Sunday, July 19, 2026

பல் பல் Dil Ke Paas

பல் பல் Dil Ke Paas …

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் தனது ஐந்தாவது பல் மருத்துவமனை மற்றும் டென்டல் அகாடமியை துவங்கிய டாக்டர். கீர்த்தி (எனது அக்காள் மகள்) வாட்ஸப் மெசேஜ் அனுப்பியிருந்தாள். ‘மாமா! உங்க Xரே பார்த்தேன். ஒரு பல்லுல இருக்கற கேவிட்டிக்கு ரூட்கெனால் பண்ணிடலாம், அதுக்கு பக்கத்துல காலி மனை மாதிரி வெற்றிடமா இருக்கற இடத்துல இம்ப்ளான்ட் பண்ணி புதுசா பல்ல நட்டு (க்ரௌன்) போட்டுடலாம்’ என்றாள்.
பத்து வருடமாக ஆள்காட்டி விரலால் ஈறுகளை தேய்த்து் சிரத்தையாக மசாஜ் செய்து வந்தாலும் பற்சிதைவு எப்படி ஏற்பட்டது என கேட்க, அவள் ‘டெய்லி படுக்கறச்சே பல் தேய்க்கனும், மூணு வேளையும் சாப்பட்டவுடனே ஃப்ளாஸ் செஞ்சி பல்லை சுத்தம் பண்ணனும், சாஃப்ட் ப்ரஷ் யூஸ் பண்ணனும், அந்த ப்ரஷ்ஷையும் பரட்டைத்தலை மாதிரி ஆகறதுக்கு முன்ன மாத்திடனும்’ போன்று நிறைய ஆலோசனைகள் கொடுப்பாள்.
வந்தேபாரத் திருச்சி ஜங்ஷனை அடைந்த அடுத்த பத்தே நிமிடத்தில் ஆசுபத்திரி முன்னே நாம். கட்டிடத்தின் இரண்டாம் தளம் முழுக்க கீர்த்தியின் புத்தம்புதிய க்ளினிக்! கூடவே அவளது பிசினெஸ் பார்ட்னர் டாக்டர். ஃபெபில். அகாடமியில் இளம் பல் மருத்துவர்களுக்கென நிறைய சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் நடத்துகிறார்கள். மலேஷியா, சிங்கப்பூரிலிருந்தும் வரும் பேஷன்ட்ஸ்களுக்கு சங்கம் மேரியட்டில் தங்குவதற்கென அறை ஏற்பாடு செய்கிறாள். வாராவாரம் காரை ஓட்டிக்கொண்டு டாக்டர் ஃபெபில் அவர்களுடன் நடத்தும் பாலக்காடு க்ளினிக்கிலும் கேஸ்களை அட்டென்ட் செய்கிறாள். சீனப்பயணம் மேற்கொண்டு செயற்கை பற்கள் மற்றும் இம்ப்ளாண்ட் சம்மந்தப்பட்ட பொருட்களை அங்கிருக்கும் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்ய காண்ட்ராக்ட் சைன் செய்கிறாள். தவிர ஓவியம் வரைகிறாள். டான்ஸ் ஆடுகிறாள். பம்பாய் கம்பெனிக்கு மாடலிங் செய்கிறாள். சகலகலா’பல்’லி.
டாக்டர் ஃபெபில் பற்றி… Maxiofacial Prosthodontist, Implantologist & Laser Dentist எனப்படும் பல் மருத்துவம் சார்ந்த சிறப்புப்பிரிவு நிபுணர் அவர். சவுதி, சிங்கப்பூர் ஆசுபத்திரிகளிலிருந்து அழைப்பின் பேரில் அவரும் அடிக்கடி பயணம் செய்கிறார். அங்கிருந்தும் சிலர் இவரிடம் பல் மருத்துவத்திற்காக திருச்சி வருகிறார்கள். Feb 11 அன்று பிறந்ததால் ஃபெபில் (Feb el-even) என்ற பெயர் கொண்ட பாலக்காட்டுத்தமிழர்.
