Sunday, April 2, 2017

இல்லே.. இல்லே.. இல்லெல்லே...


பஹ்ரைன் கேரளா வைத்ய ரத்னா ஆயுர்வேதா மெடிகல் செண்டர் முன்பு காரை நிறுத்தி விட்டு மனைவியுடன் உள்ளே சென்றேன். நாலு நாளாக முதுகும் இடுப்பும் ஒரே வலி. 'இதெல்லாம் வேஸ்ட்.. எல்லா வலிக்கும் மசாஜ் தான் செய்வாங்க அவங்க. வலி ஜாஸ்தி தான் ஆகும். தவிர டிரெஸ்ஸையெல்லாம் கழட்டனும். தேவையா உங்களுக்கு!' என்ற மனைவியின் ஆலோசனையை உதாசீனம் செய்து ரிஸப்ஷன் பகுதி சென்றேன்.
நல்ல கூட்டம். என்னைப்போல் எல்லா ஆண்களும் தத்தம் மனைவியருடன் வந்திருந்தனர். எதிரே கிடந்த புத்தகத்தை பெண்கள் பார்த்துக்கொண்டிருக்க, சில ஆண்கள் போனில் 'சாதனம் கிட்டியோ.. ஞான் இப்ப விளிச்சி பறையாம்' என ஆபீஸ் வேலை விஷயமாக பேசிக்கொண்டிருந்தனர். எதிரே தலைக்கு மேலே கைராலி டி.வி. ஒரு நோயாளி கிட்டத்தட்ட டீவி சீரியல் ஆரம்பிக்கும்போது டாக்டரை பார்க்க உள்ளே போனால் அந்த சீரியல் முடியும்போது தான் வெளியே வருவார். வடஇந்தியர், ஆந்திராக்காரர் என யார் வந்தாலும் ரிஸப்ஷன் பெண் மலையாளத்தில் மட்டுமே விசாரிக்க, அந்தப்பக்கம் பாட்டிலில் மருந்து கொடுத்துக்கொண்டிருந்த மற்றொரு சேட்டன் அப்பெண்ணுக்கு உதவிக்கொண்டிருந்தார்.
அடுத்து ரிஸப்ஷன் பெண் என்னை அழைக்க மனைவியுடன் உள்ளே போனேன். சலவை செய்த வெள்ளைக்கோட்டுடன் ஆண் டாக்டர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். தலையில் hair plant செய்திருந்தார். Former Head of the Dept of Ayurvedic Science என ஏதோ கேரள ஆசுபத்திரி பெயர் அவர் தலைக்கு மேல். பக்கத்தில் மதன்மித்ரா ஸ்டைலில் ஆண் படத்தில் உடம்பு முழுக்க சிவப்புக்கலர் நரம்புகள் நம்மை பயமுறுத்த, கொஞ்சம் தள்ளி மனித மூளை படம். அவரது டேபிளில் வெள்ளைத்தாளில் மனித முதுகெலும்பு படம் வரைந்து நடுவே அம்புக்குறி.. அங்க தான் ப்ரஷ்ணம் என யாருக்கோ விளக்கியிருப்பார் போலும். அந்த தாளின் மேலே ப்ளாஸ்டிக்கில் செய்யப்பட்ட மனித முழங்கால் மூட்டு தான் டேபிள் வெய்ட். அவருக்குப்பின்னால் லைட் போட்டு ஏதோ எக்ஸ்-ரே ரிப்போர்ட் தொங்கிக்கொண்டிருந்தது. அதிலும் பெல்ட் மாதிரி முதுகெலும்பு படம். அந்த சூழலுக்கே இடுப்பு வலி மெல்ல ஆரம்பித்தது எனக்கு.
