Thursday, March 30, 2017

ராமாஞ்சம் பாட்டி...


1968.. 69. அப்பாவிற்கு ஈரோட்டிலிருந்து ஏற்காடுக்கு மாற்றலானது. சாமான்களை லாரியில் ஏற்றி விட்டு, அப்பாவுடன் நான்(7வயது), என் தம்பி ரவி Vijay Raghavan (5), அம்மா, எல்லோரும் பஸ்ஸில் ஏற்காடு போகும் வழியில் சேலத்தில் மதிய சாப்பாடு முடித்து விட்டு ஆராதனா படம் பார்த்தோம். ரயில் கூடவே ஜீப்பில் கூர்க்கா தொப்பியுடன் வரும் ராஜேஷ் கண்ணா.. விமான விபத்து.. தலையில் கட்டு.. அரைப்பயித்தியம்.. இன்னும் கொஞ்சம் தலையை சாய்த்து துறுதுறுவான ஃபரிதா ஜலாலுடன் 'பாஹோமே பாஹார் ஹெ' பாட, நானும் ரவியும் பாதி தூக்கத்தில்... படம் முடிந்து வெளியே வரும்போது என் நிக்கர் ஈரமாயிருந்தது.. எல்லாமே அரைகுறையாக நினைவுக்கு வருகிறது.
சேலம் மாவட்டத்தின் கீழ் ஏற்காடு வட்டாரம் சிறிய அழகிய மலைப்பிரதேசம். அப்பாவிற்கு கோ-ஆபரேடிவ் டிபார்ட்மென்ட்டிலிருந்து டெபுடேஷனில் ஏற்காடு பஞ்சாயத்து யூனியனின் EOC (Extension Officer of Cooperative) ஆக தனி வீடு, ஜீப் போன்ற வசதிகளுடன் போஸ்டிங். 'எவ்ளோ பெரிய கவர்மெண்டு உத்தியோகமா இருந்தாலும் வசதி தான் இருக்கும்.. ஆனா தரித்திரம்.. கைல காசு இருக்காது' என சொல்லுவார். BDO (Block Development Officer)க்கு அடுத்த பதவியென்பதால் ஏற்காட்டில் நல்ல செல்வாக்கு அவருக்கு.
படித்தது 11ஆம் வகுப்பேயென்றாலும் ஆங்கிலத்தில் கடிதங்கள் டிராஃப்ட் செய்வது, ஆங்கில பேச்சாற்றல் என பிச்சு உதறுவார். அந்த காலத்திலேயே கையில் எப்போதும் ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் போன்ற நாவல்கள். முண்டகம்பாடி பஞ்சாயத்து யூனியன் ஸ்கூல் சுதந்திர தின விழாவிற்கு தலைமை தாங்கி கொடியேற்றி 'புள்ளைங்களா! இன்னிக்கி நம்ம சுதந்திர தினம்!' என அவர் உரையாற்றும்போது நானும் ரவியும் குபீரென சிரித்து விடுவோம்.
பஞ்சாயத்து அலுவலக மேலாளர்களுக்கு மொத்தம் 8 வீடுகள் வரிசையாக. பெரிய விசாலமான வீடு. வாசலிலிருந்து ஏழெட்டு படி ஏறி மெயின்ரோடை கடந்து சரிவான மலைப்பாதையில் ஏறினால் எதிரே பஞ்சாயத்து யூனியன் அலுவலகம்.
இந்தப்பக்கம் சிலோன்காரர் சிலம்பன் வீடு. கொழுகொழுவென அவரது 8 மாத குழந்தை ஜெயன் மீது எப்போதும் கமகம கொழும்புத்தேங்காயெண்ணெய் வாசனை. அந்த குளிரில் குழந்தைக்கு கன்னம் மட்டும் கருஞ்சிவப்பு நிறத்தில் லேசான வெடிப்புடன் இருக்கும். அழகான அந்த கன்னத்தை விட்டுவிட்டு அவர் கீழே(!) முகத்தை புதைத்து கிச்சுகிச்சு மூட்ட, குழந்தை 'கிக்கெக்கெ' என சிரிக்கும்.
