Sunday, April 2, 2017

Deepa Magesh...


எனக்கு அண்ணன் மகள்.. இஞ்சினியரிங் படித்து இந்தியாவில் HCLலில் வேலையில் இருந்துவிட்டு தற்போது பாங்க்காக்கில் வேலைக்கு போகிறாள்.
கணவர் Magesh Mohan Ericsson னில் mobile communication technology துறையின் இஞ்சினீயர். வெறும் ஆறு மாத டெபுடேஷனில் பாங்க்காக் வந்தவரின் அசாத்திய திறமையும், trouble shooting பாங்கையும் பார்த்து மலைத்துப்போன கம்பெனிக்காரர்கள் அவரை 'ராசா! கொஞ்ச நாள் கழிச்சிப்போயேன்.. இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு' என சொல்லியே நாலைந்து வருடங்கள் கடத்தி தற்போது நிரந்தரமாக இருக்கச்சொல்லி வற்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூரில் போஸ்டிங் கிடைக்கலாமென காத்திருக்கிறார் மகேஷ்.
பட்டாயா, பாங்க்காக் எல்லா இடத்திலும் கவிச்சு வாசனை.. ரோட்டோரத்தில் கண்டதையும் வறுத்து விற்கும் வறுவல் கடைகள். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களிலும் காலை உணவு சுமார் தான். நம்மூர் சாப்பாடு சாப்பிட மனம் ஏங்கியது.
'அங்கிள்! எப்ப வீட்டுக்கு சாப்பிட வறீங்க?' என தீபாவின் மெசேஜும் போனும் வர, நான்காம் நாள் மாலை அவர்கள் வீட்டிற்கு போவதாக முடிவு செய்து வீட்டு விலாசம் வாங்கிக்கொண்டேன்.
சுகும்விட் ஏரியாவில் சோய்-36 பகுதி, இன்ன சாலை எண், இன்ன பில்டிங்கில் இருக்கிறோமென விலாசத்தை தீபா எனக்கு அனுப்ப, ப்ரூஸ்லீ சாயலில் இருந்த டிரைவர் 'ஷாசா' டொயோட்டோ ஹை-ஏஸ் வண்டியை விரட்டி சரியாக அவர்கள் பில்டிங் வாசலில் எங்களை இறக்கி விட்டான்.
26வது தளத்தில் இருந்த அவர்கள் ஃப்ளாட்டின் வாசலில் நின்று எங்களை வரவேற்றார்கள் தீபாவும் 'நீயா நானா' கோபி சாயலில் படு ஸ்மார்ட்டாக இருந்த கணவர் கோபி. விசாலமான அந்த ஃப்ளாட் கொள்ளை அழகு. தாய்லாந்து நாட்டில் இடத்தட்டுப்பாடு அதிகம். அதனால் வீட்டு வாடகை அதிகமாம்.
space managementஉடன் நேர்த்தியுடன் இருந்த அந்த வீட்டின் ஹாலில் அலமாரி கதவுகள் இரண்டில் ஒன்றை திறந்தால் உள்ளே சிறிய அறை. குழந்தைகள் பொம்மை, சைக்கிள் போன்றவை அந்த அறையில் அடைத்திருந்தார்கள். அடுத்த கபோர்ட் கதவுக்கு பின்னால் ஏதாவது துணிமணிகள் இருக்கலாமென நினைத்து கதவை திறந்தால் அப்படியே அசந்துவிட்டோம். அது ஒரு சிறிய கழிவறை. விருந்தினர்களுக்காக வரவேற்பறையில் அந்த கழிப்பறை இருப்பதே தெரியவில்லை.
பால்கனி வழியாக பாங்க்காக் நகர கட்டிடங்கள் அழகாக தெரிந்தது. அதுவும் இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முழு நகரத்தை பால்கனி வழியாக மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
சுடச்சுட சாதம், பனீர் காப்ஸிகம் கறி, பீன்ஸ் காரட் பொறுயல், உ.கிழங்கு கறி, பாலக், சாம்பார், வத்த குழம்பு, ரசம், கட்டித்தயிர், அப்பளம், குலோப்ஜாமுன்.. இதெல்லாம் தீபா தானே சமைத்த ஐட்டங்கள். ஃபுல் கட்டு கட்டினோம்..
செல்ஃபி எடுத்துக்கொண்டோம். மேலும் ஒரு மணி நேரம் அரட்டை. பிறகு தனது டொயோட்டா ஃபார்ச்சூனரில் நாங்கள் தங்கியிருந்த பாங்க்காக் பாலஸ் ஹோட்டலில் இரவு பதினோறு மணிவாக்கில் இறக்கிவிட்டு விடை பெற்றுக் கொண்டார் மகேஷ்..
தாய்லாந்து ஷாப்பிங் பற்றி நச்சென் அவர் கொடுத்த டிப்ஸ் இதோ:
*எவ்வளவு விலை குறைவாக இருந்தாலும் இங்கே எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்க வேண்டாம்.
*எக்கச்சக்கமாக துணிமணிகள் கிடைக்கும். வெறும் 200, 300 தாய் பாட் (Baht) தான் ( சுமார் நானூறு, அறுநூறு இந்திய ரூபாய்கள்)
*ஒன்றுக்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு ஹோல்சேல் ரேட் உண்டு. ஆகவே 3 டீ-ஷர்ட், 3 ஜீன்ஸ் என உறவினர்களுக்கு வாங்கலாம்.
*அதிகம் பேரம் பேசவேண்டிய அவசியமில்லை. சகாயமான விலை தான் சொல்வார்கள்.
அருமையான வீட்டு சாப்பாடு, அன்பான உபசரிப்பு, அழகான இரு பெண் குழந்தைகள்..இனிமையான தம்பதி தீபா, மகேஷுக்கு நன்றி..
மேலும் தாய்லாந்து பற்றிய சுவாரசியமான தகவல்கள் ஏராளம்.. தனிப்பதிவு விரைவில்....

துபாய்-சென்னை மூன்று மணி நேர பிரயாண கிறுக்கல்களிலிருந்து...