'ஏதானு?' என பரிவுடன் என்னை விசாரித்தார் டாக்டர். I have back pain என ஆங்கிலத்தில் நான் சொன்னதும் இவன் பாண்டி தான் என புரிந்துகொண்டு, ok! you have back pain! என அவரும் விஜாரித்தார். அடுத்து How many days என்ற அவரது கேள்விக்கு நான் for the last 10 days என்றதும் oh! for the last 10 days! என அவரும் கேட்டார். The pain is only during night என்ற என்னிடம் அவரும் oh! the pain is only during night! என்றார்.. கவனிக்கவும்.. நாம் எதைச்சொன்னாலும் அதை நம்மிடம் அப்படியே திருப்பிச்சொல்லும வழக்கம் சிலபேரிடம் இருந்தால் போச்சு. தொலைந்தோம். இவர் அந்த டைப். அதனால் தான் ஒவ்வொரு நோயாளிக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார். கைராலி டீவி சீரியல் முடிந்து வார்த்தகள் (news) ஓட ஆரம்பித்தது.
எதிரே கட்டிலில் குப்புறப்படுக்கச்சொன்னார். முதுகு, இடுப்புப்பகுதியை அங்கங்கே அழுத்தி அழுத்தி 'வலிக்குதா.. வலிக்குதா.. எனக்கேட்டார். வலி இருக்கும் இடம் தவிர மற்ற எல்லா இடத்திலும் அழுத்தி அழுத்தி அவர் கேட்க, நான் இல்லே..இல்லே..இல்லல்லே.. என சொல்ல அவரும் கூடவே இல்லே..இல்லே..இல்லல்லே! என திருப்பி சொன்னார். எப்பிடித்தான் இந்தப்பழக்கம் வந்ததோ அவருக்கு..தெரியவில்லை!. இப்படி திருப்பிச்சொல்லியே வாழ்நாளில் பாதியை கழித்துவிட்டார். வெளியே கூட்டம் அம்மியது.
ஒரு வழியாக எங்கேயோ எனக்கு வலி வந்து 'ஸ்ஸ்..' என லேசாக கத்தினேன். நல்லவேளை..பதிலுக்கு அவரும் கத்தவில்லை. ஆனால் முகத்தில் திருப்தி. ஒந்நும் கொழப்பம் இல்லா. 'பத்து சிட்டிங் மஸாஜ் செய்யனும்' என்று சொல்லி பேப்பரில் 'பொடிகிழி மசாஜ்' என எழுதினார். அதென்னாங்க 'பொடிகிழி' என்ற கேள்விக்கு 'ஓயல் (oil) மசாஜ்' என்றார். 8 தினாருக்கு பகுதி மசாஜ்ஜாம். ( 'பகுதி' என்றால் 'பாதி' என அர்த்தமாம்). முதுகு மற்றும் இடுப்பு மட்டுமாம். ஃபுல் மசாஜ் 15 தினார் கால் வரையாம்.
சாஜன் என்ற நபரைக்கூப்பிட்டு உள்ளே ஒரு ரூமுக்குள் கூட்டிப்போய், அவர்கள் கொடுத்த கோவணத்தை சுற்றிக்கொண்டு சப்பாணி மாதிரி தயங்கி தயங்கி வந்து நின்றேன். கோமணம் கொஞ்சம் அகலமாகவாவது இருந்திருக்கலாம். ரிப்பன் மாதிரி இருந்தது. காலை அகட்டாமல் சர்வ ஜாக்கிறதையாக நடந்து வந்த என்னை நடு ஹாலில் போடப்பட்டிருந்த ஒரு பெரிய மேசையின் மேல் குப்புறப்படுக்க சொன்னார் சாஜன். இதற்கு அவ்ளோ பெரிய ஹால் தேவையா? கிட்டத்தட்ட 50 பேரை வைத்து சீமந்தமே நடத்தலாம்.
