனூர் சாலை ஓரத்தில் நாட்டி (நாட்டு) காய்கறிகள் ஃப்ரெஷ்ஷாக விற்கிறார்கள். குறிப்பாக அவர்கள் விரும்பி சாப்பிடும் அவரைக்காய். தோலை உரித்து அவரை விதைகளை அரைத்து தோசையில், களியில் சேர்க்கிறார்கள். விதையின் தோலோடு சாப்பிட்டால் வாயுத்தொல்லை வராதாம். தோலை பிதுக்கி சமைத்தால் ஹைட்ரஜன் பாம் தானாம்.
அப்படியே வண்டியை திருப்பி அடுத்த 45 நிமிடத்தில் காட்டி (Ghati) சுப்பரமண்யா ஊருக்கு வந்தோம். நம் தூரத்து உறவினர் ஒருவர் கன்ட்ரி க்ளப்பின் CEOவாக இருந்தவர். அந்தப்பக்கம் நிலங்கள் வாங்கி ப்ளாட் போடுகிறார். சுமார் 25லட்ச செலவில் காட்டி சுப்ரமண்யா ஊர் வாயிலில் அவர் ஒரு ஆர்ச் கட்டிக்கொடுத்திருக்க, அதையும் போய் பார்த்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.
ஏழுதலை பாம்புடன் முருகன் மற்றும் ந்ரசிம்மர் சுயம்பு வடிவில் நாக தெய்வமாக கா(G)ட்டி சுப்ரமண்யா என்ற பெயரில். 50 ரூபாய்க்கு ஸ்பெஷல் டிக்கெட் பத்து நிமிடம் வரிசையில் நின்று தரிசனம் முடித்து கோவிலின் பின்பக்கம் வந்தால் சுமார் ஆயிரம் நாகதேவதைகள் கல்லில் செய்து வைத்திருக்கிறார்கள். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பணம் கட்டி நாகசிலை செய்து வைத்து அவர்கள் பெயரை பொறித்து வைக்கிறார்கள், நல்ல பலன் கிட்டுமாம்.
லேசாக இருட்டத்தொடங்க, வண்டியை கிளப்பி தொட்டபல்லாப்பூர் வழியே அடுத்த ஒரு மணி நேரத்தில் யேலஹங்க்கா, ஹெப்பால் தாண்டி ஏழு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.
பெங்களூரிலிருந்து ஒருநாள் டிரிப்புக்கு மைசூர், தும்கூர், ஆந்திரா, கோலார் பக்கம் போய்வர நிறைய இடங்கள் உள்ளன. ஏகப்பட்ட கோவில்கள் அன்னப்பிரசாதத்துடன். நல்ல ஓட்டல் சாப்பாடு கிடைப்பது அரிது. நம்மைப்போல மாலை நாலு மணிக்கு வாய் நமநமத்து பஜ்ஜி, பக்கோடா, டீ சாப்பிடும் ஆசையே இல்லாதவர்கள். ஆனால் தண்ணியடிக்கச்சொல்லுங்கள் போதும், நேரங்காலம் பார்க்காமல் பாட்டிலை திறப்பான்கள்.
No comments:
Post a Comment