Thursday, March 19, 2015

சுஜாதாவின் Spoonerism

நேற்று எங்கள் விற்பனை மேலாளர் ஆசாம் தம்மாம் (சவுதி) வழியாக தன் சொந்த ஊரான ட்ரிபோலி(லெபனான்) போய் வந்தபின் கண்களில் நீர் வழிய எனக்கு கை கொடுக்கும்போது யோசித்தேன்..என்னாச்சு இவனுக்கு, இவ்வளவு கரிசனம்மென்று. பயங்கர ஜலதோஷமாம்.
பொதுவாக லெபனான், சவுதி மற்றும் ஐரோப்பா நகரங்களுக்கு போகும்போது சில மணி நேரங்கள் விமான நிலையங்களில் காத்திருந்தால் போதும். 'விஸ்க்'கென்று நம் முதுகில் தும்முபவர்களும், வரிசையில் நிற்கும்போது நமக்கு முன்னால் நிற்பவர் திடீரென 'ப்ர்றிக்ஸூ..' என நம் பக்கம் திரும்பி தும்முவதும், இரண்டு வரிசைக்கு அந்தப் பக்கம் நிற்கும் உயரமான பேர்வழியொருவர் திடீரென 'ஆ...ஆக்ச்சே' என பெருஞ்சப்தத்துடன் தும்மி பலரை திரும்பிப்பார்க்க வைத்தும், சிலர் கைக்குட்டை இல்லாமல் தும்மித்தொலைத்து காற்றில் ஈரத்துளிகளைத்தெளித்து புறங்கையால் வாயைத்துடைத்து, ஹலோவென நமக்கும் கைகொடுத்து வஞ்சனையில்லாமல் வைரஸ் கிருமிகளை தாரை வார்த்துக்கொடுத்துவிடுவார்கள். ஆசாம், தான் கொள்முதல் செய்துகொண்டு வந்து கிருமிகளை எனக்குக்கொடுத்துவிட்டான் போலும்.
விளைவு? இரவெல்லாம் மூக்கிலும் கண்ணிலும் வெந்நீராக கொட்டி, கீச் கீச் தொண்டையுடன், படுக்கும் முன் கிராம்பை வாய்க்குள் போட்டுக்கொண்டும், உப்பு கலந்த வெந்நீரால் தொண்டையில் காக்கிள் செய்தும் பலனில்லை. காலை எழும்போது இருமல், சளி மற்றும் ஃப்ளூ...ஆபிஸுக்கு போன் போட்டு லீவு சொல்லி டாக்டரைப்பார்க்க கிளம்பினேன்.
தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கான ஆபிஸ் மருத்துவக்காப்புறுதி இருந்தாலும் இது மாதிரி ஜலதோஷத்திற்கு நான் முழுமையாக நம்புவது அரசின் ஆரம்ப சுகாதார மையங்கள் தான். நகரின் ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அந்தந்த பகுதி மக்களுக்கென இயங்கும் ஹெல்த் சென்டர்கள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு நடத்துபவை. சின்னப்பையன்கள் மண்டை உடைந்து தையல் போடுவது, கால் சுளுக்கிய மாமாக்களுக்கு மாவுக்கட்டு போடுவது, ஆஸ்துமாவிற்கான நெபுலைஸர் கொடுப்பது, கண்டதைத்தின்று வயிற்று வலி, நெஞ்செரிச்சல், காஸ்ட்ரிக் பிரச்சனை, எக்ஸ்ரே, கண், பல், கர்ப்பிணிப்பெண்களுக்கான செக்கப் என சகல சிகிச்சைக்கும் மருந்துகளுடன் வெறும் மூன்று தினார்கள் (ரூ. 480) மட்டுமே. நச்சென மருந்து கொடுத்து இரண்டே நாளில் நம்மை சரிப்படுத்தும் சிறந்த மருத்துவர்கள். நோய் கொஞ்சம் பெரியதாக இருந்தாலோ, ஈ.சி.ஜி ரிப்போர்ட் மாறுபாடுகள் காண்பித்தாலோ அவர்களே ஆம்புலன்ஸில் அரசு பெரியாஸ்பத்திரிக்கு நம்மை ராஜமரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள். சிகிச்சை இலவசம்..
வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர்கள் தூரத்தில் ஷேக் சபா அரசு மையத்தில் கூட்டம் அதிகமில்லை. டோக்கன் எந்திரத்தில் பட்டனை அழுத்தி டோக்கன் எடுத்து மூன்று தினார்கள் கட்டியதும் ரூம் நம்பர் 4 போகச்சொன்னார்கள். அடுத்தவர் முகத்துக்கு நேரே எப்படி இருமக்கூடாது, புகை பிடித்தால் எப்படி இறப்போம், சர்க்கரை நோயாளி எப்படி அவதிப்படுவார் என அங்கங்கே படங்கள் சுவற்றில்.. உள்ளூர் அரபி பெண்மணிகள் தங்கள் பிலிப்பினோ பணிப்பெண்ணுடன் அறை எண் முன் அமர்ந்திருந்தார்கள். அடுத்த 5 நிமிடத்தில் 'சீத்தாபதி சரிதர்' என மைக்கில் என் பெயரை அரபிப்பெண் டாக்டர் கூப்பிட, உள்ளே போனேன். ' நேத்திலயிருந்து மூக்குல ஜலமா கொட்டுது.. தொண்டை சரியில்ல.' என சொன்னதும் வாயை ஆவென திறக்கச்சொல்லி மரக்குச்சியை நாக்கில் வைத்து அழுத்தி 'அக்கு' என இரும வைத்து, ஜுரமாவென பார்த்து, ஒரு வாரத்திற்கு பெனடால், அமாக்ஸிஸிலின், செட்டிரிஸைன் மற்றும் மூக்கில் விட சொட்டு மருந்து எல்லாவற்றையும் கொடுத்து ' நீ ரெண்டே நாள்ல நல்லாயிடுவே ராசா'வென வாழ்த்திக்கொண்டே, அந்தப்பக்கமிருந்த மைக்கை திருப்பி 'அப்துல்லா கமீஸ்' என அடுத்த நோயாளியைக்கூப்பிட்டார்.
மனைவி உஷா சூடான இட்லி மற்றும் கத்தரிக்காய் கொத்ஸுவை எதிரே வைக்க தொண்டைக்கு இதமாக இறங்கியது. சுலைமானி எனப்படும் கருப்புத்தேநீர் குடித்தபின் மாத்திரைகளை உள்ளே தள்ளி கைப்பேசியில் ஆபிஸ் ஈமெயில் பார்த்துவிட்டு டி.வி பார்க்க உட்கார்ந்தேன். முக்கியமான அரசியல் தலைவர்கள் பற்றிய விசாரனை காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு.. நாங்களும் அதைத்தானே செய்தோம்.. வேவு பார்க்கவில்லையென அருன் ஜேட்லி கூறியும் பாராளுமன்றத்தில் கூச்சல்.
டி.வியை அனைத்துவிட்டு இரண்டு மாதம் விடுப்பில் தேர்வுக்குப்படிக்க வந்திருக்கும் பெரியவனுடன் சிறிது நேரம் அரட்டை. மனைவி சூடாக சூப் கொடுத்தார். மதியம் 12 மணிக்கு கேரளா மோட்டா சிவப்பரிசி வடித்த கஞ்சியில் உப்பு போட்டு உஷா கொடுத்த கஞ்சி ஜலதோஷத்திற்கு அருமையாக இருந்தது. ஏதாவது ஒவியம் வரையலாம் என உட்கார்ந்தால் மேலும் தலை வலிக்க அதை விடுத்து புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். பிறகு ரசம் சாதம்...
மதியம் பழைய குமுதம் விகடன்களைப்புரட்டி சில மணி நேரம் போனது. ஐந்து மணிக்கு நாதஸ்வரம், தெய்வமகள் பார்த்து விட்டு, ஊருக்கு போன் போட்டு அண்ணா, அக்காவுடன் பேசியதும், சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்'இல் spoonerism பற்றிய சுவாரசியமும் நகைச்சுவை கலந்த கட்டுரையை படித்தேன். வரிக்கு வரி காப்பி பேஸ்ட் செய்து உங்களுக்காகவும் இதோ:
"வில்லியம் ஆர்ச்சிபால்டு ஸ்பூனர் எனும் பாதிரியார் (1984-1930) பேசும்போது பல தவறுகள் செய்வாராம். Take a shower என்பதற்கு shake a tower என்பாராம். இதை 'ஸ்லிப் ஆஃப் தி ஸ்லாங்'..ஸாரி, 'ஸ்லிப் ஆஃப் தி டங்' என்பார்கள். இதற்கு ஆங்கிலத்தில் பல உதாரணங்கள் உண்டு. I came by the down train என்பதற்கு பதில் I came by the town drain என்பது ஓர் அடிக்கடி உதாரணம்.
இந்த ஸ்பூனரிசம் (spoonerism) தமிழில் இருக்கிறது என்று ஹ்யூமர் க்ளப் சீதாராமன் இரண்டு உதாரணங்கள் கொடுத்தார். 'வண்ண உடை'என்பதை 'உண்ண வடை' என்று சொல்வது, 'தம்பி கடை' என்பது 'கம்பி தடை' என்பது ஸ்பூனரிசம் தான்.
வாசகர்கள் ஸ்பூனரிசம் என்று தலைப்பிட்டு எழுதி அனுப்பியதில் எனக்குத் பிடித்தவை:
நாவல் காய் - காவல் நாய்
கண்ட உடன் - உண்ட கடன்
நஷ்டமான கடை - கஷ்டமான நடை
திறந்த மனம் - மறந்த தினம்
தேசம் நாடு - நாசம் தேடு
கரைத்துக்குடித்து - குறைத்துக்கடித்து
கண்ணன் அடித்தான் - அண்ணன் கடித்தான்
நான் தாயாகப்போகிறேன் என்றாள் - தான் நாயகப்போகிறேன் என்றாள்
கடல் உப்பு - உடல் கப்பு
முரசு சத்தம் - சரசு முத்தம்
வசந்த் சொன்ன இந்த உதாரணத்தை சீதாராமன் ரசித்திருக்க மாட்டார். 'பாஸ்! மக்கள் குடிக்க கஞ்சியில்லாமல் தவிக்கிறார்கள்' என்று ஒரு சொற்பொழிவாளர் பேசியபோது, ஏன் சிரித்தார்கள் என்று அவருக்குப் புரியவில்லை."
கட்டுரையின் அடுத்த பாராவை எழுதினால் என்னை எல்லோரும் அடிக்க வந்துவிடுவார்களென்பதால் எழுதவில்லை. ஆனால் நிறைய நேரம் வாய்விட்டு சிரித்தபடி மாத்திரைகளைப்போட்டுக்கொண்டு, உப்புநீரில் வாயை கொப்பளித்துவிட்டு, இந்தப்பதிவையும் எழுதிவிட்டு... இதோ தூங்கப்போகனும்.. ஆக இன்னிக்கு எடுத்த லீவு அருமையாகப்போனது. சூப், கஞ்சி மற்றும், ரசம் சாதம் கொடுத்த மனைவி Usharani Sridhar க்கும், வாய்விட்டு சிரிக்க வைத்த சுஜாதாவுக்கும் நன்றி....

No comments:

Post a Comment