Wednesday, August 13, 2014

பக்ரீனா...சார்ஜாவா...அபிதாயியா..

சென்ற மாதம் விடுமுறைக்காக பஹ்ரைனிலிருந்து நான் சென்னை வந்திருந்தது தெரிந்ததே.. (ரொம்ப தினத்தந்தி படிச்சா இப்பிடித்தான்) ஆனால் அபுதாபி வழியாக மட்டும் இனி வரக்கூடாதென முடிவெடுத்துவிட்டோம். 

அபுதாபி நேரம் இரவு 9 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதம். சரி.. கிளம்பி ஒரு அரை மணிக்குள் உட்கார்ந்து செட்டிலானவுடன் சாப்பாட்டுக்கடையை எப்போது திறப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தோம். சரியான பசி வேறு. பஹ்ரைன் ஏர்போர்ட் லவுஞ்சில் மாலை 4 மணிக்கு சாப்பிட்டது.

விமானம் கிளம்பி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை குடிதண்ணீர்,குளிர் பானம், நீராவியில் வைக்கப்பட்ட கைக்குட்டை வகையராக்கள் விநியோகம் நடந்து முடிந்தபின் மெதுவாக சாராய வண்டியை தள்ளிக்கொண்டு பணிப்பெண் வந்தாள். ஒவ்வொருவரிடமும் நெருங்கி வந்து குனிந்து 'ஊத்திக்கிறியா?' என பவ்யமாக ஆங்கிலத்தில் கேட்டாள். பக்கத்தில் மனைவி இருந்ததால் தான் நான் 'வேணாம்.. நன்றி' என சொன்னதாக நினைக்க வேண்டாம். தனியாக பிரயாணம் செய்திருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பேன். 'குடிக்க என்னென்னம்மா இருக்கு?' என கேட்டவர்களுக்கு முன் அவள் தரையில் மண்டியிட்டு அமர்ந்து அஷ்டோத்தரம் மாதிரி வரிசையாக சொல்ல ஆரம்பிக்க, அருள்வாக்கு கேட்பது போல சிலர் தலையை ஆட்டி தாகசாந்தி பெற்றுக்கொண்டார்கள்.

கண்ணாடி போத்தல் மூடியை அவள் அலட்சியமாக திருகி மதுவை சன்னமாக கோப்பையின் பக்கவாட்டுச்சுவற்றில் சரித்து, கிடுக்கியால் ஐஸ் கட்டியை மேலே மிதக்க விட்டு, பக்கத்தில் தொட்டுக்க ஒரு சின்ன கின்னத்தில் வறுத்த முந்திரி, கடலை, பிஸ்தா, பாதாம்..எல்லாம் வைக்க ...ஆஹா யாருக்குத்தான்
தண்ணியடிக்க ஆசை வராது!

அந்தபக்கம் விருத்தகிரி விஜய்காந்த் மாதிரி ஒருத்தர் தன் பெரிய வயிற்றுக்கு பின்னாடி உட்கார்ந்திருந்தார். சீட் பெல்ட் அவருக்கு போறாது. நெஞ்சுக்குத்தான் சீட் பெல்ட்டே போட்டிருந்தார். 'நீ சீக்கிரம் குடிச்சி முடிக்கலைன்னா அடுத்த ரவுண்டு உனக்கில்ல' என யாரோ அவருக்கு சொன்னமாதிரி ஒரு அவசரம். கோவில் தீர்த்த பிரசாதம் மாதிரி மடக் மடக்கென குடித்து, மீசையில் ஒட்டியிருந்த அந்நிய நாட்டுச்சாராயத்தை புறங்கையால் துடைத்துக்கொண்டே பிஸ்தாப்பருப்பை பற்களிடையே உள்ளே தள்ளினார். 'ஹையா..நான் குடிச்சே ஒழிஞ்சிடுவேனே...' என மகிழ்ச்சியுடன் சொல்லும் சிவந்த கண்கள். நமக்கு இன்னிக்கி புவ்வா அவ்வளவு தான் என நினைத்தேன்.

எனக்கு பக்கத்தில் ஒருத்தர் சின்ன பையனாட்டம்... அடடே..'ஜூன் போனா..ஜூலைக்காற்றே' பாடகர் க்ரிஷ். பகல் முழுவதும் பாரிசிலிருந்து அபுதாபி வரை பிரயாணம் செய்த களைப்பு அவருக்கு. படித்ததெல்லாம் அமெரிக்கா. திருச்சி கல்லுக்குழி பூர்விகமாம். விமானம் கிளம்பும் முன் எல்லா கணவன்மார்கள் போல அவரும் கைப்பேசியில் ' தோ..டேக் ஆஃப் ஆகப்போறதும்மா.. காலைல 6 மணிக்கு வந்தர்றேம்மா.. சரிம்மா..வச்சுடட்டுமாம்மா' என பயபக்தியுடன் அப்டேட் கொடுத்துவிட்டு, மதுவகை பட்டியல் அட்டையை 'பீர்'ராய்ந்தார். அமைதியாக மிகுந்த மரியாதையுடன் கொஞ்ச நேரம் என்னுடன் பேசிவிட்டு சாக்ஸை கழட்டி காலை நீட்டி சோம்பல் முறித்தார். 'அட.. சினிமாக்காரங்களும் நம்பள மாதிரியே எல்லாம் செய்றாங்களே' என வியந்து இந்தப்பக்கம் திரும்பினால்......தண்ணியடித்த கணவான்கள் சிலருக்கு முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர, வரிசையாக பாத்ரூம் போக நின்றார்கள்.

விமானம் சீரில்லா காற்றழுத்தத்தினால் கடகடவென அதிர பெங்களூர் மாரத்தஹள்ளி ரோட்டில் போவது போலிருந்தது. வழியை அடைத்துக்கொண்டு பாத்ரூம் போக நிற்பவர்களிடம் பணிப்பெண் 'வெளிய டர்புலன்ட் வெதர்.. இப்பசத்திக்கி அடக்கிட்டு அப்பறமேட்டுக்கு உச்சா போலாமே' என பணிவாக கெஞ்சியும், மேற்படி ஆட்கள் 'அடக்கு'முறைக்கு ஒப்புக்கொள்ளாமல் இருமாப்புடன் அங்கேயே கொஞ்சநேரம் நின்றுவிட்டுத்தான் பாத்ரூம்/மில் 'போனார்கள்'. விருத்தகிரியும் தான். வெளியே வரும்போது அவரை கவனித்தேன்.. பாண்ட்டிலேயே கொஞ்சம் போயிருந்தார்.விமானத்தின் அதிர்வு இல்லியா...

விமான ஓட்டிக்கு மிக அருகே முன்னால் மூன்றாவது வரிசையில் நாங்கள். எங்கள் பகுதிக்கு இரண்டு பணிப்பெண்கள். முதல் வரிசையில் ஒரு கைக்குழந்தைக்கு காது வலி போலும்..பாவம். வீர்..வீரென்று அது அலற, குழந்தையின் அம்மாவும், இடது கையில் மதுக்கோப்பையுடன் அப்பாவும் போராடினார்கள். யாருக்கும் புவ்வா இன்னும் கொடுக்கப்படவில்லை.