அத்தப்பக்கம் 'அக்ரி சார்' (அக்ரிகல்ச்சர் ஆபிசர்) வீடு. அவருக்கு ஒரே பெண் ராதா. என் அக்கா லதா (Hemalatha Manohar )வும் அவளும் நாசரேத் ஸ்கூல். என்னைவிட இரண்டு மூன்று வயது மூத்தவள். சிவப்பாக மிகவும் அழகாக இருப்பாள். அம்மா இல்லாத பெண். அக்ரி சாரின் அம்மா 'ராமாஞ்சம்' பாட்டி தான் அவளுக்கு எல்லாமே. தவிர ராமாஞ்சம் பாட்டியின் அம்மா மற்றும் சித்தியும் அங்கு இருந்தார்கள். கொள்ளு பாட்டிகள் இருவருக்கும் எப்போதும் உள் அறையில் தான் ஜாகை. மடித்து வைத்த ஈசி சேர் மாதிரி ஒடிசலான தேகம் இருவருக்கும். ராதா கூட அவர்களை தொடக்கூடாது.. மடி. வெளியே பனி கொட்டி ஊரே சொதசொதவென ஈரமாக இருக்க, மழித்த தலை மூடிய காவி மடிசாருடன் இரவு முழுவதும் கம்பளி போர்த்தி வெடவெட குளிரில் தூங்கியெழுந்த பாட்டிகளை காலை சுள்ளென சூரிய ஒளி அடிக்கும் ஒரு மூலையில் தரையில் சாக்கு போட்டு உட்கார்த்தி வைத்திருப்பாள் ராமாஞ்சம் பாட்டி.
அக்ரி சாரும் அப்பாவும் அந்நியோன்யமாக பழகினார்கள். வெறும் சம்பாஷனை நட்பு அல்ல. சின்ன வயதிலேயே மனைவியை இழந்தவருக்கு அப்பாவின் நட்பு ஆறுதலாக இருந்தது. பனியன் இல்லா சட்டை, இடுப்பில் கச்சமில்லாத தட்டுச்சுற்று வேஷ்டியுடன் தினமும் காலை பட்டாசாலையில் அப்பா எதிரே சேரில் உட்கார்ந்திருப்பார். தங்கக்கம்பி இழை போல சன்னமான பேச்சு. கண்களை பார்த்து பேசாமல் கீழே பார்த்து தான் பேசுவார். முன் வழுக்கை. நீண்ட நாசி. அவலக்ஷ்ணமில்லாத முகத்தின் சரிந்த நெற்றியில் அழகிய திருமண். யோக க்ஷேம விசாரனைக்குப்பிறகும் இருவரும் அதிகம் பேசாமல் சும்மாவே வெகுநேரம் உட்கார்ந்திருப்பார்கள்.
ராமாஞ்சம் பாட்டியும் ராதாவும் தினம் பத்து தடவையாவது எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார்கள், அல்லது அவர்கள் வீட்டிலிருந்தே குரல் கொடுப்பார்கள். 'மாமி! போன மாசம் உங்காத்துக்கு குடுத்த ஒரு டம்ளர் காப்பிப்பொடிய பாட்டி வாங்கிண்டு வரச்சொன்னா!' என ராதா வந்து நிற்பதும், 'லதா! நா ரெடியாயிட்டேன். பாட்டி இப்பத்தான் டிபன் பாக்ஸ்ல சாம்பார் சாதம் இட்டிண்ருக்கா! நீ ரெடியா? ' என ஸ்கூல் கிளம்பும் முன் ராதா குரல் கொடுப்பதும் அன்றாட சமாச்சாரங்கள்.
ராதாவின் அண்ணன் ஜக்கு பாலிடெக்னிக் பரிட்சையில் ஃபெயிலாகி சேலத்திலிருந்து வந்திருந்தான். புழக்கடையில் தோண்டிப்பிடுங்கிய இஞ்சியை எண்ணெயில் வறுத்து 'ச்சவுக்' 'ச்சவுக்' கென, சிவந்த ஈறு தெரிய சாப்பிட்டுக்கொண்டே எங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வருவான். கொஞ்சம் அழுக்குப்பேர்வழி. பேச்சின் நடுவே நொடிக்கொருதரம் 'க்ஹூம்'... 'க்ஹூம்'என மூக்கு வழியாக வினோத ஒலியெழுப்புவான்.
வயதான இரண்டு பாட்டிகள், அம்மா, மகள் மற்றும் மகனுடன் குடும்பம் நடத்தும் அக்ரி சாருக்கு கவலையைல்லாம் ராதாவைப்பற்றி தான். அம்மா ராமாஞ்சம் பாட்டி தான் குடும்பத்தையே தாங்கி நிறுத்துபவள். இரவு பன்னிரண்டு வரை அடுக்களையில் இருந்தாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்து விடும் அசுரத்தூக்கம் இல்லாத தேவகணத்தைச்சேர்ந்தவள். அவளுக்கும் ராதா தான் உலகம்.
மருமகளை இழந்தபோது ராதா மூன்று வயது குழந்தையாம். நாமக்கல்லில் ரெண்டாந்தாரமாக யாரோ அக்ரி சாரை கேட்க, ராமாஞ்சம் பாட்டி எவ்வளவோ கெஞ்சியும் அவர் ஒத்துக்கொள்ளவில்லையாம். 'புதுசா வர்றவ ராதாவ நன்னா பாத்துப்பாளான்னு தெரியாதோல்லியோம்மா! நா இப்பிடியே இருந்துடறேனே!.. இருக்கனும்னு தானே ப்ராப்தி..!' என சொன்னதை ராமாஞ்சம் மாமி சொல்லும்போதே தொண்டை அடைக்க, சட்டென என் அம்மாவுக்கும் அழுகை முட்டும். 'இருட்டினது கூட தெரியாமெ பேசிண்டிருக்கோம் பாரு! வெளக்கை ஏத்துடிம்மா சரோஜா! நா வறேன். போதும்டா ரங்கா இந்த நிஷ்டூரம்..!' என மேல் தலைப்பில் மூக்கை சிந்தியபடி ராமாஞ்சம் மாமி கிளம்புவதை நாங்கள் புரியாமல் பார்ப்போம். தாட்டியாக சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். வயது ஐம்பத்து ஏழைத்தாண்டினாலும் நரையில்லா கேசம். சோகம் படிந்த கண்களைச்சுற்றி கருவளையம்..
ஒரு ஞாயிறு மாலை ராதா ஓடி வந்து, 'மாமி! அமிர்தாஞ்சன தைலம் தீர்ந்துடுத்து..பாட்டி வாங்கிண்டு வரச்சொன்னா. நெஞ்சை என்னமோ கரிக்குதுங்கறா!' என வந்து நின்றாள். தைலத்தை கொடுத்தனுப்பியும் ஏனோ மனசு கேட்காமல் சில நிமிடங்களில் அம்மா அவர்கள் வீட்டிற்கு கிளம்பிப்போனாள். அடுத்த சில நிமிடங்களில் அக்ரி சார் வந்து ஏதோ சொல்ல, அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு அவருடன் ஜீப்பில் கிளம்பிப்போனார். வெளியே நல்ல மழை வேறு.
அம்மாவைத்தேடி நாங்களும் ராதா வீட்டிற்கு போன போது நடு ஹாலில் ராமாஞ்சம் பாட்டி தரையில் உருண்டு புரண்டு 'ஐயோ நெஞ்ச வலிக்குதே! பெருமாளே!' என பெருஞ்சத்தமிட, அம்மா, ராதா மற்றும் என் அக்கா லதா யாராலும் பாட்டியை கட்டுப்படுத்த முடியவில்லை.. ஒரே சத்தம். 'அந்தப்பக்கம் போங்கடா' என எங்களை விரட்டியும் நாங்கள் கால்களுக்கிடையில் குனிந்து பார்த்தபோது என் அம்மா ராமாஞ்சம் பாட்டியின் புடவையை தளர்த்தி இரண்டு விரக்கடை அமிர்தாஞ்சன தைலத்தை வழித்து மாரில் தேய்த்துக்கொண்டிருந்தார்கள். ஜக்கு அழுதுகொண்டே சகஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிருந்தான். பிறகு நாங்கள் வீட்டிற்கு ஓடி வந்துவிட்டோம்.
