Friday, June 20, 2025

'காப்பி' in Guru's Coffee House..

 சிறுவயதில் காலை எழுந்தவுடன் கோபால்/பயோரியா பற்பொடியில் பல் தேய்த்த கையோடு காப்பி குடித்தாக வேண்டும் எங்கள் வீட்டில். 60, 70 களில் எங்கள் அம்மா அகன்ற பாத்திரத்தில் காப்பி பொடி, வெந்நீர் கலந்து தெளிய வைத்தெடுத்த டிகாக்‌ஷனில் கலந்து கொடுக்கும் காப்பி அமிர்தமாக இருக்கும், கொஞ்சம் கூடுதல் சர்க்கரையுடன்.

பிறகு கல்லூரி மற்றும் சீஏ பருவத்தில் காபி சமாச்சாரமெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் மேலோங்க ஸ்டைலாக டீ குடிக்கும் வழக்கம் ஆரம்பமானது. நந்தி கோயில் தெரு ஐயங்கார் பேக்கரி அல்லது பக்கத்தில் நேசே காபி பாரில் டீ குடிப்பது வழக்கம். நண்பர்களுடன் மடித்துக் கட்டிய லுங்கியுடன் திருச்சி மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் காலனியிலிருந்து காலார நடந்து TVS டோல்கேட் பகுதியில் ‘நேத்து ராத்திரி யம்மா!’ பாடல் ஒலிக்க டீ க்ளாஸை சுழற்றி சுழற்றி் குடிக்கும் சுகமே அலாதி.
பின்னாளில் பம்பாய் செம்பூரில் பிரம்மச்சரிய வாழ்க்கை துவங்கியதும் பில்டர் காபி குடிக்கும் ஆவல் அதிகரிக்க காரணம் சக ரூம் நண்பர்கள் தான். எல்லோருமே ஶ்ரீரங்கத்தான்கள். ஆனால் அப்போது பில்டர் வாங்கும் அளவிற்கு பெரிய சம்பாத்தியம் இல்லாததால் அண்ணாச்சி கடையில் வாங்கிய சின்ன அலுமினிய சொம்பை திருப்பிப்போட்டு ஆணியால் சிறு சிறு துளைகள் போட்டு அதை ஃபில்டராக்கி எவர்சில்வர் தம்ளர் மேல் வைத்து இறக்கிய டிகாஷன் காப்பி அற்புதம். ஆனால் நண்பர்கள் ரங்கு, Balasubramaniam Chandrasekaran (சந்துரு), Murali Soundararajan (முரளி), ஶ்ரீராம் எல்லோரும் ப்ரூ காபி குடிப்பவர்கள் என்பதால் நானும் ப்ரூவுக்கு மாறினேன்.
94இல் பஹ்ரைன் வந்ததும் லிப்டன் டிப் ச்சாய் அல்லது ஹஸ்முக்ராய் மசாலா சாய் குடிக்க ஆரம்பிக்க, ஃபில்டர் காப்பி ஹோட்டலில் மட்டுமே குடித்தோம். அதிலும் நிறைய சங்கடங்கள். ‘என்னங்க! பால் ஜாஸ்தியா இருக்கு, கொஞ்சம் டிகாக்‌ஷன் விடுங்க’ என சொல்லிய மறு நிமிடம் படக்கென டிகாகஷனை மேலே கொட்டி அந்த காப்பியை படு கசப்பாக்கிய சரவணபவனை அடுத்த சில வருடங்களில் மூடி விட்டார்கள். மனாமா விருந்தாவன் ஹோட்டலில் மினி டிபனுக்கப்புறம் அவர்கள் கொடுக்கும் காப்பி அருமையாக இருந்தது. கூர்க் காபியாம். ஆனா சூடு பத்தாது.
கடந்த பத்து வருடங்களாக வார இறுதிகளில் மட்டும் ரிலாக்ஸ்டாக வீட்டில் காப்பி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி, சிலசமயம் வாரத்துக்கு இரண்டு நாட்களும் காபி குடிக்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். உம்மல்ஹாசம் பகுதி அல்-ஆதில் சூப்பர் மார்க்கெட் பையன் நான் கடையில் நுழையும்போதே ‘நரசுஸ் காபி பௌடர் கதம் ஹோகயா’ என சொல்வான்.
உயர்தர ஃபில்டர் காப்பி எப்படி செய்வது என நிறைய படித்திருந்தாலும், என்னைப்பொருத்த வரை சற்று கூடுதல் சிரத்தையுடன் செய்தால் அருமையான ஃபில்டர் காப்பி கிடைக்கும் என்பது என் மேலான கருத்து.
புத்தகங்களில் போட்டிருப்பது போல் இரண்டு மூன்று ஸ்பூன் காபி பொடியை போட்டு, கட்டை விரலால் மேலே அமுக்கி, அதற்கும் மேல் ஜல்லி கரண்டி போன்ற ஏதோ ஒன்றை வைத்து அழுத்தி வெந்நீர் ஊற்றினால் டிகாக்‌ஷன் திக்காக வரும் என்பதெல்லாம் கறிக்கு உதவாது. பத்து நிமிடம் கழித்து பார்த்தால் ஒரு சொட்டு கூட கீழே இறங்கவில்லையென்றால் எங்கிருந்து வரும் கள்ளிச்சொட்டு!
யாரோ சொல்லி ஃபில்டர் மண்டையை அதன் மூடியால் நங்..நங் என தட்டினால் ஒரே நிமிடத்தில் இறங்கியது. ஆனால் அரபிக் காபி போல அடிமண்டியுடன் கிடைத்தது. சொன்னவர்கள் பெயரை இங்கு குறிப்பிட்டு முகநூலில் அன்ஃப்ரெண்டாகி விட எனக்கு விருப்பமில்லை.
பில்டர் போடும் முன் அதை காஸ் அடுப்பு சூட்டில் காண்பித்தால் துளைகள் பெரிதாகி நல்ல காப்பி கிடைக்கும் என்று சொன்னவரை இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்காத வரை அவருக்கு நல்லது.
