Thursday, March 19, 2015

மவுண்ட்பேட்டன் மணி ஐயர் காண்டீன்...


காலை 6 மணிக்கு எழுந்து தி.நகரிலிருந்து ஆட்டோ பிடித்து மயிலாப்பூரில் கணபதி வீடு போய்ச்சேர்வதற்குள் அவனிடமிருந்து போன். ஹைதராபாத்தில் இருந்து காலை 6 மணிக்கு ஓடி வந்துவிட்டான். நேராக கடற்கரைக்கு கூட்டிப்போனான். ஒரு மணி நேரம் வாக்கிங்.
ஸ்வச் பாரத் எஃபெக்ட் பீச்சில் தெரிந்தது. பள்ளிக்குழந்தைகள் பீச்சை சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். ஏவியெம் சரவணன் அங்கு வருவாரென கேள்விப்பட்டதால் வெள்ளைச்சட்டையணிந்தவர்களையெல்லாம் உற்றுப்பார்த்துக்கொண்டே நடந்தேன். அங்கே இளநீர், அருகம்புல் சாற்றை விட அல்லோவிரா ஜூசுக்கு நல்ல டிமான்டு போலும்.
முதல் நாள் தண்ணியடித்துவிட்டு சிமென்டு தரையில் படித்தவர்கள் Z வடிவத்தில் தூங்கிக்கொண்டிருக்க, மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்டு காவி உடையில் ஒரு பெருசு செல்போனை காதில் வைத்துக்கொண்டு புன்னாகவராளி ராகத்துப்பாடல் ஏதோ கேட்டுக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்.
திரும்ப மயிலாப்பூர் சிவசாமி சாலை வந்தோம். 'தம்பி அடுத்த லெஃப்ட் எடுப்பா'வென கணபதி சொல்ல டிரைவர் இந்திராணியம்மாள் தெருவுக்குள் நுழைந்து ஶ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா முன் வண்டியை நிறுத்த கணபதி 'ஶ்ரீதரா இந்த சபா காண்டீன்ல டிபனை முடுச்சுக்கலான்டா..இங்க டேஸ்ட் பண்ணிப்பாரு'...டேஸ்ட்டா அது..
'மவுண்ட்பேட்டன் மணி ஐயர் அநேக நமஸ்காரம்' போர்டு எங்களை வரவேற்றது. உள்ளே சுமார் 150 பேர் உட்காரலாம். வடை சாம்பார் வாசனை சும்மா தூக்கியது. இன்றைய ஸ்மெஷல் சாக்லேட் தோசையாம். கமக ம வாசனை நெய்ப்பொங்கலிலிருந்து சர்வ ஜாக்ரதையாக மிளகுக்கூட்டங்களை விலக்கி, முந்திரியை ஆதரவுடன் சேர்த்து ஒரு விள்ளலை ஆசையுடன் எடுத்து, அடையாள அணிவகுப்பு மாதிரி வரிசையாக நின்ற ரெட் சட்னி, தே.சட்னி, சாம்பாரில் முக்கி எப்போது வாயில் போட்டேனென தெரியவில்லை... தொண்டையில் வழுக்கிக்கொண்டு உள்ளே இறங்கியது. பற்களில் மாட்டிய முந்திரியை மென்று, டிஷ்யூ பேப்பரில் வழியும் மூக்கை துடைத்துக்கொண்டு மூக்கு மேல் சரிந்திருந்த கண்ணாடியை சற்று மேலே தூக்கி சுற்றிலும் பார்த்தால் ஈரம் சொட்டும் தலையுடன் ஆங்காங்கே கணவன் மனைவிகள் நெய் ரோஸ்ட்டை பெட்சீட் மாதிரி மடித்து கெட்டிச்சட்னியை மேலே கொட்ட, இந்தப்பக்கம் சின்னப்பையன் ஒருவன் பூரியை ஆள்காட்டி விரலால் குத்தி வெளியே வரும் ஆவியை வாயால் ஊவென ஊதினான்.
கணபதிக்கு மதுரம்னா இஷ்டமாச்சே. இன்றைக்கு காசி அல்வா, அசோக் அல்வா, சூர்யகலா, சந்த்ரகலா. மால்புவா, ஒப்புட்டு...அஞ்சு பாக்கெட் அசோகா அல்வா வீட்டுக்கு டேக் -அவே சொன்னான். டபரா டம்ளரை இரண்டு முறை மட்டுமே சுற்றி சக்கரை முழுவதும் கரைவதற்க்குள் மடக்கென்ன காபியை வாய்க்குள் கவிழ்க்க நாக்கில் காரசட்னியின் சுவையும் காபியின் சிக்கரியும் ஜுகல்பந்தி நடத்தின..மவுண்ட்பேட்டன் மணி ஐயர் வாழ்க.
சாயங்காலம் மறுபடியும் மியூசிக் அகாடமி போய் மூன்றாம் தளத்தில் அமர்ந்து .., உமையாள்புரம்+கார்த்திக்+ சிக்கில் கச்சேரியை ரசித்து 8.30க்கு கீழே வந்து பூரன்போளி, ராகி இடியாப்பம், தட்டு இட்லி, புளிப்பொங்கல் சாப்பிடதை விரிவாக எழுத ஆசை தான்.. மணி இப்பவே இரவு 12.. ஒரு மணிக்கு ஷார்ஜா ஃப்ளைட் செக்கின் செய்யனுமே..
இரவு வணக்கங்கள்...