கிளினிக்குக்கு வருவோம். ஜங்ஷன் சரஸ்வதி பவனிலிருந்து தருவிக்கப்பட்ட இட்லி சாம்பாரை முடித்து, அட்டென்டர் பெண் கொடுத்த மாத்திரைகளை விழுங்கியபின் டென்டிஸ்ட் சேரில் உட்காரச்சொன்னாள் கீர்த்தி. ரயில் சைட் பெர்த் போல நீண்ட சாய்வு இருக்கையில் அமர்ந்ததும் கண் கூசும் அளவு ஒளி நம் முகத்தில். அந்தப்பக்கம் மனைவி Usharani Sridhar. இந்தப்பக்கம் அட்டென்டர் பெண் கால் பெடலை அழுத்த மேலே கிளாஸில் சர்ரென குளிர் நீர் பாய்ந்தது, வாய் கொப்பளிக்கவாம்.
பானிபூரி சாப்பிடுவது போல ஆவென வாயை திறக்க வைத்து, ஈறுகளிலும் நாக்கின் பக்கவாட்டிலும் மரத்துப்போக சுறுக்கென ஊசி குத்தினாள் கீர்த்தி. அடுத்த சில நிமிடங்களில் வாய்ப்பகுதி முழுவதும் ஜிவ்வென வீங்கியது போலவும் வாய்க்குள் செங்கலை அடைத்ததுபோல போன்ற உணர்வு. காண்ணாடியில் முகத்தை காட்டினார்கள், வழக்கம்போல படு சாதாரணமாக இருந்தது ச்செஹ்ரா.
அடுத்து கார்ப்பரேஷன் காரன் ரோட்டை தோண்டுவது போல பற்களுக்கடையே மின்ணனு சூலாயுதம் கொண்டு, ஜிவ்வென தோண்டி சிறு சிறு உணவுத்துகள்களை கீர்த்தி வெளியே தள்ளி கடுகு, உடைந்த உளுத்தம்பருப்பு என ஒரு மளிகைக்கடையே வெளியே கொண்டுவந்தாள். இதற்குள் ஆவென திறந்திருந்த வாய் நிரம்பி பக்கவாட்டில் வழிய, நான் ழா.. ழா என கத்தி சைகை செய்ய, அட்டென்டர் பெண் பெடலை அழுத்த, தண்ணீர் பிடித்து நான் வாய் கொப்பளித்தேன். ரூட்கெனால் (root canal) என்ற பெயருக்கேற்ப கால்வாயில் இரத்தத்துடன் கலந்த சாக்கடை தண்ணீர் போல ஓடியது. ‘ஆச்சு மாமா! என்றபடியே பற்களின் பக்கவாட்டில் கிர்ர்ரென மெஷினால் கீறி கரைகளை சுத்தம் செய்து முடித்தாள். பற்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சிமென்ட்டை ட்ரில் செய்த இடங்களில் பூசினாள். வாய்க்குள் இன்னும் முழு செங்கல்.. மரத்திருந்தது.
அடுத்து டாக்டர் ஃபெபில் வந்து தலைமாட்டில் அமர்ந்தார். ‘அங்கிள்! இப்ப நான் பண்ணப்போற ப்ரொசீஜர் ரொம்ப சிம்பிள்’ என்றார். குட்டி ட்ரில்லிங் மெஷினால் ஈறுக்கு நடுவில் ஆழ்துளை.. அதாவது போர்வெல் தோண்டுவது போலவாம். ‘அய்யய்யோ! அது துளை போட்டு தாடை வழியா வெளிய வந்துடாதே.. நடுவுல நிறுத்திடுவேல்லப்பா!’ என கலவரத்துடன் கேட்க, ‘இல்ல அங்கிள்! ரூட் கெனாலை விட ரொம்ப சிம்பிள். இதை கேளுங்க!’ என விளக்கினார்.