நண்பர் கணேஷின் மனைவி ரமா அவர்களது ஐடியாவிற்கு நன்றி. கொஞ்சம் கொறகொற வென இருந்த காப்பி பொடியை மிக்ஸியில் போட்டு ஒரே அடி (கவனிக்க! ஒரே அடி தான். அதற்கு மேல் அடித்தால் மைதா போல் பொடியாகி விட சாத்தியங்கள் அதிகம்). நல்ல டிகாக்‌ஷன் கிடைத்தது. ஆனால் என்ன வில்லங்கமென்றால், அடுத்த முறை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் ‘ஏம்ப்பா காப்பி பொடி கொஞ்சம் கொறகொறன்னு கிடைக்குமா?’ என கேட்ட என்னை எதோ விஷ ஜந்துவைப்போல் பார்த்தான் மலையாளி சேட்டன்.
லெவிஸ்டா, கல்மனே போன்ற பெரிய பிராண்டுகளை தேடிப்போவோர் வெகு சீக்கிரம் உதயம் நரசூஸ்க்கு திரும்பி வருவது உத்தமம். அருமையான ஃபில்டர் காப்பி கிடைக்க முக்கியமான ஒன்று நமக்கு அருமையான ஃபில்டர் காபி போட தெரிந்திருக்க வேண்டும். கொஞ்சம் மய்யமாக யோசிப்பது போல இருக்கிறதல்லவா!
ஆம். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் உதயம் நரசுஸ் காப்பி பொடியை ஃபில்டரில் போட்டு ரொம்ப கொதிக்கும் நிலைக்கு வருமுன் இறக்கிய வெந்நீரை ஊற்றி ஒரு ஐந்தாறு நிமிடம் பொறுமையாக இருத்தல் அவசியம். கீழே இறங்கிய டிகாக்‌ஷனை எடுத்து மறுபடியும் உள்ளே கொட்டுவது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தாலும் தக்க பலன் கிட்டும். டிகாக்‌ஷன் இறங்கிக் கொண்டிருக்கும்போதே சிம் அடுப்பில் தயாராக பால் கொதித்தல் அவசியம். மறக்காமல் கொதிக்கும் பாலில் உள்ள ஆடையை தயவு தாட்சண்யம் இல்லாமல் ஸ்பூனால் எடுத்து சிங்க்கில் கொட்டுதல் உசிதம். காப்பி குடிக்கும் போது நடுவே பாலாடை நம் நாக்கில் தட்டுப்பட்டால் நீங்கள் ஃபெயில். அரியர்ஸ் அனுமதி கூட கிடையாது. பெங்களூரில் எல்லா சாகர் ஓட்டல்களிலும் அந்த மங்களூர் பையன்கள் கொதிக்கும் பாலிலிருந்து பாலாடையை வடிகட்டி, பிடி கெட்டில் பாத்திரத்தால் மொண்டு மொண்டு அதன் மேலேயே ஊற்றி, காப்பி மேல் நுரையை தூக்கி வைப்பான்கள்.
டிகாக்‌ஷனை தம்ளரில் கொட்டி கொதிக்கும் பாலை மொண்டு ஒரே டேக்கில் கொட்டி சரியான ‘போலீஸ் காக்கி’ நிறத்தில் காப்பியின் தன்மையை கொண்டு வருபவர்கள் உண்மையிலேயே மகான்கள். கொஞ்சம் கூடுதல் டிகாக்‌ஷன் விட்டாலும் அது ‘மிலிட்டரி காக்கி’யாகி விடக்கூடிய அபாயமுண்டு.
சில வீடுகளில் கொடுக்கப்படும் காப்பியை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி விடலாம் அது ‘காலையில போட்ட டிகாக்‌ஷன்’ அல்லது புதிய பால் அல்ல என. சில பெண்கள், நாம் கேட்காமலேயே கிச்சனிலிருந்து வரும்போதே நமக்காக காப்பியை டபராவில் ஆற்றிக்கொண்டே வரும்போது ‘நான் கேட்டேனா!’ என கதறத்தோன்றும். சூடு இல்லாத காபி கொடுக்கும் பெண்களை ஜகம் மன்னிக்காது.
பெஸ்ட் காப்பி என நான் கருதுவது என் சகோதரி Hemalatha Manohar, நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar வீட்டில் அவரது மனைவி Kalpana Sankar மற்றும் பஹ்ரைனில் ரமா கணேஷ், Sudha Hariharan, Hema Kasinath போன்றவர்கள் வீடுகளில் போடும் காபி தான். (கொலை மிரட்டல்கள் வரத்துவங்குவதால் இந்த பட்டியல் மேலும் நீளும்)
விஷயத்திற்கு வருகிறேன். இரண்டு நாள் முன்பு ஆதம்பாக்கத்தில் நண்பர் Gurumoorthy Subramanian அவர்கள் துவங்கியிருக்கும் 'குரூஸ் காபி ஹவுசு'க்கு என் மூத்த சகோதரர் Suresh Babu வுடன் விஜயம் செய்தேன். காபி கோப்பையில் ‘க்ளக்’ என டிகாக்‌ஷன் விட்டு ஒரேமுறை பாலை விட்டு முக்கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அவர் கலந்த காப்பி திவ்யமாக இருந்தது, என்னை நேராக சொர்க்கத்திற்கே கொண்டு சென்றது. மனுஷன் கில்லாடி. காபி,டீ, சமோசா, பிஸ்கெட், கோலி சோடா, ரோஸ்மில்க் என வியாபாரம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அவரது உழைப்பும் அபரிதமாக தெரிகிறது. வாழ்த்துக்கள் குரு!
காபியை குடித்த கையோடு பலேனோவை ஸ்டார்ட் செய்து அடுத்த முக்கா மணி நேரத்தில் பெங்களூர் நெடுஞ்சாலையை பிடித்து ஓட்டும்போதும் காபியின் சுவை நாவில் இருந்தது. குரு ‘ஆத்தா நா பாஸ் ஆயிட்டேன்!’ என கத்தலாம். சிறிய முதலீட்டில் நீங்கள் துவக்கிய இந்த வியாபாரம் வளர்ந்து வாழ்க்கையில் மேலும் உங்களை உயர்த்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

டாகடர் மாலா

 குவெய்த் அவென்யூவிலிருந்து உம்மல்ஹாசம் பகுதி நுழைந்தவுடன் இரண்டாவது குறுக்கு ரோட்டில் திரும்பினால் இவர் வசிக்கும் பில்டிங். மிகப்பெரிய ஹாலின் ஒரு பக்கம் விளக்கேற்றி வைத்து பாபா படம். வாப்பா ஶ்ரீதர்! என வரவேற்பார்.

‘ஶ்ரீதர்! அது செஸ்ட் பெயின் கெடையாது.. அசிடிட்டி தான். படுக்கறதுக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடி சாப்ட்டுடு..2 தலகாணி வச்சு சரிவா படு.. ரிஃப்ளெக்ஸ் வராது..
‘மோகன்! காலைல வெறும் வயத்துல நெக்ஸியம் போட்டுக்கோங்க.. சரியாயிடும். ரெண்டு நாள்ல நிறுத்தாமெ பத்து நாளைக்கி மாத்திரை சாப்பிடுங்க’
‘எதுக்கும் தைராய்டு செக் பண்ணிடு இவளே! காய்ட்டர் இருக்கான்னும் பாத்துடலாம். கழுத்து லேசா வீங்கியிருக்கே! எல்ட்ராக்ஸின் எவ்ளோ எடுத்துக்கறே?’
‘நீ பாபாவை வேண்டிக்கோ.. எல்லாம் சரியாயிடும்’
நேரில் பார்க்கும்போதோ போனிலோ மேற்சொன்ன அட்வைஸ் கொடுக்கும் இவரிடம் பேசினாலே பயம் போய் வலியும் பறந்து போகும்.
‘ப்ளட் டெஸ்ட் மத்த டெஸ்ட் எல்லாம் செஞ்சிடலாம்.. நீ நாளைக்கி ஆஸ்பிடல் வந்துடேன்’ என இவர் சொன்னதும் மறுநாள் 20 கிமீ தொலைவில் ஹமாத் டவுன் அல்லது மால்கியா ஹெல்த் சென்டருக்கு நானும் Mohan Gopal Krishnan னும் காரில் விரைவோம். கூட்டம் அம்மும். உள்ளூர்க்கார பஹ்ரைனிகள். மோகன் பெயரை கூப்பிட்டவுடன் நாங்கள் உள்ளே நுழைந்தால் பேஷன்ட்டிடம் சரளமான அரபியில் பேசிக்கொண்டிருப்பார். சட்டென ஈசிஜி, கார்டியக் என்சைம் என டெஸ்ட்கள் செய்து, எல்லாமே நார்மலா இருக்குப்பா என இவர் சொல்லி பான்ட்டாப்ரசால் மாத்திரையோடு வெளியே வரும்போது ‘அப்பாடா’ என இருக்கும். அந்த அளவிற்கு இவரிடம்
பாசிடிவ் எனர்ஜி..அங்கேயே காண்டினில் சாய் குடித்துவிட்டு நிம்மதியாக கிளம்புவோம்.
அவ்வப்போது எங்கள் கெட்டுகெதரில் ‘வா வாத்யாரே ஊட்டான்டே’ பாடலை கணீர் குரலில் பாடுவார். ‘திருமால் பெருமைக்கு நிகரேது’ பாடல் வரிக்கு வரி மனப்பாடம். கல்யாண வீட்டில் மெஹந்தி, சங்கீத் என காக்ரா உடையில் முன்னாடி நிற்பார்.
மாதந்தோறும் எங்கள் வீட்டில் நடக்கும் கிரியா பாபா சத்சங்கத்தில் இவர் கலந்துகொண்டாலே சத்சங் களை கட்டும்.
இவர் விமரிசையாக நடத்தும் பூஜைகளுக்கு தயக்கமேதுமின்றி பிரசாதம் ஸ்பான்சர் செய்வது சங்கீதா ரெஸ்டுரன்ட் பாபு.
30 வருடங்களுக்கு மேல் பஹ்ரைனில் வசிக்கிறார். தீவிர மஹா அவதார் பாபா பக்தை. 94இல் நான் பஹ்ரைன் வந்தறங்கியதும் இவரிடம் என்னை அறிமுகப்படுத்தியது.. வேற யாரு! நம்ம Ganapathi Subramanian தான்.
எனக்கும் கணபதிக்கும் உடன் பிறவா சகோதரி... Mala Muralitharan!

கணபதி சுந்தரம்

 படுத்துக்கொண்டே தேர்தலில் ஜெயித்தவர்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் படுத்துக்கொண்டே படித்து சிஏ பரிட்சையில் பாஸ் செய்தவர் இவர் மட்டுமே இருக்க முடியும். இவர் Ganapathi Avsr


இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது? வேற யாரு! நம்ம Ganapathi Subramanian தான். இருவரும் திருச்சியில் ஒரே ஆபிஸில் சிஏ ஆர்டிகிள்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் பெயர் கணபதி. இவர் செட்டியார் சமூகத்தைச்சேர்ந்தவர். பக்கா திமுக கட்சிக்காரர். கடவுள் நம்பிக்கை? கடவுளா? கடவுள்னு ஒருத்தர் இருந்தாத்தானே கடவுள் நம்பிக்கையே என்பார். நம்ப கணபதி எப்பவும் நெற்றி, கையெல்லாம் விபூதி மணக்க, ‘மணிகண்டா மணிகண்டா! மாமலை வாசா மணிகண்டா’ என முனுமுனுத்தபடி உலவும் பக்கா ‘அய்யிரு’. Poles apart என சொல்லும்படியாக இருவருக்கும் அரசியல், ஆன்மிகம் என எதிலும் கருத்தொற்றுமை இல்லாவிடினும் மிக நெருங்கிய நண்பர்கள். பாதி நேரம் ஆபிஸில் அரசியல் & ஆன்மிகம் தொடர்பாக பெருத்த ஆர்கியூமென்ட்களுக்கு நடுவே நந்தி கோயில் தெரு ரமணாசில் டீ குடிப்பவர்கள். 

முசிறி கல்லூரியில் பி.காம் முடித்து செவனேன்னு பாங்க் வேலைக்கு பரிட்சை எழுத நினைத்த இவரை சட்டென கல்யாணம் பண்ணி வைத்து ஜெயங்கொண்டத்தில் அப்பா நடத்தும் நகைக்கடையை பார்த்துக்க சொன்னால் புள்ள என்ன செய்யும் பாவம்! நகைக்கடை-வீடு-நகைக்கடை-வீடு என இரண்டு இடத்திலும் உரசி சேதாரமில்லாமல் அடுத்த வருடம் ஒரு குட்டி உதயசூரியன்.. 22..23 வயதில். 

இவரது அப்பா கவிஞர் சுபா திமுக அரசியல் பிரமுகர். பஞ்சாயத்து யூனியன் தலைவர். கலைஞருக்கு நெருக்கமானவர். இவரோ ஆ. ராசா மற்றும் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். இவரது தம்பியும் வட்ட/மாவட்ட செயலாளர் என அரசியல் வாழ்க்கை. குளித்துவிட்டு தலை துவட்டுவது கூட கரைதுண்டில் தான். அய்யரில்லாத இவரது கல்யாணம் அரசியல் மாநாடு மாதிரி தான் நடந்தது அன்பழகன் முன்னிலையில். ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் என அப்பாவுடன் அரசியல் கூட்டங்களுக்கு போவதிலும் நகைக்கடை தொழிலிலும் அதிக ஆர்வம் இல்லாமல், ஆடிட்டராக விரும்பி சி.ஏ படிக்கும் முடிவுடன், மனைவியையும் குழந்தையையும் தன் அப்பா அம்மாவிடம் விட்டு விட்டு, திருச்சி கிளம்பி வந்தவர். மாதமொரு முறை ஜெயங்கொண்டம் விஜயமுண்டு. 

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக திருச்சி மன்னார்புரம் பேர்ட்ஸ் லாட்ஜில் இவர் 80களில் தங்கியிருந்தார். லாட்ஜ் என் வீட்டிற்கு மிக சமீபம் என்பதால் இவருடைய அறையில் இவருடன் கம்பைன்ட் ஸ்டடீஸ் செய்துகொண்டிருந்தேன். நிற்க! என்னுடன் கம்பைண்ட் ஸ்டடீஸ் செய்து சி.ஏ பாஸ் செய்தவர்கள் அப்போ ஏகத்தும் இருந்தார்கள். சிவப்பு/வெள்ளை வர்ண சோனி காஸட் ப்ளேயர் அப்போது பிரபலம். படிப்பு ஒரு பக்கம். ‘பனி விழும் மலர்வனம்’ பாடல் ஒரு பக்கம். லாட்ஜில் எதிரே வரும் பேச்சிலர் விடும் ஏப்பத்தில் மெஸ் புரோட்டா குருமா வாசனை. மன்னார்புரம் நால்ரோட்டில் சமோசா பஜ்ஜி டீ. ‘நைட்டு சனந்தேரி கசம் ஹிந்திப்படம் போலாமா?’ என சுகமாக போய்க்கொண்டிருந்த நாட்கள். ஹிந்தி எதிர்ப்பாவது.. மண்ணாங்கட்டியாவது. 