சிவகுமார் மாமா...




'ஶ்ரீதரா..சிவகுமார் மாமாவ மறக்காம பாத்துட்டுப்போ... உன்ன அடிக்கடி விஜாரிக்கிறார்' என Ganapathi Subramanian சொல்லவும் உடனே கிளம்பினேன். மாமா வீடு நான் தங்கியிருந்த வாசன் தெருவை அடுத்து முப்பாத்தம்மன் கோவிலுக்கு வெகு சமீபத்தில் ராமச்சந்திரா தெருவென நினைக்கிறேன். தொலைபேசியில் ஆனந்தி மாமிக்குத்தெரிவித்து விட்டு அடுத்த 10 நிமிடத்தில் அவர்கள் வீட்டில் நான்.
'வாப்பா ஶ்ரீதர்... எப்பிடிப்பா இருக்கே...' சிவகுமார் மாமா ஆனந்தி மாமியின் அதே வாஞ்சையான பேச்சு.... மாமி அதே மாதிரி தான் இருக்க மாமா (81) மட்டும் கொஞ்சம் களைத்திருந்த மாதிரி இருந்தது.
படிப்பை முடித்தவுடனேயே பஹ்ரைன் வந்து gulf air இல் சேர்ந்து நாற்பது வருடங்கள் ஆகி ரெவன்யூ அக்கவுன்ட்ஸின் தலைமைப்பதவியிலிருந்தவர் மாமா.
தினமும் மாலை மற்றும் வெள்ளியன்று அவரைப்பார்க்க அவரது உம்-அல்-ஹாசம் ஃப்ளாட்டுக்கு ஜனங்கள் வந்துகொண்டே இருப்பது வழக்கம். கணபதி தான் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியவன். கஜ்ரியா எலெக்ட்ரானிக்ஸ் குழுமத்தின் தலைவர் லால்ஜி கஜ்ரியா, கேவல்ராம் க்ரூப் சேர்மன், அமெரிக்கன் எம்பஸியின் பாகிஸ்தான்காரர் குப்தாஜி என பஹ்ரைனின் முக்கிய புள்ளிகள் அவரது நணபர்கள். பக்கத்து ஃப்ளாட்டில் கல்ஃப் டெய்லி நியூஸ் எடிட்டர் சோமன் பேபி...எஸ்.வி.சேகர் டிராமா போன்ற ஏதாவது நிகழ்ச்சிக்கு மாமா தலைமை தாங்கினால், உடனே மாமாவின் போட்டோவை சோமன் பேபி பேப்பரில் போட்டு விடுவார். கீழ் தளத்தில் டாக்டர் மாலா...
உஷா மற்றும் குழந்தைகளை மாமா மாமி விசாரித்து விட்டு பஹ்ரைன் நாட்களை நானும் மாமாவும் கொஞ்சநேரம் அசைபோட்டோம் கின்னத்தில் குலாப்ஜாமூனோடு.
மாமாவின் நகைச்சுவைக்காகவே அவரைச்சுற்றி எப்போதும் ஒரு பட்டாளம் இருக்கும். அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரே ஜோக் ... சிரிப்பு மயம் தான். ஒரே நேரத்தில் அடுக்கடுக்காக 10, 15 ஜோக்குகள் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைப்பவர்.கோபமே வராது. எப்போதும் சாந்தமான மலர்ந்த முகம். ரொம்ப பாசிடிவ். மாமாவின் பலமே மாமி தான். மாமிக்கு ஒரு பெரிய ரசிகர் மன்றமே இருந்தது.
அப்போது Gopala Sundaram மாமாவும் பஹ்ரைனில் இருந்தார். தம்பி.. தம்பி என அவரை சிவகுமார் மாமா ஆசையோடு அழைப்பது வழக்கம். கோ.சு.மாமா வழங்கிய ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாமா கடைசியில் அவரை வாழ்த்திப்பேசும்போது 'இதுவரை நம்மை எல்லோரையும் விசா,டிக்கட் இல்லாமல் அனுமனுடன் லங்கா கூட்டிச்சென்ற தம்பி கோபாலசுந்தரத்திற்கு நன்றி' என முடிக்க ஒரே கரகோஷம்.
அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தபோது மாமாவின் பழைய ஹாஸ்யத்தை அவரிடம் தேடினேன். 1995இல் ரிடையர் ஆகி கடந்த 20 வருடங்கள் சென்னையில்..
மாமா பஹ்ரைன் விட்டுக்கிளம்பும் முன் அவரது சென்டாஃப் பார்ட்டிக்கு தடபுடலான ஏற்பாடுகள். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், டிராமா, மாமாவின் ஓவியத்தை நான் வரைந்து மேடையில் அவருக்களித்தது, இந்தியன் அம்பாசடர் சிறப்பு விருந்தினர்...என எல்லாம் முடிந்து கடைசியில் மாமாவின் உரை..சுமார் 20 நிமிடங்கள் வரிசையாக ஜோக்குகள்... அழுகையினூடே எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார் மாமா..( 'என்னடா சோகமா இருக்கே?..'
'கிரிக்கெட் விளையாடறேன் மாமா..'
'அதான் உன்ன வெளையாட்ல சேத்திக்கிட்டாங்களே! அப்பறமென்ன சோகம்? உன்ன விக்கெட் கீப்பரா ஆக்கலையா?'
'இல்ல மாமா என்னய தான் விக்கெட்டா நிக்க வெச்சிருக்கா')
