'பாத்துப்பா! ஜாக்கிரதை' என்று சாஹுலின் கையை பிடித்து சாலையை கடந்தபோது கவனித்தேன், முழங்கைக்கு கீழே மணிக்கட்டு வரை சருமம் அவ்வளவு மிருது. இன்னும் அதே 4 வயது குழந்தை முகம்.
arrival பகுதியிலிருந்து விமான தளத்தின் வெளியே கார் பார்க் வந்து அவனிடமிருந்த ஒரே பெட்டியை ட்ரங்க்கில் போட்டு விட்டு வண்டியை எடுத்து நெடுஞ்சாலை வந்தவுடன்...
'சொல்லுப்பா.. திருச்சியெல்லாம் எப்பிடியிருக்கு?'
'நல்லா போய்ட்டிருக்குண்ணே! வேலை வாங்கி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. அம்மா சந்தோசப்பட்டாங்க. ஐம்பது வயசுல கல்ஃப் ஜாப்.. சந்தோசமா இருக்கு'.
'நீ படிச்ச ICWA படிப்புக்கு இங்க அவ்ளோ ஸ்கோப் இல்லப்பா. ஏதோ உனக்கு நல்ல நேரம். இங்க வேலை கெடச்சது. சரி.. திருச்சில என்ன விசேஷம்?'
'திருச்சிக்கென்னண்ணே! சூப்பரா இருக்கு. மாமு இன்னமும் கடைக்கி போறாங்க. அம்மாக்கு வயசாச்சு. வீடு வாங்கின கடன் கொஞ்சம் பாக்கி. நம்ம ஏரியா தர்கா, தோப்பு எல்லாம் இன்னம் அப்பிடியே இருக்கு'
திருச்சி பற்றி யாராவது பேசினாலே மனம் குதூகலமாகும். கருப்பு வெள்ளையில் ஃப்ளாஷ்பாக் மாதிரி பழைய நாட்கள் மனத்திரையில் ஓடும். வெளியே லேசான மழை. சாலையின் ஈரத்தில் வண்டி வெண்ணெய் மாதிரி வழுக்கிக்கொண்டு பஹ்ரைன் ஏர்போர்ட் சர்வீஸ் கம்பெனி தாண்டி ரவுன்டபௌட் வந்து நின்றபோதும் மனம் இன்னும் திருச்சியில்..
1970களில்.. தென்னூர் அமிருதீன் ஆசுபத்திரி தாண்டி ஜெனரல் பஜார் தெருவில் நுழைந்து இருபது முப்பது வீடுகள் தள்ளி இடது புறம் பெரிய மோரியை தாண்டினால் நாங்கள் வசித்த பென்ஷனர் காரத்தெருவு. சுமார் இருபது குடும்பங்களே உள்ள அந்த தெருவில் எங்களைத்தவிர எல்லோருமே இஸ்லாமியர்கள். நான் அப்போது ஏழாம் வகுப்பு. செஞ்சோசப்ஸ். என் தம்பி ரவி( Vijay Raghavan ) யுடன் பாதி நேரம் ஏதாவது ஒரு வீட்டில் விளையாடிக்கொண்டிருப்பேன்.
மற்ற பசங்களுடன் சேர்ந்து நானும் ரவியும் உருது சரளமாக பேசுவோம். 'இதாகே! உதர் ஜாகே!' (இந்தாடி! அங்க போடி!) ... 'ஆப்பா! வக்கத் ஹோகயா.. மை ஜாத்தாவூன்' ( அக்கா! நேரமாச்சு நான் போறேன்) என கூட விளையாடும் சிறுவர் சிறுமிகளிடம் சகஜமாக பேசிக்கொண்டிருப்போம்.
தெருமுகனையில் சைக்கிள் கடை பாஷா கடையை திறக்க பெரிய காக்கி ட்ரௌசர் அணிந்தபடி விடிகாலை கிளம்புவார். இரண்டுநாள் தாடி.. பச்சை கண்கள். அவரது வீட்டு பாபு, பர்வின், ஃபரிதா, சீரின், நஸ்ரின் மற்றும் பக்கத்து வீட்டு கௌஹர், ஃபாரூக், அஃப்ரோஸ், ரஹமத்தி எல்லோரும் நண்ப/நண்பிகள். மாலை குர்ஆன் சொல்லிக்கொடுக்கும் நானி வரும்வரை சிறுமிகள் எங்களோடு விளையாடிக்கொண்டிருப்பார்கள்.
தினமும் எங்களுடன் விளையாடும் பர்வின் திடீரென வராமல் வீட்டு ஜன்னல் வழியாக நாங்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருப்பதும், 'ஏய் பர்வின்! இதர் ஆகே' என நாங்கள் கூப்பிட சட்டென உள்ளே மறையும்போது தான் கவனிப்போம், அவள் தாவணிக்கு மாறியிருப்பதை. அவள் ஏன் வரவில்லையென தெரியாமல் 'ஆனேகா தோ ஆவ்.. நைதோ ஜாவ்' என உடனே மறந்துவிடுவோம்.
கார் ஹாரன் ரிப்பேர் செய்யும் தாவூத்பாய் மெதுவாக இரண்டு கட்டைகுச்சிகளை கக்கத்தில் வைத்தபடி மடித்துக்கட்டிய வேட்டிக்கு நடுவில் விளங்காத இரண்டு கால்களை தள்ளியபடி வெளியே வருவார். பாசிடிவ் நெகடிவ் ஒயரை இரண்டு கைகளில் வைத்துக்கொண்டு கீ.. கீ என அவர் ஹாரன் ரிப்பேர் செய்வதில் யாருக்கும் தொந்தரவு இருக்காது.
முதலியார் சத்திரம் ஒர்க் ஷாப்பில் வேலை செய்யும் ஹஃபீஸ் பாய் சைக்கிளை வெளியே இறக்கிய பின் வாயிலிருந்து சிறிது எச்சிலை விரலில் எடுத்து சக்கரத்தில் வைத்து காற்று வெளியே வருகிறதா என்று பார்ப்பார்.
தெருவில் நடக்கும் எல்லா முஸ்லிம் திருமணங்களுக்கும் அழையா விருந்தாளி நாங்கள். காலை ஸ்கூல் கிளம்பும்போது லௌட் ஸ்பீக்கரில் 'மெ ஷாயர் தோ நஹி' பாட்டு ஒலித்தால் ஏதோ ஒரு வீட்டில் கல்யாணம் எனத்தெரிந்துகொள்வோம். சாயங்காலம் ஸ்கூல் விட்டதும் நேராக அங்கே ஓடிப்போய் பந்தலில் விளையாடிக்கொண்டிருப்போம், உதடுகளில் 'ஜூட்டு போலே கவ்வா காட்டே' பாடலை முனுமுனுத்தபடி.
என் அக்கா மற்றும் பக்கத்து வீட்டு பாத்திமா, மும்தாஜக்காவுடன் புத்தூர் அருணா அல்லது கெயிட்டி தேட்டரில் பாபி, அன்ஹோனி, ஜன்ஜீர் படங்கள் பார்ப்போம். பம்பரம் விளையாடும்போது கூட 'ஜூம்பரபர ஜூம்பரபர ஜூம்ஷரபி ஜூம்' என ஏதோ ஒரு ஹிந்தி சினிமாப்பாட்டை வாய் முனுமுனுக்கும்.
பாத்திமாக்கா வீட்டில் அவரது அண்ணன்கள், பெல்லுல வேல செய்யும் காதர்மாமு (BHEL) மற்றும் தினமும் ஆணழகு மையம் போகும் மஹ்பூப் மாமு இருவரும் எங்களுக்கு மாமா மாதிரி. மஹ்பூப் மாமு எப்போதும் ஜலதோஷம் வந்த மாதிரியான குரலில் 'ஏ துனியா.. ஏ மெஹ்ஃபில்... மேரே காம் கி நஹி..' என ரஃபி பாட்டை பாடுவார். அவர்கள் வீட்டில் எப்பவும் குஸ்கா வாசனை. ரவா பாயசம் கொடுப்பார்கள். முன்னறையில் ஈரத்துணியுடன் நடிகை ரேகா அல்லது மும்தாஜ் படமிட்ட காலண்டர் தொங்கும்.
தெருவில் மற்ற பையன்களுடன் கட்டிப்புரண்டு புழுதியில் சண்டை போட்டு தோற்றுவிட்டால் 'ஜாரே டோலா!' என கத்திவிட்டு வீட்டுக்கு ஓடுவது..
வீட்டின் பின்பக்கம் தோப்பில் விளையாடும்போது மோரியில் விழுந்த கோலிகுண்டை இடது கையால் எடுத்து சட்டென பின் பக்கம் துடைத்துக்கொண்டு கையை மோந்து பார்ப்பது..(தனியாக அதற்கு அடி விழும்)
தோப்பில் உள்ள பழைய தர்காவை சுத்தம் செய்து சந்தனக்கூடு நிகழ்ச்சி. நாகூர் ஹனிஃபாவின் 'மக்கத்து மலரே மாணிக்கச்சுடரே யாரசூலல்லா' பாடிக்கொண்டிருக்கும். அஸ்கா பொட்டுக்கடலை அல்லது ரவா கேசரி மாதிரி அவர்கள் கொடுக்கும் திண்பண்டத்தை அடித்துபிடித்து வாங்கி திண்பது..
பள்ளிவாசலில் கொடுக்கும் நோம்புக்கஞ்சிக்கு நாங்களும் வரிசையில் நிற்பது..
மாலை 7 மணிக்கு பள்ளி வாசலுக்கு வெளியே மந்திரித்து அவர்கள் நம் தலையில் ஸ்ஸ்ஸூ என ஊதுவதை இரண்டாம் தடவையும் வாங்க வரிசையில் நிற்பது...
ரோட்டின் நடுவே மேடை போட்டு நடக்கும் பர்வீன் சுல்தானா மற்றும் பம்பாய்க்காரர் கவ்வாலி கச்சேயில் முன் வரிசையில் மத்த பையன்களுடன் உட்கார்ந்து நாங்களும் கவ்வாலி (மாதிரி) பாடிக்கொண்டிருப்பது..
சந்தோஷமான தருணங்கள் பல..
அந்த தெருவில் அப்போது புதிதாக குடி வந்தவன் அஷ்ரஃப். அப்பா இல்லாமல் குடும்ப பாரம் முழுவதும் அவன் மேல். அம்மா, தம்பி, தங்கை மற்றும் திருமணமான அக்கா, அக்காவின் நான்கு வயது பையன் மற்றும் 6 மாதக்குழந்தை.. ஓட்டு வீடுகளுக்கு நடுவே ஒரு வெற்றிடத்தில் குடிசை போட்டு தன் பெரிய குடும்பத்துடன் இருந்தான். பாலக்கரை எடத்தெருவில் கடிகார ரிப்பேர் கடை வைத்திருந்தான்.
கடை விடுமுறையான ஞாயிறன்று பக்கத்தில் பாத்திமாக்கா வீட்டில் கடிகார பாகங்களை தரையில் பரத்திப்போட்டு ரிப்பேர் செய்வான். காதர் மாமு அதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. அப்பா இல்லாத குறையாய் தன் குடும்பத்தையும் தன் அக்காள் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டான் அஷ்ரஃப். சைக்கிளில் விசுக் விசுக்கென அலைந்து தினமும் ஓடியாடி உழைப்பவன். தலையில் சிலுப்பி நிற்கும் வணங்காமுடி மற்றும் காவி பற்கள். கண்களில் லட்சியம் தெரியும்..
ஒருநாள் ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென தூரத்தில் புகை. ஒரே சத்தம். கூட்டம். ஓடிப்போய் பார்த்தால் அஷ்ரஃப்பின் குடிசை எரிந்துகொண்டிருந்தது. அவன் கடைக்கு போயிருந்தான். எல்லோரும் பக்கெட் தண்ணீருடன் ஓட, தீயணைக்கும் வண்டி வந்து தண்ணீர் அடித்தது. பாதி தீயை அணைக்க, உள்ளே இருந்து அஷ்ரஃபின் அம்மா, தங்கை, தம்பி என எல்லோரையும் வெளியே கொண்டு வந்தார்கள். சைக்கிளை போட்டுவிட்டு ஓடி வந்த அஷ்ரப் ஓவென அலறினான். எங்கும் பெண்களின் மரண ஓலம். அக்காவின் ஆறுமாத குழந்தை உட்பட குடும்பத்தில் பாதி பேரின் இறந்த உடல்களை வெளியே கொண்டுவந்தார்கள்.
அஷ்ரஃபை கட்டுப்படுத்த முடியவில்லை. இருவர் அவனை பிடித்துக்கொள்ள, திடீரென குடிசையின் பக்கவாட்டில் சிறிய ஓட்டையிலிருந்து அக்காவின் நான்கு வயதுப்பையன் வெளியே ஓடி வந்தான். எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சி, பாதி பேர் இறந்தும் இவன் எங்கே ஒளிந்திருந்தான் என.
பாதி தலைமுடி எரிந்து தலையில் நெறுப்புக்கங்குகள், முழு அம்மணமாக சதையும் தோலுமாக வெளியே ஓடி வந்தவனை காதர்மாமு ஓடிப்போய் கைகளை பிடித்து தூக்க, அவன் 'ப்ளக்'கென வழுக்கிக்கொண்டு விழுந்தான். அடுத்த நொடி காதர்மாமு கையில் அரை ஜான் அகலத்தில் சிறுவனின் கைப்பகுதியின் தோல்.. தரையில் கிடந்த குட்டிப்பையன் கையில் முழங்கைக்கு கீழே மணிக்கட்டு வரை வெள்ளையும் சிகப்பும் கலந்த நிறத்தில் வெறும் சதை..
இனி பதிவின் முதல் வரிக்கு போகலாம்.
No comments:
Post a Comment