மலைக்க வைக்கும் மும்பை (part-2)
(இது செக்ஸ் பதிவு அல்ல. ஆனால் செக்ஸ் பிரிவைப் பற்றியது)
பம்பாய் முனிசிபல் கார்பரேஷனில் (BMC) சிவில் இஞ்சினியராக இருக்கும் நண்பன் குல்கர்னி பிவாண்டியில் ரோடு போடும் வேலை நிமித்தம் தன் பணியாட்களுடன் சென்றான். அங்கே உள்ளூர் பிரமுகர் ஒருவரது ஒப்புதல் பெற்ற பிறகே ரோடு போட முடியுமென யாரோ சொல்ல, அந்த பிரமுகர் வீடு தேடிச்சென்று காலிங் பெல்லை அழுத்த, கதவை திறந்தது ஒரு திருநங்கை.
சொக்க வைக்கும் அழகு. பெயர் ஜோதி. ஆறடிக்கு மேல் உயரம். பொதுவாக திருநங்கைகளுக்கு ஆண்களைப்போன்ற ஆஜானுபாகுவான தோற்றம் இருக்கும். ஆனால் பெண்மைக்குறிய அம்சங்கள், நளினம், மெல்லிய தேகம் (போதும்.. ஓவரா இமாஜின் பண்ணாதீங்க!) என ஒரு பெண் போலத்தான் இருந்தாராம் ஜோதி. அவரது கரகரத்த குரலே திருநங்கைக்கான அடையாளமாம். குல்கர்னி கனிசமாக ஜொள் விட்டிருப்பது தெரிந்தது.
‘என்ன சாப்பிடறீங்க?’ என ஜோதி கேட்க, சங்கடத்துடன் ‘ அங்க எங்க ஆளுங்க ரோடு போடறதுக்காக வெயிட் பண்றாங்க. சீக்கிரம் போகனும்’ என குல்கர்னி சொல்லியும் பணிப்பெண் சாய் கொண்டு வந்தாராம். அவ்வளவு வசதியானவரா ஜோதி என யோசித்த குல்கர்னி அப்போது தான் கவனித்தான், சுவற்றில் சில லட்சங்கள் பெருமானமுள்ள மிகப்பெரிய 150 இஞ்ச் ப்ளாஸ்மா டீவி.
உல்லாஸ்நகர், போரிவிலி போன்ற பணப்புழக்கம் உள்ள பகுதிகளில் குஜராத்தி/சிந்தி வியாபாரிகளுக்கு கடன் கொடுக்க உதார் தாதாக்கள் எனும் மனிலென்டர்கள். கடன்களை கெடு தேதியில் வசூல் செய்வதற்கென வசூலிகள் இருப்பார்கள். அந்த வசூலிகளில் ஒருவர் தான் இந்த திருநங்கை ஜோதி.
எப்படி கடனை வசூலிப்பார்கள்? சாதாரண ஆட்களை அனுப்பி வசூல் செய்ய முடியாவிட்டால், கடைசியில் ஜோதி களத்தில் இறங்குவாராம். கடன் வாங்கிய வியாபாரியின் ஃப்ளாட் அட்ரஸை வாங்கிக்கொண்டு ஏழெட்டு திருநங்கைகளை அங்கே அனுப்புவாராம் ஜோதி. இதிலென்ன விசேஷம்! விசேஷம் இருக்கு.
விடிகாலை 4 மணியளவில் ஏழெட்டு திருநங்கைகள் மேற்படி வியாபாரியின் வீட்டின் எதிரே தரையில் உட்கார்ந்துகொண்டு ‘டட்டாக்கு டட்டாக்கு டட்டாக்கு டட்டாக்கு’ என டோலக் அடித்து கையையும் டப்பு டப்பு என அடித்து உரத்த ஒலியெழுப்பி பாடுவார்களாம். விடிகாலை 4 மணிக்கு “பொழுதோட கோழி கூவுற வேளை.. ராசாதி ராசன் வாராண்டி முன்னே” என கரகர குரலில் டோலக் அடித்து கையை தட்டிப்பாடினால் எப்படி இருக்கும்! என்ன சொன்னாலும் பாடுவதை நிறுத்த மாட்டார்களாம்.
அக்கம்பக்கத்து ஃப்ளாட்காரர்கள் கூடி, பெரிய கலாட்டா ஆகி, கடைசியில் கடன் வாங்கிய வியாபாரி பணத்தை திரட்டி கொடுத்தபின் தான் அவ்விடத்தை காலி செய்வார்களாம். அது வரை ‘டட்டாக்கு டட்டாக்கு’ தொடருமாம். அப்படியும் சில வியாபாரிகளால் முழு பணத்தை கொடுக்க முடியவில்லையென்றால் ஸ்கூட்டர், டீவி என சாதனங்களை எடுத்துச்சென்று விடுவார்களாம். ஜோதி வீட்டு ப்ளாஸ்மா டீவி கதை இது தான்.
என் செட்டா நகர் ரூம்மேட் முரளி கோலிவாடா பக்கம் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த போது சிக்னல் ஒன்றில் திருநங்கை ஒருவர் டப் டப்பென கைகொட்டி ‘காசு குடு ஐய்ரே!’ என கேட்டுக்கொண்டிருக்கும் போதே ஆட்டோ கிளம்ப, சடாரென அவன் சட்டைப்பையில் கையை விட்டு ரூபாய் நோட்டுக்கற்றையை எடுத்துக்கொண்டு ஓட, ‘ஏய்! என் பணம்.. பணம்’ என கத்தியபடியே பின்னால் முரளியும் ஓட, சில நிமிடங்களில் திருநங்கையை பிடித்து நேராக போலிஸ் ஸ்டேஷன். ஆனால் அதற்குள் பணம் கைமாறி எங்கோ மறைந்து போக, ‘திருச்சில எங்க அப்பா அம்மாவுக்கு அனுப்ப வச்சிருந்த பணம் அது’ என பரிதாபமாக முரளி சொல்ல, திருநங்கையை பாதி நிர்வாணமாக்கி அடி பிண்ணி எடுத்துவிட்டார்கள். அடி வாங்குவதை பார்க்க பரிதாபமாக இருக்கவே, ‘பணம் போனா பரவால்ல.. அடிச்சது போறும்.. அலியை விட்ருங்க!’ என முரளி கேட்டுக்கொண்டதும் விட்டுவிட்டார்கள்.
மிகவும் பரிதாபத்துக்குறியவர்கள் இந்த திருநங்கைகள். இயற்கைக்கு முரணாக சில உடற்கூறியல் மாற்றங்கள் வேண்டுமென இவர்கள் கேட்டுக்கொண்டார்களா என்ன! வேலை வாய்ப்பின்மை, சமூகத்தில் ஓதுக்கப்படுதல், பொது இடங்களில் அவமானம் போன்றவைகளை கடந்து வாழ்வாதாரத்திற்காக பிச்சையெடுத்தல், விபச்சாரம் போன்ற அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், பாவம்.
தற்போது நிலமை மாறி வருகிறது. திருநங்கைகளுக்கென மூன்றாவது ஜென்டர் (gender) பிரிவை அரசாங்கம் சேர்த்திருப்பது, வாக்காளர் பட்டியலில் இவர்களது எண்ணிக்கை உயர்ந்துள்ளது, கல்வி மையங்கள் மூலம் இவர்களை மேம்படுத்தும் திட்டங்கள், முழுக்க முழுக்க திருநங்கைகளால் நடத்தப்படும் சலூன், நடனப்பள்ளி மற்றும் உணவகம், அரசியலில் பங்கேற்கும் வாய்ப்பு என இவர்களுக்கென நிறைய சலுகைகள்.
இவர்களுக்கு ஆரம்பம் முதல் புகலிடம் அளித்தது பம்பாய் தான். இப்போதும். நண்பன் Ganapathi Subramanian னின் ரயில்வே உறவினர் ஒருவர் போரிபந்தரில் (VT station) லோக்கல் ட்ரெயினில் டிக்கெட் செக் செய்யும் பகுதி நேரப்பணியில் இருந்தார். அதற்கான சட்ட திட்டங்கள் அலுவலகத்தில் விளக்கப்படும்போது அவர் கேட்ட முதல் கேள்வி ‘ஹிஜ்டாகோ பக்கடேகா தோ க்யா கரூன்?’ (அலிகள் பிடிபட்டால் என்ன செய்றது?) அதற்கு உயர் அதிகாரிகளின் பதில்: ‘ச்சோடுதோ’ ( விட்டுடு!)

No comments:
Post a Comment