அந்த ஹாஸ்ய உணர்வு இப்போதில்லையா? மாமா கண்களில் ஆசையுடன் தனது பழைய நண்பர்களை ஒவ்வொருவராக விசாரித்துக்கொண்டிருக்க,
ஜோக்குகள் சொல்லும் மாமாவை மட்டும் நான் தேடினேன்.
கிளம்பும் முன் மறக்காமல் மாமா மாமியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். 19 வருடங்கள் முன் நான் வரைந்த அவரது ஓவியம் ஹாலை அலங்கரித்துக்கொண்டிருந்தது. கிளம்ப மனசில்லை எனக்கு.. ஏதோ ஒரு உறுத்தல். பஹ்ரைனில் எங்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த மாமா இப்ப இல்லியா? விடை பெற்றுக்கொண்டு மாமா மாமியிடம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வாசல் பால்கனி வழியாக படியிறங்கும் முன் மறுபடியும் தயக்கம்...
'மாமா.. உங்க கிட்ட ஒன்னு கேக்க...' நான் முடிக்கவில்லை...
'அந்த சேரை இழுத்துப்போட்டு இப்பிடி உக்காருப்பா'... மாமாவுடன் மாமியும் சேர்ந்து கொள்ள.. "மாமா... நீங்க முந்தி சொன்ன ஜோக்கெல்லாம் ஞாபகமிருக்கா? இப்பவும் நாங்க அந்த ஜோக்கெல்லாம் மத்தவங்களுக்கு சொல்லிகிட்டிருக்கோம்... என்ன.. ஒன்னு...நீங்க சொல்ற ஸ்டைலே தனி.."
மாமி உடனே..., 'அந்த சர்க்கஸ் ஜோக் சொல்லுங்க' என எடுத்துக்கொடுக்க மாமா கண்களில் ஒரு மின்னல் கீற்று...பிரகாசம்.. தொண்டையை சரிசெய்து நெஞ்சை நிமிர்த்தி சடசடவென பெய்யும் மழை மாதிரி ஆரம்பித்தார்...
1. வேலையே கிடைக்காத ஒருத்தன் ஒரு சர்க்கஸ் மேனேஜரான்ட போயி 'சார் எனக்கு வேல ஒன்னுங்கெடைக்கல.. எதாவது வேல போட்டுக்கொடுங்க.. நான் பி. காம்' னானாம்.
'இந்தாப்பா.. நம்ப கரடிக்கி ரெண்டு நாளா வயறு சரியில்ல... நீயி கரடி வேஷம் போடறியாப்பா?' என சொல்லி அவனுக்கு கரடி வேஷம் போட்டு கூண்டுக்குள்ளாற தள்ளினாங்களாம். சிங்கம் ஒன்னு அவன பாத்து ஒடி வர, 'அய்யய்யோ இப்ப நா என்ன பண்றது சார்' ன்னு இவன் கத்த, கிட்ட வந்த சிங்கம் 'பயப்படாதப்பா.. நான் எம்.காம்'னுச்சாம்.
2. சினிமா டைரக்டர் கிட்ட ஒருத்தன் போய் 'சார் நீங்க எந்த ரோல் வேணும்னாலும் குடுங்க.. நா நடிக்கிறே' ன்னு கேட்டானாம். 'சரிப்பா கொஞ்சம் ரிஸ்க் எடுக்கனும் பரவால்லியா? அந்த புலிக்கூண்ட தொறந்து விட்ருவோம்..அது உன்ன தொறத்தும்.. நீ நேரா ஒடி அந்த மரத்து மேல ஏறி அங்கயிருக்கற துப்பாக்கி எடுத்து சுடனும்... என்ன புரிஞ்சுதா' ன்னு கேட்க, அவன் பதிலுக்கு ' எனக்கு புரியறதிருக்கட்டும்.. அந்த புலிக்கு மொத புரிய வைங்க'ன்னானாம்.
3. பக்கத்து ஃளாட்ல இருந்து தொபேல்.. தொபேல்னு சத்தம்..பையன போட்டு அடியோ அடின்னு அடிக்கறார் அந்த ஃப்ளாட்டுக்காரர். இந்த ஃளாட் காரர் ஓடிப்போய் ' என்ன சார் என்னாச்சு? பையன போட்டு இந்த அடி அடிக்கறீங்க?'
அதுக்கு அவர் 'பின்ன என்ன சார்.. மாசம் மூவாயிர்ரூவா ஃபீஸ் கட்டறேன். மூனுக்கும் சன்னுக்கும் வித்தியாசம் தெரியல இவனுக்கு'
'உங்களுக்குத்தான் சார் சன்னுக்கும் சன்னுக்கும் வித்தியாசம் தெரியல.. இது எங்காத்துப்பையன்'
4. வேல வெட்டியில்லாத ஒருத்தன் ஒரு சரக்கஸ் கம்பெனி போனானாம். 'தம்பி உனக்கு ஜோக்கர் வேல. தெனமும் நீ 20 இட்லி, 10 தோசை, 15 பூரி சாப்டனும். எல்லாரும் கை தட்டுவாங்க..'
'சரிங்க சார் நா நல்லா சாப்டுவேன்'
' தம்பி.. ஆனா ஒரு நாளைக்கி 3 ஷோ பரவால்லியா'
' இருக்கட்டும் சார்.. அதுக்கென்ன இப்ப?'
'மாசம்பூராவும் ஷோ இருக்கும் பரவால்லியா?'
'இருக்கட்டும் சார்'
'ஞாய்த்துக்கெழம மட்டும் 5 ஷோ..சாப்டுவியா?'
'சாப்டுவேன் சார்..ஒரு சின்ன ரிக்வஸ்ட் சார்'
'என்னப்பா?'
' மத்தியானம் ஒரு மணிக்கி ஒரு 10 நிமிசம் வீட்டுக்கும்போவனும்'
'எதுக்குப்பா?'
'வீட்ல சுறுக்க சாப்ட்டு வந்துடறேன்'
அப்பாடா..அதே பழைய சிவகுமார் மாமாவ பாத்துட்டேன்...ஆயிரம் பிறை கண்ட அவர் பல்லாண்டு வாழ்க...