வருடாந்திர விடுமுறைக்கு பத்து பதினைந்து நாள் சென்னை, திருச்சி மற்றும் தாய்லாந்து போய் வரலாம் என முடிவு செய்தவுடனே பரபரவென இயங்க ஆரம்பித்தேன்.
ஆபிஸ்பாய் லதீஃப் படு சமர்த்தன். தாய்லாந்து கரன்சி 'பாத்'தை அரை மணியில் வாங்கிக்கொண்டு வந்து எதிரே வைத்துவிட்டான். காலை பஹ்ரைன் இந்தியா எக்ஸ்சேஞ்சு கம்பெனி பொது மேலாளர் லக்ஷ்மி நரசிம்மன் போன் செய்து புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் பஹ்ரைன் வந்துவிட்டதாக தகவல் கொடுக்க, உடனே லதீஃப் ஓடினான். மனாமாவிலிருந்து போன் செய்து 'சார்.. இங்க ரெண்டாயிரம் ரூபா நோட்டு இல்லியாம். ஏர்போர்ட் பிராஞ்ச்சுல இருக்காம்' என சொல்லி ஏர்போர்ட் விரைந்து புதிய ரூபாய் நோட்டுகளையும், கொஞ்சம் டாலர்களையும் கொண்டு வந்தான்.
மேசையின் மீது எதிரே இருந்த பச்சைச்தேநீர் ஆறிப்போக, சுலைமானி (சிகப்பு தேநீர்) கொண்டு வந்து வைத்த ஃபிலிப்பினோப்பெண் 'ஆறிப்போறதுக்குள்ள இதையாவது சாப்பிடுங்க' என சொல்லிவிட்டும் போனாள்.
எமிரேட்ஸ் விமான டிக்கெட்டை மெயில் பாக்ஸில் சேர்ச் செய்து பிரிண்ட் எடுத்து முடியும்போது 'do you have anything?' எனக்கேட்டு எதிரே நின்றார் எங்கள் சேர்மன் திரு. ஜெய்னல். மரியாதை நிமித்தம் நாம் எழுந்து நின்றால் அவருக்கு பிடிக்காது. 'sit down' என சொல்லி எதிரே நின்றவாரே ஐந்தாறு நிமிடங்கள் பேசிவிட்டு கடைசி வாய் டர்க்கிஷ் காபியை மடக்கென குடித்து விட்டு நகைச்சுவையாக ஏதோ சொல்லி 'மாசல்லாமா' என விடைபெற்றார்.
ஊருக்கு போகும் செக்லிஸ்ட் எதிரே திரையில். கரன்சி நோட்டுக்கள்- ஆச்சு.
ஷேவிங் ரேசர்-ஆச்சு. மருந்து மாத்திரை- ஆச்சு. கைப்பேசியின் பவர் பேங்க்- எடுத்துக்கனும். ரவுண்டு சீப்பு, கூலிங் கிளாஸ், ஹேர்டை, பல்துலக்க ப்ரஷ், பதஞ்சலி பேஸ்ட்- இதெல்லாம் பாக்கி. ஜட்டி பனியன்(ச்சீ.. இதை எழுதனுமா), சாக்ஸ், டவல், செறுப்பு, நேற்றே மடித்து வைத்திருந்த பாண்ட் சட்டை மற்றும் டீ-சர்ட்கள், பாங்க் பாஸ்புக், செக்புக், பான் கார்ட், ஏடிஎம் கார்டு, சென்ட்டு, இந்திய டிரைவிங் லைசென்ஸ்.. எல்லாம் ஆச்சு.
மதிய உணவிற்குப்பிறகு ஆபிஸ் வந்து இன்னும் மிச்சமிருந்த வேலைகள், நடுவே வாட்ஸப்புகள், ஃபேஸ்புக் கமென்ட்டுகள், லைக்குகள். இன்னும் இரண்டு வாரங்களுக்கு நான் ஆபிசில் இல்லையென்பதால் பட்ஜெட், MIS ரிப்போர்ட் என ஏராளமான பேப்பர்களுடன் எதிரே வந்தமர்ந்த CFO சோமனுடன் ஒரு மணிநேரம்.. இம்மாதக்கடைசியில் நான்கு துணை நிறுவனங்களின் போர்டு மீட்டிங்குகள் இருப்பதால் அது சார்ந்த அஜென்டா மற்றும் ரிப்போர்ட்டுகள் பார்த்து முடிக்க மணி மூன்று ஆனது.
க்ரெடிட் கார்டு பணத்தை ஆன்லைனில் கட்டி, இம்மாத டெலிபோன் பில்லையும் நெட்டில் கட்டி, நாளை செக்கின் செய்யப்போகும் தி.நகர் ஜியார்டி க்ராண்டு ஹோட்டலின் லொக்கேஷனை கூகிள் மேப் ஆஃப்லைனில் காப்பாற்றி, பாங்க்காக் மற்றும் பட்டாயா ஐடினெரரி பிரின்ட் எடுத்து... ஸ்ஸப்பாடா! மணி ஐந்து..
'நா கெளம்பறேன்.. உங்களுக்கு எதுனா வேணுமா?' எனக்கேட்ட ஃபிலிப்பினோ பெண்ணிடம் ஒரு சுலைமானி சொல்லியாயிற்று. மேசை டிராயரை திறந்து ரஸ்க் (மனக்கு அசிடிட்டி உந்தி காதா!)
கடந்த மே மாதம் அனுப்பிய மெயில்களை அவுட்பாக்ஸில் ப்ரௌசி 'Sridhar-vacation' தலைப்பிட்ட மெயிலை வெளியே இழுத்து அதையே 'ரிப்ளை ஆல்' செய்து தேதிகளை மாற்றி 'நா.. இந்தா ரெண்டு வாரம்
ஊருக்கு போய்ட்டு வந்துடறேங்க.. அதுவரைக்கும் துணை பொது மேலாளர் சமீர் (அரபிக்காரர்) பாத்துப்பார்..ஹௌஎவர் இன் கேஸ் ஆஃப் அர்ஜன்ட்டுன்னா என்னை மொபைல் போனில் தொடர்பு கொள்ள இன்ன பஹ்ரைன்/இந்திய நம்பர்களுக்கு விளிக்கவும்' என பத்து இயக்குநர்கள் மற்றும் துணை நிறுவன மேலாளர்களுக்கு தட்டிவிட்ட மறு நிமிடம் 'சுகமான பத்திரமான பயணத்திற்கு வாழ்த்துக்கள்' என சில பதில்கள்.
ஐந்து மணிக்கு வீட்டிற்கு கிளம்பி வந்து அவசரமாக சில சட்டைகளை அயர்ன் செய்து உள் அறைக்கு வந்தால் எனது பெட்டியின் மேல் மனைவி வைத்த குட்டி பவுச்சில் வாந்தி, வயித்த வலி, பேதி, தலைவலி , காவிஸ்கான், பான்டாப்ரொசல் மாத்திரைகள்.. மற்றும் 'மூவ்' ( ராத்திரில கால் கொடைச்சல் இருக்கில்ல!)
கப் நூடுல்ஸ், ஜூஸ் பாக்கெட்டுகள், ஸ்மோக்டு பாதாம் முந்திரி, கெட்டில், சின்ன டீ கப்புகள், டீ பைகள், சர்க்கரை, தி.நகரில் சின்னவனுடன் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று வந்து கொடுத்தனுப்பிய ட்யோட்ரன்ட், சாக்லேட், ப்ரிங்கில்ஸ், வேஃபர்ஸ், கேக்.. எல்லாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு கட்டி முடிக்க.. மணி ஆறு..
செக்யூரிடி சகாதேவை கூப்பிட்டு வீட்டுச்சாவியை கொடுத்து இரண்டு நாளைக்கொருமுறை செடிகளுக்கு தண்ணீர் விட கேட்டுக்கொண்டார் மனைவி. சிறிலங்கன் மெய்டு பெண்மணிக்கு வீட்டை இரு நாளைக்கொருமுறை வந்து மாப் செய்ய உத்தரவிட்டு, கேஸ் அடுப்பின் குழாயை மூடி, வைஃபை, கீசர், டெலிபோன் ஸ்விட்சை அனைத்து, எல்லா அறைகளையும் பூட்டி, சாமான்களை காரில் சகாதேவ் எடுத்து வைக்க, கமகம் சென்ட் மணத்துடன் லதீஃப் வந்து சேர்ந்தான்.
அடுத்த இருபது நிமிடத்தில் விமான நிலையத்தில் சாமான்களோடு எங்களை இறங்கி விட்டு, அன்பளிப்பை வெட்கத்துடன் வாங்கிக்கொண்டு விடை பெற்றுக்கொண்டான் லதீஃப்.
இருபத்து நான்கு மணி நேரமும் என்னைப்போல், செக்யூரிட்டி சகாதேவ், மற்றும் லதீஃபைப்போல் நாம் எல்லோரும் இயங்கிக்கொண்டே இருக்கிறோம். இரண்டே வாரங்கள் பிரயாணம் செய்ய நாம் செய்யும் ப்ரிப்பரேஷன்கள், செக் லிஸ்ட்கள், அளப்பறைகள் ஏராளம்.
ஆனால் 68 வருடங்கள் நிரம்பிய ஒரு முதல்வரும் 82 வயது முடித்த ஒரு மூத்த பத்திரிக்கையாளரும் சட்டென இந்த மண்ணுலகை விட்டு மறையும்
போது எவ்வளவு பணிகளையும் கடமைகளையும் விட்டுச்செல்கிறார்கள்! இவர்களது செக்லிஸ்ட் எவ்வளவு பெரியது? நான் இல்லாத இந்த இரண்டு வாரத்தில் கம்பெனியை சமீர் பார்த்துக்கொள்வார் என நான் சொல்லிவிட்டுப்போவதைப்போல் இவர்களும் சொல்லிவிட்டுப்போக முடியாதே! ஜெ மற்றும் சோ போன்ற ஓரெழுத்துப்பிரபலங்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை யார் நிரப்புவது! அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிமனிதர்கள் என்கின்ற முறையில் இருவருமே நம்மை மலைக்க வைத்தவர்கள்... ஹரே கிருஷ்ணா!
பி.கு: துபாய்-சென்னை மூன்று மணி நேர பிரயாண கிறுக்கல்களிலிருந்து...

Gopala Sundaram மாமா...

