Sunday, July 19, 2026

ஒட்ட நறுக்கனும்


 அப்ப நான் சின்ன பையன். மாதத்தில் முதல் வாரம் ஞாயித்தி கிழமை காலை தலைமயிர் வெட்ட என்னையும் என் தம்பியையும் இழுத்துக்கொண்டு போவார் அப்பா. தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவை கடந்து மூலைக்கொல்லைத்தெரு முகனையில் நடேசன் முடி திருத்தும் நிலையம். வாசலில் தலைப்பகுதியும் கால்பாகமும் இல்லாது நடுப்பாகம் மட்டும் கொண்ட ஒருக்கழிந்திருக்கும் ‘வருக

🙏 வருக’ கதவை தள்ளிக்கொண்டு உள்ளே போனால் பின்னால் கதவு தானே மூடிக்கொள்ளும்.
ரெண்டு மூன்று பேர் மர பெஞ்சில் காத்திருக்க, பக்கத்தில் வாராந்தரி ராணி, தினத்தந்தி என நாளிதழ்கள். ஞாயிரென்பதால் குஞ்சுகுளுவான்களும் அங்கே. மூலையில் ஈர மணற்குன்றின் மேல் பானைத்தண்ணீர். உசரமான மர நாற்காலி கைப்பிடி மேலே குறுக்காக மரப்பலகையை போட்டு மேலே ஏற்றி நம்மை உட்கார வைக்க, அங்கிருந்து கண்ணாடியில் நம் முகத்தைப் பார்க்க குஷியாக இருக்கும்ல, லேசாக சிரிப்பும் வரும். கீழே மர அலமாரியிலிருந்து கொள்ளிட சலவை வெள்ளாவி வாசத்துடன் வெள்ளைத்துணியை எடுத்து படீர்ர்ர்ரென உதறி நம் விழி பிதுங்க கழுத்தை சுற்றி கட்டி, விரலை விட்டு துணியை சற்று தளர்த்துவார் நடேசன்.
ஒட்ட நறுக்கனும் என சொல்லிவிட்டு அப்பா பாட்டுக்கு வீட்டுக்கு போயிடுவார். நடேசன் சின்ன கின்னத்தில் தண்ணீரில் விரல்களை முக்கி நம் கேசத்தை ஆதரவுடன் தடவி, தலையை ஈரமாக்கி, முடியை அவரது வழிக்கு கொண்டு வருவார். முன்னாடி ரொம்ப வெட்டிடாதீங்க என நாம் கெஞ்சியும் தயவு தாட்சண்யமில்லாமல் கட்டிங் மெஷினை நடு முதுகு தண்டில் ஆரம்பித்து கட கட கடவென கழுத்து வழியாக மேலேற்ற நமக்கு கூச்சமாக இருக்கும். க்ரிக்.. க்ரிக்கென கத்தரிக்கோலின் சிட்டுக்குருவி நாதத்தின் நடுவே டிக் டிக் என அவ்வப்போது சீப்பினால் ஒரு தட்டு. தரையில் கிடக்கும் முடிக்கற்றை பார்க்க அழத்தோன்றும். அவ்வப்போது ஒரு முழ உசர பாட்டிலின் தலையில் 8 போன்ற வளையத்தில் விரலை விட்டு சர்சர்ரென தண்ணீரை நம் முகத்திலும் தலையிலும் பீய்ச்சி அடிக்க ஜில்லுனு இருக்கும்.
பின்னாளில் டோபாஸ் பிளேடை காகிதத்துடன் மடித்து இரண்டாக உடைத்து அதிலொன்றை சவரக்கத்திக்குள் சொருகி நம் காதுகளை மடித்து ‘வர்க் வர்க்’கென வளைவாக கீறி அழகாக கீழே கழுத்து வரை கத்தியை கொண்டு வர, வலியும் கூச்சமும் கலந்த புல்லரிக்கும் சுகம். டோபாஸ் வருமுன் சாணைக்கத்தி, சவரக்கத்தி தான். மூலையில் தொங்கும் கருப்புத்தோல் பட்டையில் சவரக்கத்தியை தேய்த்து அப்பப்ப சாணை பிடிப்பார்.
முகச்சவரம் செய்த பின் சில பெருசுகளுக்கு முகத்தில் படிகாரக்கல்லை தேய்த்து வெட்டுக்காயங்களை ஆற்றுவார். எனக்கு பிடிக்காதது, சிலர் சவரம் செய்ததும் சட்டை மேல் பட்டனை கழற்ற நடேசன் அவர்களது அக்குள் முடியை சர்க்.. சர்க் என நான்கே நொடிகளில் சிரைத்து கீழே தள்ளுவது..
மர பெஞ்சு பெருசுகள் பெரும்பாலும் மதுரை முத்து, அன்பில் தர்மலிங்கம், காளிமுத்து போன்றோரின் மேடைப்பேச்சுக்களைப்பற்றி பேசி சிலாகித்துக்கொண்டிருப்பர். பெரும் வியாதியஸ்தர்கள் கடையில் நுழையக்கூடாது என்று போர்டு அந்தப்பக்கம் உண்டு. 1.04.70 முதல் கட்டிங், சேவிங், சிறுவர் கட்டிங் என புதிய விலைப்பட்டியல். தினத்தந்தி பேப்பரை சின்ன சதுரங்களாக வெட்டி கம்பி கொக்கியில் தொங்க விடப்பட்டிருக்கும், முகச்சவர கத்தியிலிருந்து சோப்பு நுரையை வழித்தெடுக்க. அடுத்து திருச்சி மருத்துவர் சங்க பதிவு சான்றிதழ். இந்தப்பக்கம் ஈரத்துணியுடன் அரைகுறையாக ரேகா பட காலண்டர். எல்லாம் முடிந்து புசுபுசுவென புருசால் முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து, முகத்தில் தண்ணீர் அடித்து அழுத்தி துடைத்து, நம் தாவாங்கட்டையிலிருந்து நெற்றி வரை ஸ்னோ மற்றும் பாண்ட்ஸ் பவுடர் பூசி கமகமவென வீட்டுக்கு அனுப்புவார் நடேசன்.
நேராக புழக்கடை பக்கம் வழியாக உள்ளே போய் (வாசல் பக்கம் உள்ளே போனால் பளாரென அடி விழும்) சட்டென சட்டை கால்சராயை கழற்றி கீழே உட்கார, கிணற்றில் தண்ணீர் சேந்தி தலையில் கொட்டுவார்கள். குளித்து முடிந்ததும் பின்தலையில் கீழிருந்து மேலே கையை சர்ரென தேய்க்க நன்றாக இருக்கும்.
பின்னர் 16 வயதிற்கு மேல் பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தில் ஸ்டெப் கட் செய்துகொள்ள போவதுண்டு. காதுகளை மூடியபடி வெட்டிக் கொண்டு ராபர்ட் கிளைவ் போல வெளியே வருவோம். அடுத்த சில வருடங்களில் ஸ்டெப் கட்டின் இறக்கம் பாதி காது வரை குறைந்து தூக்கிவாரிய கேசத்துடன் வாழ்வே மாயம் கமல் ஹேர் ஸ்டைலுக்காக வெம்பிலி சலூன் அல்லது திருச்சி மலைவாசல் மார்க்கரெட் சலூன் போவதுண்டு.
அப்புறம் பம்பாய் வாழ்க்கை.. குளுகுளு ஏசி சலூன்களில் கடுகடு மராட்டியர்கள் தம்பாக் மென்றபடி செய்யும் முடிதிருத்தம் திருப்தியில்லை. ‘முன்னாடி ரொம்ப கொறைச்சிட்டியேப்பா!’ என கேட்டால் ‘தும் கிதர் பராபர் போலா? மேனே காட்லியாலே!’ என அங்கலாய்த்தவர்களை விட்டு விட்டேன். அடுத்து செம்பூரில் ஸ்டேஷன் அருகே ரோட்டோரத்தில் திருநெல்வேலி அண்ணாச்சி இளைஞர்கள் நடத்தும் பெட்டிக்கடை போன்ற சிறு முடி திருத்தகங்கள். திருப்தியாக சொன்னபடி வெட்டி விட்டு டீயும் வாங்கித் தருவார்கள். பப்பி லஹரி டிஸ்கோ, அன்னு மல்லிக் மற்றும் நதீம் ஷ்ரவண் பாடல்களை ஜங்க்கார் பீட்ஸுடன் தும்..தும்மென அதிரடியாக போட்டு அலறடித்து, ஆழ்துளை கிணத்துக்குள்ளேயிருந்து அடித்தொண்டையில் ஆஷக்கி பாட்டை குமார் சானு பாட, வாடிக்கையாளர்களின் மண்டையை வெகுவாக சூடாக்கி சிகை அலங்காரம் செய்வார்கள், மிக குறைந்த கட்டணத்தில்.
அப்புறம் இந்தியாவிலிருந்து பஹ்ரைன் வந்து 27 வருடங்கள். மலையாளிகளும் தமிழர்களும் நடத்தும் கடைகள், நடு வகிடு எடுத்து பாகவதர் போல தொங்கும் கேசமுள்ள பாகிஸ்தானியர்கள் நடத்தும் சலூன்கள், வாடிக்கையாளர்கள் வரும்முன் தினமும் தமக்கே முதலில் மழமழவென முகச்சவரம் செய்து கொண்டு கடை திறக்கும் மீசையில்லா பங்களாதேசி சலூன்கள். மொராக்கன் சலூன்/ஸ்பாக்கள், பெண்களை விட அழகான ஃபிலிப்பினோ திருநங்கைகளின் சலூன்கள் என பல வகைகள்.
கிரிக்கெட் மேட்சோ, ஓமன் சாண்டியோ, ஶ்ரீகுமாரென் தம்பி பாடலோ, மம்மூட்டி படமோ தலைக்கு மேலே கைராலி டீவியில் ஓட, மலையாளி அன்பர் கிர்ரென மெஷின் கட்டிங் செய்து, சாதம் பிசைவது போல விரல்களை தலையில் களைந்து மசாஜ் செய்து, கழுத்து தோள் கைகளில் இறுக்க பிடித்துவிட்டு, விஜய்காந்த் வில்லன் கழுத்தை திருகி ஒடிப்பது போல நம் கழுத்தை திருப்பி சொடக்கெடுப்பார். ‘மீடியம் மதி.. கொறவாக்கண்டா!’ என கேட்டுக்கொண்டால் பக்கவாட்டு, பின்புறம் மட்டும் குறைத்து முன் மண்டையில் லேசாக ஆரம்பித்த இளம் வழுக்கையை மூடுவதற்கு ஏற்ப முடியை விட்டு விடுவார். நாம் கொண்டுபோகும் பைஜன் ஹேர் டையை பூசி 10 நிமிடம் காய வைத்து வாஷ்பேஸினில் தலையை கொடுத்து கழுவி அழகாக தலை சீவி நம்மை வீட்டுக்கு அனுப்ச்சி வைப்பார்.
தற்போது பெங்களூர் வந்ததும் சில பல சலூன்கள் போய் திருப்தி இல்லை. நேச்சுரல் சலூன் தண்டச்செலவு, மசாஜ் செய்ய மாட்டானாம். அர்பன் கிளப் போன் செய்தால் வடகிழக்கு பையன் வீட்டிற்கு வந்து ஹேர்கட் செய்கிறான், ரொம்ப சுமாராக. வீட்டிற்கு அருகே இராணுவ அமைச்சகத்தின் DRDO காலனியில் தெலுங்குக்காரன் அருமையாக கட் செய்து தலைக்கு ஆயில் மசாஜ் செய்தான். ஆனால் மேலே டீவியில் ‘ஒரேய் நேனு ச்சம்ப்பேஸ்தானு!’ என வெட்டுக்கத்தி, சுமோ கார் படைகள் சத்தம் காதை பிளக்க, அங்கு போவதை விட்டுவிட்டேன்.
தற்போது வசிக்கும் புதிய பகுதியில் உ.பிக்காரன் கடை சின்னப்பையன் ஆதிஃப் அஸ்லாம் பாடல்களை மிதமான ஒலியில் வைத்து, மஷின் கட்டிங், நவரத்தின தைல மசாஜ் தலைக்கு, கைகளை பிடித்து விட்டு சொடக்கெடுத்து, கழுத்து மற்றும் முதுகை நன்றாக அழுத்தி விட்டு, கடைசியில் டப் டப் என முதுகில் ஓங்கி அடிக்கும்போது, எல்லாம்.. இன்ப மயம்.

No comments:

Post a Comment