சாராய வண்டி மறுபடியும் ஊர்ந்து வர, அணையின் நீர்மட்டம் குறைந்த மக்களுக்கு இரண்டாவது சுற்று தண்ணீர்ப்பந்தல் ஆரம்பிக்க, நான் மெதுவாக பணிப்பெண்ணைக்கூப்பிட்டு 'ஏம்மா...தண்ணியடிக்காதவங்களுக்கு மட்டும் இப்ப சோறு கெடைக்குமா' வென கேட்டேன். அவள் உடனே குனிந்து தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து 'இப்பத்திக்கி இல்ல' என சொன்னாள் (இதை மண்டிபோடாமலேயே சொல்லலாமே!).

ஆஹா... ஒரு வழியாக அம்மணி வந்து எனக்கு முன் சாப்பாட்டுப்பலகையை சீட்டிலிருந்து வெளியே இழுத்து அதன்மேல் துண்டைப்போட்டாள். உணவுப்பட்டியல் அட்டையை காட்டி மரக்கறியா, மாமிசக்கறியா என முடிவு செய்ய வேண்டுமாம். அதற்குள் ஃபிலிப்பினோ பணிப்பெண் என்னிடம் வந்து மண்டிபோடாமல் சொன்னாள்.. 'நீங்க ஹிண்டு மீல் கேட்டு டிக்கெட் பதிவு பண்ணியிருக்கீங்க.. சரியா? அது கவுச்சாக்கும்..அதுல மாட்டுக்கறி உண்டாக்கும்.. பரவால்லியா' என கேட்க, எனக்கு ரத்தம் ஜிவ்வென்று தலைக்கு ஏறியது. ' சகோதரி... எங்க ஆபீஸ்காரங்க டிக்கெட் புக் பண்ணப்ப என்னை விஜாரிக்கல... ஹிண்டு மீல்னா காய்கறி இல்லியா? மாடு, பன்னியெல்லாமா? அப்ப மரக்கறிக்கு இன்னா ச்சூஸ் பண்ணனும்?' என கேட்டேன். அவள் 'அதுக்கு நீங்க ஏஷியன் ஹிண்டு மீல் னு கேக்கனும்' என பொழிப்புரை வழங்க, ஹிண்டு மீல் க்கும் ஏஷியன் ஹிண்டு மீல் லுக்கும் மாட்டுக்கறி தான் வித்தியாசமாவென வியந்தவன்னம் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்..விடிகாலை வெளிச்சம் லேசாக தெரிந்தது.

ஒருவழியாக கெஞ்சி கூத்தாடி வெஜ்ஜி மீல் கெடச்சுது...துக்குனூன்டு தட்டில். திருச்சி ஆதிகுடி காபி க்ளப்பில் அதே அளவு சிறிய தட்டில் பஜ்ஜி...இங்கே வெஜ்ஜி. தட்டின் ஒருபக்கம் துணியால் சுற்றப்பட்ட கரண்டி, கத்தி, முள்கரண்டி, காபி கலக்கி (ஸ்டிர்ரர்)...பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் இலைதழைகள் மற்றும் ஆலிவ், மறு கிண்ணத்தில் கேக்..அப்புறம் தேநீர், தண்ணீர் குடிக்க 2 காலி கோப்பைகள், சாக்லேட், பல் குத்த குச்சி மற்றும் ஃப்ளாஸ், குட்டி சாஷேயில் பால், சீனி, வெண்ணெய், பன்...ஸ்ஸப்பாடா! இதெல்லாம் வைத்தது போக மீதியிருக்கும் இடத்தில் பிடிசோறு.. கொஞ்சம் பீன்ஸ் கலந்த குழம்பு மாதிரி ஒரு வஸ்து, இதெல்லாம் வயத்துக்கு எந்த மூலைக்கு என பத்தாமல் 'ப்ளடி மேரி' அடித்த பெருசுகள் 'ப்ளடி இடியட்ஸ்' என முனுமுனுத்தவாறே முன்னே எட்டி எட்டி பார்த்தார்கள்.. ஊஹும்... பணிப்பெண்கள் வரக்காணோம்..

சாப்பாட்டுத்தட்டில் துணியைத்திறந்து கத்தி, கரண்டிகளை வெளியே எடுக்கும்போது 'ணங்ங்' என ஆங்காங்கே சிலர் கீழே போட்டார்கள். காதுவலி பாப்பா அழுகையெல்லாம் நிறுத்தி சிரித்து விளையாடியபடியே ஸ்பூனை பக்கத்து சீட்டுக்காரர் மேல் விட்டெறிய, அதை தடுக்க முயன்ற அப்பா ஒரு டம்ளர் தண்ணீரை அப்படியே அவர் சீட்டில் கொட்டினார். இந்தாண்ட பாண்ட் ஜிப்பை போட மறந்து ஜாலியாக எலும்பை கடித்துக்கொண்டிருந்தார் விருத்தகிரி. ஒருவழியாக எச்சில் தட்டுக்களை அப்பெண்கள் வாங்கி வண்டியில் சொறுகிக்கொண்டு போனவுடன் ஒரு அரைமணி நேரம் தூங்கியிருப்போம்.

மணி காலை 3.30(இந்திய நேரம் 5 மணி). 'சீட்டை நேராக்கி உக்காருங்க..இறங்கப்போறோம்' என எழுப்பிவிட்டார்கள்.

எங்கள் பஹ்ரைன் ஸ்லோகா குரூப் நண்பர் Sampath Vijaykumarமற்றும் Anuradha Vijaykumar தம்பதிகளது பெண் Aishwarya Vijaykumarதிருமணத்திற்காக சென்னை வந்திறங்கினோம். அத்திருமணம் பற்றிய பதிவைத்தான் விபரமாக எழுதலாமென ஆரம்பித்து விமானப்பயண அனுபவத்திலேயே இருக்கிறேன்...கோலாகலமான திருமண வைபவம் பற்றி அடுத்த பதிவில்...

அம்மா விட்டுச்சென்ற பொக்கிஷம்

போன வருடம் அம்மா விட்டுச்சென்ற பொக்கிஷங்களில் ஒன்று இது (சிவசங்கரி தொடர்கதை)...
பழைய விகடன், குமுதம் கதைப்பக்கங்களை வாராவாரம் கிழித்து 31 வாரங்களில் தொடர்கதை முடிந்ததும் கோனி ஊசி, ட்வைன் நூலால் தைத்து வைத்திருக்கிறார்கள்.

பழைய அட்டைப்பெட்டியில் 50 வருடங்களுக்கு முன் வெளிவந்த சில புத்தகங்கள் கிடைத்தன. நிறைய கதைகளைக்காணோம். பழைய ராணிமுத்து, தினமணிக்கதிர், ராணி, கல்கண்டு ஒன்றையும் காணோம்.
'ஜலதீபம்', 'தேன் சிந்துதே வானம்', 'எதற்காக' 'ரத்த
ம் ஒரே நிறம்', 'கரையெல்லாம் செண்பகப்பூ 'கதைகளை கிழித்து வைத்திருந்தார்கள்.எங்கே போனது?