சுமார் 20 வருடங்களுக்கு முன்...பஹ்ரைனுக்கு இவர் முதன்முதலில் வந்த புதிது. ஒரு பெரிய வங்கியில் சீனியர் வைஸ் பிரெசிடென்ட்.கல்யாணமாகி சில வருடங்களேயான 15, 20 இளைஞர்களை ஒரு நாள் தன் வீட்டிற்கு அழைத்தார். மனைவி, கைக்குழத்தைகளோடு சினிமா, பார்க் என உல்லாசமாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த இளம் குடும்பங்களை எதற்காக வீட்டிற்கு அழைத்தார்?
வீட்டில் சுமார் 1000 காஸ்ஸெட்டுகள் வைத்திருந்தார். வாராவாரம் வெள்ளியன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டு 'இசை' குறித்து தனக்குத்தெரிந்த எல்லாவற்றையும் எல்லோருக்கும் விளக்க ஆரம்பித்தார். வாராவாரம் கூட்டம் இன்னும் அதிகரிக்கத்தொடங்கியது.
மேளகர்த்தா ராகங்கள், ஆரோகணம், ஆவரோகணம், தமிழ்ப்பாடல்கள், செய்யுள், இலக்கணம், திருக்குறள், உரைநடை, நாடகம், சினிமா..... பாடல்களின் ராகங்களை கண்டுபிடிப்பது என இவரது இலவச வகுப்புகள் களைகட்டின. எல்லா வாரங்களும் இவரது வீட்டை நோக்கி ஏராளமான நணபர்கள் படையெடுப்பு. சுடசுட பூரி, சமோசா காபி டிபனும் உண்டு.. ('ச..ப..ச..வுக்கப்பறம் சமோசாவா!' என யாரோ ஓரு குறும்புக்கார இளைஞன் பின்னாலிருந்து சொல்ல ஒரே சிரிப்பு).
காசெட்டில் பானுமதி ராமகிருஷ்ணா (தமிழ்ப்பாட்டல்ல.. தெலுங்கு), கிட்டப்பா, பி. லீலா போன்றவர்கள் பாடல்களை போட்டு குரல் யாருடையது என கண்டுபிடிக்க வேண்டும். கணிதத்துக்கும் (prime numbers) ராகங்களுக்கும் தொடர்பு இருப்பதை அழகாக விளக்கினார் மாமா. சாவேரிக்கு சாவே 'ரி' தான் என நடுநடுவே பிரவாகமெடுக்கும் நகைச்சுவை..
ருக்கு மாமிக்கு தனி ரசிகர் மன்றமே ஆரம்பிக்கும் அளவிற்கு ஜனங்கள். அடுத்த சில மாதங்களில் பஹ்ரைனில் இவரைப்பற்றி தெரியாதவர்களே இல்லை..
சுமார் 30 பேரை வைத்து RS. மனோகர் ஸ்டைலில் ப்ரம்மாண்டமான 'தியாகய்யர்' நாடகம், ராகங்களின் அடிப்படையில் சங்கீத நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கதாகாலட்சேபம்,ராமர் பட்டாபிஷேக ஆண்மிக சொற்பொழிவு என பஹ்ரைனில் இதுவரை பார்த்திராத நிகழ்ச்சிகளை இவர் நடத்திக்காட்டினார்.
தெலுங்கு பேசுபவர் என்பதால் என்னைப்போன்ற நிறைய பேர் அவருடன் பழக வாய்ப்பு.. அறிமுகப்படுத்திய பால்ய நண்பன் Ganapathi Subramanian க்கு நன்றி..
அடுத்த ஒரிரு வருடங்களில் மறுபடியும் தன் பையன் மற்றும் பெண் பிள்ளைகளுடன் இருக்க இவர் அமெரிக்கா திரும்ப வேண்டிய கட்டாயத்தால் பஹ்ரைனை விட்டுப்போனபோது சுமார் 500 பேருக்கு மேல் சேர்ந்து அவருக்கும் ருக்கு மாமிக்கும் பிரியா விடை கொடுத்தோம். பஹ்ரைனில் 20 வருடங்கள் முன் நடந்த பிரம்மாண்டமாக நடந்த விழா அது. அதிலும் டிராமா, பாடல்கள்,சிவகுமார் ( Sivakumar Nilakantan ) மாமாவின் நகைச்சுவைத்துணுக்கு.. நடுவே மாமா அவர்கள் உருவப்படம் வரைந்து அவருக்கு அளிக்கும் அதிர்ஷ்டமும் எனக்குக்கிடைத்தது.
தற்போது கோவையில் வசிக்கும் மாமாவின் சதாபிஷேகம் சமீபத்தில் விமரிசையாக நடந்தது. அதற்கு சில மாதங்கள் முன் மாமா உரையாற்றிய 'ராமர் பட்டாபிஷேகம்' வெகுவாக பாராட்டப்பட்டது.
சென்ற வருடம் கோவை சென்ற என் குடும்பத்துடன் மாமா மாமி ஒரு நாள் முழுவதும் எங்களுடன் கழித்து மாலை தன் காரிலேயே ஹோட்டலில் இறக்கி விட்டு மனதை நெகிழச்செய்தார்.
20 வருடங்களுக்கு முன் வரைந்து கொடுத்த படத்தை அப்படியே பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறார் மாமா.. அதனுடன் இரண்டு மணி நேரத்திற்கு முன் வரைந்த இந்த படத்துடன், மாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறும்...
(சீதாபதி ஶ்ரீதர்)
Image may contain: 3 people

நேத்து ராத்திரி.. யம்மா!


சென்ற விடுமுறையின் போது ஒரு நாள் மதியம் மூன்று மணிக்கு காரில் என் சகோதரி குடும்பத்தாருடன் விராலிமலை கிளம்பினோம். சுப்ரமணியபுரத்திலிருந்து கிளம்பி டோல்கேட்டில் பெட்ரோல் போட்டு சர்க்யூட் ஹவுஸ் காலனி கடந்தபோது மனம் குதூகலமானது. 80களில் பல வருடங்கள் அந்த காலனியில் குடியிருந்தவர்கள் நாங்கள்.
உடனே சடாரென வண்டியை காலனிக்குள் திருப்பினேன். 'டேய் ஶ்ரீதர்! என்னாச்சு!' என என் சகோதரி கேட்க, '35 வருஷம் கழிச்சு இங்க வர்றோமே.. நாம இருந்த ஃப்ளாட்ட பாக்கலாம்' என அந்த பழைய கட்டிடம் முன் வண்டியை நிறுத்தி கீழே இறங்கினேன். நாளை நமதே எம்ஜியார் மாதிரி அந்த இடிந்த கட்டிடத்தை அப்படியே சுற்றிப்பார்க்க, உடனே ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்....
1981... நான் சி.ஏ சேர்ந்த புதிது. தென்னூரிலிருந்து அப்போது தான் அங்கே குடிபெயர்ந்தோம். அரசு குடியிருப்பு காலனி அது. பெரும்பாலும் தாலுகா ஆபிஸ், மாவட்ட கருவூலம், கமர்ஷியல் டாக்ஸ் போன்ற துறைகளின் அலுவலர்கள். நான், என் தம்பி ரவி ( Vijay Raghavan ), கீழ் வீட்டில் BE படித்துக்கொண்டிருந்த 2 பையன்கள், ACTO பையன் ஶ்ரீனிவாசன் என எங்கள் நண்பர் குழாம். லுங்கியை கனுக்காலுக்கு சற்று மேலே உயர்த்திக்கட்டி காலனியைச்சுற்றி வலம் வருவோம்.
அன்றாட பிரச்சனைகளை தீர்க்க காலனி குடியிருப்போர் நலச்சங்கம் இருந்தது. அதன் தலைவர் ரெவென்யூ இஸ்பெக்டர் குமாரசாமி. செயலாளர் புத்தூர் பெரியாஸ்பத்திரி கம்பௌண்டர் தணிகாசலம். அடுத்த வருடம் தலைவராவதற்கு துடித்தவர். பொருளாளர், விளையாட்டு செயலாளர் போன்ற இன்னபிற பதவிகளுடன் சங்கம் செயல்பட்டுக்கொண்டிருந்தது.
தினமும் மாடியில் தொட்டிகளில் தண்ணீர் திறந்து விடுவது, பன்றிகளை விரட்டுவது, பூங்கா பராமரிப்பு, ரோடு ரிப்பேர், இரவில் திருட்டு போன்ற பிரச்சனைகளை விவாதிக்க சங்கத்தின் மாதாந்திர கூட்டத்திற்கு போவோம். பாதி நேரம் வாக்குவாதம்.. கூச்சல் தான்.
'நல்ல தண்ணியே வர்றதில்ல.. இதுக்கு ஒரு வழி பண்ணனும்' என செக்ரடரி எடுத்துறைக்க, உடனே தலைவர் 'குடி தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க ஒரு குழு அமைக்கப்படும்' என்பார்.
'கழிவுநீர் பைப் ஒடஞ்சி பில்டிங்கை சுத்தி தண்ணி தேங்கிக்கெடக்குது' என தாலுகா ஆபிஸ் கண்ணபிரான் சொன்னதும் தலைவர் உடனே 'கழிவு நீர் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்பார்.
'அடிக்கடி பவர்கட் ஆகுதே'- குடிநீர் வாரியம் பக்தவத்சலம்
'மின் வெட்டை சரிசெய்ய ஒரு கரண்ட் கட் குழு அமைத்து நடவடிக்கை எடுப்போம்.'
செக்ரடரி சூடானார்.. 'எல்லாத்துக்கும் குழு அமைச்சிட்டா பிரச்னை தீர்த்துடுமா? இனி குழு அமைக்க பக்கத்து செங்குளம் காலனில இருந்து தான் ஆளுங்கள கூட்டிக்கிட்டு வரனும்'
'இத்தனை குழு தேவையா இல்லயானு முடிவு செய்ய ஒரு தனி குழு அமைக்கனும் தலிவரே!' என யாரோ அங்கலாய்த்து, கூட்டம் கொல்லென சிரிக்க, கோபத்தில் தலைவர் முகம் நடுங்கியது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வரும்.
ஒருநாள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக இருந்து காலனியில் எங்கே நடந்தது எனத்தெரியவில்லை. அன்று மதியம் பாலக்கரை வழியாக போய்க்கொண்டிருந்த போது, கொளத்தூர் பிரியாணி ஹோட்டலிலிருந்து சங்க நிர்வாகிகள் சீரகம் மென்றபடி வெளியே வந்துகொண்டிருந்தார்கள்.
அடுத்தடுத்த மாதங்களில் இரவில் திருட்டு போன்ற பிரச்னைகள் அதிகமாகி குடியிருப்பவர்கள் அந்த சங்க நிர்வாகிகளை கூப்பிட்டு 'என்ன தான் பண்றீங்க' எனக்கேட்க, தலைவர் 'அப்பிரச்னைக்கு உடனே 'திருட்டு'க்குழு அமைக்கப்படும்' என அறிவிக்க கரகாட்டக்காரன் செந்தில் மேல் பாயும் கவுண்டமணி ( அது தாண்ணே இது!) மாதிரி மக்கள் பொங்கியெழுந்தார்கள்.
அடுத்த வாரம் தலைவர் அமைத்த இரவு ரோந்துக்குழு கையில் டார்ச் மற்றும் தடிகளுடன் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் காலனியை சுற்றி வந்தார்கள். தூரத்தில் வேப்பமரத்தின் பின்னால் புதர் அருகே ஒரு உருவம் தரையில் உட்கார்ந்திருந்தது. 'மாட்னான்டா திருடன்!' என ரோந்துக்குழு சட்டென சுதாரித்து சத்தமில்லாமல் தடியுடன் புதர்ப்பக்கம் பார்த்து உட்கார்ந்திருந்த உருவத்தை மெல்ல நெருங்கி தடியால் படீரென பின் பக்கம் பார்த்து சாத்த, 'ஐயோ டேய்! நான் செக்ரட்டரிடா கபோதி! பாத்ரூம்ல தண்ணி வராமெ வெளிய போய்க்கிட்ருக்கேன்!' என அலற, ஒரே கலாட்டா. 'நா அப்பவே அடிச்சிக்கிட்டேன்.. இத்தினி குழு அமைச்சா ஒரு எழவும் புரியமாட்டேங்குது!' என பின்பக்கம் தேய்த்தபடி செக்ரடரி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.
உலகநாதபுரத்தைச்சேர்ந்தவர்கள் தான் அந்த திருட்டு கும்பல் என்றும், ஒருநாள் அவர்கள் ரோந்துக்குழுவை தாக்க முற்படலாமென்றும் பேசிக்கொண்டார்கள்.
அடுத்த வாரம் இரவு ரோந்துக்குழுவை ஊக்குவிக்க தலைவர், செக்ரடரி போன்றோர் ஃப்ளாஸ்க்கில் டீ மற்றும் பிஸ்கட்டுடன் இரவு இரண்டு மணிக்கு வெளியே கிளம்பி ரோந்துக்குழுவை நெருங்க, எதிர் திசையிலிருந்து ஆட்டோவில் தடிகளுடன் மற்றொரு 'குழு' வந்திறங்கியது.
மறுநாள் காலை தலைவர் வீட்டில் ஒரே அமளி. காலனி மக்கள் அங்கே கூடினார்கள். ஹாலில் மூன்று நாற்காலிகளில் தலைவர், செக்ரடரி போன்றோர் வலியால் முனகியபடி உட்கார்ந்திருக்க, அவர்களது மனைவிமார்கள் பின்னால் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.. முதுகில்.
யாரோ 'நேத்து ராத்திரி...' என சொல்ல ஆரம்பிக்க 'யம்மா..!' என அந்த மூன்று பேரும் வலியால் கத்தினார்கள்..
'கொஞ்சம் தள்ளுங்கப்பா.. அந்த ஃபேனைப்போடுங்க!' என சத்தங்கள். தலைவரை அடையாளமே தெரியவில்லை. முகம் அங்கங்கே உருண்டையாக வீங்கி சில கோணத்தில் நாகையா, பக்கவாட்டில் பாலையா மாதிரி தெரிந்தார். உருட்டுக்கட்டை பதிவு தாயக்கட்டம் போல அழகாக முதுகில் தெரிந்தது.
திடீரென 'கு$ப்ள்#உ*€' என ஏதோ சத்தம்.
'தலைவர் என்னமோ சொல்றார்' என யாரோ சொல்ல... 'என்ன சொல்றீங்க தலைவரே?' ...
தலைவர் 'இ@$ள்ப்ஓ.. கள்&@%€ஃ'...' என மறுபடியும் சொல்ல, .. 'அட சரியாகத்தான் சொல்லித்தொலைங்களேன்' என அவரது மனைவி சலித்துக்கொண்டார்.
'கு$ள்$&@.. கி@ட்05?@#%'..
'குளுரடிக்கிதே கிட்ட வா..கிட்ட வா' பாட்டு மாதிரியே இருக்கே'
'அட.. காமெடி பண்ணாம கொஞ்சம் அவர் என்ன சொல்றாருன்னு கேளுங்கையா!'
கஷ்டப்பட்டு நிறுத்தி நிதானமாக சொன்னார் தலைவர்: 'இந்த தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க ஒரு தனி குழு அமைக்கப்படும்'
பாதி பேர் அங்கேயே உருட்டுக்கட்டை தேடினார்கள்..

இல்லே.. இல்லே.. இல்லெல்லே...