வெறும் கோமணத்துடன் குப்புறப்படுத்திருந்த என்னை 'நாட்ல எவ்டே?' என்று பரிவுடன் விசாரித்தார் சாஜன். 'அடப்பாதகா! இடுப்புல வலி எவ்வடேன்னு கேக்காம நாட்ல எவ்டேயென ஊரைப்பத்தி விசாரிக்க இதுதானாடா நேரம்!' என்று அவரை சபித்துக்கொண்டு 'திருச்சி' என்று சொன்னேன். உடனே மறுபடியும் அவர் 'நாட்ல எவ்வடே' என்று கேட்டார். எனக்கு காது சூடானது. இப்பத்தானே 'திருச்சி' என பதில் சொன்னேன்! அப்புறம் தான் புரிந்தது மலையாளத்தில் 'திருச்சி' என்றால் 'திரும்பவும்' என்று அர்த்தமாம்.
ஒருவழியாக சம்பாஷனை முடிந்து பணியை ஆரம்பித்தார். தேநீர் போடும் கெட்டிலை எடுத்தார். பரவாயில்லையே குடிக்க டீயெல்லாம் கொடுப்பார்கள் போல என்ற என் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டார். கற்பூராதி தைலம் கலந்த எண்ணையை கெட்டிலில் விட்டு ஸ்டவ்வில் சூடாக்கி இடுப்பில் மிக தாராளமாக கொட்டி ஒத்தடம் என்கிற பேரில் முதுகையும் இடுப்பையும் துவம்சம் செய்யத்துவங்கினார். பரோட்டா மாஸ்டர் வேலை பார்த்தவர் போலிருக்கும். நிமிடத்திற்கொரு தரம் பொடிகிழியை சூடான எண்ணெயில் தொட்டு இடுப்பிற்கு கீழே வைத்து ''ஆ'வென அலற வைத்தார். குப்புறத்தான் படுத்திருந்தேன்.
அடுத்தடுத்த ரூம்களில் இதே மாதிரி இஷ்டமித்திர பந்துக்களுடன் மசாஜ் வைபவங்கள்..கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் கழித்து 'கழிஞ்ஞு' என்றார். துவண்ட ஆடையுடன் (ஆடை எங்க! கோமணந்தான்!) ஒருவழியாக உடை மாற்றிக்கொள்ள வேறு அறைக்கு போனால் எங்கெங்கு காணினும் ஜட்டியடா!
எல்லாம் முடிந்து ரிஷப்ஷனுக்கு வந்து பணத்தை கட்டும்போது அந்த பெண் சொன்னார் ' சாரே ஈ மாசம் offer இண்டு ' என்றார். மசாஜுல என்னம்மா offer ? என்று கேட்டேன். 'இந்நு மசாஜ் செய்யுங்கில் 10 தெவசம் கழிஞ்ஞு 50% சார்ஜிலே மற்றொரு மசாஜ் கிட்டும்' என்றாரே பார்க்கலாம். இந்த ஒரு 'தெவசம்' போதும் என்று சொல்லி வெளியே வந்தேன்...
டாக்டரின் ரூமிலிருந்து 'இங்க வலிக்கிதா.. இங்க வலிக்குதா?' சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நிறைய 'இல்லே.. இல்லெல்லே' சத்தங்கள் டாக்டரின் குரலுடன் எதிரொலித்தது. வெளியே காத்திருந்த சில நோயாளிகள் கடிகாரத்தை பார்த்துக்கொண்டே எறிச்சலுடன் தூங்கிக்கொண்டிருக்க, மேலே மோகன்லால் ஷோபணா பின்னால் ஓடிக்கொண்டிருந்தார்.
பி.கு: காரை ஓட்டிக்கொண்டே 'எவ்ளோ டைம் எடுத்துக்கிட்டார் டாக்டர்!' என உஷா சொல்ல நானும் 'எவ்ளோ டைம் எடுத்துக்கிட்டார் டாக்டர்!' என்றேன். 'வீட்டுக்கு போனவுடனே சப்பாத்தி செய்யனும்' என அவள் சொல்ல, நானும் 'வீட்டுக்கு போனவுடனே சப்பாத்தி செய்யனும்' என்றுதும் தலையில் அடித்துக்கொண்டாள்.

No comments:

Post a Comment