தாடை எலும்புக்கு உள்ளே ட்ரில்லிங் செய்து டைட்டானியம் இம்ப்ளாண்ட் எனப்படும் baseஐ பொருத்தி அப்படியே மூன்று மாதங்களுக்கு விட்டு விட்டால், தாடை எலும்பு வளர்ந்து அந்த இம்ப்ளாண்ட்டை இறுக பிடித்துக்கொள்ளுமாம். பிறகு இம்ப்ளாண்ட்டின் மேல் abutment எனப்படும் ஒரு இணைப்பானை பொருத்தி, கடைசியாக க்ரௌன் எனப்படும் பொய்ப்பல்லை இணைப்பான் மேல் ஸ்க்ரூ செய்தோ அல்லது சிமென்ட்டால் உட்கார்த்தி வைக்க நாம் ஜம்மென இனி கூசாமல் (பல்லைச் சொன்னேன்) சீடை முறுக்கு சாப்பிடலாம்.
மேற்சொன்னவற்றை அவர் விளக்கும்போது அடிவயிற்றல் பந்து உருள அந்த ட்ரில்லிங் ப்ரொசீஜருக்கு தயாரானேன். அதற்கு முன் ‘வாய், தாடையெல்லாம் இன்னும் மரத்துப்போய் தானே இருக்கு பாத்துட்டீங்களா?’ என நான் வெள்ளந்தியாக கேட்க கீர்த்தியும் ஃபெபிலும் பலமாக சிரித்தார்கள். அனெஸ்தீசியா எஃபெக்ட் அடுத்த இரண்டு மணி நேரம் இருக்குமாம்.
ஆச்சு.. வாயை மறுபடியும் பானிபூரி ஸ்டைலில் திறக்க, ட்ரில்லிங் மெஷினை கிர்ரென தாடை எலும்பில் இறக்கி, இரண்டு மூன்று முறை எக்ஸ்ரே எடுத்து சரிபார்த்து, பழைய பெண்டுலம் கடிகாரத்திற்கு சாவி கொடுப்பது போல இம்ப்ளாண்ட்டை திருகித் திருகி பத்தே நிமிடத்தில் உட்கார்த்தி வைத்தார் டாக்டர் ஃபெபில். அத்தோடு நிற்காமல் இம்ப்ளாண்டின் மேலே திறந்திருந்த ஈறுப்பகுதியை இழுத்து மூடி, ஊசி நூல் கோர்த்து தைக்க ஆரம்பித்தார். வாய் மரத்துப்போயிருந்தாலும் ஊசியை ஈறில் குத்தி நூலை நாலு பக்கமும் சர்ரென இழுப்பதை உணர்ந்தேன். முடிச்சும் போட்டார். அடுத்த வாரம் போல ஈறு மூடிக்கொள்ளுமாம். தையலை பிரித்து அந்த நூலை சரட்டென இழுத்து வெளியே எடுத்து விடுவார்கள் என்று அவர் சொன்னபோதே வயிறு என்னவோ செய்தது.
வீட்டில் அக்கா Hemalatha Manohar மற்றும் மைத்துனர் டாக்டர். மனோகர் இருவரும் சாப்பிடாமல் டின்னருடன் காத்திருக்க அவசரமாக போட்டோக்கள் எடுத்துக்கொண்டு ஆசுபத்திரியை பூட்டி விட்டு, வீடு நோக்கி விரைந்தோம். போற வழியில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் மரத்துப்போன வாய்க்கு சுகமாக இருக்குமாம்.
32 பற்களில் ஒன்று இல்லாவிட்டால் தான் இப்ப என்ன நஷ்டம்! அந்த பல் இல்லையென்றால் பக்கத்திலுள்ள பற்கள் இரண்டுக்கும் எக்ஸ்ட்ரா ஸ்ட்ரெய்ன் ஆகி அவைகள் பள்ளம் பக்கமாக லேசா சாயுமாம். ஒரு வித டொமினோ எஃபெக்ட்டால், மேல் பக்கம் உள்ள பல் நாம் சாப்பிடும் உணவை அரைக்க முடியாமல், காணாமல் போன பல்லைத் தேடி ஸ்ரம்ப்பட்டு அதுவும் சாயுமாம். ஈறு கெட்டுப்போகும், தாடை எலும்பு வீக் ஆகி விடுமாம். ஆக, அந்த புதிய பல்லின் வரவு தவெகா விஜய் போல பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும் போலிருக்கிறது.

No comments:

Post a Comment