பஹ்ரைன் கேரளா வைத்ய ரத்னா ஆயுர்வேதா மெடிகல் செண்டர் முன்பு காரை நிறுத்தி விட்டு மனைவியுடன் உள்ளே சென்றேன். நாலு நாளாக முதுகும் இடுப்பும் ஒரே வலி. 'இதெல்லாம் வேஸ்ட்.. எல்லா வலிக்கும் மசாஜ் தான் செய்வாங்க அவங்க. வலி ஜாஸ்தி தான் ஆகும். தவிர டிரெஸ்ஸையெல்லாம் கழட்டனும். தேவையா உங்களுக்கு!' என்ற மனைவியின் ஆலோசனையை உதாசீனம் செய்து ரிஸப்ஷன் பகுதி சென்றேன்.
நல்ல கூட்டம். என்னைப்போல் எல்லா ஆண்களும் தத்தம் மனைவியருடன் வந்திருந்தனர். எதிரே கிடந்த புத்தகத்தை பெண்கள் பார்த்துக்கொண்டிருக்க, சில ஆண்கள் போனில் 'சாதனம் கிட்டியோ.. ஞான் இப்ப விளிச்சி பறையாம்' என ஆபீஸ் வேலை விஷயமாக பேசிக்கொண்டிருந்தனர். எதிரே தலைக்கு மேலே கைராலி டி.வி. ஒரு நோயாளி கிட்டத்தட்ட டீவி சீரியல் ஆரம்பிக்கும்போது டாக்டரை பார்க்க உள்ளே போனால் அந்த சீரியல் முடியும்போது தான் வெளியே வருவார். வடஇந்தியர், ஆந்திராக்காரர் என யார் வந்தாலும் ரிஸப்ஷன் பெண் மலையாளத்தில் மட்டுமே விசாரிக்க, அந்தப்பக்கம் பாட்டிலில் மருந்து கொடுத்துக்கொண்டிருந்த மற்றொரு சேட்டன் அப்பெண்ணுக்கு உதவிக்கொண்டிருந்தார்.
அடுத்து ரிஸப்ஷன் பெண் என்னை அழைக்க மனைவியுடன் உள்ளே போனேன். சலவை செய்த வெள்ளைக்கோட்டுடன் ஆண் டாக்டர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். தலையில் hair plant செய்திருந்தார். Former Head of the Dept of Ayurvedic Science என ஏதோ கேரள ஆசுபத்திரி பெயர் அவர் தலைக்கு மேல். பக்கத்தில் மதன்மித்ரா ஸ்டைலில் ஆண் படத்தில் உடம்பு முழுக்க சிவப்புக்கலர் நரம்புகள் நம்மை பயமுறுத்த, கொஞ்சம் தள்ளி மனித மூளை படம். அவரது டேபிளில் வெள்ளைத்தாளில் மனித முதுகெலும்பு படம் வரைந்து நடுவே அம்புக்குறி.. அங்க தான் ப்ரஷ்ணம் என யாருக்கோ விளக்கியிருப்பார் போலும். அந்த தாளின் மேலே ப்ளாஸ்டிக்கில் செய்யப்பட்ட மனித முழங்கால் மூட்டு தான் டேபிள் வெய்ட். அவருக்குப்பின்னால் லைட் போட்டு ஏதோ எக்ஸ்-ரே ரிப்போர்ட் தொங்கிக்கொண்டிருந்தது. அதிலும் பெல்ட் மாதிரி முதுகெலும்பு படம். அந்த சூழலுக்கே இடுப்பு வலி மெல்ல ஆரம்பித்தது எனக்கு.
'ஏதானு?' என பரிவுடன் என்னை விசாரித்தார் டாக்டர். I have back pain என ஆங்கிலத்தில் நான் சொன்னதும் இவன் பாண்டி தான் என புரிந்துகொண்டு, ok! you have back pain! என அவரும் விஜாரித்தார். அடுத்து How many days என்ற அவரது கேள்விக்கு நான் for the last 10 days என்றதும் oh! for the last 10 days! என அவரும் கேட்டார். The pain is only during night என்ற என்னிடம் அவரும் oh! the pain is only during night! என்றார்.. கவனிக்கவும்.. நாம் எதைச்சொன்னாலும் அதை நம்மிடம் அப்படியே திருப்பிச்சொல்லும வழக்கம் சிலபேரிடம் இருந்தால் போச்சு. தொலைந்தோம். இவர் அந்த டைப். அதனால் தான் ஒவ்வொரு நோயாளிக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார். கைராலி டீவி சீரியல் முடிந்து வார்த்தகள் (news) ஓட ஆரம்பித்தது.
எதிரே கட்டிலில் குப்புறப்படுக்கச்சொன்னார். முதுகு, இடுப்புப்பகுதியை அங்கங்கே அழுத்தி அழுத்தி 'வலிக்குதா.. வலிக்குதா.. எனக்கேட்டார். வலி இருக்கும் இடம் தவிர மற்ற எல்லா இடத்திலும் அழுத்தி அழுத்தி அவர் கேட்க, நான் இல்லே..இல்லே..இல்லல்லே.. என சொல்ல அவரும் கூடவே இல்லே..இல்லே..இல்லல்லே! என திருப்பி சொன்னார். எப்பிடித்தான் இந்தப்பழக்கம் வந்ததோ அவருக்கு..தெரியவில்லை!. இப்படி திருப்பிச்சொல்லியே வாழ்நாளில் பாதியை கழித்துவிட்டார். வெளியே கூட்டம் அம்மியது.
ஒரு வழியாக எங்கேயோ எனக்கு வலி வந்து 'ஸ்ஸ்..' என லேசாக கத்தினேன். நல்லவேளை..பதிலுக்கு அவரும் கத்தவில்லை. ஆனால் முகத்தில் திருப்தி. ஒந்நும் கொழப்பம் இல்லா. 'பத்து சிட்டிங் மஸாஜ் செய்யனும்' என்று சொல்லி பேப்பரில் 'பொடிகிழி மசாஜ்' என எழுதினார். அதென்னாங்க 'பொடிகிழி' என்ற கேள்விக்கு 'ஓயல் (oil) மசாஜ்' என்றார். 8 தினாருக்கு பகுதி மசாஜ்ஜாம். ( 'பகுதி' என்றால் 'பாதி' என அர்த்தமாம்). முதுகு மற்றும் இடுப்பு மட்டுமாம். ஃபுல் மசாஜ் 15 தினார் கால் வரையாம்.
சாஜன் என்ற நபரைக்கூப்பிட்டு உள்ளே ஒரு ரூமுக்குள் கூட்டிப்போய், அவர்கள் கொடுத்த கோவணத்தை சுற்றிக்கொண்டு சப்பாணி மாதிரி தயங்கி தயங்கி வந்து நின்றேன். கோமணம் கொஞ்சம் அகலமாகவாவது இருந்திருக்கலாம். ரிப்பன் மாதிரி இருந்தது. காலை அகட்டாமல் சர்வ ஜாக்கிறதையாக நடந்து வந்த என்னை நடு ஹாலில் போடப்பட்டிருந்த ஒரு பெரிய மேசையின் மேல் குப்புறப்படுக்க சொன்னார் சாஜன். இதற்கு அவ்ளோ பெரிய ஹால் தேவையா? கிட்டத்தட்ட 50 பேரை வைத்து சீமந்தமே நடத்தலாம்.
வெறும் கோமணத்துடன் குப்புறப்படுத்திருந்த என்னை 'நாட்ல எவ்டே?' என்று பரிவுடன் விசாரித்தார் சாஜன். 'அடப்பாதகா! இடுப்புல வலி எவ்வடேன்னு கேக்காம நாட்ல எவ்டேயென ஊரைப்பத்தி விசாரிக்க இதுதானாடா நேரம்!' என்று அவரை சபித்துக்கொண்டு 'திருச்சி' என்று சொன்னேன். உடனே மறுபடியும் அவர் 'நாட்ல எவ்வடே' என்று கேட்டார். எனக்கு காது சூடானது. இப்பத்தானே 'திருச்சி' என பதில் சொன்னேன்! அப்புறம் தான் புரிந்தது மலையாளத்தில் 'திருச்சி' என்றால் 'திரும்பவும்' என்று அர்த்தமாம்.
ஒருவழியாக சம்பாஷனை முடிந்து பணியை ஆரம்பித்தார். தேநீர் போடும் கெட்டிலை எடுத்தார். பரவாயில்லையே குடிக்க டீயெல்லாம் கொடுப்பார்கள் போல என்ற என் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டார். கற்பூராதி தைலம் கலந்த எண்ணையை கெட்டிலில் விட்டு ஸ்டவ்வில் சூடாக்கி இடுப்பில் மிக தாராளமாக கொட்டி ஒத்தடம் என்கிற பேரில் முதுகையும் இடுப்பையும் துவம்சம் செய்யத்துவங்கினார். பரோட்டா மாஸ்டர் வேலை பார்த்தவர் போலிருக்கும். நிமிடத்திற்கொரு தரம் பொடிகிழியை சூடான எண்ணெயில் தொட்டு இடுப்பிற்கு கீழே வைத்து ''ஆ'வென அலற வைத்தார். குப்புறத்தான் படுத்திருந்தேன்.
அடுத்தடுத்த ரூம்களில் இதே மாதிரி இஷ்டமித்திர பந்துக்களுடன் மசாஜ் வைபவங்கள்..கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் கழித்து 'கழிஞ்ஞு' என்றார். துவண்ட ஆடையுடன் (ஆடை எங்க! கோமணந்தான்!) ஒருவழியாக உடை மாற்றிக்கொள்ள வேறு அறைக்கு போனால் எங்கெங்கு காணினும் ஜட்டியடா!
எல்லாம் முடிந்து ரிஷப்ஷனுக்கு வந்து பணத்தை கட்டும்போது அந்த பெண் சொன்னார் ' சாரே ஈ மாசம் offer இண்டு ' என்றார். மசாஜுல என்னம்மா offer ? என்று கேட்டேன். 'இந்நு மசாஜ் செய்யுங்கில் 10 தெவசம் கழிஞ்ஞு 50% சார்ஜிலே மற்றொரு மசாஜ் கிட்டும்' என்றாரே பார்க்கலாம். இந்த ஒரு 'தெவசம்' போதும் என்று சொல்லி வெளியே வந்தேன்...
டாக்டரின் ரூமிலிருந்து 'இங்க வலிக்கிதா.. இங்க வலிக்குதா?' சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நிறைய 'இல்லே.. இல்லெல்லே' சத்தங்கள் டாக்டரின் குரலுடன் எதிரொலித்தது. வெளியே காத்திருந்த சில நோயாளிகள் கடிகாரத்தை பார்த்துக்கொண்டே எறிச்சலுடன் தூங்கிக்கொண்டிருக்க, மேலே மோகன்லால் ஷோபணா பின்னால் ஓடிக்கொண்டிருந்தார்.
பி.கு: காரை ஓட்டிக்கொண்டே 'எவ்ளோ டைம் எடுத்துக்கிட்டார் டாக்டர்!' என உஷா சொல்ல நானும் 'எவ்ளோ டைம் எடுத்துக்கிட்டார் டாக்டர்!' என்றேன். 'வீட்டுக்கு போனவுடனே சப்பாத்தி செய்யனும்' என அவள் சொல்ல, நானும் 'வீட்டுக்கு போனவுடனே சப்பாத்தி செய்யனும்' என்றுதும் தலையில் அடித்துக்கொண்டாள்.