நினைவிருக்கிறதா?...
38ஆம் பக்க மூலை, ஆறு வித்தியாசங்கள், மல்யுத்த வீரர் மல்லப்பா, கவுன்சிலர் கனகசபை, அப்புசாமி-சீதாப்பாட்டி-பீமாராவ்-ரசகுண்டு, இரட்டை வால் இரண்டு, மதனின் ரெட்டைவால் ரெங்குடு, வாணி ஜோக்ஸ், மணியன் பயனக்கட்டுரை, பரனீதரன் கட்டுரை, துப்பறியும் குவாக் சுந்தரம், கருத்துப்படம் (கக்கன் மரணம்-தானு கார்ட்டூன்), குரங்கு குசலா, அன்புள்ள அல்லி, பாட்டி வைத்தியம், சமைத்துப்பார், அழகாபுரி அழகப்பன், கான்ஸ்டபிள் கந்தசாமி(ஏ.கே.பட்டுசாமி).,...
இன்னும் சில வருஷங்கள் முன் ஶ்ரீதர் கார்ட்டூன்கள், மெரினா கதைகள், மோகமுள், பர்மா ரமணி, தேவன் கதைகள், நைலான் கயிறு, SS66, இன்னொரு செறுப்பு எங்கே, சங்கர்லால் துப்பறிகிறார், இட்ஸ்பெக்டர் வகாப், பேயாழ்வார், சாவி, வாஷிங்டனில் திருமணம், அருணாசல மகிமை, அகிலன், கொத்தமங்கலம் சுப்பு கதைகள்(தி.மோ), ஆதிமூலம், மருதி, லதா,வர்ணம், மாயா, ஜி.கே.மூர்த்தி, ஸிம்ஹா, வினு, கோபுலு ஓவியங்கள்...

மேலும் எதாவது நினைவுக்கு வருகிறதா?

ரங்கநாதன் கோதண்டம்

'தொட்டால் குழையும் சோறு
தொட்டால் விறைக்கும் மனைவி
நொந்து போனது மனசு'

இந்தக்கவிதையை எழுதிய ranganathan Kothandam அவர்களை நேற்று காலை மாரத்தஹள்ளி அடையாறு ஆனந்த பவனில் சந்தித்தேன். 

காலை 8.30 மணியளவில்
சந்திப்பதாக முடிவு செய்திருந்தோம். 7.30 க்கு வீட்டை விட்டு நான் கிளம்பி பழைய ஏர்போர்ட் ரோட்டை பிடித்ததும் காரின் இரண்டு பக்கமும் உரசியபடி பைக் மற்றும் ஆட்டோக்கள்... 'கீக்...கீக்'கென ஒரே ஹார்ன் சப்தம். இஞ்ச் இஞ்ச்சாக நகர்ந்தது பெங்களூர் ட்ராஃபிக். முந்திச்சென்ற பைக்குகள் என்னை 'சாவு கிராக்கி'யென கன்னடத்தில் சபித்துச்சென்றது போலிருந்தது. கடைசியில் அ.ஆ.பவனுக்காக திரும்பவேண்டிய இடது பக்கத்தையும் (வலது பக்க driving வண்டி வேறு) கோட்டை விட்டு அடுத்த சிக்னல் போய் சுற்றி வர மேலும் அரை மணி நேரம் விரயம்.8.15இலிருந்து 9 மணி வரை பொறுமையாக ஹோட்டல் வாசலில் நின்றிருந்தார் ரங்கா.

உயரமான டேபிளின் முன் எதிரெதிரே நின்றுகொண்டே மற்ற பெங்களூர்க்காரர்கள் போல மினி டிபன் சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தோம். பெங்களூர்க்காரர்கள் முக்காவாசி நேரம் வண்டி ஒட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வண்டி ஒட்டாத நேரத்தில் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். குறிப்பாக பானிபூரி...

ரங்கா நல்ல உயரம். ஒடிசலான உருவம். இளநரை. கலைந்த தலைமுடி. நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் மற்றும் சரியான அரட்டைப்பேர்வழி என முகத்திலேயே தெரிகிறது.
நாற்பத்தைந்தே வயதான ரங்காவின் ரசனை, விருப்பங்கள், ஆன்மிகத்தில் ஈடுபாடு, எழுத்தாற்றல், குழந்தைகள் நலன்களில் அக்கறை, தொண்டு செய்யும் ஆர்வம், வயதில் பெரியவர்களுக்கு மரியாதை,பணிவிடை செய்தல்....இவ்வளவு நற்குணங்களைக்கொண்டவரா இவர்! மலைப்பாக இருந்தது..

18 வயதிலிருந்து எழுதுகிறாராம். ஆரம்பத்தில் கையெழுத்துப்பிரதி தொடங்கி, பிறகு 300 ரூபாய் செலவில் 20 பிரதிகள் வீதம் அச்சிட்டு பத்திரிக்கை(1999), 'என் பார்வையில்' என்ற தலைப்பில் சினிமா விமரிசனங்கள் எழுதுதல், ப்ளாக் எழுதுதல், அதன்பின் யாஹூ க்ரூப்பில் பத்திரிக்கை நடத்தியவர்..பேச்சு சுவாரசியத்தில் தட்டிலிருந்த இட்லி, பொங்கல், வடை, சேசரி மற்றும் மசால்தோசை எங்கே போனதென்று தெரியவில்லை.

காஞ்சி மஹா பெரியவரின் மகிமைகளையும் எழுத்துக்களையும் நன்கு அறிந்தவர்.அதன்படி தன் கடமைகளை தவறாமல் செய்பவர்.திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்களின் பக்தர். வாரியாரவர்களைப்பற்றி நிறைய பேசிப்புகழ்ந்தார். வாரியாரின் கந்தர் அநுபூதி, கந்தர் அலங்கார விரிவுரைகளை நிறைய படித்திருக்கிறாரென்பதால் அதிலிருந்து நிறைய பாடல்களையும் மேற்கோள் காட்டினார்.

மினி டிபனோடு சேர்த்து காபி இல்லையாம். 2 காபி வாங்கிக்கொண்ட பின், குடும்பம், குழந்தைகள் மற்றும் அவர்களது படிப்பைப்பற்றியும் பேசினோம். காலை/மாலையில் தினமும் குழந்தைகள் தம் தாய் தந்தையரை பணிவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் பேசினார். தற்போதைய தலைமுறை நமது மூதாதையர்களை மறந்தும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கர்மகாரியங்களை சரிவர செய்ய இயலாததையும் குறிப்பிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். 'சிந்தனையைத்தூண்டுகிற சின்னஞ்சிறு விஷயங்களையும் சுவாரசியமாகச்சொல்லும் கலை நண்பர் ரங்கநாதன் கோதண்டராமன்' என எஸ்ஸெஸ்பீ அவர்கள் சரியாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். நேரமின்மை காரணமாக அடுத்தமுறையே குடும்ப சகிதம் சந்திப்பதாகவும் முடிவு செய்தோம்.

தான் எழுதிய பக்தி கஃபே (தனிச்சுற்றுப் பத்திரிக்கை) யின் முதல் பாகம், எஸ்ஸெஸ்பீ அவர்கள் தமிழ்ப்பாக்களில் வெளியிட்ட ஶ்ரீ ஹனுமான் சாலிசா மற்றும் அசோகமித்திரன் அவர்
களின் சிறுகதைத்தொகுப்பு (மாற்று நாணயம்)
ஒன்றையும் பரிசாக அளித்த ரங்கா போன்ற இனிய மனிதர்கள் எனக்கு முகநூல் நண்பர்களானதில் மிகுந்த பெருமையடைகிறேன்..

சுமார் 45 நிமிடங்களேயான எங்களது சந்திப்பை 9.45க்கு
முடித்து விடைபெற்றுக்கொண்டு அவர் வொயிட்ஃபீல்டு பக்கமும் நான் மல்லேஷ்பாலயா திசையிலும் கிளம்பினோம்.

'கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே! ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழிசெல்லும் அவாவினையே'...
பாடலை வீடு திரும்பும்போது முனுமுனுக்க வைத்துவிட்டார் ரங்கா

ஜருகன்டி...ஜருகன்டி


வருடாந்திர விடுமுறையை சென்னையில் துவங்கப்போவதாக ஆருயிர் நண்பன் கணபதிக்கு சொன்னதும் இனம்புரியாத சந்தோஷம் அவனுக்கு. சென்னையில் ஶ்ரீதர் & சந்தானம் என்ற ஆடீட் ஃபெர்மில் இருக்கும் கணபதி கடந்த 3 மாதங்களாக நைரோபி(கென்யா)வில் ஒரு அரசு நிறுவனத்தில் ஐ.டி.இம்ப்ளிமென்ட்டேஷன் என ரொம்ப பிசியாக இருந்தான். கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் உ.பி. பையாவின் அருமையான சமையலை 10 நாட்கள் விட்டு விட்டு சென்னை வந்துவிட்டான்.

முதல் இரண்டு நாட்கள் வழக்கம்போல் கணபதியின் மயிலாப்பூர் வீடு, அலுவலகம் மற்றும் காலை 6 மணிக்கு மெரினா கடற்கரை நடைபயிற்சி...மெரினாவிலிருந்து நேராக அவர்களது பார்ட்னர் திரு.சந்தானம் அவர்களது வீடு சென்றோம். நேபாலிச்சிறுவன் அருமையான ஃபில்டர் காபி கலந்து கொடுத்தான்.

மூன்றாவது நாள் காலை 5.30க்கு நான் தங்கியிருந்த உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு வெளியே இன்னோவாவில் காத்திருந்தான் கணபதி. அம்மா, துர்கா கணபதி, மகன் ஹேரம்பா மற்றும் எங்கள் குடும்பத்தினர் எல்லோரும் திருப்பதி கிளம்பிப்போனோம்.

சீரான வேகத்தில் அருமையான கார் பயணம். பென் ட்ரைவில் ஶ்ரீவெங்கடேசா பாட்டு..டிரைவர் புகழேந்தி (பாலாஜி டிராவல்ஸ்) படு ஸ்மார்ட்.வேகத்தடைகளை பொறுமையாக தாண்டி, மற்ற ஊர்திகளையும் கவனமாக முந்தி காரைச்செலுத்தினார். மாதத்தில் 25 நாட்கள் திருப்பதி போய்வருகிறாராம். காலை 5 மணி வாக்கில் சென்னையிலிருந்து வாடிக்கையாளர்களை தினமும் கொண்டுசென்று தரிசனம் செய்வித்து சிற்றுண்டி, மதிய உணவு வாங்கிக்கொடுத்து மாலை 6 மணிக்குள் பத்திரமாக சென்னை கொண்டுபோய்ச்சேர்க்கிறார். திருப்பதி பற்றி அவர் புத்தகமே எழுதலாம். இன்ன நேரத்துக்கு இன்ன மாதிரியான சேவைகள், எத்தனை மணிக்கு போனால் சீக்ரதரிசனம் கிடைக்கும், கூட்டம் அதிகமான சமயங்களில் எப்படி தரிசனம் கிடைக்கும், சுப்ரபாத சேவை எத்தனை நாட்கள் போன்ற நிறைய தகவல்கள் அவரிடமிருந்து கிடைத்தன.

பொதுவாக டிரைவரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டேயிருக்க வேண்டுமென்பது கணபதியின் தாயாரின் கருத்து. குறிப்பாக மதியம் சாப்பாட்டுக்குப்பிறகு மற்றும் இரவில் பயணம் செய்யும்போது டிரைவருக்கு தூக்கம் வராமலிருக்க நாம் அவரிடம் பேச்சுக்கொடுத்தல் அவசியமாம். 'பரவால்ல...ரொம்ப ஜாக்ரதையா ஓட்டறீங்களே! எத்தினி வருஷமா கார் ஓட்டறீங்க?' என டிரைவருக்கு பிடித்த விஷயங்களைப்பற்றி பேசுதல் அவரை உற்சாகப்படுத்துமாம்.
கணபதியின் பையன் ஹேரம்பா ஒருமுறை இரவில் காரில் பயணம் செய்யும்போது திடீரென இப்படி சொன்னானாம்.." அப்பா டிரைவர் தூங்கி விழறான்..மொதல்ல அவன் வாயில டீய வாங்கி ஊத்து... இல்லாட்டி நம்ம வாயில பால் ஊத்திருவான்"..

நேத்ரசேவா போவது சுகமான அனுபவமென புகழேந்தி குறிப்பிட்டார். அப்போது மட்டும் பெருமாள் உடம்பில் குறைவான ஆபரணங்கள் மற்றும் வஸ்திரங்கள்...அவரது கால்களை நாம் பார்க்க இயல பெருமாளும் கண்களைத்திறந்து நம்மை பார்த்தவாறு தரிசனம் கொடுப்பாராம். மற்ற தரிசனங்களில் நாம் தான் அவரைப்பார்ப்போம். உள்ளூரில் கொடிகட்டிப்பறக்கும் ஆடிட்டர் தேவராஜ் ரெட்டி ப்ரசாத சேவை நிறைய செய்வதாக கணபதி சொன்னான். CA சென்ட்ரல் கமிட்டி மெம்பரான அவர் சீக்கிரம் இன்ஸ்டிட்யூட் பிரெசிடுன்ட் ஆவது நிச்சயமாம். சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் சமீபத்தில் பெருமாளுக்கு எதிரே அதிகம் பேர் நின்று தரிசனம் செய்ய 3 வரிசைகள் அமைத்திருக்கிறார்களாம்.

திருமலை கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் அனைத்தும் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டனவாம்.மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை ஒருகாலத்தில் சூரையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தானாம். மேலும் ஸ்ரீரங்கத்தில் இருந்த அரங்கனின் திருஉருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறதாம்.

திருச்சானூர் நெருங்கும் முன் வடமாலப்பேட்டா என்ற ஊரில் இருந்து எங்களை திருமலையை பார்க்கச்சொன்னார் புகழேந்தி. குறிப்பாக ஏழு மலைகளில் ஒருமலையின் ஒரு பகுதி பெருமாள் சாய்ந்தவன்னம் நிற்பது போலத்தோற்றம்.தலைக்கிரீடம், உடல், கால்கள் என பாறையில் செதுக்கப்பட்டமாதிரியான உருவத்தை ஆச்சரியமுடன் பார்த்தோம்( படம் பார்க்க).

இன்னோவா திருச்சானூர் உள்ளே நுழைய வரிசையாக நிறைய கட்டிடங்கள்... அடுத்து எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிலையைப்பார்த்தோம். சுற்றிலும் கடைகள், ஓட்டல்கள், பிரபு வணக்கத்துடன் கல்யான் ஜுவெல்லரி போர்டுகள், டீக்கடைகள், மருந்தகங்கள், அடகுக்கடைகள்,புரோட்டாக்கடைகள்,புடவைக்கடைகள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள், அங்கங்கே டூப்ளிகேட் சரவண பவன்கள்...

காலை சுமார் 9 மணிக்கே மலைக்கு கீழே சப்தகிரி போய்விட்டோம். மேலே போகும் முன் வாகன பரிசோதனையாம். சிகரெட், பீடி கொண்டுசெல்லமுடியாதாம். தனியாக அதற்கு வெட்டினால்.. 'ம்..ம்.. ஓகே'யாம். வரிசையாக வாகனங்கள் காத்திருக்க பின்பக்கமிருந்து கார்கள் பக்கவாட்டில் வந்து மூக்கை நுழைத்து நம்மைத்தாண்டிச்செல்வதை எங்களுடன் சேர்ந்து போலீஸ்காரரும் வேடிக்கை பார்த்தார்.