கணித வாசனையே இல்லாமல் சி.ஏ படிக்க வந்த கணபதிக்கு பெரிய சேலஞ்சே சி.ஏயில் கடினமான கணிதப்பாடம் ஒன்று இருந்தது தான். பிஎஸ்ஸி கணிதம் படித்து வந்தவர்கள் கூட சி.ஏ கணிதத்தில் 40க்கும் குறைவான மார்க்குகள் வாங்கி ஃபெயிலாகி மலைவாசல் அருகே பேஸ்தடித்த முகத்துடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள். செஞ்சோசப்ஸ் குப்புசாமியிடம் கணிதம்
டியூஷன் சேர்ந்து அடுத்த சில மாதங்களில் ‘ஏஸ்கொயர் ப்ளஸ் பீஸ்கொயர் இசீக்வல்டு’ என கணிதத்தை பிச்சி உதற ஆரம்பித்தார். படிப்பில் மனுஷன் புலி தான். 

படுத்துக்கொண்டே படிப்பார் என பகுதியின் ஆரம்பத்தில் சொன்னேனல்லவா! அக்கவுண்டன்சி மற்றும் கணித நோட்ஸ்களை மார்பில்
போட்டுக்கொண்டு தலைக்கு 2 தலகாணி முட்டு கொடுத்து, தரையில் பாய் விரித்து படுத்துக்கொண்டு ராஜேஷ்குமார் நாவலை படிப்பது போல கணித பாடத்தையும் அக்கவுண்டசியையும் கண்களை மேயவிட்டே படிப்பது கண்டு நாங்கள் வியந்தோம். தவிர ரேடியோ செய்தி, பத்திரிக்கைகள் வாசிப்பு, உலக நடப்பு, அரசியல் போக்குவரத்து என எல்லாமே விரல் நுனியில். சி.ஏ ரிசல்ட் வந்து எக்கச்சக மார்க்குகளுடன் பாஸ் செய்து ஜெயங்கொண்டத்தில் தன் நகைக்கடைக்கு மேலேயே ‘கணபதி சுந்தரம், B.Com, ACA, Chartered Accountants’ என போர்டு போட்டு ஒரு வழியாக தன் ஆடிட் ப்ராக்டிஸை வெற்றிகரமாக ஆரம்பித்தார். பணபலம், சொத்து, வியாபாரம், அரசியல் செல்வாக்கு என சகலமும் இருந்தும் தலைக்கணமில்லாது அடக்கமாக இருப்பது இவரது சிறப்பு.

தன்னம்பிக்கையும் அயராத உழைப்பும் வெற்றி மீது கவனமும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்பதை இவரை பார்த்து தெரிந்துகொள்ளலாம். அவ்வப்போது ஊரிலிருந்து போனில் தொடர்பு கொள்வார். 

கோட்டோவியத்துடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணபதி சுந்தரம்!

பி.கு: ‘இப்ப இவரோட ஆடிட் பிராக்டிஸ் எப்பிடி போகுது என கேட்பவர்களுக்கு.. ஆடிட்டராக விசிட்டிங் கார்டுடன் ஆடி ஓடி அல்லாடி சம்பாரிப்பதை மூட்டை கட்டிவிட்டு, வாடிக்கையாளர்கள் நம்பிக்கைக்காக உழைத்து குடும்ப தொழிலில் கவனம் செலுத்தி சகோதரர்களுடன் மூன்றோ நான்கோ நகைக்கடைகள் திறந்து விட்டார். மாடியில் இருந்த இவரது ஆடிட்டர் ஆபிஸ் இப்போ வெள்ளி பாத்திரங்கள் பகுதி... 

மலபார் உணவகம்

 ஒரு வெள்ளிக்கிழமை..

கடந்த வாரங்களில் ஒரு வெள்ளியன்று மதியம் பஹ்ரைன் உமல்ஹாசம் பகுதி கிம்ஸ் ஆசுபத்திரி பக்கம் போயிருந்தோம். முன்பெல்லாம் ஆஸ்பத்திரி எதிரே ரோடு வெறிச்சோடி இருக்கும். ஓரிரண்டு மலையாளி டாக்சிக்காரர்கள் மட்டும்.
காதில் அரிப்பு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், முதுகுப்பிடிப்பு போன்ற சின்ன உபாதைகளுக்கான சிகிச்சைக்கு சிறந்த இடம். 5 தினார் பணம் கட்டி நம் அடையாள அட்டை காண்பித்த 5 நிமிடத்தில் மாடிக்கு அனுப்புவார்கள். அங்கே மலையாளி சேச்சி உங்கள் எடை, உயரம்( உயரம் எதற்கு!), டெம்பரேச்சர், இரத்த அழுத்தம் எல்லாம் பார்த்து ‘அவ்டே இருக்கி’ என நாற்காலியை காட்ட, அடுத்த பத்தே நிமிடத்தில் டாக்டரை பார்க்கலாம். கீழே நம் அடையாள அட்டை எண்ணை கணினியில் அவள் தட்டி விட்டதும் நமது குண்டலினி எல்லாவற்றையும் மேலே டாக்டர் தன் கணினியில் பார்த்துவிடுவார். ‘நாட்ல எவ்டே?’ தான் அவரது முதல் கேள்வி. அப்புறம் தான் என்ன ரோகம் என விஜாரிப்பார். பரிவுடன் பேசி நோய் ஏன் வந்தது, எப்படி சிகிச்சை அளிக்கலாமென சுருக்கமாக பேசி ‘பின்னே காணாம்’ என முடித்து சரியான மருந்து கொடுத்து அனுப்பி வைப்பார். நிவாரணம் நூறு சதம் கியாரண்டி. தேவையில்லலாத டெஸ்டுகள் செய்து பணம் பிடுங்க மாட்டார்கள்.
தற்போது பக்கத்தில் பார்மசி, கண்ணாடி கடை எதிரே புதிய ஹோட்டல் பரணி என அந்த இடமே களை கட்டியிருக்கிறது. பொதுவாக கேரள விஜிடேரியன் தாலி எங்களுக்கு பிடிக்கும். மோட்டாவா பாரிக்கா (அரிசி) என நம்மை கேட்டு தாலி கொண்டு வந்து வைப்பார்கள். பொலபொலவென முத்துக்கள் போல கேரள கொட்டை அரிசி, தாராளமாக தேங்காய் துருவிபோட்ட முட்டைகோசு பொறியல், சிறிதுள்ளி+கொடும்புளி தூக்கலுடன் சாம்பார், வாடாமல்லி கலரில் அவன் வைக்கும் சட்னி போன்ற வஸ்துவை விரல் தொட்டு நக்கிப் பார்த்தால் கசப்புடன் கூடிய அருமையான ருசி, பாகற்காயை அரைத்துவிட்ட சட்னி அது. முழுவதும் தோல் சீவாத பாதி நிர்வாணமாய் வாழைக்காய் மற்றும் மோதிரவிரல் சைஸில் சேனை துண்டங்களுடன் அவியல் அமிர்தம். புழுங்கல் அரிசி மற்றும் பஞ்சசாரத்தில் (வெல்லம்) செய்த அரவண பாயசம் ஒரு மடக்கு விழுங்கியபின் சாவகாசமாக முந்திரி மற்றும் தேங்காய் பற்களை மென்று தின்னும் சுகம் மறுமையில் வைகுண்ட ப்ராப்தி கிடைத்த மாதிரி.
திவ்யமான சாப்பாடு. இதையெல்லாம் மனதில் கொண்டு அந்த புதிய ஹோட்டலில் நுழைந்தால் ‘சாரே! சோறு கழுஞ்ஞு.. மணி ரெண்டற..’ என்றான் படுபாவி.
ஏமாற்றத்துடன் வெளியே வந்து எதிரே பான்ஏசியா ஹோட்டலில் நுழைந்தோம். இந்த ஹோட்டலை யாரோ ஒரு வட இந்தியன் தானே நடத்தி வந்தது! உணவு ருசியாக இருந்தாலும் கூட்டம் எப்பவும் இருக்காது. காரணம் நம் ஆர்டர் கொடுத்தபின் தான் சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பிப்பார்கள். வீட்டில் சண்டை போட்டு பிறகு மனைவியை சமாதானப்படுத்த முனையும் கணவர்களுக்கு இந்த ஹோட்டல் சரியான இடம். நிறைய பேசி தீர்த்துக்கலாம். பொது இடம் என்பதால் கணவர்களுக்கும் பாதுகாப்பு உத்திரவாதம். நாங்களும் அதுமாதிரி அவ்வப்போது வருவோம்😄. ஆனால் தற்போது யாரோ ஒரு மலையாளி அந்த ஓட்டலை எடுத்து புதுப்பித்து அதை மிலிட்டரி ஹோட்டலாக்கி விட்டார். மரக்கறி உணவும் உண்டு.
மதியம் இரண்டரை மணிக்கு கூட்டம் அம்மியது. ரிசப்ஷனிலேயே அரை மணி நேரம் காத்துக்கிடந்து இரண்டு பேருக்கான சீட் கிடைக்க உள்ளே நுழைந்தோம். எல்லாம் மாடர்ன் யுவதிகள். ஸ்ட்ரெய்ட் ஹேர், ஹேர் கலரிங் செய்து தலையை அங்கங்கே பிரவுன் கலராக்கி, உதட்டு சாயம், டீஷர்ட், லெக்கின்ஸ், உச்சந்தலையில் சொருகியிருக்கும் குளிர் கண்ணாடி என வட இந்திய பெண்கள் போல இருக்கே! ஆனா பக்கத்தில் பட்டை மீசை, சிவந்த கண்கள், தடித்த சுண்டுகளுடன் (உதடுகள்) மலையாளி கணவர்கள். ‘ஏ மோனே! நீ இப்பொ தாழ வீழும்! இவ்டே வா!’ என அந்த பெண்களில் ஒருவர் தன் குழந்தையிடம் க்றீச்சென கத்தி விளித்தபோது தான் தெரிந்தது கரீனா கபூர் போல மாடர்னாக இருந்த அவரும் மலையாளி என.
30 நிமிட பயணத்தில் சவுதியிலிருந்து பெரிய 4 வீல் ட்ரைவ்வில் பஹ்ரைன் வந்து, ஊணு கழிச்சி, மாலில் ஷாப்பிங் செய்து, மாலை சினிப்ளெக்ஸில் நவீன் பௌலி படம் பார்த்துவிட்டு இரவு சவுதி திரும்புபவர்கள்.
முன்பெல்லாம் பொதுவாக மலையாளி பெண்களென்றாலே நாம் காண்பது ஶ்ரீவித்யா போல தாட்டியாக, நான்கடி அடர்ந்த சுருள் கேசத்தை வெளிச்செண்ணெயில் பராமரித்து, சீர் செய்யப்படாத திக்கான புருவங்கள், உதட்டுக்கு மேல் அங்கங்கே மின்னும் மெல்லிய ரோமங்கள். சீமா சசி , ஷீலா, சாரதா போன்ற நடிகைகளை நினைவூட்டுவார்கள். இப்ப எல்லாம் மாறி விட்டது. மலையாள வாடை இல்லாத ஆங்கிலம்.
அவர்கள் எதிரே சட்டிச்சோறு எனப்படும் புதிய மெனுவாம். சாதாரண பீங்கான் தட்டில் வைக்கப்படும் அசைவ உணவை மண் சட்டியில் கொட்டி, பறப்பன ஊர்வன நடப்பன மிதப்பன என முழு நேஷனல் ஜியாக்ரஃபியே அந்த மண் சட்டியில் இருக்க அத்தனை மலையாளி அன்பர்களும் உணவை கபளீகரம் செய்து பல் குத்திக்கொண்டு டெசர்ட்டுக்காக காத்திருந்தார்கள்.
ஹோட்டலுக்கு வெளியே தனியாக ஒரு பெரிய கண்ணாடி அறை. பழரசம், ஃபில்லே, பர்கர் என வகை வகையான துரித உணவுகள். கடைக்கு வெளியே பையன் ஒருவன் நின்று கொண்டு ஜன்னல் வழியாக பதார்த்தங்களை எடுத்து வெளியே நிற்கும் கஸ்டமர்களுக்கு சேவை. அங்கேயும் செம கூட்டம். ஆண்களும் பெண்களும் ஊதி ஊதி ச்சாய் மற்றும் பக்ஷணங்களை மொஸ்க்கிக்கொண்டிருந்தார்கள்.
மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தோம் பரிப்பு வடை (பருப்பு), பழம்பொரி (நேந்திரம்பழ பஜ்ஜி), பத்திரி(அரிசி), உன்னியப்பம், சுகியன்(சுய்யம்), புட்டு, பேரீச்சம்பழ கேக்.. அந்த பக்கம் பெரிய பாய்லரில் சமோவர் டீ. அப்படியே வெளியே நின்றுகொண்டே டீ வாங்கி குடித்தோம். பாய்லர் டீ சுவையே தனி. ஹோட்டலுக்கு உள்ளே 100 பேரும் ஹோட்டலுக்கு வெளியே பலகாரம் கழிக்க மட்டும் பதினைந்து இருபது பேர். அந்த பக்கம் காரில் இருந்தபடியே பாம் பாம் என ஹார்ன் அடித்து கடக் ச்சாய் ஆர்டர் செய்யும் உள்ளூர் பஹ்ரைனிகள்.
பொதுவாக பொருளாதார மந்த நிலையில் (recession) பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவை நுகர்வு (consumption) குறைவாக இருக்கும் என்று எவன் சொன்னான்! கார்கள் நிறுத்தக்கூட அங்கே இடமில்லை.
மெல்ல தலையை நிமிர்ந்தி மேலே பார்த்தேன். உணவகத்தின் பெயர்ப்பலகையில் உணவு வகைகளின் பட்டியல் வண்ண விளக்குகளில்..
இவர்களது வெற்றியின் ரகசியம் இது தான்! 👇🏿
Malabar
Indian
Chinese
Arabic
மலபார் உணவு இந்திய உணவை விட வித்தியாசமானதாம்! எப்படியோ.. அந்த பாய்லர் டீ மற்றும் பக்ஷ்ணங்களுக்காக அங்கே படையெடுக்கும் வாடிக்கையாளர்களில் நானும் ஒருவன்..
(சீதாபதி ஶ்ரீதர்)