Shyam Krishnan

இரவு சுமார் 12 மணிக்கும் இவரது வீட்டுக்கதவை தைரியமாக தட்டினால் மலர்ந்த முகத்துடன் கதவைத்திறப்பார். சின்மயா சொசைட்டி ப்ரோக்ராம் நடத்தறதுக்கு ஸ்பான்சர்ஸ் லிஸ்ட் ரெடி பண்ணிண்டிருக்கேன் என்பார். அல்லது ஏதாவது பூஜைக்கு இந்தியாவிலிருந்து வரவழைக்க சாமான்கள் லிஸ்ட் போட்டுக்கொண்டிருப்பார்.
பஹ்ரைன் மனாமாவிலிருந்து வெகு தூரம் தள்ளி புதைய்யா பகுதியில் அழகிய வில்லா.. நாம் உள்ளே நுழைந்ததும் ச்சாய் அல்லது பெருங்காயம் கலந்த மோர் கொண்டு வந்து வைப்பார் முத்து (இவர் வீட்டில் வேலை செய்யும் இனிய மலையாளி அன்பர்). இன்னொரு ஆந்திராக்காரர் கிச்சனில் தயிர் சாதம் கலந்து கொண்டிருப்பார். அந்தப்பக்கம் ஹாலில் பஹ்ரைனிலேயே மிகப்பெரிய கொலு வைக்க வேலைகள் நடந்துகொண்டிருக்கும். கூரை வரை படிக்கட்டுகளில் வைக்கப்படும் இவரது வீட்டு கொலுவுக்கு ஆறேழு நிமிடங்கள் கைராலி டிவியில் ஸ்லாட் உண்டு.
பஹ்ரைனில் ரஜினி படம் ரிலீஸ் ஆகுமென்றால் போதும், ஊர் முழுக்க ரஜினி ஃபீவர் பரப்பி விடுவது இவர் தான். கிட்டத்தட்ட ஆயிரம் டிக்கெட்டுகளை முதல் ஷோவுக்காக முன்பதிவு செய்து ( கையிலிருந்து செலவு செய்து), சில தியேட்டர்களையே முழுவதுமாக புக் செய்தும், ரஜினி படம் போட்ட டி. ஷர்ட்களை ஆர்டர் செய்து, எல்லா நண்பர்களுக்கும் போன் செய்து டி.ஷர்ட் மற்றும் டிக்கெட்டுகளை விநியோகம் செய்து, படம் பார்க்க வந்த நண்பர்களுடன் போட்டோ எடுத்து, ரஜினிக்கு வாழ்த்து சொல்லும் வீடியோ எடுத்து, மறுநாள் கைராலி டிவி 'டெசர்ட் டைமி'ல் ஓலிபரப்ப வைத்து.. மனுஷனுக்கு ஓய்வு ஒழிச்சல் என்பதே கிடையாது...அதுசரி.. செலவு செய்து வாங்கிய ஆயிரம் டிக்கெட்டுக்கான காசை நண்பர்களிடமிருந்து முழுவதும் வசூலிக்காமல், அநேகமாக நாமாகவே போய் அவர் சட்டைப்பையில் போடவேண்டும்.
புத்தகம், மருந்து, சர்ட்டிஃபிகேட் இப்படி எதாவது ஒன்றை இந்தியாவிலிருந்து வரவழைக்கவோ கொடுத்தனுப்பவோ இவரை அனுகினால் போதும். அடுத்த இரண்டு நாட்களில் வேலை நடந்துவிடும். லாப்டாப்பையே ரிப்பேருக்கு சென்னைக்கு அனுப்பி திரும்ப வரவழைப்பவர். இனிய முகத்துடன் நண்பர்களுக்கு உதவுவதிலேயே பெருவாரியான நேரம் செலவளிப்பவர் இவர்.
தனது வீட்டில் வேலை செய்யும் ஆட்களின் உறவினர் யாருக்காவது தானே விசா எடுத்து இந்தியாவிலிருந்து வரவழைத்து தன் வீட்டில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு பஹ்ரைனில் வேலை வாங்கிக்கொடுப்பார்.
வருடாவருடம் ஜனவரி முதல் தேதியன்று இவர் வீட்டில் நடக்கும் பூஜை மற்றும் ஹோமம் பஹ்ரைனிலேயே மிகப்பெரிய பூஜையாகும். தமிழர்கள் அனைவரையும் அன்று இவரது வீட்டில் பார்க்கலாம். அந்த பூஜையின் போது பிள்ளையார் உருவத்தை விதவிதமான பொருட்களினால் செய்யும் வேலை என்னுடையது. கடந்த 15 வருடங்களாக இத்திருப்பணியை செய்யும் பாக்கியம் எனக்கும் மனைவி Usharani Sridharக்கும் கிடைத்துள்ளது. இது வரை பிஸ்கட், பேரிட்சை, காய்கறிகள், பஞ்சு, சாக்லேட், கொட்டாங்கச்சி மற்றும் இதர பொருட்களினால் கணேஷா அவதரித்திருக்கிறார். பூஜையன்று இவரது வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் சுமார் 250 பேருக்கு காலை டிபன், பின் New Year Ganeshaவுடன் தம்பதிகள் ஒவ்வொருவராக புகைப்படம் எடுப்பது போன்றவை வருடம் தவறாமல் நடக்கும் நிகழ்ச்சிகள்..
இவரது வெற்றி மற்றும் புகழுக்கு காரணமானவர் இவரது மனைவி பத்மா தான் என்பதை மறுக்க முடியாது. பத்மாவின் பாலக்காட்டுத்தமிழ் கேட்க மிகவும் இனிமை. ஜெர்மனியில் ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தவர், திருமணத்திற்குப்பின் கணவரின் வெற்றிக்கு உருதுணையாக இருக்கிறார்.
CA, ICWA, CFA, CISA போன்ற நிதி சார்ந்த மேற்படிப்புகள் படித்து, பஹ்ரைனின் மிகப்பெரிய வங்கி ஒன்றின் CFOவாக இருக்கும், தயாள குணம் படைத்த, எப்போதுமே மலர்ந்த முகத்துடன் இருக்கும், எனது நெருங்கிய நண்பருமானShyam Krishnan இன் பிறந்த நாளான இன்று, பல்லாண்டு வாழ்கவென இவரை இக்கரிக்கட்டி ஓவியத்துடன் வாழ்த்தும்..

சீதாபதி ஶ்ரீதர்
(ஜியார்ஜியாவிலிருந்து..😄)

Thursday, March 30, 2017

ராமாஞ்சம் பாட்டி...


1968.. 69. அப்பாவிற்கு ஈரோட்டிலிருந்து ஏற்காடுக்கு மாற்றலானது. சாமான்களை லாரியில் ஏற்றி விட்டு, அப்பாவுடன் நான்(7வயது), என் தம்பி ரவி Vijay Raghavan (5), அம்மா, எல்லோரும் பஸ்ஸில் ஏற்காடு போகும் வழியில் சேலத்தில் மதிய சாப்பாடு முடித்து விட்டு ஆராதனா படம் பார்த்தோம். ரயில் கூடவே ஜீப்பில் கூர்க்கா தொப்பியுடன் வரும் ராஜேஷ் கண்ணா.. விமான விபத்து.. தலையில் கட்டு.. அரைப்பயித்தியம்.. இன்னும் கொஞ்சம் தலையை சாய்த்து துறுதுறுவான ஃபரிதா ஜலாலுடன் 'பாஹோமே பாஹார் ஹெ' பாட, நானும் ரவியும் பாதி தூக்கத்தில்... படம் முடிந்து வெளியே வரும்போது என் நிக்கர் ஈரமாயிருந்தது.. எல்லாமே அரைகுறையாக நினைவுக்கு வருகிறது.
சேலம் மாவட்டத்தின் கீழ் ஏற்காடு வட்டாரம் சிறிய அழகிய மலைப்பிரதேசம். அப்பாவிற்கு கோ-ஆபரேடிவ் டிபார்ட்மென்ட்டிலிருந்து டெபுடேஷனில் ஏற்காடு பஞ்சாயத்து யூனியனின் EOC (Extension Officer of Cooperative) ஆக தனி வீடு, ஜீப் போன்ற வசதிகளுடன் போஸ்டிங். 'எவ்ளோ பெரிய கவர்மெண்டு உத்தியோகமா இருந்தாலும் வசதி தான் இருக்கும்.. ஆனா தரித்திரம்.. கைல காசு இருக்காது' என சொல்லுவார். BDO (Block Development Officer)க்கு அடுத்த பதவியென்பதால் ஏற்காட்டில் நல்ல செல்வாக்கு அவருக்கு.
படித்தது 11ஆம் வகுப்பேயென்றாலும் ஆங்கிலத்தில் கடிதங்கள் டிராஃப்ட் செய்வது, ஆங்கில பேச்சாற்றல் என பிச்சு உதறுவார். அந்த காலத்திலேயே கையில் எப்போதும் ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் போன்ற நாவல்கள். முண்டகம்பாடி பஞ்சாயத்து யூனியன் ஸ்கூல் சுதந்திர தின விழாவிற்கு தலைமை தாங்கி கொடியேற்றி 'புள்ளைங்களா! இன்னிக்கி நம்ம சுதந்திர தினம்!' என அவர் உரையாற்றும்போது நானும் ரவியும் குபீரென சிரித்து விடுவோம்.
பஞ்சாயத்து அலுவலக மேலாளர்களுக்கு மொத்தம் 8 வீடுகள் வரிசையாக. பெரிய விசாலமான வீடு. வாசலிலிருந்து ஏழெட்டு படி ஏறி மெயின்ரோடை கடந்து சரிவான மலைப்பாதையில் ஏறினால் எதிரே பஞ்சாயத்து யூனியன் அலுவலகம்.
இந்தப்பக்கம் சிலோன்காரர் சிலம்பன் வீடு. கொழுகொழுவென அவரது 8 மாத குழந்தை ஜெயன் மீது எப்போதும் கமகம கொழும்புத்தேங்காயெண்ணெய் வாசனை. அந்த குளிரில் குழந்தைக்கு கன்னம் மட்டும் கருஞ்சிவப்பு நிறத்தில் லேசான வெடிப்புடன் இருக்கும். அழகான அந்த கன்னத்தை விட்டுவிட்டு அவர் கீழே(!) முகத்தை புதைத்து கிச்சுகிச்சு மூட்ட, குழந்தை 'கிக்கெக்கெ' என சிரிக்கும்.
அத்தப்பக்கம் 'அக்ரி சார்' (அக்ரிகல்ச்சர் ஆபிசர்) வீடு. அவருக்கு ஒரே பெண் ராதா. என் அக்கா லதா (Hemalatha Manohar )வும் அவளும் நாசரேத் ஸ்கூல். என்னைவிட இரண்டு மூன்று வயது மூத்தவள். சிவப்பாக மிகவும் அழகாக இருப்பாள். அம்மா இல்லாத பெண். அக்ரி சாரின் அம்மா 'ராமாஞ்சம்' பாட்டி தான் அவளுக்கு எல்லாமே. தவிர ராமாஞ்சம் பாட்டியின் அம்மா மற்றும் சித்தியும் அங்கு இருந்தார்கள். கொள்ளு பாட்டிகள் இருவருக்கும் எப்போதும் உள் அறையில் தான் ஜாகை. மடித்து வைத்த ஈசி சேர் மாதிரி ஒடிசலான தேகம் இருவருக்கும். ராதா கூட அவர்களை தொடக்கூடாது.. மடி. வெளியே பனி கொட்டி ஊரே சொதசொதவென ஈரமாக இருக்க, மழித்த தலை மூடிய காவி மடிசாருடன் இரவு முழுவதும் கம்பளி போர்த்தி வெடவெட குளிரில் தூங்கியெழுந்த பாட்டிகளை காலை சுள்ளென சூரிய ஒளி அடிக்கும் ஒரு மூலையில் தரையில் சாக்கு போட்டு உட்கார்த்தி வைத்திருப்பாள் ராமாஞ்சம் பாட்டி.
அக்ரி சாரும் அப்பாவும் அந்நியோன்யமாக பழகினார்கள். வெறும் சம்பாஷனை நட்பு அல்ல. சின்ன வயதிலேயே மனைவியை இழந்தவருக்கு அப்பாவின் நட்பு ஆறுதலாக இருந்தது. பனியன் இல்லா சட்டை, இடுப்பில் கச்சமில்லாத தட்டுச்சுற்று வேஷ்டியுடன் தினமும் காலை பட்டாசாலையில் அப்பா எதிரே சேரில் உட்கார்ந்திருப்பார். தங்கக்கம்பி இழை போல சன்னமான பேச்சு. கண்களை பார்த்து பேசாமல் கீழே பார்த்து தான் பேசுவார். முன் வழுக்கை. நீண்ட நாசி. அவலக்ஷ்ணமில்லாத முகத்தின் சரிந்த நெற்றியில் அழகிய திருமண். யோக க்ஷேம விசாரனைக்குப்பிறகும் இருவரும் அதிகம் பேசாமல் சும்மாவே வெகுநேரம் உட்கார்ந்திருப்பார்கள்.
ராமாஞ்சம் பாட்டியும் ராதாவும் தினம் பத்து தடவையாவது எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார்கள், அல்லது அவர்கள் வீட்டிலிருந்தே குரல் கொடுப்பார்கள். 'மாமி! போன மாசம் உங்காத்துக்கு குடுத்த ஒரு டம்ளர் காப்பிப்பொடிய பாட்டி வாங்கிண்டு வரச்சொன்னா!' என ராதா வந்து நிற்பதும், 'லதா! நா ரெடியாயிட்டேன். பாட்டி இப்பத்தான் டிபன் பாக்ஸ்ல சாம்பார் சாதம் இட்டிண்ருக்கா! நீ ரெடியா? ' என ஸ்கூல் கிளம்பும் முன் ராதா குரல் கொடுப்பதும் அன்றாட சமாச்சாரங்கள்.
ராதாவின் அண்ணன் ஜக்கு பாலிடெக்னிக் பரிட்சையில் ஃபெயிலாகி சேலத்திலிருந்து வந்திருந்தான். புழக்கடையில் தோண்டிப்பிடுங்கிய இஞ்சியை எண்ணெயில் வறுத்து 'ச்சவுக்' 'ச்சவுக்' கென, சிவந்த ஈறு தெரிய சாப்பிட்டுக்கொண்டே எங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வருவான். கொஞ்சம் அழுக்குப்பேர்வழி. பேச்சின் நடுவே நொடிக்கொருதரம் 'க்ஹூம்'... 'க்ஹூம்'என மூக்கு வழியாக வினோத ஒலியெழுப்புவான்.
வயதான இரண்டு பாட்டிகள், அம்மா, மகள் மற்றும் மகனுடன் குடும்பம் நடத்தும் அக்ரி சாருக்கு கவலையைல்லாம் ராதாவைப்பற்றி தான். அம்மா ராமாஞ்சம் பாட்டி தான் குடும்பத்தையே தாங்கி நிறுத்துபவள். இரவு பன்னிரண்டு வரை அடுக்களையில் இருந்தாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்து விடும் அசுரத்தூக்கம் இல்லாத தேவகணத்தைச்சேர்ந்தவள். அவளுக்கும் ராதா தான் உலகம்.
மருமகளை இழந்தபோது ராதா மூன்று வயது குழந்தையாம். நாமக்கல்லில் ரெண்டாந்தாரமாக யாரோ அக்ரி சாரை கேட்க, ராமாஞ்சம் பாட்டி எவ்வளவோ கெஞ்சியும் அவர் ஒத்துக்கொள்ளவில்லையாம். 'புதுசா வர்றவ ராதாவ நன்னா பாத்துப்பாளான்னு தெரியாதோல்லியோம்மா! நா இப்பிடியே இருந்துடறேனே!.. இருக்கனும்னு தானே ப்ராப்தி..!' என சொன்னதை ராமாஞ்சம் மாமி சொல்லும்போதே தொண்டை அடைக்க, சட்டென என் அம்மாவுக்கும் அழுகை முட்டும். 'இருட்டினது கூட தெரியாமெ பேசிண்டிருக்கோம் பாரு! வெளக்கை ஏத்துடிம்மா சரோஜா! நா வறேன். போதும்டா ரங்கா இந்த நிஷ்டூரம்..!' என மேல் தலைப்பில் மூக்கை சிந்தியபடி ராமாஞ்சம் மாமி கிளம்புவதை நாங்கள் புரியாமல் பார்ப்போம். தாட்டியாக சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். வயது ஐம்பத்து ஏழைத்தாண்டினாலும் நரையில்லா கேசம். சோகம் படிந்த கண்களைச்சுற்றி கருவளையம்..
ஒரு ஞாயிறு மாலை ராதா ஓடி வந்து, 'மாமி! அமிர்தாஞ்சன தைலம் தீர்ந்துடுத்து..பாட்டி வாங்கிண்டு வரச்சொன்னா. நெஞ்சை என்னமோ கரிக்குதுங்கறா!' என வந்து நின்றாள். தைலத்தை கொடுத்தனுப்பியும் ஏனோ மனசு கேட்காமல் சில நிமிடங்களில் அம்மா அவர்கள் வீட்டிற்கு கிளம்பிப்போனாள். அடுத்த சில நிமிடங்களில் அக்ரி சார் வந்து ஏதோ சொல்ல, அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு அவருடன் ஜீப்பில் கிளம்பிப்போனார். வெளியே நல்ல மழை வேறு.
அம்மாவைத்தேடி நாங்களும் ராதா வீட்டிற்கு போன போது நடு ஹாலில் ராமாஞ்சம் பாட்டி தரையில் உருண்டு புரண்டு 'ஐயோ நெஞ்ச வலிக்குதே! பெருமாளே!' என பெருஞ்சத்தமிட, அம்மா, ராதா மற்றும் என் அக்கா லதா யாராலும் பாட்டியை கட்டுப்படுத்த முடியவில்லை.. ஒரே சத்தம். 'அந்தப்பக்கம் போங்கடா' என எங்களை விரட்டியும் நாங்கள் கால்களுக்கிடையில் குனிந்து பார்த்தபோது என் அம்மா ராமாஞ்சம் பாட்டியின் புடவையை தளர்த்தி இரண்டு விரக்கடை அமிர்தாஞ்சன தைலத்தை வழித்து மாரில் தேய்த்துக்கொண்டிருந்தார்கள். ஜக்கு அழுதுகொண்டே சகஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிருந்தான். பிறகு நாங்கள் வீட்டிற்கு ஓடி வந்துவிட்டோம்.
மறுநாள் காலை எழுந்தபோது அம்மா அழுதுகொண்டே எங்களுக்கு டிபன் கட்டிக்கொடுத்துவிட்டு ராதா வீட்டிற்கு ஓட, அப்பாவும் வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டு ராதா சத்தத்தையும் காணோம். 'அவ இன்னிக்கி ஸ்கூல் வரமாட்டா.. நீங்க கிளம்புங்க!' என அம்மா எங்களை விரட்ட, வெளியே ஜீப்பிலிருந்து கெரசீன் டின்களை அப்பாவும் அக்ரி சாரும் இறக்கிக்கொண்டிருந்தார்கள். 'கட்டை எல்லாமே ஈரமாயிருக்காம். கெரசீன் போறுமா!' என பேசிக்கொண்டார்கள். மழை மட்டும் ஓயவேயில்லை. எல்லா சேலம் பஸ்களும் வழக்கத்திற்கு மாறாக எங்கள் வீட்டின் முன் நிற்க யார் யாரோ வந்திறங்கினார்கள். ராதா வீட்டு வாசலில் கீற்றுப்பந்தல்.
அடுத்த சில நாட்கள் அக்ரி சார் கூடவே அப்பா இருந்தார். ஒருநாள் அவர்கள் வீட்டின் முன் லாரியில் சாமான்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். இரண்டு கொள்ளு பாட்டிகள் மற்றும் அக்ரி சாருடன் ராதா மற்றொரு வேனில் கிளம்ப, என் அம்மாவும் அக்காவும் ஒரே அழுகை. ஜக்குவிற்கு BDOவிடம் சொல்லி பஞ்சாயத்து யூனியனிலேயே தற்காலிக வேலை போட்டுக்கொடுக்க அப்பா ஏற்பாடு செய்து, ஆபிசிலேயே ஒரு அறையை அவனுக்கு வாசஞ்செய்ய ஒழித்துக்கொடுத்தார். அக்ரி சார் மிகவும் களைந்தருந்தார். ராமாஞ்சம் பாட்டியை காணோம் என கவலையே படாமல் நானும் ரவியும் எல்லோருக்கும் டாட்டா காட்டியபோது அவர்கள் வெற்றுப்பார்வையுடன் கிளம்பிப்போக, வேன் பின்னால் கொஞ்ச தூரம் ஓடிவிட்டு திரும்பி வந்தோம். அடுத்த சில நாட்கள் அம்மா அழுதுகொண்டே, அதிகம் பேசாமல் மௌனமாகவே இருந்தார்கள். அடுத்த நான்கு வருடங்களில் (1972) நாங்களும் மாற்றலாகி திருச்சி வந்து விட்டோம்.
2016...பஹ்ரைனிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தபோது சேலத்தில் உறவினர் ஒருவர் வீட்டிற்கு போய்விட்டு கிளம்பும்போது 'ஶ்ரீதர்! போற வழியில என்னை பக்கத்துல ஓரு ஆஸ்பத்திரில இறக்கி விட்றேன்!' என்ற அவரை, அஸ்தம் பட்டி பகுதியில் இறக்கி விட்டபோது அந்த ஆசுபத்திரியை தற்செயலாக பார்த்தேன் 'ராமானுஜம் ஹார்ட் கேர்' என்ற பெயருடன். 'புதுசா தொறந்திருக்காங்க.. சர்ஜரியெல்லாம் நல்லா பண்றாங்க. டாக்டரம்மாவும் அவுங்க பையனும் நல்ல ராசியானவங்க' என்றார் என் உறவினர்.
சட்டென பெயர்ப்பலகையை ஏனோ மறுபடியும் பார்க்கத்தோன்றியது. என்னையறியாமல் கண்கள் அந்த டாக்டர்கள் பெயரைத்தேடின. ஒரு நப்பாசை. நாம் நினைத்தது போல இருக்கக்கூடாதா!
'டாக்டர். ராதா வரதன், சீனியர் கார்டியாலஜிஸ்ட்'
'டாக்டர்.ராமானுஜம், கார்டியோ சர்ஜன்'
இறங்கி விசாரிக்கலாமா! வேறு யாராவதாக இருந்தால்? வேண்டாம். அது அவர்களாகவே இருக்கட்டும். அமிர்தாஞ்சன தைலம் காப்பாற்ற முடியாத உயிர்களை ஆஞ்சியோப்ளாஸ்டி காப்பாற்றுகிறதே என்ற திருப்தியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தேன்..
சற்றுமுன் வரைந்த கரிக்கட்டி ஓவியத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)