ஆருயிர் நண்பன்



ஆருயிர் நண்பன்.. பால்ய சிநேகிதன். சென்ற வாரம் சென்னையில் ஒரு நாள் முழுவதும் அவனுடன் தான். காலை மெரினா வாக், சிற்றுண்டி, மதியவேளை உணவு மற்றும் இரவு உணவு என ஏதாவது ஒரு சபா கான்டீனில்...
1981இல் திருச்சியில் ஆரம்பித்த நட்பு ..
நற்குணங்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவன்..பெரியவர்களை மதித்தல் (எல்லாம் நீங்க சொல்லி குடுத்தது தானே மாமா!)..
முன்பின் தெரியாதவர்களையும் தன் ஜோசிய அறிவால் வசீகரப்படுத்துதல் ( you seem to be very focussed sir! என்ன ராசி/நட்சத்திரம் நீங்க? நெனைச்சேன்..கைய குடுங்க ஸார்...அமோகமா இருக்கு உங்க ஜாதகம்)...
ஒருவரை மற்றவர்க்கு அறிமுகப்படுத்தும்போது அவன் பிரயோகிக்கும் flattering உத்தி ( இவன் வீட்டுல காய் நறுக்கறத பாத்திருக்கீயா இவளே? அய்யோ! ஒரொரு பீன்சும் அளந்தா அரை இன்ச்சு கரெக்டா இருக்கும்)...
ஒருவர் செய்யும் சுமாரான வேலையையும் பார்த்து ( ச்சமத்துடா நீ.. கெளப்பற..)...
ஆபிஸில் பாஸ் கிட்டியே...'அது ஒண்ணுமில்ல ஸார்.. உங்க கிட்ட ஒரு பயம் கலந்த மரியாத.. நன்னா திட்டிடுங்கோ ஸார் என்னை'
இருங்க...இருங்க..அவசரப்படாதீங்க.. அவன் வெறும் முகஸ்திதிக்கு சொல்றதா நினைக்க வேண்டாம். அலுவலகத்திலோ, நட்பு வட்டத்திலோ சிலரிடம் bluntஆகவும் பேசக்கூடியவன்.
தனது குழந்தைகளைப்பற்றி எப்போதும் பெருமையாக பேசி நம்மை கொல்பவர்களிடம்…("தப்பா எடுத்துக்காதீங்க.. இதைவிட அருமையா சில குழந்தைங்க பண்றாங்க)..
எவ்வளவு நெருக்கமானவர்களிடமும் ( சில சமயம் உனக்கு அஸர்டிவ்நெஸ் போதாதுடா ஸ்ரீதர்)...
ஹோட்டலில் (அரே யார்.. துமாரா தால் மெ நமக் நஹீ யார்)..
அலுவலகத்தில் (don't take me for granted.. understand?)
அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்கவும் தயங்கமாட்டான். நாங்கள் படிக்கும் காலத்தில் அவனது பேட்டையான திருச்சி பொன்மலை ரயில்வே காலனி சர்ச் பகுதியில் அழிச்சாட்டியம் செய்த ஆங்கிலோ இந்தியனை 'எவன்டா அந்த ஆப்ப' என அவன் கால்களுக்கிடையில் சைக்கிளை விட்டுத்தூக்கியவன்(விவேக் மாதிரி).
'நான் பிறவியில் ஊமை.. உதவி செய்யவும்' என கழுத்தில் போர்டு மாட்டி, ஆர்மரி கேட் அருகே CA பரிட்சைக்கு படித்துக்கொண்டிருந்த
எங்களிருவரை அணுகிய ஒருவன் சட்டைக்காலரை கணபதி கோத்துப்பிடித்து 'உனக்கு பேச்சு வராதா? அடிங்...எங்க பேசுடா..' என ஒரு அறை விட 'சார் உட்ருங்க' வென அந்த 'பிறவி ஊமை' கத்தினான்.
