Sunday, July 19, 2026

திருச்சி பொன்மலை..

 

திருச்சி பொன்மலை..
திருச்சி போனாலே பழைய பள்ளி/கல்லூரி/சீஏ நண்பர்கள் யாரையாவது சந்திக்கவேண்டும் போல இருக்கும்.
காவிரிக்கரை கல்லனை ரோட்டிலுள்ள பொன்னி டெல்டா வளாகத்தில் சஷ்டியப்தபூர்த்தி விழா ஒன்றை முடித்துவிட்டு பைபாஸ் ரோடு வழியாக செந்தண்ணீர்புரம் தாண்டியதும் பாலத்தின் இடதுபுறம் பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் பார்த்ததும் சடாரென வண்டியைத்திருப்பினேன். மனைவி Usharani Sridhar உஷா ‘இப்புடு இக்கட எந்துக்கு?’ எனக்கேட்க பொன்மலையைப்பார்த்து பல வருடங்கள் ஆனதால் ஒரு ரவண்டு போய் வரலாமென்றேன்.
இந்தியன் நியூஸ் ரெவ்யூ போல வட்டமடித்தது மனது. 80களில் பொன்மலைப்பகுதி பிசியாக இருக்கும். ரயில்வே குவார்ரட்டர்ஸ் பங்களா வீடுகள், F டைப், D டைப் என விதவிதமான குவார்ட்டர்ஸ் வீடுகள். மெயின் கார்ட் கேட்டிலிருந்து பஸ்ஸில் வீடு திரும்பும் மாணவ மாணவியர்கள், ரயில்வே ஆசுபத்திரி, கம்யூனிட்டி ஹால், சர்ச், பொன்னேஸ்வரியம்மன் கோவில், ஆனந்த் பேக்கரி, ஏராளமான டீக்கடைகள், வேலை முடிந்து ஆர்மரி கேட் வழியாக வெளியே வரும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் என அந்த பிரதேசமே ஜேஜேயென இருக்கும். ஆங்கிலேயர்கள் Golden Rock என பொன்மலைக்கு நாமகரணம் சூட்டினார்கள்.
பால்ய நண்பன் Ganapathi Subramanian மற்றும் டிவிஷனல் இஞ்சினீயர் பையன் Vaidya Rishi , அவனது அண்ணன் L. S Venkatesan , ஜோசஃப் செபாஸ்டியன், Ganapathi Avsr என ஒரு பெரிய நண்பர் குழாம் நாங்கள் பொன்மலையில் சந்திக்காத நாளே இல்லை. அந்த சீஏ கம்பைன்ட் ஸ்டடீஸ் தான் எங்கள் நட்பை இருக்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறது இன்றும்.
பழைய கதையை மனைவியிடம் சொல்லிக்கொண்டே வண்டியை செலுத்த ‘இன்னம் எத்தனை தபா இந்த பழைய கதையெல்லாம் கேக்கறது!’ என வெளியில் சொல்லாமல் கேட்டுக்கொண்டு வந்தார் உஷா. மறுபடியும் இந்தியன் நியூஸ் ரெவ்யூ சுற்றியது.
பெரும்பாலான ரயில்வே சூப்பர்வைசர்கள், லோகோஷெட் மெக்கானிக்குகள், லைன்மேன் என நிறைய ஆங்கிலோ இந்தியர்கள் இருப்பார்கள். தூக்கி படிய வாரிய தலைமுடி, இன் செய்த அரைக்கை சட்டையைக்கூட மேலே ரெண்டு மடி மடித்து, டைட் பாண்ட், சன்னமான பெல்ட் என எல்விஸ் ப்ரெஸ்டின் மாதிரி ஸ்டைலாக இருப்பான்கள். ‘—த்தா! வாட் மேன்..’ என ஆங்கிலம்+ தமிழ் கலந்த கெட்ட வார்ரத்தைகள், ஏகத்துக்கும் சிகரெட் தண்ணி உண்டு (சிலர் பீடி..) ஆங்கிலோ இந்திய பெண்களும் பொன்மலையில் கவுன், மினி ஸ்கர்ட் என சீன் போடுவார்கள். அவர்களை நாங்கள் செல்லமாக ‘ஆப்பை’ என விளிப்போம்.
சீஏ படிக்கும்போது ராய் எனும் பொன்மலைப்பையன் பையன் எங்களுக்கு ஜூனியராக ஆபிஸில் சேர்ந்தான். ஆங்லோ இண்டியன் போன்ற தோற்றம். செம்ம ஸ்டைலாக பூனைக்கண்ணுடன் இருப்பான். நான், குமார், நவீன், Rajaseharan Subramanian , சீட்டி என நாலைந்து நண்பர்கள் அப்ப கம்பைன்ட் ஸ்டடீஸ். எத்தனை வருடங்கள் தான் எங்களை கம்பைன்ட் ஸ்டடீஸ் செய்ய வைத்திருக்கிறது இந்த பாழாய்ப்போன சீஏ படிப்பு!
ஒரு நாள் ராய் ‘டேய் நாளைக்கி கிரிஸ்மஸ் மாஸ் கம்யூனிட்டி ஹால்ல இருக்கு. அது முடிஞ்சி டான்ஸ் எல்லாம் இருக்கும். வரீங்களா? ஆனா உங்கள உள்ள விடுவாங்களா தெரியாது’ என்றான். நண்பன் குமார் (இப்ப சிங்கப்பூர்ல் இருக்கான்) உடனே ‘மாப்ள! இவனோட ஆளு ஒருத்தி இருக்கா! பேரு ரேய்ச்சல். பாத்தா காய்ச்சல் வந்துடும் நமக்கு. சூப்பரா இருப்பா. அந்த டான்ஸ்ல அவளும் இருப்பா’ என்றதும் கம்பைண்ட் ஸ்டடீஸ், புத்தகங்கள் போன்றவற்றை சற்றும் யோசிக்காமல் புறந்தள்ளி அன்று மாலை டீக்காக் ட்ரெஸ் செய்து கொண்டு அந்த கம்யூனிட்டி ஹால் அருகே சந்திப்பதாக முடிவு செய்தோம்.
இரவு 9 மணி. பொன்மலை கம்யூனிட்டி ஹால் வாசலில் சரியான கூட்டம். ‘இது ஒரு நிலாக்காலம்..’ (டிக் டிக் டிக்) பாடலின் ஆரம்ப இசையில் ‘லோலோ.. லோலோ’ எனும் பெண்கள் பாடும் இசையை ராஜா சூப்பராக போட்டிருப்பாரே, அது போன்ற ‘லோலோ.. லோலோ’ என சர்ச் காய்ர் மியூசிக் உள்ளே கேட்டது.
‘இந்த ராய் எங்கடா போய்த்தொலைஞ்சான்!’ எனத்தேடினோம். அந்த ரேய்ச்சலை பாத்தே ஆகனும் என்ற ஆவல் வேறு. மெயின் ரோட்டிலிருந்து உள்ளே தள்ளியிருந்தது கம்யூனிட்டி ஹால். மெயின் ரோட்டிலேயே தடுப்பு போட்டு விட்டான்கள் பாவிகள். கோட் சூட், சர்ட்-டை அணிந்த இளைஞர்களை உள்ளே விட்டார்கள். தரையில் தவழும் ஏஞ்சல் வெள்ளை (பாரதி ராஜா படம் ஞாபகம் வரும்) உடைப்பெண்கள், ஆங்கிலோ இந்திய குட்டைப்பாவாடைப்பெண்கள், கூரான ஹைஹீல்ஸ் மற்றும் முழங்கால் வரை ஸ்கர்ட் அணிந்து மூச்சறைத்தபடி வந்த மூத்த கனரக பெண்கள், டிப்டாப் உடையில் பௌ டை மற்றும் வாயில் சுருட்டுடன் ஸ்டைல் தாத்தாக்கள் (ஸ்டீம் இஞ்சின் டிரைவர்களாம்) என எல்லோர் முகத்திலும் கிருஸ்தவக்களை தாண்டவமாட அவர்களை மட்டும் தயக்கமின்றி உள்ளே விட்டவர்கள் எங்களை பார்த்த மாத்திரத்தில் இது விபூதி கேஸ் என அடித்து விரட்டாத குறை. அடித்து விரட்டப்பட்டிருந்தாலும் மரியாதை நிமித்தம் இங்கே எழுதுவோமா என்ன! அந்த ரேய்ச்சலை மட்டும் பார்க்க இயலவில்லை. பாவி ராய் வரவே இல்லை அவள் யார் எனக்காட்ட. எல்லா பெண்களையும் இவள் தான் ரேய்ச்சலோ என உற்று உற்றுப்பார்த்து எல்லோருமே வெள்ளை உடை தேவதைகளாய் தெரிந்தார்கள். ஆர்மரி கேட் வாசல் டீக்கடையில் டீயைக்குடித்து விட்டு மன்னார்புரம் வீடு திரும்பினோம்.
சட்டென பின்னோக்கிப்போன நினைவுகளிலிருந்து மீண்டு பார்த்தால் இன்று பொன்மலை வெறிச்சோடிக்கிடக்கிறது. குவார்ட்டர்ஸ் வீடுகள் காலியாகி, சிதிலமடைந்து, மரம் மற்றும் அடர்ந்த செடிகொடிகள் சுற்றிலும்.
டீக்கடைகள் பாதி காணோம். பொன்மலை ஸ்டேஷன் எதிரே வைத்தியின் வீடு மட்டும் புதுப்பிக்கப்பட்டு உதவி போலிஸ் கமிஷனர் அலுவலகமாக செயல்படுகிறது.
அந்த சாலை மற்றும் வைத்தியின் வீட்டை வீடியோ எடுத்து அங்கிருந்தே பெங்களூருக்கு அனுப்பினேன். அடுத்த நிமிடமே பதில் ‘நா இப்பத்தான் திருச்சி ஏர்போர்ட் வந்திறங்கி எங்க க்ராஃபோர்ட் வீட்டுக்கு போய்ட்ருக்கேன்’ என. நாளை அம்மாவின் வருஷாப்திகமாம். அண்ணன் வெங்கடேஷும் வந்திருக்கிறானாம். ஆஹா! அன்று மாலையே அவர்களது கிராப்பட்டி (க்ராஃபோர்ட்) இல்லத்தில் சந்திக்க முடிவானது.
மாலை 5 மணிவாக்கில் ஒருகாலத்தில் திருச்சிலிருந்து ரொம்ப தூரமாகத் தெரிந்த க்ராஃபோர்ட் பகுதி டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து மேம்பாலம் கடந்து பத்தே நிமிடங்கள் தான். வாசலில் வைத்தி, வெங்கடேஷ் நின்றுகொண்டிருந்தார்கள். எங்கள் க்ரூப்பில் முதலில் சிஏ பாஸ் செய்தது வைத்தியும் கணபதியும் தான். பெங்களூர் நிதிஷ் எஸ்டேட்ஸ் எனப்படும் கட்டுமான நிறுவனத்தின் ED போன்ற பதவிகளில் இருந்துவிட்டு தனது சொந்த நிறுவனம் துவங்கிய வைத்தியும் நானும் ஒரே வயது. தலையில் உப்பு+மிளகு ஹேர் ஸ்டைல் மற்றும் மேலுதடு முழுவதும் மறைத்த கருகரு மீசைக்குப்பின் அழகான புன்முறுவல். வெங்கடேஷ் மனிதவள மேம்பாட்டுத்துறையில் பெருநிறுவனங்களில் பணியாற்றி சென்னையில் செட்டிலான நெடுஉயர அழகன். இவர்கள் சகோதரி உமா முன்பு பொன்மலை வீட்டில் தயாரிக்கும் அதே சுவையுடன் கூடிய ஃபில்டர் காபியை இன்றும் தயாரித்தார்.
அடுத்த ஒண்ணறை மணிநேரம் வைத்தி, வெங்கடேஷுடன் ஆயிரம் வாலா பட்டாஸ் போல அரட்டை.. ஓஹோ என சிரிப்பலைகளுடன். கோல்டன் ராக் பற்றிய பேச்சென்றால்
எங்கள் மூவருக்க்கும் 30 வயது குறைந்தாற்போல இருந்தது. ‘டேய்! அந்த வெங்கடேஷ் சித்தார் வெஸ்ஸெல்ஸ்ல இருந்தானே, இப்ப எங்க இருக்கான்!’… ‘எங்க ஆடிட்டர் குமாரசாமி பையன் நளன் குமாரசாமி தான் சூதுகவ்வும் டைரக்டர்’.. ‘ஆனந்த் பேக்கரி இப்ப இருக்கா?’… அந்த ஜெரால்ட் செபாஸ்டியனோட சிஸடர் நாயுடு பையன் ஒருத்தனை லவ் பண்ணிட்ருந்தாளே ஞாபகமிருக்கா, அப்பவே கல்யாணமே ஆயிடுச்சு தெரியுமா’ போன்ற சுவாரசியமான அரட்டைக்குப்பின் ஏழு மணி வாக்கில் சுப்ரமணியபுரம் வீடு திரும்பினேன்.

No comments:

Post a Comment