ஒருவழியாக அதை முடித்துக்கொண்டு கார் மலை மேல் போக ஆரம்பித்தது. சில இடங்களில் புகழேந்தி காரை நிறுத்தி அங்கிருந்து மலையைப்பார்க்கச்சொன்னார். ஆஹா.. மலையின் ஒரு பகுதியின் பாறை அப்படியே கருடாழ்வார் நிற்பதைப்போலிருந்தது(படம் பார்க்க)

300 ரூபாய் டிக்கட் வரிசையில் நம்மை நிற்க வைத்தார் புகழேந்தி. இருபுறமும் இரும்புக்குழாய்கள் பொறுத்தப்பட்ட வரிசைகள். வரிசையில் நிற்பவர்களுக்கு அங்கங்கே வெளியில் இருந்து இலவசமாக உப்புமா மற்றும் மோர் விநியோகம் செய்கிறார்கள். அங்கங்கே கழிவறைகள் இருந்தாலும் அவசரத்திற்கு மட்டுமே பிரயோகிப்பது நல்லது. இல்லையென்றால் தப்பித்தவறி போய்விடவேண்டாம் என்பது என் வேண்டுகோள்.

சுமார் ஒன்றரை மணி நேரம் வரிசையில் சில இடங்களில் மிக மெதுவாகவும், சில இடங்களில் தபதபவெனவும் ஓடினோம். 'ஏடு கொண்டலு வாடா.. வெங்கட்ராமா.. கோவிந்தா.. கோவிந்தா..' வென எல்லோரும் கோஷமிட்டோம். சின்னவனுக்கு நானும் கணபதியும் கோஷமிட்டதைப்பார்த்து ஒரே சிரிப்பு.

கடைசியாக கோவிலின் நடுப்பகுதி வந்தடைந்தோம். கூட்டம்... தள்ளு முள்ளு...கால்களுக்கு கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க இரண்டு மூன்று திருப்பங்கள்.. இதோ பெருமாள் சன்னதி வந்து விட்டது... அடடா இல்லியா! மறுபடியும் கொஞ்ச தூரம்... ஓரிடத்தில் வரிசைக்கு குறுக்கே கயிறு கொண்டு தடுத்து நிறுத்திவிட்டார்கள். தரிசனம் முடித்தவர்களை முதலில் வெளியே அனுப்பிவிட்டு பிறகு எங்களை உள்ளே அனுப்ப... ஆஹா.. இதோ பாலாஜி ஸ்வாமி தரிசனம் கிடைக்கப்போகிறது.....கூட்டம் பின்னாலிருந்து தள்ள மறுபடியும் இன்னொரு திருப்பம்.. திடீரென எதிரே ஶ்ரீ வெங்கடேசப்பெருமாள் காட்சியளித்தார். பெருமாளே! உலக நன்மைக்காக அவரை மானசீகமாக வேண்ட ஆரம்பிக்க...பின்னாலிருந்து 'ஜருகன்டி...ஜருகன்டி...' குரல்கள் ஒலிக்க...என்னென்ன நினைத்து வேண்டுவது அந்த அவசரத்தில் ! அந்த நேரம் பார்த்தா புகழேத்தி சொன்ன நேத்ரசேவா நினைவுக்கு வரும்(பெருமாளின் கால்களைப்பார்க்கலாமென சொன்னது) ? அன்றைக்கு நேத்ரசேவா இல்லையென்றாலும் என்னையறியாமல் பெருமாளின் கால்கள் தெரிகிறதாவென நான் கீழே பார்க்க.. பின்னாலிருந்து 'ஜருகன்டி'கள் எங்களைத்தள்ளியதில் ரங்கநாதர் முகத்தையே சரியாக பார்க்க முடியாமல் வெளியே வந்துவிட்டோம். " ச்சே... பார்த்த திருப்தி இல்லியே...ஒரு செக்கன்டு தானே பார்த்தோம்.. சரியா வேண்டக்கூட நேரமில்லியே...அப்பிடியே திரும்பவும் உள்ளாற போக விடுவாங்களா!.. " போன்ற கருத்துக்களை எப்போதும்போல பகிர்ந்து கொண்டு வெளியே வந்தோம்.

உண்டியல் பகுதியை நெருங்க அங்கேயும் முன்டியடிக்கும் கூட்டம். அதெப்படி சார் உண்டியலில் காசு போட பாண்ட் பாக்கெட்டில் கை விடும்போது மட்டும் கரெக்டாக சில்லரை மற்றும் சிறிய நோட்டுக்கள் வராமல் 100, 500 ரூபா நோட்டுக்களே வரும்? உள்ளுக்குள் பயம் வேறு...சாமியிடமே கணக்கு பார்க்கிறோமாவென..பயத்துடன் காணிக்கை செலுத்திவிட்டு வெளியே வந்தோம்.

கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வரும்போது சிறிய தொண்ணையில் புளியோதரை கொடுத்தார்கள். ஒன்று வாங்கி சாப்பிட்ட பிறகும் இன்னொன்று வாங்கி சாப்பிட ஆசை. எல்லோருக்கும் இந்த ஆசை இருக்கும் போலும். எல்லோர் கையிலும் ரெண்டு தொண்ணைகள். மறுபடியும் வாங்கி சாப்பிட்டோம். நாம் கொடுக்கும் கட்டணம் லட்டுவிற்கும் சேர்த்து என்பதால் புகழேந்தி ஓடிப்போய் லட்டு வாங்கி வந்துவிட்டார்.

திருமலையில் இருந்து கிளம்பி அடுத்த ஒரு மணி நேரத்தில் கீழ் திருப்பதியில் பீமாஸ் ஓட்டலில் வயிறாற தாலி சாப்பாடு. பொருத்தமான பெயர் தான் ஓட்டலுக்கு..

மதியத்திற்கு மேல் அருமையான பத்மாவதித்தாயார் தரிசனம். அதற்கும் வரிசை... நல்ல கூட்டம்..தாயாரின் சன்னதி நெறுங்கும் முன் கணபதி சில 50,100 ரூபாய் நோட்டுக்களை கையில் தயாராக வைத்திருக்க அங்கங்கே நின்றிருந்த 'தாயார்கள்' நம்மை நன்றாக கவனித்து பிரசாதம், மாலைகள் வாங்கிக்கொடுத்தார்கள். எல்லா இடத்திலும் டப்பு இருந்தால் நல்ல மரியாதை என்பது வேதனை.

மாலை 6 மணி வாக்கில் பத்திரமாக சென்னை வந்து சேரந்தோம். அருமையான பயணம்..நல்ல தரிசனம்..சென்ற வருடம் பெரியவனுக்கு 3 மாதங்கள் திருப்பதி தேவஸ்தான ஆடிட் இருந்ததால் அவனுடைய உதவியால் எங்களுக்கு திருப்பதி செல்ல நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த வருட உபயம் நண்பன் கணபதி...

கலவச்சட்டி

2 நாட்களுக்கு முன் திருச்சியில் எங்கள் சுந்தர் நகர் வீட்டிற்கு போயிருந்தேன். முன்பு அம்மா அப்பா மாடி போர்ஷனில் குடியிருந்தார்கள். இருவரும் தற்போது இறந்துவிட்டதால் வீட்டை வாடகைக்குக்கொடுத்துவிட்டோம். 