பணியில் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் ஏதாவது 'பாண்டுரங்க விட்டலா' என பஜனை பாடலை முணுமுணுத்தவாறே வேலையை முடித்துவிடுவான்.
12 வருடங்கள் பஹ்ரைனில் ஒரு குறுநில மன்னன் மாதிரி வலம் வந்தான். ஊருக்கு போனால் ஏர்போர்ட்டுக்கு வழியனுப்ப ஆறேழு பேர்..திரும்ப வரும்போது ரிஸீவ் பண்ண ஆறேழு பேர்.
மலையாளி, யூபி பையா, பங்களாதேஷி, பாகிஸ்தானி, பலுச்சி, சிறிலங்கன் என அவசர உதவிக்கு ஓடிவர ஏகப்பட்ட ஆட்கள் அவனுக்கு.
பஹ்ரைன் விட்டுப்போய் சென்னையில் ஒரு பிரபல சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனத்தில் கடந்த
14 வருடங்கள்...
ஆபீஸ் தான் கோவில். பாஸ் தான் மூலவர். எப்போதும் அவர் புகழ் பாடுவான் (சும்மா இல்ல..மனதார). அவனுக்கு ரோல்மாடல் அவர்தான்.( பாஸ் எனக்கும் நண்பர்.. அவரை பற்றி தனிப்பதிவே போடலாம்)
'கணபதி! ஏர்போர்ட் கிட்ட இருக்கேன். வண்டி நின்னு போச்சு' என பாஸின் போன் வந்த மறுநிமிடம் போன் கால்கள் பறக்கும். மயிலாப்பூரிலிருந்து கபாலி, ஆறுமுகம் எல்லோரையும் அங்கே விரட்டி, பின்னால் தானும் தண்ணீர் பாட்டிலோடு (குடி தண்ணீர்தான்) அங்கே ஓடுவான்.
எந்தவொரு வேலையாக இருந்தாலும் அதில் excel செய்து திறம்பட முடிப்பவன். பொய், சால்சாப்பு கிடையாது. பாஸை தனியாக வீட்டில் காலை வேளை சந்திக்கும்போதோ அல்லது அவருடன் மெரினா வாக் போகும்போதோ நிறைய காரியங்களை முடிக்கும் கில்லாடி. அவசியமென்றால் அவர் வீட்டு பசுமாட்டுக்கு அகத்திக்கீரை வாங்கிக்கொண்டு போய் அவனே மாட்டுக்கு கொடுப்பதும் சில சமயம் நடக்கும். 'ஶ்ரீதரா..வேற யாருடா நம்பள இப்பிடி நல்லா பாத்துக்கறா?..'
நிறுவனத்திற்கு ஆடிட் மட்டுமல்லாது IT துறையில் நிறைய வருமானமும் லாபமும் ஈட்டித்தருகிறான் என்ற நல்ல பெயர் வேறு. வேறு வேலை தேடவே முடியாது. பொழுதன்னைக்கும் கஷ்டப்படும் யாருக்காவது வேலை போட்டுத்தருவது.. கோவில் பணிகளுக்கு நன்கொடை தாராளமாக கொடுப்பது..
endless லிஸ்ட் சார்..
வாழ்க்கையில் நான் ஏறும் ஒவ்வொரு படியும் கணபதி போட்டது. எனது குடும்பத்திற்கும் நிறைய உதவிகள்... கடந்த 28 வருடங்களில் நான் இதுவரை செய்த/செய்துகொண்டிருக்கும் (பஹ்ரைன் உட்பட) வேலை ஐந்தும் கணபதி மூலம் கிட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தில் பார்ட்னர் ஆகும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ள, இன்று பிறந்த நாள் காணும் ஸ்நேகிதன் கணபதி, வாழ்க்கையில் மேலும் மேலும் சிறந்தோங்கி, அவனது குலதெய்வமான தஞ்சை கணபதி அக்ரஹாரம் மஹாகணபதியின் அருள் பெற வேண்டுகிறேன்.. அவனது இக்கரிக்கட்டி ஓவியத்துடன்...

மியூசிக் அகாடமி

தி. நகரிலிருந்து கிளம்பி மனைவியுடன் கொஞ்சம் ஷாப்பிங் செய்துவிட்டு, Durga Ganapathi Subramanianஐயும் அழைத்துக்கொண்டு அவசர அவசரமாக மியூசிக் அகாடமி போய்சேர கொஞ்சம் லேட்டாகி விட்டது. நல்ல கூட்டம்.. டிக்கெட் வாங்குமிடத்திலும் கொஞ்சம் கூட்டம்.
'இசையோடு சுருதி சேரு.. மிரின்டாவோடு கலாட்டா சேரு' அஸினைத்தாண்டி, கியூவில் நின்று டிக்கெட் வாங்கிக்கொண்டு கொஞ்ச நேரம் வெயிட் செய்து ஒரு வழியாக இருக்கையில் அமர்த்தும் எதிரே
.
.
.
.
.
.
.
.
வாழையிலை போட்டார்கள்.
ஹி..ஹி..மொத சாப்பாடு..அப்பறம் தான் கச்சேரி..
கொண்டித்தோப்பு மின்ட் பத்மநாபன் கேட்டரிங்காம். சாம்பார், ரசம், தயிர் போன்ற அன்றாட சமாச்சாரங்கள் தவிர தே.சாதம், மோர்க்குழம்பு போண்டா, கோஸ் வேர்க்கடலை கூட்டு, செள செள தயிர் பச்சடி, கோவக்காய் ரோஸ்ட், மரவள்ளிக்கிழங்கு குச்சி சிப்ஸ், சேனை மிளகுக்குழம்பு, கேரட் கீர், பச்சைமிளகாய் தொக்கு... கடைசியில் பிஸ்தா கேக்..
ஆஹா.., சாப்பிட ஐந்து விரலும், கடைசியில் மோர் குடிக்க இடமும் பத்தாதுங்க. இலையில் மிச்சமிருந்த சேனை முளகுக்குழம்பை அப்படியே விட மனமில்லாமல், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு... ஒரு ஸ்வைப்...வாயைத்துடைத்துக்கொண்டேன். இருநூறு ரூபாய்க்கு சாப்பாடு தேவாமிர்தம். திரும்ப திரும்ப கேட்டு பறிமாரினார்கள்.
அந்தப்பக்கம் இதே ஐட்டங்கள் கோம்போவுடன் வட்டமேசை மாநாடு.
மெல்ல ஹாலுக்குள் நுழைந்தோம். பரூர் அனந்தகிருஷ்ணன் வயலின், தஞ்சை ப்ரவீன் மிருதங்கம், ராமானுஜம் மோர்சிங் சகிதம் பரத் சுந்தரின் கோம்போ அருமை..
கிரி டிரேடர்ஸில் சுந்தர காண்டம் புத்தகங்கள் நம் பஹ்ரைன் நண்பர் Pillai Iyengar Sundararajan னுக்காக வாங்க அங்கிருந்து கிளம்பினோம்.
நாளை Ganapathi Subramanian னுடன் திரும்ப மியூசிக் அகாடமி வருவதாக ப்ளான் இப்போதைக்கு.
நாளை...கடம் கார்த்திக்+சஞ்சீவ் +உமையாள்புரம்+சிக்கில்=சக்கரை பொங்கல் சார்...
உமையாள்புரம் சிவராமன் அவர்களைத்தவிர மற்றவர்கள் பஹ்ரைன் வந்திருக்கிறார்கள்.
நாளை கச்சேரியைப்பற்றி விஸ்தாரமான அறிவுத்திறனுடன் ஸ்னிப்பெட்ஸ் எழுத நான் ஒன்றும் கைப்புள்ள.. Rajagopalan Venkatraman அல்ல..
அவர் உள்ளே நிரவல் பற்றி எழுதினால் நான் வெளியே வறுவல் பற்றித்தான் எழுத முடியும்...

திருத்தணி..

திருத்தணி முருகன் தரிசனம் மதியம் 3 மணிக்கு முடிந்து பக்கத்தில் ஜியார்டி ரெசிடென்ஸி போகும்போது நல்ல பசி. ஹோட்டல் சிப்பந்திகள் பேயறைந்த மாதிரி தெரிந்தார்கள். தென்னிந்திய மற்றும் வட இந்திய தாலி கொண்டு வந்து எங்கள் முன் வைத்து பாதி சாப்பிட்டவுடன் ரோஸ்மில்க் வைத்தார்கள். அது வெல்கம் ட்ரிங்க்காம்.
அங்கிருந்து கிளம்ப 4 மணியாகிவிட்டது. கார் டிரைவருக்கு பக்கத்தில் முன்னிருக்கையில் நான். பின்னால் உஷா மற்றும் அவளது பெற்றோர். அதற்குப்பின்னால் பிரஷாந்த் மற்றும் ப்ரணவ்.
அடுத்த பத்து நிமிடங்களில் திருத்தணி விட்டு ஊருக்கு வெளியே சத்திய சாட்சி கந்தன் தியான மண்டபம் சென்றடைந்தோம்.
ஏற்கனவே வயிறு ஃபுல்.. இனி தியானமாவென யோசித்து வண்டியிலிருந்து இறங்கலாமா வேண்டாமா என தயங்கி தூரத்தில் 'செறுப்பு வைக்குமிடம்' போர்டை பார்த்தோம். அதற்கு பக்கத்தில் ' இங்கு பாம்புகள் நடமாட்டமுண்டு.ஜாக்கிரதை' போர்டு. பக்கத்தில் யார் செறுப்பை விடுவார்கள்? போர்டை விட அதிலுள்ள பாம்புப்படம் பார்க்க இன்னும் பயமாக இருந்தது. காருக்குள்ளிருந்த என் மாமனார் தன்னையறியாமல் காலை குனிந்து பார்த்துக்கொண்டார். காரை விட்டுறங்காமல் அப்படியே கிளம்பினோம்.
அடுத்த இரண்டு மணிநேரம் சென்னை போய்ச்சேரும் வரை ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள ஏராளமான கடைகளையும் கடைகளின் பெயர்களையும் ரசித்துப்பார்த்தபடி சென்றேன்.
ஒண்டிக்குப்பம் மணவாளநகர் (திருவள்ளூர்) நெறுங்கும்போது 'பாலச்சித்தர் தமிழ் மருந்துக்கடை' வாசலில் யோகி ஒருவர் பாக்கெட்டில் பீடிக்கட்டுடன்..
அரண்வாயல்குப்பம்- 'ஆண்டவர் சைக்கிள் ஒர்க்ஸ் அன்டு பஞ்சர் கடை' க்காரர் டாஸ்மாக் நோக்கி ஒடிக்கொண்டிருந்தார்.
'ப்ளாட்டுகள் விற்பனைக்கு'..ஊருக்கு வெளியே.. ப்ளாட் போட்டு சுற்றிலும் கேட் அமைத்து குழந்தைகள் விளையாடும் சீஸா, ஊஞ்சல்... ..இவர்களை நம்பலாமா? சப்தகிரி என்க்ளே..வ்...நம் பணத்தை சாப்பிட்டு 'ஏவ்' தானா?
உக்கோட்டை தாபா சென்டர்- பெயர்ப்பலகை முழுக்க சிகப்புக்கலரில் நெறுப்பு படம். அவ்வளவு ஸ்பைஸியாம்.
அடுத்து ஜமீன்கோட்டுப்புரம் வரை எங்களை முந்தவிடாமல் ஒரு லாரி. லாரிக்குப்பின்னால்' இருக்கும்வரை ரத்த தானம், இறந்ததும் உடல் தானம்' வாசகம்( மொத வழிய விடுங்கப்பா)
கீழமணம்பேடு.. 'தருன் சிக்கன் & மட்டன் சென்டர்' வாசலில் 'பீப் பகோடா' ரெடி. பீப்ன்னா என்ன? Beef ஆம்.
'ஆண்டாள் கைராசி துணிக்கடை' போர்டில் கரினா கபூர் பாதி உடையில்..
'அம்பேத்கார் இரவு பாடசாலை' பூட்டப்பட்டிருந்தது. (மாலை மணி 7)
அடுத்த ஒரு கி.மீ தூரம் வழிநெடுகிலும் 'தேவன் ஒருவரே' போஸ்டர்கள் ( அவர் ரெண்டு பேர்னு யார் சொன்னது?)
'வள்ளலார் ஃபெர்டிலைஸ் சென்டர்' (குழந்தையின்மைக்கு இங்கு முழுமையான தீர்வு).. அடப்பாவிங்களா.! அதுக்கு வள்ளலார் எதுக்கு? பக்கத்திலேயே 'வேலைக்கு ஆட்கள் தேவை' போர்
டு வேற...
வேப்பஞ்சாவடி பொது வியாபாரிகள் சங்கம்.. 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டரில் சிரித்தவாறு ஒரு பெண்..
மதுரவாயல் ரோட்டில் நிறைய ஆட்டோமொபைல் கடைகளுக்கு நடுவே 'பெரியநாயகி பாடி கட்டும் மையம்' (அட.. லாரிக்குங்க)
நெல்சன் மாணிக்கம் ரோடு.. 'வள்ளுவர் இயல்பாடைகள்'.. அதாவது கேஷுவல் டிரெஸ்ஸாம்..(வள்ளுவர் பொருத்தமானவர்)
மங்கை ஆர்த்தே(?)பீடிக் மையம்.. ( இவர்களே காலை ஒடித்துவிட்டார்கள்)
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு மையம்..(குழந்தைகளை எப்படி ஒருங்கிணைப்பது)
ஒரு வழியாக தி.நகர் வந்து சேர மணி 8...
இரவு வணக்கங்கள்..