Friday, January 5, 2024

பெங்களூரு பெண்ணெ தோசேயும் திருச்சி நெய் ரோஸ்ட்டும்….

 

மனிதன் வாழ அத்தியாவசியமானவைகளில் முதன்மையானது உணவு. அதிலும் வாய்க்கு ருசியான உணவாக இருந்து, ருசி கேட்கும் நாக்கு உள்ளவர்களாக நாம் இருந்தோமென்றால் சொல்லவே வேண்டாம், ஒரு ஃபுல் கட்டு கட்டி விடுவோம்.
30 வருடங்களாக இந்தியா வரும்போதெல்லாம் பெங்களூர் விஜயத்தின்போது சில உணவகங்களில் சாப்பிட்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக பெங்களூரில் நிறைய, விதவிதமான உணவு பண்டங்களை ருசிக்க முடிகிறது.
பெங்களூர்வாசிகள் (மன்னிக்கவும்) கொஞ்சம் திண்ணி பண்டாரங்கள். காலையிலிருந்து இரவு வரை ரோடுகளில் எங்கு பார்த்தாலும் ஜனங்கள் நின்றவன்னம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கொறிப்பதற்கு எல்லா பேக்கரிகளிலும் கூட்டம். எங்கும் வட இந்தியர்களின் பானி பூரி மற்றும் வடகிழக்கு அழகுப்பெண்களின் மொமோஸ் மயம். எல்லா ஹோட்டல்களிலும் சொய்ங்.. சொய்ங் என தோசை சத்தம். லஸ்ஸி கார்னர், சமோசா, பாவ்பாஜி ஸ்டால், கணேஷ் ஜூஸ் சென்டர்கள். BVK ஐயங்கார் ரோட்டில் சீதாப்பழ ஜூஸ் செய்துகொடுத்த கன்னட இளைஞனை ஆரத்தழுவிக்கொள்ளலாம். அவ்வளவு ருசி.
உணவுப்பண்டங்களின் ருசியிலும் சமைக்கும் விதத்திலும் சென்னைக்கும் பெங்களூருக்கும் நிறைய வித்தியாசம். சென்னையில் கெட்டியான தோசை மாவை கிண்ணத்தில் அள்ளி டொக்கென தோசைக்கல்லில் கொட்டி, சர்.. சர்ரென்று சுற்றுவது போல இங்கு சுற்றாமல், மாவை கொஞ்சம் நீராகவே கரைத்து கல்லில் ஊற்றும் போதே இந்தியன் நியூஸ் ரெவ்யூ போல அழகாக வட்டமாக தோசை விரிந்து உடனே ஆங்காங்கே புள்ளிகள் தோன்ற, தோசைக் கரண்டியால் எண்ணெயை ப்ளக்கென அள்ளி தெளிப்பதை பார்க்க, நமக்கு பகீர். கிழங்கு மசாலை அள்ளி தோசைக்கு நடுவில் வைத்து பாய் சுருட்டுவது போல் சுருட்டி தட்டில் வைக்கப்படும் ஒரு மசால் தோசையே வயிற்றை நிரப்பி விடுகிறது. தோசை திக்காக இருந்தாலும் நல்ல முறுகல்.
தாவங்கரே பெண்ணெ தோசே (வெண்ணெய் தோசை) ரொம்ப பிரபலம் இங்கே. இந்த பலகாரத்தை நான் தாவங்கரேயிலேயை சாப்பிட்டிருக்கிறேன். பத்து, பதினைந்து தோசைகளை கல்லில் ஊற்றிய பின், கையால் வெடிகுண்டு சைஸில் உள்ள வெண்ணை உருண்டையை அள்ளி அப்படியே பொல பொலவென தோசைகள் மேல் தெளிக்கிறார். என்னா தாராள மனசு! ‘உருகுதே.. மருகுதே… ஒரே பார்வையாலே’ என வெண்டைக்கட்டிகள் பாடியபடியே தங்கள் சுயரூபத்தை இழந்து தோசை புள்ளிகளை நிரப்பி ஜிகுஜிகு என நடனமாட, அடுத்த நிமிடம் சர்.. சர்..ரென தோசைகள் சுருட்டப்பட்டு தட்டுகளில் வைக்கப்பட, ‘பல்லியா’ எனப்படும் வேக வைத்து மசித்த உ.கிழங்கு, வெங்காயம் (மஞ்சள் தூள் கலக்காத) வெண்கலவையை தொட்டுக்கொள்ள வைக்கிறார்கள். பச்சை மிளகாய் வாசனை மணக்கும் தே.சட்னி, அதில் முக்கிய பெண்ணெ தோசா+ பல்லியா கூட்டணி நம் சுவை நரம்புகளை சுண்டி இழுத்தபடியே தொண்டைக்குள் இறங்கும் போது தூரத்தில் மங்கலாக சொர்க்க வாசல் தெரிகிறது.
பெங்களூர் நீரு தோசா! ஆஹா! சீரகம் தெளித்து உளுந்தே இல்லாமல் தண்ணியாக கரைத்த மாவை கல்லில் சதுரமாக ஊற்றி அப்படியே வெள்ளையாக மல்லு வேட்டி போல மடித்து தட்டில் வைத்து, தொட்டுக்கொள்ள சர்க்கரை+தேங்காய் துருவல் செம்ம காம்பினேஷன். இதைப்போலவே எங்கள் பஹ்ரைன் கேரள நண்பர்கள் வெள்ளை ஆப்பம் செய்து நடுவிலே சர்க்கரை + தேங்காய் துறுவல் வைத்து சுருட்டி கொடுக்கிறார்கள். இதன் பெயர் லவ் லெட்டராம்.
பெங்களூரில் கொஞ்சம் அகலமாக, தட்டையாக ஊற்றப்படும் தட்டெ இட்லி கிடைக்கிறது. கொஞ்சம் ஹெவி. ஒன்று சாப்பிட்டு அடுத்தது சாப்பிடலாமா என நீங்கள் யோசிக்கும்போதே பக்கத்தில் (உங்க) மனைவியின் தட்டிலிருந்து ஒரு ஹாஃப் உங்க தட்டுக்கு வந்துடும்.
எங்கள் வீட்டிலிருந்து நாலே கி.மீ தூரத்தில் இந்திரா நகர் பகுதியில் புதிதாக ராமேஸ்வரம் எனும் ஹோட்டல். ஞாயிறு காலை 8 மணிக்கு லெக்கீஸ் பெண்களுடன் 50 பேர் வரிசையில் நின்று டோக்கன் வாங்கும் அளவிற்கு கூட்டம். கீ(ghee) பொடி இட்லி, ரவா தோசை+சாஹு (குருமா போல), கொத்மீரி ரைஸ் (கொத்தமல்லி சட்னியை சாதத்தில் கலந்து) என காலங்கார்த்தாலயே அதகளம் செய்கிறார்கள் பெண்கள். ஒவ்வொரு ஐட்டமும் குறைந்தது 60,70 ரூபாய். ருசி? சுமார் தான்.
லால்பாக் பகுதி-MTR (மாவல்லி டிபன் ரூம்) போயிருந்தோம். காலை நாஷ்டாவில் பிரதான ஐட்டம் அங்கே சௌசௌ பாத். அதாவது மோட்டா ரவா (சூஜி ரவா)வில் செய்த கேசரியையும் உப்புமாவையும் இரண்டு கின்னங்களில் நிரப்பி ‘ணங்’ஙென ஒரே தட்டில் சட்னியுடன் வைக்கிறார்கள். நல்ல சுவை. தட்டில் தேங்கும் எண்ணெயில் அப்பளம் பொறிக்கலாம்.