சில மராமத்து வேலைகள் இருந்ததால் ஒரு மேஸ்திரி மற்றும் சித்தாள் வைத்து வேலைகளை காலை 9 மணிக்கு ஆரம்பித்தேன். சுமார் பதினொன்னரை மணியளவில் அவர்களுக்கு வடையும் டீயும் வாங்கிக்கொடுத்து விட்டு மெல்ல வீட்டைச்சுற்றிப்பார்த்தேன்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் அம்பாசடர் கார் நிறுத்த இடம் போறாததால் எங்கள் பகுதியிலிருந்து ஓரடியை தங்கள் நிலத்துடன் சேர்த்து வேலிக்கம்பி தடுப்பு சுவர் எடுத்ததை நான் 20 வருடங்களுக்கு முன் கண்டித்தபோது அப்பா "இருக்கட்டும்டா..பின்னால பாத்துக்கலாம்..அவங்க ஏமாத்தமாட்டாங்க"வென சொன்னார். இப்போதும் அந்த வேலிக்கம்பி சுவர் அப்படியே இருந்தது. ஆனால் அம்பாசடர் இருந்த இடத்தில் ஃபோர்டு ஃபிகா. தற்போது இரண்டடி இடம் மிச்சமாக அவர்கள் பக்கம்.

வருடமொரு முறை நாங்கள் லீவுக்கு வரும்போது முன்பு அம்மா ஒரு ஆளை வைத்து இளநீர், கொய்யா, சீதாப்பழம், மாங்காய் எல்லாம் எங்க வீட்டு மரங்களிலிருந்து பறித்து பேரன்களுக்கு கொடுப்பது நினைவுக்கு வந்தது. தற்போது தென்னைமரம் ஒன்றை காணோம். ஒருமுறை தங்கள் அம்பாசடர் கார் மேல் தென்னை ஓலை விழுந்ததால் மரத்தை பக்கத்து வீட்டுக்காரர்களே தரையோடு தரையாக வெட்டியிருந்தார்கள். அதற்கு முன் பதிவுத்தபாலில் இன்ன திகதிக்கு மரத்தை வெட்டப்போவதாக அறிவித்து எங்களுக்கு கடிதம் வேறு. மற்ற இரு தென்னைமரங்களை பூச்சியரித்து பாதி இளநீரைக்காணோம். மாங்காய் மற்றும் கொய்யா மரங்களும் பாதி மொட்டையாக இருந்தன. சீதா மரத்தையே காணோம். அம்மா இருந்தவரை 6 மாதங்களுக்கொருமுறை பூச்சிக்கொல்லி மருந்தடித்து உரம் போட்டு வளர்த்த மரங்கள் இன்று அம்மாவோடு போய்ச்சேர்ந்துவிட்டன.

"சார் பின்பக்க காம்பவுன்டு சுவத்த கொஞ்சம் கொத்திவுட்டு பூசனும். மேல ஏற ஏணி வேனும்" என மேஸ்திரி கேட்க வீட்டின் பக்கவாட்டு படிக்கட்டின் கீழே முன்பு அப்பா சாய்த்து வைத்திருந்த ஏணியைத்தேடினேன். அது முற்றிலும் உடைந்திருத்தது. "பரவால்ல சார்..கடைல எடுத்தரலாம்.. நாள் வாடக 50 ரூபா தானென மேஸ்திரி கடைக்கு ஓடினார். முன்பு மாதிரி சாப்பாட்டு தூக்கில் மதிய உணவெல்லாம் அவர்கள் கொண்டுவருவதில்லை. காசு வாங்கிக்கொண்டு ஹோட்டலுக்கு ஓடினார்.

வாசலில் மேல் போர்ஷனுக்குறிய எலெக்ட்ரிக் மீட்டரில் சிவப்புக்கலர் பெயின்ட்டில் கையால் எழுதிய 'சீதாபதி' பெயர் அப்படியே இருந்தது. எப்போதும்போல் மீட்டர் பெட்டியின் உள்ளேயிருந்து ஒரு பல்லி எட்டிப்பார்த்தது. அருகே முன்பு தொங்கிக்கொண்டிருந்த கொக்கி காணாமல் போயிருந்தது. அதில் மின்கட்டன பில்கள், வீட்டு வரி ரசீது, கேபிள் டீவி கார்டு அனைத்தையும் குத்தி மாட்டி வைத்திருப்போம். வாசல் கேட்டில் பால் பாக்கெட் மஞ்சப்பை மாட்டும் கொக்கியையும் காணோம்.

கேட்டுக்கு பக்கத்தில் தரையில் காவேரித்தண்ணீர் மீட்டர் பழுதடைந்திருந்தது. முன்பு அப்பா அந்த இடத்தில் சிறியதாக தொட்டி ஒன்றை கட்டி அதனுள் குழாய் வைத்திருப்பார். நல்ல தண்ணீர் வரும் அந்த இரண்டு மணி நேரம் குடத்தில் நீர் பிடித்து மேலே அண்டாவில் ரொப்புவது அவர் வேலை. தற்போது அதற்கு அவசியமில்லையாம். குடி தண்ணீருக்கு போன் செய்து விட்டால் பல்சர் பைக்கின் முன்புறம் வைத்து தண்ணீர் கேன் கொண்டுவந்து போட்டுவிடுவார்களாம்.

அந்த தொட்டி மூடப்பட்டு அங்கே தற்போது மோட்டர் பைக்.. முன்பு அப்பாவின் சைக்கிள் இருக்கும். நினைவுகள் மெல்ல பின் செல்ல...சைக்கிள் சீட்டின் அடியில் சொறுகப்பட்டிருக்கும் துணி, அந்த துணியை சக்கரங்களின் இடையே கொடுத்து ஸ்போக்ஸ் மற்றும் ரிம்மை சரட் சரட்டென்று அப்பா இழுத்து துடைப்பது, டைனமோவை அழுத்தி சக்கரத்தைச்சுற்றி முன்புறம் லைட் எறிகிறதாவென அவர் சரிபார்ப்பது, டைனமோ மோட்டார் டயரைத்தொட்டுக்கொண்டு சுற்றுவதால் டயர் தேயாமலிருக்க அதற்கும் ஒரு சிறிய ரப்பர் கவர், முன்புறம் டைனமோ லைட்டைச்சுற்றிக்கட்டப்பட்டிருக்கும் மஃப்ளர் மாதிரியான மஞ்சள் துணி (அர்விந்த் கேஜ்ரிவால்), சைக்கிள் செயின் கவர் இடுக்கில் உள்ள ஓட்டையில் எண்ணெய் விட ஒரு சிறிய ஆயில்கேன், பின் காரியரில் சுற்றப்பட்ட சைக்கிள் டியூப்(அரிசி மூட்டை, பழைய பேப்பர் கட்ட), "சார் பஞ்சர் இல்ல வால்டியூப் தான் போயிருருச்சு" போன்ற வசனங்கள்...

"சார் எக்ஸ்ட்ரா அரை மூட்ட சிமென்ட் வந்துருச்சு" என மறுபடியும் மேஸ்திரி கூப்பிட, சட்டென்று விழித்து வாசலுக்கு விரைந்தேன். மோட்டர் பொறுத்தப்பட்ட பெடல் வண்டியிலிருந்து சிமெண்ட் மூட்டை இறங்கியது. முன்பு மாட்டு வண்டியில் வந்திறங்கும். சிமென்ட் இறக்கி முடியும்வரை மாட்டின் மூக்கனாங்கயிறு சக்கரத்தில் கட்டப்பட்டிருக்கும்.

ஒருவழியாக மாலை 6 மணிக்கு வேலை முடிந்தது. வீட்டிற்கு வெளியே இருந்தபடியே குடித்தனக்காரர்களிடம் விடை பெற்றுக்கொண்டேன். வீட்டின் உள்ளே போயிருந்தால் நிச்சயம் கீழ் கண்டவை நினைவுக்கு வந்திருக்கும்:

1. அப்பாவின் பழைய மர்ஃபி ரேடியோ, அதன் பின்புறமிருந்து வயர் எடுத்து ஒரு கண்ணாடி கிளாசில் விடப்பட்டிருக்கும்(எர்த்திங்), ரேடியோவின் தலையில் இரண்டாக மடிக்கப்பட்ட துணி..
2. படுத்தவாறு நேஷனல் பானசானிக் டேப் ரெகார்டர்.கால்கள் போல 4 பட்டன்கள்.
3. TDK காஸெட்டுகள்.. பக்கத்தில் அரை பென்சில் (காஸெட் சுற்ற)
4. கேமலின் இங்க் பாட்டில்(blue black) மற்றும் இங்க் ஃபில்லர்.
5. இன்லாண்டு லெட்டர், போஸ்ட் கார்டு.
6. விராலிமலைக்கு பணம் அனுப்ப மணியார்டர் பாரம்.
7. அவசரத்திற்கு தந்தி பாரம்
8. கோபால் மற்றும் பயரியா பல்
பொடி.
9. ஃபோர்ஹான்ஸ் டூத் பேஸ்ட்
10. புலிமார்க் சீயக்காய் மற்றும் அறப்புத்தூள்
11. பொன் வண்டு சோப்பு.
12. மரச்சீப்பு (ஈறு, பேனெடுக்க)
(வேறு ஏதும் நினைவுக்கு வருகிறதா?)

என்னதான் பழமைவாதியாக இருந்தாலும் அப்பாவிற்கு புதிய வாட்சுகள், பெல்ட், பஹ்ரைனில் வாங்கிய சின்ன டிரான்சிஸ்டர், டி.வி.டி ப்ளேயர் (ரஜினி படம் பார்க்க) எல்லாம் பிடிக்கும்.

iPhone பிறப்பதற்கு முன் அப்பா இறந்துவிட்டார். இல்லையென்றால் இன்று காலை திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் பஸ் ஏறியவுடன் ஆரம்பித்து காரைக்குடி இறங்கும்வரை இந்தப்பதிவை iPhone இல் தட்டச்சு செய்வதை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பார்...

கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணய்யர் & சித்ரா கிருஷ்ணமூர்த்தி

ட்ராக் சூட் பாண்ட்..மேலே ஒரு டீ ஷர்ட்..அலட்சியமாக மடிக்காமல் விடப்பட்ட காலர்...உடலை கட்டுடன் வைத்திருப்பதில் மிகுந்த அக்கரை...தலைமுடி சீராக வாரி கண்ணாடியனிந்து, தொப்பையேதுமில்லாமல் பக்காவாக BMI மெயின்டெயின் செய்பவர், கார்பரேட் எக்ஸிக்யூடிவ்ஸ்டைலுடன் சரளமான ஆங்கிலம்.. நடுநடுவே நிறைய நகைச்சுவை..கலகலவென சிரிப்பு முகத்துடன் பேச்சு.. மற்றவர்களின் ப்ளஸ் பாயின்டுகளை தாராளமாக தயங்காமல் குறிப்பிட்டு புகழ்தல்.. அந்த ஒரு மணி நேரத்தில் இத்தனையும் கவனித்தேன் இவரிடம்.

'பெரியவா பாத்துப்பா' தொடரை தொடர்ந்து எழுதிக்கொண்டு காஞ்சி மகாப்பெரியவரின் மகிமையையும் புகழையும் பரப்பி தம் முகநூல் நண்பர்களுக்கு விருந்தளிப்பவர். ஶ்ரீமதி.ராஜலக்ஷ்மி விட்டல் மாமி அவர்களுடன் சேர்ந்து சண்டி ஹோமம், அம்பாள் திருக்கல்யாணம், அன்னை ஶ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்,கஜபூஜை போன்ற நிறைய ஆன.மிக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர். 'அழகிய மணவாளம்' தொடரை படு ஸ்வாரஸ்யமாக எழுதி பட்டையைக்கிளப்பியவர். 'டேய் மாதவா', 'கே.கே... சில குறிப்புகள்' என தன்னுடைய வித்தியாசமான ஸ்டைலில் நிறைய பதிவுகள் பதித்துக்கொண்டிருப்பவர்.

100 feet ரோடு வந்து அவர்களுக்கு போன் போட்டவுடன் கே.கே (Krishnamurthy Krishnaiyer) யும் அவரது மனைவி Chitra Krishnamurthyயும் போனில் மாறி மாறி வழி சொன்னார்கள்..'லெஃப்ட் எடுத்து கணபதி வந்து பஸ் ஸ்டாண்டைத்தாண்டி நேரா வந்து பி.எஸ்.என்.எல் கிட்ட ரைட் எடுத்து அந்த பேங்க் ஏ.டி.எம் தாண்டி உள்ள வந்து கடைசி லெஃப்ட் எடுத்து கொஞ்ச தூரம்..பாண்டியன் ஸ்டோர் இடது கைப்பக்கம் வந்தவுடன அங்க ரைட் எடுத்து நேரா வந்தா எங்க காம்பவுன்டு கேட் வரும்'....ஆஹா...வாசல் வரை வந்து என்ன ஒரு வரவேற்பு..

எங்கள் குடும்பத்தவர் அனைவரைப்பற்றியும் நான் சொல்ல சொல்ல பொறுமையாக கேட்டு தன் குடும்பத்தவர் பற்றியும் சொன்னார். கூட வந்திருந்த எனது மனைவி, மகன., என் சகோதரி, அவளது பெண் (பல் மருத்துவர்) என எல்லோரையும் அக்கரையுடன் விசாரித்தார். மற்ற முகநூல் நண்பர்களைப்பற்றியும் நிறைய பேசினோம். உட்லண்ட்ஸ் ஹோட்டல் முகநூல் நண்பர்கள் சந்திப்பை விட கோவை சந்திப்பு அருமை என நான் சொன்னால் கே.கே. சந்தோஷப்படுவார். ஆனால் சென்னை வழியாக நான் பத்திரமாக பஹ்ரைன் திரும்புவது சந்தேகம் தான்.

ஜிம்முக்கு போய்விட்டு படு ஹான்ட்ஸமாக வந்தார் இவர்களது கடைக்குட்டிப்பையன் நந்து. மெக்கெட்ரானிக்ஸ் படிக்கும் இன்ஜினியரிங் மாணவன்.. அப்பாவை கலாய்க்கிறார்..தயக்கமில்லாமல் எங்களுடன் கலந்துரையாடி போட்டோவெல்லாம் எடுத்தார் ஜூனியர் கே.கே.

சமையலறை அருகேயுள்ள பூஜையறை உள்ளே நிறைய ஸ்வாமி படங்கள், பெரியவா படங்கள், ஸ்ருங்கேரி ஸ்வாமிகள் படங்கள். அம்மாவிடம் நம்மை அறிமுகப்படுத்தினார் கே.கே. நான் அவருக்கு அளித்த காஞ்சி மகாமுனிவரின் படத்தையும் அம்மாவிடம் காட்டினார்.

விஸ்தாரமான வில்லா ..சுற்றிலும் மரம் செடிகொடிகள்..காலையில் வீட்டின் கேட் மேல் சிலசமயம் மயில் வந்து அமர்ந்து அகவுமாம்(முன்பு போட்டோ பார்த்திருக்கிறேன்) சின்ன குழந்தைகள் இல்லாத வீடு என பார்த்தவுடன் சொல்லும் அளவிற்கு பராமரிப்பு..ஏற்கனவே பெரிய ஹாலாக இருந்தாலும் அளவான மற்றும் தேவையான ஃபர்னிச்சர் மட்டுமே இருப்பதால் மிகவும் விசாலமான பட்டாசாலை..மற்றொரு அறையின் சுவற்றில் அவர்களது மருமகள் வரைந்த ஓவியம் மிக அருமை.
சிவதாண்டவமாடும் ஈசனின் ப்ரம்மாண்டமான ஓவியம் அந்த இல்லத்திற்கு கூடுதல் சிறப்பு... ஹாலின் ஒரு பகுதியில் மாடியிலிருந்து வளைந்து கீழே இறங்கும் படிகள். ஏகப்பட்ட பாசிடிவ் எனர்ஜி அங்கே உண்டு என்பது நிச்சயம்.

சித்ரா அவர்கள் எங்களை வாசல் வரை வந்து வரவேற்றதுமுதல் திரும்ப நாங்கள் கிளம்பும்போது கார் அருகே வந்து தன் கணவருடன் விடைகொடுக்கும் வரை அளவான பேச்சு.. ஆடம்பரம் மற்றும் ஆர்ப்பாட்டமில்லாத பணிவு..ஸ்வீட், மிக்சர், சமோசா, மசாலா தேநீர் என ஏக உபசரிப்பு எங்களுக்கு. ஏற்கனவே முன்பு Ananya Mahadevanனிடம் 'இன்னொரு டம்ளர் பாயசம் வேணுமா?' என பாசமாக கேட்டவர் என்பது எனக்குத்தெரியும்.
சித்ரா, என்னுடன் கூட வந்திருந்த என் சகோதரியின் ஜூனியராம் (Trichy SRC கல்லூரி). மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இவர்கள் இருவரும் ஜூனியர்ஸ் போன்ற உபரித்தகவல்களால் நாங்கள் கிளம்புவது இன்னும் அரை மணிநேரம் ஸ்வாரஸ்யமாக தள்ளிப்போனது.

கிளம்ப மனமேயில்லாமல் பேசிக்கொண்டிருந்தோம். எப்படியும் இரவு 12 மணிக்குள் திருச்சி போய்ச்சேரவேண்டுமென்பதால் அவர்களின் டின்னர் வேண்டுகோளை பணிவாக மறுத்து பாயசத்தை மிஸ் செய்தோம்.

குடும்பத்துடன் அவசியம் பஹ்ரைன் வந்து எங்ககளுடன் தங்கவேணுமாய் கேட்டுக்கொள்கிறேன் கே.கே.சார்..


கார்த்திகேயன் மீனாக்ஷி சுந்தர் (கோவை)

கோவை RS புரம் போஸ்ட் ஆபிஸ் எதிரே இவரை சந்தித்து பக்கத்திலுள்ள காஃபி டேயில் அமர்ந்து பேசலாமென முடிவு செய்தோம்.
அந்த ஒரு மணி நேரம் வழக்கம்போல குடும்பத்தினரை ஏதாவது மால் அல்லது புடவைக்கடையில் விட்டுவிடலாமென முடிவு செய்து, புடவைக்கடையில் விட்டுவிட்டால் நமக்கு நிறைய நேரம்()கிடைக்குமென்பதால் PSR சில்க்ஸ் வாசலில் இறக்கிவிட்டு RS புரம் வந்தேன்.

போஸ்ட் ஆபிஸ் எதிரே நின்றிருந்த என்னை தன் காரிலிருந்தபடி அவர் கைப்பேசியில் கூப்பிட அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் ஒரு காஃபி டேயில் செட்டிலானோம்.

இவர் எனக்கு எப்படி முகநூல் நண்பரானார்?ஆரம்பத்தில் ஃப்ரென்ட் ரிக்வெஸ்ட் அனுப்பும் முன்னேயே என்னுடைய பதிவுகளுக்கு நிறைய லைக் போட்டவர். பிறகு நண்பரானார்.

இவரது ஆங்கிலப்புலமை, ஆங்கில எழுத்தாற்றல் என்னை மலைக்க வைத்தது. பதிவுகளின் நடுவே பிரெஞ்சு வாக்கியங்கள் அடிக்கடி எடுத்து விட்டு நம்மை அசத்துவார். டென்னிஸ் மற்றும் கால்பந்தாட்ட ரசிகர். இவான் லென்டில், பாட் காஷ், ஆன்ட்ரெ அகஸ்ஸி, மெக்கென்ரோ, ஸ்லோபதான் சிவோயினோவிக் போன்ற டென்னிஸ் வீர்ர்களின் ஸ்டைல் மற்றும் ரெகார்டுகள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி.

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியை தினமும் தனது சுவற்றில் அலசினார். அவ்விளையாட்டின் நுனுக்கமான விபரங்களை எல்லோருடனும் பகிர்ந்துகொண்டார்.

தனது சொந்த கம்பெனி ஒன்றை நடத்துகிறார் அதன் CEOவான இவர். சில மருந்துப்பொருட்களை மற்ற கம்பெனி மூலம் தயாரித்து சுமார் 12 விற்பனையாளர்களை வைத்துக்கொண்டு விநியோகம் செய்கிறார். இந்தியாவின் பல பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்து தனது தொழில் விருத்தியடைய உழைக்கிறார்.

பீகார், கல்கத்தா என நிறைய வட மாநிலங்களுக்கு விஜயம் செய்வதால் அதைப்பற்றி அழகாகவும் எழுதுகிறார். சினிமா பற்றி ஏகப்பட்ட சமாசாரங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் பாரதிராஜா அவர்களைப்பற்றி அவரது பிறந்தநாளன்று ஒரு பதிவும் இட்டிருந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டருந்து விட்டு திருச்சிக்காரரான இவருடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். விடைபெறும் முன் ஒரு ஃபளாஷ் டிஸ்க்கை எனக்கு பரிசாக அளித்தார். கோவையில இருந்து திருச்சி திரும்பும்போது அவர் பரிசளித்த பென் ட்ரைவை காரில் ஓடவிட்டேன். ஆஹா...அந்த 3, 4 மணி நேரம்..என்ன ஒரு ஆடியோ வெரைட்டி....!
தண்டபாணி தேசிகரின் திருவாசகம்,
வேளுக்குடி கிருஷ்ணனின் 'விதூர நீதி' 25 பாகங்கள், சுகி சிவம்-பகவத்கீதை, நாராயணீயம், எம்.எல். வசந்தகுமாரியின் தாலாட்டுப்பாடல்கள், சிவனையும் அரங்கனையும் போற்றிப்பாடப்பட்ட எக்கச்சக்கமான பாடல்கள்...கிரிவலமகிமை, திருப்படையாட்சி, குலப்பத்து,அன்னாமலையார் அற்புதங்கள், திருச்சதகம் அனுபோகஸ்துதி....

எப்பிடி சார் எனக்கு ஃப்ரெண்டா கெடச்சீங்க Karthikeyan Meenakshi Sundar?