மலைக்க வைக்கும் மும்பை (part 1)
முதலில் இந்த நாவலின் கதை பற்றி கொஞ்சம். நாவலின் பெயர் Atlas Shrugged. எழுதிய பெண்மணியின் பெயர் ஐய்ன் ரேண்டு (Ayn Rand). கதையின் கரு?
டிஸ்டோபியன் (Dystopian) யுனைடெட் ஸ்டேட்ஸ் எனும் அமெரிக்காவை இக்கதையில் எழுத்தாளர் நமக்கு சித்தரிக்கிறார். டிஸ்டோபியன் என்றால் ஒரு நாடு அல்லது சமூகம் பல்வேறு அநியாயங்களுக்கு உட்படுத்தப்படுகிறது எனப்பொருளாம். அதன்படி கதையில், அமெரிக்காவில் கனரக தொழில் நிறுவனங்களை கடுமையான சட்டங்கள் மற்றும் விதிகளின் கீழ் கொண்டு வந்து அந்நிறுவனங்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனவாம். யாரால்? மேல படிங்க.. இப்பவே தலைய பிச்சுக்கறேன்.
நாசக்கார கும்பல் ஒன்று பெரு நிறுவன முதலாளிகளை மிரட்டி அந்நிறுவனங்களை கைப்பற்ற முயல, ஜான் கால்ட் என்ற மர்ம நபர் அந்நிறுவனங்களை நாசக்கார கும்பலுக்கெதிராக போராட்டத்தில் இறங்கச்செய்து, கம்பெனிகளை இழுத்து மூட வைத்து, இறுதியில் தானே அவைகளை கைப்பற்றும் எண்ணத்துடன் திட்டம் தீட்டுகிறான், ‘ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்கிற கணக்கில்.
கதை எங்கே போகிறது? மேல படிங்க..
மெக்ஸிகோவில் ஜிம் மற்றும் பாய்ல் என்ற இருவர் ரயில்வேயில் குறிப்பாக தண்டவாளங்கள் சார்ந்த துறையில் அதிக முதலீடு செய்கிறார்கள். இதற்கிடையில் அந்த தண்டவாளங்களுக்குக்கீழே பூமியில் பெரிய எண்ணெய் இருப்புக்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட, மெக்சிகோ அரசாங்கம் உடனே சுரங்கங்கள் மற்றும் இரயில் பாதையை தேசியமயமாக்குகிறது. ஆனால் சில வருடங்களில் சுரங்கங்கள் பயனற்றவை என்று கண்டறியப்பட்டது. அரசாங்கத்தின் இந்த தவறுகளால் ஜிம்முக்கு பெரிய இழப்பு. அரசாங்கத்தின் இந்த முடிவுகளுக்குப் பின்னால் செயல்படுவது யார்? தெர்ல!
அடுத்து எஃக், இரும்பு சார்ந்த துறையில் குழப்பம். இரும்புக்கு இணையாக பலமுல்ல புதிய உலோகம் ஒன்றை யாரோ கண்டுபிடித்து, அரசாங்கம் அதில் இறங்கி அதிலும் நட்டம், குழப்பம்.
அடிக்க வருவீர்கள். கதை பற்றி இனி நான் சொல்லவில்லை. 1960 வாக்கிலோ அதற்கு முன்னரோ வெளியான நாவல் பற்றி நீங்களே ஆய்வு செய்து கொள்வது உத்தமம்.
இப்பதிவில் நான் சொல்ல வந்தது என்னவென்றால், கடந்த நாலைந்து நாட்களாக தீபாவளிக்கு மும்பையில் டேரா போட்டிருக்கும் நான், தாதர் சிவாஜி பார்க் பகுதியின் தீபாவளி ஒளி விளக்குகளை ரசித்தபடியும், சிவாஜி பார்க் ஜிம்கானா அங்கத்தினர் நண்பர்களுடன் அங்கே டின்னர் முடித்து, இரவு ஒரு மணி வரை அப்பகுதியில் இரண்டு நாளாக சுற்றிக்கொண்டிருக்கும்போது, நேற்று மதியம் சாலை ஒரத்தில் பிச்சைக்காரர் ஒருவரை பார்த்ததும் சட்டென நின்று விட்டேன். அழுக்கு சாலையில் உட்கார்ந்தபடி அவர் படித்துக்கொண்டிருந்த ஆங்கில நாவல் என் கவனத்தை ஈர்த்தது தான் காரணம்.
அமெரிக்காவின் அரசியல், தொழில் அமைப்பு, நிதி, வணிகம் போன்ற பல்வேறு பொருள்களில் எழுதப்பட்ட நாவலை ஒரு பிச்சைக்காரர் ஜாலியாக ரோட்டோரத்தில் உட்கார்ந்துகொண்டு படிக்கிறார் என்றால் அவர் மெத்த படித்தவரோ, நல்ல வேலையில் இருந்தவராகவோ இருக்கலாம். 15 வருடங்களாக சிவாஜி பார்க் வாசலில் பிச்சை எடுக்கிறாராம்.
ரியலி மும்பை என்னை மலைக்க வைக்கிறது.
பி.கு: நேற்றைய இந்த பதிவை படித்ததும் வந்த சில கமென்ட்களை பார்க்கும்போது இந்த நாவல் நம்மை மென்ட்டலாக்கும் போல தெரிகிறது. இத்தனைக்கும் கதையின் சாராம்சத்தை நான் முழுமையாக கூட எழுதவில்லை. நாவல் எழுதிய ஆய்ன் ரேண்டுக்கே இது கடைசி நாவலாம். அவ்வளவு ஸ்ட்ரெஸ்ed ஆகி விட்டாராம். Dystopian என்றால் என்ன என்பதை ஒருவர் ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷனரி கொண்டு விளக்கினார். ஒருவர் இந்த கதையை சிவாஜி பார்க்/நடேசன் பார்க்கில் உட்கார்ந்து படிக்க வேண்டுமென்கிறார். மேற்கொண்டு எழுதினால் நானும் மென்டலாகி விடுவேன்.

No comments:
Post a Comment