‘ஶ்ரீ உடுப்பி பார்க்’ மெனுவில் போண்டா சூப் கண்ணில் பட, ஆர்டர் செய்தோம். வறுத்த வெங்காயம், கடுகு, உ.பருப்பு தாளிதம் செய்து தண்ணீராய் ஓடும் பருப்பு சூப். பக்கத்திலிருக்கும் 2 போண்டாக்களை தூக்கிப்போட்டு அதில் மிதக்க விட்டு .. அட..அட.. செம்ம ருசி. போண்டாக்களை கபளீகரம் செய்த பின் மீதமுள்ள பருப்பு சூப்பை கின்னத்துடன் எடுத்து வாயில் கவிழ்க்க… ப்ப்ப்பபா!
அடைமழைக்கு ஊடே ஹலசூரு பகுதியில் ‘ஓம் சாய் ஸ்கந்தா தோசா காம்ப்’ போயிருந்தோம். (தோசை)கல்லிலே கலை வண்ணம் கண்டவர்கள். தோசா மாஸ்டர் பெயர் தாஸாம். மூன்று நிமிடத்திற்கொரு முறை சீராக ஒரே அளவில் 8 தோசைகள் வீதம் நூறு தோசைகளுக்கு மேல் கல்லில் ஜனனம் எடுக்க, கார்களில் இருந்தவன்னம் பெருத்த மார்வாடி மக்கள் மசால் தோசையை மொஸ்க்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் கல்லில் இரண்டு மூன்று தம்ளர் தண்ணீர் விட்டு சீமாறு கொண்டு பாத்ரூம் கழுவி விடுவதைப்போல கல்லை சுத்தமாக கழுவி பிறகு அடுத்த 8 தோசை ஊற்றுகிறார் தாஸ். அங்கே என்னை மிகவும் கவர்ந்தது என்னவென்றால் எண்ணெய் ப்ளாஸ்டிக் பாக்கெட்டை ஊசியால் துளைத்து தோசைகள் மேல் சர்ர்ரென பீய்ச்சி அடிக்கும் முருக(ல்) தாஸ் ஸ்டைலே வித்தியாசமாக இருந்தது.
டாப் 20 உணவகங்கள் பெரும்பாலும் இந்திரா நகர், ஜெயநகர், மல்லேஸ்வரம் பகுதிகளில். ஜே.பி.நகர்/பனஷங்கரி பகுதி ஶ்ரீ கிருஷ்ணம், மல்லேஸ்வரம் CTR (சென்ட்ரல் டிபன் ரூம்), ப்ராமின்ஸ் டிபன் & காபி, Taza திண்டி, மய்யாஸ், Sattvam restaurant (சட்டுவமா இருக்குமோ!) போன்ற உணவகங்களுக்கு பெங்களூர் மக்கள் படையெடுக்கிறார்கள்.
எல்லா இடங்களிலும் ஒரு மதுரை இட்லி கடை பார்க்கலாம். பொங்கல், பருப்பு வடை, பஜ்ஜி, பாய்லர் டீ என தமிழ்நாட்டு பக்ஷ்ணங்கள் எல்லாவற்றையும் ஸ்வாஹா செய்ய மக்கள் தயார்.
பழங்கால வீட்டை துப்புறவு செய்து ஐஸ்க்ரீம் பார்லராக்கி, கல்லூரி இளசுகளுக்கெனவே இயங்கும் இந்திரா நகர் 'கார்னர் ஹவுஸ்'ல் ரூ 90இல் ஆரம்பித்து 200 வரை ‘கையெழுத்து சண்டை’யாம் (Signature Sundae). அங்கே விலை உயர்ந்த ஒரு ஐஸ்க்ரீம் பெயர் ‘சாக்லெட்டால் மரணம்’ (Death by Chocolate). பின்ன! மரணம்னா சீப்பாவா இருக்கும்! விலை ரூ.200. குறைந்தது இரண்டு வகை மரண ஐஸ்க்ரீம்கள் சாப்பிடாமல் மக்கள் வெளியேறுவதில்லை. மோட்டா மணிபர்ஸுடன் குடும்பத்துடன் அங்கே சென்றால் ‘செத்தோம்’.
சிவாஜிநகர் பஸ்டாண்ட் எதிரே ஶ்ரீராஜ் லஸ்ஸி பார். 40 வருடங்களுக்கு முன் ஸ்தாபகமான கடை. மட்கா லஸ்ஸி, காரா லஸ்ஸி, மாங்கோ லஸ்ஸி, குல்ஃபி, ஃபலூடா வகைகள். பிரபல நடிகர்கள் ராஜ்குமார், விஷணுவர்தன், அம்பரீஷ் போன்றோர் முன்பு விஜயம் செய்வார்களாம். மட்கா லஸ்ஸிகளை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து கொடுக்கிறார்கள். அதனால் ஸ்பூனால் வெட்டி சாப்பிட வேண்டும்.
நம்மூர் பூரண் போளி (தெலுங்கில் ஒப்பட்டு) இங்கு ஹோலிகே என்ற பெயரில் கிடைக்கிறது. பருப்பு பூரணம் அல்லாது தேங்காய் வெல்லம் சேர்த்தது செம்ம ருசி. நிறைய இடங்களில் ஹோலிகே மனே கடைகள். ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட் போன்ற ஃப்ளேவர்கள் இளசுகளை ஈர்க்க.
அது சரி! பெங்களூர் பற்றி இவ்வளவு எழுதி விட்டு திருச்சியைப்பற்றியும் கொஞ்சம்…
40 வருடங்களுக்கு முன் சீ.ஏ படிக்கும்போது திருச்சி மேலபுலிவார்ட் சாலையில் ஜாபர்ஷா தெரு வழியாக ஆடிட்டர் ஆபிஸ் போகும்போது தெரு முகனையில் ஆதிகுடி காபி ஹோட்டல் தாண்டி தான் போவோம். வாழை இலை போட்டதும் தண்ணீர் தெளித்து இலையின் நடுத்தண்டை வர்ர்க்.. வர்ரக் என அழுத்த, நெய் ரோஸ்டை மடித்து வைப்பார்கள். சாம்பார் வாளி சின்ன பையன் பெருங்கரண்டியால் சம்பாரை மொண்டு தோசை நடுவில் ஊற்றி அதன் தலையிலேயே சட்னியையும் கொட்டுவான். முறுகல் ஓரங்களை கொஞ்சம் பிய்த்து தோசையின் எல்லைக்கு வெளியே பரவிய சாம்பார் சட்னி கலவையில் முக்கி வாயில் போட்டால் ம்ம்ம்மா.. எல்லை தாண்டிய பயங்கரவாதம் இது தான். என்னா ருசி! பக்கத்து இலை மாமா பட்ணம் பக்கோடா, அசோகா அல்வா என தனி உலகில் இருப்பார். எல்லாம் முடிந்து எதிரிப்படைகள் நம் எல்லையிலிருந்து பின் வாங்குவது போல சாம்பார் காரம் நாவிலிருந்து பின் வாங்கும் முன் எதிர்பாரா தாக்குதல் போல பில்டர் காபி வந்து, சாம்பார் காரத்துடன் கலக்கும்போது அடுத்த சில மணி நேரம் நாவில் ருசியுடன் யுத்த களம்.
சட்டென வரைந்த மசால் தோசை ஓவியத்துடன்,
சீதாபதி ஶ்ரீதர்



 
All react

ஹெலன்!

 Happy Birthday Madam Helen(82)!

1977-80. நான் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் BSc பட்டப்படிப்பு முடிக்கும் முன் அந்த மூன்று வருடத்திற்குள் 1960இலிருந்து 80 வரை வெளி வந்த நல்ல ஹிந்தி படங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன்.
முந்தா நேத்திக்கி தானே பார்த்தோம், இந்த படத்திலுமா! என வியக்க வைக்கும் அளவிற்கு பெரும்பாலான படங்களில் கவர்ச்சி நடனம் ஆடும் நடிகை ஹெலன் வந்து போவார். அப்பா ஆங்கிலோ இந்தியர். அம்மா பர்மாவாம். ஹெலன் ஆனி ரிசர்ட்சன் கான் எனப்பெயர்.
அனேகமாக 25 வருடங்கள் தயாரிப்பாளருக்கு சிலவு வைக்காமல் ஜட்டி, பாடி மட்டுமே அணிந்து கவர்ச்சி நடனமாடி புகழ்பெற்றவர். அவ்வப்போது புசுபுசுவென மஸ்லின் துணியை மேலுக்கு சுற்றிக் கொண்டு வந்து ஆட்டமாடி நமக்கு கிளுகிளுப்பூட்டியவர். சில சமயம் சேவல் கொண்டை மாதிரி விதவிதமான வண்ணங்களில் இறகுகளை தலையிலும் பின் பக்கமும் சொறுகிக்கொண்டு பார்க்க கேனத்தனமாக இருந்தாலும் அதையும் ரசித்திருக்கிறேன்.
அப்புறம் 80களில் அருணா இராணி, பிந்து போன்றவர்கள் வந்து, ஆட்டத்தை விட உடல் அழகை காட்டத்தொடங்கியதும் ஹெலன் மெதுவாக பின்னுக்கு தள்ளப்பட்டார். தற்போது கவர்ச்சி ஆட்டத்தையும் கதாநாயகிகளே பார்த்துக்கொள்கிறார்கள் என்பது வேதனை. அதிலும் ஹெலனே பொறாமைப்படும் அளவிற்கு குறைந்த உடைகள்.
கடைசி வரை சிக்கென அதே ஒல்லிபிச்சான் உடம்பு தான் ஹெலனுக்கு. கூர்மையான நாசி, வசீகரமான கண்கள், செம்பட்டை முடியுடன் அழகிய முகம் அவருக்கு. கிட்டத்தட்ட ஷர்மிளா தாகூர் போன்ற அழகான நாசி. அதனாலேயே இந்த ஓவியம் வரையும் போது சர்வ சிரத்தையுடன் அவரது நாசியை அழகாக வரைய முயற்சித்தேன்.
தெரியும்! சர்ரர்ருன்னு கீழே போய் படத்தை பார்த்திருப்பீங்களே!
சின்ன வயசுல எங்கம்மா ‘எப்ப பாத்தாலும் மிட்டாய் சாப்பிட்டுகிட்டே இருந்தேன்னாக்க உனக்கு பூச்சி பல் தான் வரும்’ என எச்சரித்தது போல ஹெலனின் அம்மா செய்யவில்லை போலும். அழகான முகத்துடன் வாயை திறந்தால் போச்சு.. பூச்சி பற்கள்.
‘ஹௌரா பிரிட்ஜ்’ படத்தின் ‘மேரா நாம் சின் சின் சின்’ என்ற ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர்.
ஜங்லி படத்தில் ஷம்மி கபூருடன் சேர்ந்து ‘அய்யய்யா கரூன் மேன் க்யா சூக்கு சூக்கு’ பாடலுக்கு நடனமாடி இருப்பார். பாடல் சூப்பர் ஹிட். தீஸ்ரி மன்சில் படத்திலும் ஷம்மி கபூருடன் சேர்ந்து இவர் ஆடும் ‘ வோ ஹசீனா சுல்ஃபா வாலி’ பாடலும் செம்ம ஹிட்.
தமிழ் படம் உத்தமபுத்திரனில் சிவாஜியுடன் ‘மன்னவா நீ ஓடிவா’ என ஓடி வந்து குதித்து ‘ ஒன்னும் ஒன்னும் ரெண்டு, உன் மேல் ஆசை உண்டு’ பாடலுக்கு அசத்தலான நடனமாடி இருப்பார். ஜீரணிக்க முடியாத விஷயம், இப்பாடலில் முழு உடையணிந்திருப்பார்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹெலன்!
பென்சில் ஓவியத்துடன்,
சீதாபதி ஶ்ரீதர்.
No photo description available.
ctions: