எங்கள் வீட்டில் கடைக்குட்டி இவன். என்னை விட இரண்டே வயது இளையவன். என்னுடன் சேர்ந்து பயங்கரமாக லூட்டியடிப்பான். எப்போதும் துருதுருவென ஏதாவது கலாட்டா செய்துகொண்டு வீட்டில் அடி வாங்குவது எங்களுக்கு வழக்கம்.
அதிலும் எனக்கு மூத்தவள் லத்துவை ( Hemalatha Manohar ) சீண்டிக்கொண்டே இருப்பதில் எனக்கு எப்போதும் கம்பெனி கொடுப்பான். மார்கழி மாதம் காலை 4 மணிக்கு அம்மா எங்களை எழுப்பியவுடன் குளித்து விட்டு திருப்பாவையில் அன்றைய பாசுரம் படித்துவிட்டு, பட்டாபிராம் பிள்ளைத்தெரு பெருமாள் கோவில் சக்கரைப்பொங்கல் வாங்க ஓடுவோம். வந்தவுடன் படிக்க உட்கார வேண்டும் என்பது நியதி. அக்கா லதா படுத்துக்கொண்டே படிக்கும் பழக்கமுள்ளவள். நடுவே அப்படியே தூங்கிப்போய் விடுவாள். அதற்காகத்தானே நானும் ரவியும் காத்திருப்போம். மெதுவாக சத்தம் போடாமல் அவள் பக்கம் நகர்ந்து அவளது புத்தகத்தையெல்லாம் மூடிவைத்து விட்டு, தூங்கிக்கொண்டிருக்கும் அவளையும் பெட்சீட்டால் தலை வரை போத்தி விட்டு ஒன்றுமே தெரியாத மாதிரி படித்துக்கொண்டிருப்போம். அடுத்த சில நிமிடங்களில், எழுந்து வரும் அம்மாவிடம்'ரெய்யே...சதுவ்வே! (எழுந்திருடி...படிடி)' என அடி விழும்.
இரண்டு தெரு தள்ளி பாப்புச்செட்டி தெருவில் எங்கள் பாட்டி வீடு. தாத்தா, பாட்டி, சின்ன பாட்டியின், கல்யாணமாகாத துவாரகா மாமா அங்கே வசித்து வர, தினமும் நானோ ரவியோ வீட்டு வேலை செய்ய அங்கே போகவேண்டும். போக இஷ்டமே இருக்காது. ரோட்டு குழாயில் தேக்சாவில் தண்ணீர் பிடித்து தவலை, அண்டா, தண்ணி தொட்டியில் ஊற்றும் வேலை எங்களுடையது. சலிப்போடு போவோம். 'ஏன்டா உங்கம்மா என்னா பண்ணிட்ருக்காங்க' என பாட்டி கேட்டால் 'ம்ம்.. லட்டு.. முறுக்கு.. அதிரசம்' என சொல்லிவிட்டு ஓடி விடுவோம்.
தென்னூர் அமிருதீன் ஆஸ்பத்திரி எதிரே உள்ள பரோட்டா கடையில் சாப்பிட எங்களுக்கு ரொம்ப நாள் ஆசை. கையில் காசு இருக்காது. ஒரு நாள் கொஞ்சம் காசு சேர்த்து இருவரும் புரோட்டா சாப்பிடப்போனோம். ஒரு புரோட்டா 15 காசு. சர்வர் ஆளுக்கு 2 புரோட்டா வைத்து மேலே குருமாவை ஊற்ற, புரோட்டாவை நன்றாக பிசைந்து ரசித்து சாப்பிட்டோம். 'இன்னங்கொஞ்சம் குருமா உத்துப்பா' என ஆர்டர் வேறு. 60 காசு பத்திரமாக இருக்கிறதாவென கால்சராய் பாக்கெட்டையும் அப்பப்ப தொட்டுப்பார்த்துக்கொண்டோம். சாப்பிட்டவுடன் கையலம்ப எழும்போது தான் கவனித்தோம், கல்லாவின் அருகே ..'ஏப்ரல் 1ஆம் திகதி முதல் பரோட்டா ஒன்றின் விலை 20 காசு.’ என எழுதியிருக்க, 'ஆஹா.. மாட்னா அடிப்பானுங்களே!' ஒரே பயம்... ரவி சொன்னான் ' கெஞ்சல்லாம் வேண்டாம்டா... சண்டை போடற மாதிரி ட்ரை பண்ணுவோம்'. உடனே குரலை உயர்த்தி ..'என்னங்க இது? வெலைய ஏத்திட்டு...முன் கூட்டியே சொல்லலாம்ல? போர்டும் சரியா தெரீலயே!' என சத்தம் போட்டோம்(உள்ளுக்குள் உதறல்..)… ‘ டேய்.. பசங்களா! வெலயெல்லாம் ஏத்தி ஒரு வாரமாவுது..சரி.. இருக்கறத குடுத்துட்டு ஓடுங்கடா' என அவன் விரட்டியும் ' 'அதெப்பிடிங்க?...' என சும்மாவே கத்துவது மாதிரி பாவ்லா காட்டிவிட்டு வெளியே வந்து விழுந்து விழுந்து சிரித்தது மறக்க முடியாது.
80 வயதான தாத்தா எங்கள் வீட்டு தின்னையில் படுத்துக்கொள்வார். இரவு 9 மணிக்கு விசிறியையும், சொம்பு தண்ணீரையும் தள்ளி வைத்துவிட்டு, படுக்கையை விரித்து, மெத்தைக்கு மேல் கொசுவலையை கட்டி, உள்ளே புகுந்து, நலாபுறமும் மெத்தைக்கு கீழே கொசுவலையை சொருகிவிட்டு, ஜாக்கிரதையாக கால் பகுதி வழியாக வெளியே வந்து அவர் கொல்லைப்புறம் பாத்ரூம் போகும் வரை நாங்கள் சத்தமாக படித்துக்கொண்டிருப்பதுபோல பாவலா காட்டுவோம். தாத்தா அந்தப்பக்கம் போன உடனே சடாரென எழுந்து ஓடி வருவோம். நான் கொசுவலையை மடிக்க, ரவி மெத்தையை சுருட்டுவான். அடுத்த இரண்டே நிமிடத்தில் தாத்தா வரும்போது அங்கே விசிறி, தண்ணீர் சொம்பு மட்டுமே இருக்க, நாங்கள் 'அசோகர் மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார், தனது மகள் சங்கமித்திரையை இலங்கைக்கு அனுப்பினார்' என சத்தமாக படித்துக்கோண்டே கடைக்கண்ணால் தாத்தாவை பார்க்க, அவர் 'படுக்கைய நேத்து விரிச்சேனா.. இன்னிக்கு விரிச்சேனா' என குழம்பி எங்களை பார்ப்பார். அவ்வளவு தான். ஹே...ஹே... என பெருங்குரலெடுத்து நாங்கள் சிரிக்க..ஒரே தாமாஷ் தான்.
இருவரும் சில வருடங்கள் பம்பாயிலும் சேர்ந்து வேலையிலிருந்தோம். மதிய உணவு இடைவேளையில் மிட்டல் கோர்ட் வாசலில்பாவ் பாஜி, திருநெல்வேலி அண்ணாச்சி கடையின் மசால் தோசை சாப்பிட்ட நாட்கள் பல. நான் பஹ்ரைன் வந்த ஓரிரு வருடங்களில் அவனும் இந்தப்பக்கம் வந்துவிட்டான். தற்போது மஸ்கட்டில் வங்கியொன்றில் வேலை. நடுவே பஹ்ரைன் வங்கியொன்றில் 5 வருடங்கள் இருந்து மறுபடியும் பழைய நினைவுகளை என்னுடன் அசை போட்டது மறக்க முடியாது. எங்களை மாதிரி எங்கள் பையன்களும் சேர்த்து செஸ், ஃபுட்பால் என சேர்ந்து விளையாடினாலும், நாங்கள் கலக்கிய மாதிரி லூட்டியெல்லாம் அடிக்கவில்லை.
இன்று 54 ஆவது பிறந்த நாள் காணும் Vijay Raghavan )க்கு இந்த பென்சில் ஓவியத்துடன் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment