இரவு சுமார் 12 மணிக்கும் இவரது வீட்டுக்கதவை தைரியமாக தட்டினால் மலர்ந்த முகத்துடன் கதவைத்திறப்பார். சின்மயா சொசைட்டி ப்ரோக்ராம் நடத்தறதுக்கு ஸ்பான்சர்ஸ் லிஸ்ட் ரெடி பண்ணிண்டிருக்கேன் என்பார். அல்லது ஏதாவது பூஜைக்கு இந்தியாவிலிருந்து வரவழைக்க சாமான்கள் லிஸ்ட் போட்டுக்கொண்டிருப்பார்.
பஹ்ரைன் மனாமாவிலிருந்து வெகு தூரம் தள்ளி புதைய்யா பகுதியில் அழகிய வில்லா.. நாம் உள்ளே நுழைந்ததும் ச்சாய் அல்லது பெருங்காயம் கலந்த மோர் கொண்டு வந்து வைப்பார் முத்து (இவர் வீட்டில் வேலை செய்யும் இனிய மலையாளி அன்பர்). இன்னொரு ஆந்திராக்காரர் கிச்சனில் தயிர் சாதம் கலந்து கொண்டிருப்பார். அந்தப்பக்கம் ஹாலில் பஹ்ரைனிலேயே மிகப்பெரிய கொலு வைக்க வேலைகள் நடந்துகொண்டிருக்கும். கூரை வரை படிக்கட்டுகளில் வைக்கப்படும் இவரது வீட்டு கொலுவுக்கு ஆறேழு நிமிடங்கள் கைராலி டிவியில் ஸ்லாட் உண்டு.
பஹ்ரைனில் ரஜினி படம் ரிலீஸ் ஆகுமென்றால் போதும், ஊர் முழுக்க ரஜினி ஃபீவர் பரப்பி விடுவது இவர் தான். கிட்டத்தட்ட ஆயிரம் டிக்கெட்டுகளை முதல் ஷோவுக்காக முன்பதிவு செய்து ( கையிலிருந்து செலவு செய்து), சில தியேட்டர்களையே முழுவதுமாக புக் செய்தும், ரஜினி படம் போட்ட டி. ஷர்ட்களை ஆர்டர் செய்து, எல்லா நண்பர்களுக்கும் போன் செய்து டி.ஷர்ட் மற்றும் டிக்கெட்டுகளை விநியோகம் செய்து, படம் பார்க்க வந்த நண்பர்களுடன் போட்டோ எடுத்து, ரஜினிக்கு வாழ்த்து சொல்லும் வீடியோ எடுத்து, மறுநாள் கைராலி டிவி 'டெசர்ட் டைமி'ல் ஓலிபரப்ப வைத்து.. மனுஷனுக்கு ஓய்வு ஒழிச்சல் என்பதே கிடையாது...அதுசரி.. செலவு செய்து வாங்கிய ஆயிரம் டிக்கெட்டுக்கான காசை நண்பர்களிடமிருந்து முழுவதும் வசூலிக்காமல், அநேகமாக நாமாகவே போய் அவர் சட்டைப்பையில் போடவேண்டும்.
புத்தகம், மருந்து, சர்ட்டிஃபிகேட் இப்படி எதாவது ஒன்றை இந்தியாவிலிருந்து வரவழைக்கவோ கொடுத்தனுப்பவோ இவரை அனுகினால் போதும். அடுத்த இரண்டு நாட்களில் வேலை நடந்துவிடும். லாப்டாப்பையே ரிப்பேருக்கு சென்னைக்கு அனுப்பி திரும்ப வரவழைப்பவர். இனிய முகத்துடன் நண்பர்களுக்கு உதவுவதிலேயே பெருவாரியான நேரம் செலவளிப்பவர் இவர்.
தனது வீட்டில் வேலை செய்யும் ஆட்களின் உறவினர் யாருக்காவது தானே விசா எடுத்து இந்தியாவிலிருந்து வரவழைத்து தன் வீட்டில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு பஹ்ரைனில் வேலை வாங்கிக்கொடுப்பார்.
வருடாவருடம் ஜனவரி முதல் தேதியன்று இவர் வீட்டில் நடக்கும் பூஜை மற்றும் ஹோமம் பஹ்ரைனிலேயே மிகப்பெரிய பூஜையாகும். தமிழர்கள் அனைவரையும் அன்று இவரது வீட்டில் பார்க்கலாம். அந்த பூஜையின் போது பிள்ளையார் உருவத்தை விதவிதமான பொருட்களினால் செய்யும் வேலை என்னுடையது. கடந்த 15 வருடங்களாக இத்திருப்பணியை செய்யும் பாக்கியம் எனக்கும் மனைவி Usharani Sridharக்கும் கிடைத்துள்ளது. இது வரை பிஸ்கட், பேரிட்சை, காய்கறிகள், பஞ்சு, சாக்லேட், கொட்டாங்கச்சி மற்றும் இதர பொருட்களினால் கணேஷா அவதரித்திருக்கிறார். பூஜையன்று இவரது வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் சுமார் 250 பேருக்கு காலை டிபன், பின் New Year Ganeshaவுடன் தம்பதிகள் ஒவ்வொருவராக புகைப்படம் எடுப்பது போன்றவை வருடம் தவறாமல் நடக்கும் நிகழ்ச்சிகள்..
இவரது வெற்றி மற்றும் புகழுக்கு காரணமானவர் இவரது மனைவி பத்மா தான் என்பதை மறுக்க முடியாது. பத்மாவின் பாலக்காட்டுத்தமிழ் கேட்க மிகவும் இனிமை. ஜெர்மனியில் ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தவர், திருமணத்திற்குப்பின் கணவரின் வெற்றிக்கு உருதுணையாக இருக்கிறார்.
CA, ICWA, CFA, CISA போன்ற நிதி சார்ந்த மேற்படிப்புகள் படித்து, பஹ்ரைனின் மிகப்பெரிய வங்கி ஒன்றின் CFOவாக இருக்கும், தயாள குணம் படைத்த, எப்போதுமே மலர்ந்த முகத்துடன் இருக்கும், எனது நெருங்கிய நண்பருமானShyam Krishnan இன் பிறந்த நாளான இன்று, பல்லாண்டு வாழ்கவென இவரை இக்கரிக்கட்டி ஓவியத்துடன் வாழ்த்தும்..
சீதாபதி ஶ்ரீதர்
(ஜியார்ஜியாவிலிருந்து..😄)
(ஜியார்ஜியாவிலிருந்து..😄)
No comments:
Post a Comment