மறுநாள் காலை எழுந்தபோது அம்மா அழுதுகொண்டே எங்களுக்கு டிபன் கட்டிக்கொடுத்துவிட்டு ராதா வீட்டிற்கு ஓட, அப்பாவும் வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டு ராதா சத்தத்தையும் காணோம். 'அவ இன்னிக்கி ஸ்கூல் வரமாட்டா.. நீங்க கிளம்புங்க!' என அம்மா எங்களை விரட்ட, வெளியே ஜீப்பிலிருந்து கெரசீன் டின்களை அப்பாவும் அக்ரி சாரும் இறக்கிக்கொண்டிருந்தார்கள். 'கட்டை எல்லாமே ஈரமாயிருக்காம். கெரசீன் போறுமா!' என பேசிக்கொண்டார்கள். மழை மட்டும் ஓயவேயில்லை. எல்லா சேலம் பஸ்களும் வழக்கத்திற்கு மாறாக எங்கள் வீட்டின் முன் நிற்க யார் யாரோ வந்திறங்கினார்கள். ராதா வீட்டு வாசலில் கீற்றுப்பந்தல்.
அடுத்த சில நாட்கள் அக்ரி சார் கூடவே அப்பா இருந்தார். ஒருநாள் அவர்கள் வீட்டின் முன் லாரியில் சாமான்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். இரண்டு கொள்ளு பாட்டிகள் மற்றும் அக்ரி சாருடன் ராதா மற்றொரு வேனில் கிளம்ப, என் அம்மாவும் அக்காவும் ஒரே அழுகை. ஜக்குவிற்கு BDOவிடம் சொல்லி பஞ்சாயத்து யூனியனிலேயே தற்காலிக வேலை போட்டுக்கொடுக்க அப்பா ஏற்பாடு செய்து, ஆபிசிலேயே ஒரு அறையை அவனுக்கு வாசஞ்செய்ய ஒழித்துக்கொடுத்தார். அக்ரி சார் மிகவும் களைந்தருந்தார். ராமாஞ்சம் பாட்டியை காணோம் என கவலையே படாமல் நானும் ரவியும் எல்லோருக்கும் டாட்டா காட்டியபோது அவர்கள் வெற்றுப்பார்வையுடன் கிளம்பிப்போக, வேன் பின்னால் கொஞ்ச தூரம் ஓடிவிட்டு திரும்பி வந்தோம். அடுத்த சில நாட்கள் அம்மா அழுதுகொண்டே, அதிகம் பேசாமல் மௌனமாகவே இருந்தார்கள். அடுத்த நான்கு வருடங்களில் (1972) நாங்களும் மாற்றலாகி திருச்சி வந்து விட்டோம்.
2016...பஹ்ரைனிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தபோது சேலத்தில் உறவினர் ஒருவர் வீட்டிற்கு போய்விட்டு கிளம்பும்போது 'ஶ்ரீதர்! போற வழியில என்னை பக்கத்துல ஓரு ஆஸ்பத்திரில இறக்கி விட்றேன்!' என்ற அவரை, அஸ்தம் பட்டி பகுதியில் இறக்கி விட்டபோது அந்த ஆசுபத்திரியை தற்செயலாக பார்த்தேன் 'ராமானுஜம் ஹார்ட் கேர்' என்ற பெயருடன். 'புதுசா தொறந்திருக்காங்க.. சர்ஜரியெல்லாம் நல்லா பண்றாங்க. டாக்டரம்மாவும் அவுங்க பையனும் நல்ல ராசியானவங்க' என்றார் என் உறவினர்.
சட்டென பெயர்ப்பலகையை ஏனோ மறுபடியும் பார்க்கத்தோன்றியது. என்னையறியாமல் கண்கள் அந்த டாக்டர்கள் பெயரைத்தேடின. ஒரு நப்பாசை. நாம் நினைத்தது போல இருக்கக்கூடாதா!
'டாக்டர். ராதா வரதன், சீனியர் கார்டியாலஜிஸ்ட்'
'டாக்டர்.ராமானுஜம், கார்டியோ சர்ஜன்'
இறங்கி விசாரிக்கலாமா! வேறு யாராவதாக இருந்தால்? வேண்டாம். அது அவர்களாகவே இருக்கட்டும். அமிர்தாஞ்சன தைலம் காப்பாற்ற முடியாத உயிர்களை ஆஞ்சியோப்ளாஸ்டி காப்பாற்றுகிறதே என்ற திருப்தியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தேன்..
சற்றுமுன் வரைந்த கரிக்கட்டி ஓவியத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)

No comments:

Post a Comment