Thursday, March 19, 2015

சனிகலு பப்பு....


'ஒரேய் ஶ்ரீதர்.. அங்கிடிக்கி போய் சனிகலு பப்பு தீஸ்குன்னி ராரா...வெட்டியா ரோட்ல வெள்ளாண்டுட்ருந்தின்னா மளிகைக்கடை தான் வெப்பே'... அம்மா சத்தம்போட்டவுடன் சட்னிக்கு பொட்டுக்கடலை வாங்க கணேசன் கடைக்கு ஓடினேன். 

அப்ப ஆறாங்கிளாஸோ ஏளாங்கிளாஸோ...ட்ர்ர்ரும்...ட்ர்ர்ரும் என வண்டியை ஸ்டார்ட் செய்து ஸ்டியரிங் வீல் சுற்றுவது மாதிரி கையை சுற்றி உதட்டிலிருந்து எச்சி தெறிக்க ட்ர்ர்ர்ரென கத்தியபடியே தர்கா வழியாக ஓடினேன்.

தென்னூர் ஜெனரல் பஜார் தெருவைத்தாண்டி பட்டாபிராம் பிள்ளைத்தெருவும் மூலைக்கொல்லைத்தெருவும் சந்திக்கும் இடத்தில் தான் கணேசன் மளிகைக்கடை. அன்று பெரிய மார்க்கெட்டிலிருந்து சாமான்கள் வாங்கிக்கொண்டு வருவதால் கடை திறக்க லேட்டாகும்.

கடையை ஒட்டி மூலையில் டீக்கடை பாய் டீ வடிகட்டியை மடக்கி தூளை எறிந்துவிட்டு புதியதாக டீத்தூளைப்போட்டு, பாய்லர் கீழேயுள்ள பிடியை உலுக்கி சாம்பலை வெளியே எடுத்துவிட்டு மேலிருந்து கொஞ்சம்
கட்டைக்கரிகளைப்போட்டார்.

பக்கத்தில் முபாரக் பேக்கரியில் வெண்ணை பிஸ்கட் வாசனை. தேங்காப்பூத்தூள், வெண்ணெயில் முக்கியெடுக்கப்பட்ட பன், இருபத்தஞ்சு பைசாவிற்கு முந்திரி,தேங்காய் போட்ட ப்ரௌன் கலர் கேக் திங்க ஆசை தான். காசில்லை. பத்து பைசாவிற்கு அதே கேக்கின் தூள் கிடைக்கும்.

ஐந்து வீடு தள்ளி பழைய மூங்கித்தட்டி போட்ட வீடு தான் திருச்சி லோகநாதனின் பூர்விக வீடாம்.

அவசரமாக சைக்கிளில் பொன்மலை ரயில்வே 'வரக் ஷாப்'புக்கு ஒடும் அஃபீஸ் பாய், பெரிய கம்மாளத்தெருவில் நகை கிலிட் ஷாப் வைத்திருக்கும் ரஹமத்தியின் அப்பா, ராமகிருஷ்ணா டாக்கீஸ் எதிரே 'நைட்டுக்கடை' நடத்தும் மலையாளி பாலஷ்ணன், சைக்கிள் கடை பாபு என நடுத்தர மக்கள்
அவசரமாக ஓடும் காலை வேளை..

அந்தப்பக்கம் ரோட்டோரத்தில் தரையில் சாக்கு விரித்து 70 வயது கிழவி வள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, மாங்கா பத்தை, கூரு கூராக நெலக்கடலை, எலந்தப்பழம், மக்காச்சோளம் விற்கிறாள். அஞ்சு பத்து பைசாவிற்கு எதுன்னாலும் கிடைக்கும். ஒரு நாள் அந்த கிழவி கடையில் வாங்கித்தின்பதை நிறுத்தி விட்டேன். காரணம், அன்று அவள் எழுந்து பாபு சைக்கிள் கடையெல்லாம் தாண்டிப்போய் அந்தப்பக்கம் சாக்கடையான்ட நின்னு .. முடித்துவிட்டு திரும்ப கடைக்கு வந்ததும் காலில் பட்டிருந்த ஈரத்துளிகளை அலட்சியமாக கையால் துடைத்து 'உனக்கு என்னாய்யா வேணு' மென கேட்டதும் நான் 'அய்யய்யே! அம்மா!' வென வீட்டுக்கு ஓடி நடந்ததைச்சொல்லி முடிப்பதற்குள் பொளேரென அறை... 'யாரைக்கேட்டு இத்தினி நாள் அங்க வாங்கித்தின்னே?... சொன்ன பேச்சை கேக்கலைன்னா நீ மளிகைக் கடை தான் வெப்பே ' (மறுபடியும் மளிகைக்கடை சாபம்!)

கணேசன் வந்துவிட்டான். சுருட்டை த்தலைமுடி முழுவதும் வழியும் எண்ணெய்..தூக்கி வாரி நெற்றியில் சுருளாக முடி. பெரிய தொப்பை. ஸ்டான்டை மடக்கி சைக்கிளை மூட்டையோடு பின்னுக்கிழுத்து நிறுத்தி சீட்டுக்கடியிலிருந்து சைக்கிள் டியூபை விடுவித்து அரிசி மூட்டை, எண்ணெய் டின்களை இறக்கினான்.

கடையின் சங்கிலி, பூட்டைத்திறந்து மரப்பலகையை மடித்து திண்ணை மாதிரி ஆக்கினான். ஒன்று முதல் எட்டு வரை நம்பர் எழுதிய மரப்பலகைக்கதவுகள் ஒவ்வொன்றாக சாய்த்து வெளியே எடுத்து, உள்ளுக்குள் தள்ளப்பட்டிருந்த மூன்று பெரிய எண்ணை ட்ரம்களை வெளியே திண்ணைக்குத்தள்ளி புதிய கடலெண்ணையை நிறப்பும்போது கமகமவென வாசனை.

உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றைப்பிடித்து கடைக்குள் ஏறி பச்சை அன்டர்வேர் தெறிய உள்ளே பள்ளத்தில் குதிக்கும்போது பெருச்சாளி ஒன்று கடைக்கு வெளியே பாய்ந்து ஒட, கீழே குனிந்து எலிப்பொறியை வெளியே எடுத்தான். அதற்குள்ளேயும் ஒரு எலி. காலி சாக்கு ஒன்றுக்குள் எலிப்பொறியை விட்டு மாட்டிய எலியை அடுத்த நிமிடம் துணி துவைக்கிற மாதிரி ரோட்டில் சாத்தி குப்பைத்தொட்டிக்குள் கடாசிவிட்டுத்திரும்ப வரும்போது நாலைந்து பெண்கள் கடைக்கு வெளியே காத்திருந்தார்கள்.

எதிரே ஜான் கடையில் காய்கறி மற்றும் ரசூல் மட்டன் ஸ்டாலில் 'கோஷ்' வாங்கிக்கொண்டு வந்த பெண்கள் ஒவ்வொருவராக...
' காக்கிலோ பச்சரிசி குடுங்க'..
'புள்ளைக்கி வவுத்த வலி.. நாலனாக்கு 'பேர் சொல்லாதது' குடுங்க'
' நாலு தேங்கா சில்லு.. எட்டனாக்கு கசகசா.. நூறு அஸ்கா'
'ண்ணே! ரெண்டு தேன் மிட்டாய்'...
கணேசன் இயந்திரம்போல் இயங்க ஆரம்பித்தான். உடனே ரெண்டு தேங்காய்களை உடைத்து தண்ணீரை தூக்குச்சட்டிக்குள் பிடித்து(வீட்டுக்கு), அரிவாள் மாதிரி உள்ள கத்தியில் தேங்கா சில்லு கீறி எடுத்தான்.

பக்கத்து அலமாரயில் மைதீன் பீடி, ஹாட்டின் பீடி, சிஸர்ஸ், பர்க்ளேஸ் சிகரெட், தபால் கார்டு, இன்லாண்டு லெட்டர், புத்தகத்தினுள் ஸ்டாம்ப், பத்திரத்தாள்... இந்தப்பக்கம் கருப்பான தகர டப்பாக்களில் கல்கண்டு, ஏலக்காய், முந்திரி, லவங்கம் பட்டை, மாவு சோடா....

கணேசன் கடையில் சீட்டு சேமிப்பு திட்டமுமுண்டு. அவ்வப்போது நாம் கட்டும் ஒவ்வொரு 20 பைசாவுக்கும் சீட்டு அட்டையின் கட்டங்களில் மரக்கட்டையால் இங்க் தொட்டு 'x'குறி வைக்கப்படும். அட்டையின் பின்புறம் 'கார்டு தொலைந்தால் கம்பெனி பொறுப்பல்ல', 'கட்டிய பணத்திற்கு பொருள் மட்டுமே கிட்டும். பணம் திரும்பப்பெற இயலாது' போன்ற 'கம்பெனி' விதிகள்'. கடைசி வாசகம் வித்தியாசமானது.... 'காசு பணம் உள்ளவர்கள் மட்டுமே கடவுள்... கடவுளாக மதிக்கப்படுவார்கள்'

அது சரி... நான் சனிகலு பப்பு தானே வாங்க அங்க வந்தேன்? சாமானை வாங்கிக்கொண்டு பொட்டலத்தைத்திறந்து கொஞ்சம் பொட்டுக்கடலையை வாயில் போட்டுக்கொண்டு வீடு திரும்பும்போது வழியில் நண்பர்கள் 9 குழி கோலி விளையாடிக்கொண்டிருக்க, நானும்... நாலு கோலிகளை சற்றுத்தள்ளி நின்றுகொண்டு 9 குழிக்குள் நாம் போட..'கீ காடி, மே நிப்பு, ஆக்கர் கடசீ என மற்றவர்கள் சொல்லும் கோலிகுண்டுகளை குறிபார்த்து அடித்தால் சீராக வெட்டிய சிகரெட் அட்டைகள் கிடைக்கும். மல்லிகைபுரம் பையன்கள் காசு வைத்து விளையாடுவதால் அவன்களோடு விளையாட முடியாது. நாம் விளையாடும்போது அவர்களை சேர்த்துக்கொள்ளாவிட்டால் 'வோய்யவொ- - -' என திட்டிவிட்டுப்போவான்கள்.

திடீரென வீட்டு ஞாபகம் வர... 'ஆஹா இன்னிக்கி இருக்கு'...இட்லிக்கு சட்னி அரைக்க சனிகலு பப்புக்காக இவ்வளவு நேரம் அம்மா காத்திருந்தார்கள்..
'ஒக்க பப்பு தீசேக்கி எந்த்தரா சேப்பு?' ..தொபேல் தொபேலென அடி. மறுபடியும் ' நீ மளிகைக்கடை வைக்கத்தான் லாயக்' சாபம்...

அதுசரி...மளிகைக்கடையென்ன அவ்வளவு மட்டமான தொழிலா? அப்பாய் மளிகையில் கல்யாணத்திற்கே சாமான் வாங்குவார்கள். இந்த மளிகைக்கடை சாபம் அடுத்த சில வருடங்கள் கிடைத்தது.

ஆச்சு...45 வருடங்கள் கழித்து இன்று யோசித்தால் அந்த சாபம் பலித்துவிட்டமாதிரி தான் இருக்கு சார்!.

ஐ.டி.சி, லீவர் போல எங்களுடையது உணவுப்பொருட்கள் நிறுவனங்களடங்கிய குழுமம். பல்வேறு நாடுகளிலிருந்து அரிசி, சர்க்கரை, எண்ணெய், பால் பவுடர், சீஸ்,பதப்படுத்தப்பட்ட இறைச்சி,பாஸ்தா என நூற்றுக்கும் மேலான உணவுப்பொருட்களை இறக்குமதி செய்து குளிர்ப்பதன அறைகளில் வைத்து, மினரல் வாட்டர், ஐஸ்க்ரீம், பழச்சாறு, பதப்படுத்திய (long life) பால், தக்காளி விழுது போன்றவற்றை எங்கள் ஆலையில் தயாரித்து இந்த சிறிய முத்துத்தீவின் மக்களுக்கும், அங்காடிகளுக்கும், அரசாங்கத்துக்கும், உள்நாட்டு இராணுவம் மற்றும் குவெய்த், ஈராக்கில் அமெரிக்க இராணுவத்திற்கும் வினியோகிக்கிறோம்.

மூலைக்கொல்லைத்தெரு மளிகைக்கடை கணேசனுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

அவன் பச்சை அட்ராயர் வேட்டி சகிதம் செய்யும் வேலையை நான் டை, சூட் அணிந்து செய்கிறேன்.

அவன் சைக்கிளில் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கடையில் இறக்கும் மளிகைப்பொருட்களை நான் கன்டெய்னர்களில் விமானம் மற்றும் கப்பலில்..

அவன் கடை மாதிரி இங்கும் பெருச்சாளிகளுண்டு. ஆனால் அவை(வர்)களை பிடிக்கத்தான் இங்கு எலிப்பொறி இல்லை.

கணேசனைப்போல ஓடியாடி இங்கும் உழைக்கனுங்கோ... இல்லாகாட்டி பப்பு வேகாது...சனிகலு பப்பு.

No comments:

Post a Comment