Sunday, December 7, 2014

பாபு

இந்தப்பக்கம் நிற்பவன் மூத்தவன்..
பாபு..பாம்பேவாசி. அந்தப்பக்கம் தம்பி.. ரவி, ஒமான்(Jani Vijay Raghavan) வருடத்திற்கு இருமுறை ஊருக்குப்போனாலும் சகோதரர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக சந்திப்பது அபூர்வம். கடந்த 2,3 வருடங்களாகத்தான் அம்மா, அப்பாவின் மறைவினால் நாங்கள் அடிக்கடி சந்திக்கிறோம். 

பெரியவன் பாபு பரமசாது,கூச்ச சுபாவமுள்ளவன். கொஞ்சம் வெகுளி. சின்னவன் ரவி அப்படியல்ல. அவன் ஏவியெம் ராஜன் மாதிரியென்றால் இவன் ஆனந்தராஜ்.

சின்ன வயதில் பாபு ரொம்ப கண்டிப்பானவனா இருப்பான். எங்கள் இருவருக்கும் அவனிடத்தில் கொஞ்சம் பயம். ரெண்டு தடவை திட்டுவான். மூன்றாவது தடவை பளார் தான்.

70 களில் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் தெருவில் இருந்தோம். ஏதாவது கலியாணமென்றால் லௌட் ஸ்பீக்கரில் 'ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் (மாணிக்கத்தொட்டில்)... கேட்டுக்கோடி உறுமி மேளம்..(ப.பா)... ' என பாடல்களும் முழு சினிமாப்பட வசனம் ஓடிக்கொண்டிருக்கும். படம் பார்க்காமலேயே வசனங்கள் எங்களுக்கு அத்துப்படி. அடிக்கடி சினிமாவும் போவோம். பேலஸ் தியேட்டரில் 'கோமாதா என் குலமாதா', அருணா தியேட்டரில் 'பாபி', ராமகிருஷ்ணாவில் 'சிரித்து வாழ வேண்டும்', பத்மாமணியில் 'தீபம்', ஜுபிடரில் 'நீதிக்குத்தலை வணங்கு'.. என எக்கச்சக்கமான படங்கள்.

ராக்ஸி வெலிங்டனில் பட்டிக்காடா பட்டனமா படத்துக்கு ஒரு நாள் எங்களை கூட்டிப்போனான் பாபு. சரியான கூட்டம். ஐம்பது பைசா டிக்கட் கியூவில் நாங்கள் முன்னால் நின்றாலும் கவுன்ட்டர் திறந்தவுடன் திடீரென வரிசை கடைசியிலிருப்பவர்கள் மேலே ஏறி நம் தலைக்கு மேல் இருக்கும் இரும்புக்கம்பியை பிடித்துக்கொண்டு பல்லி மாதிரி தலைகீழாய் ஊர்ந்து முன்னால் வர, "டாய்.. எறங்குடா.." வென கூச்சல். கசகசவென கூட்டம், பீடி நாற்றம் எல்லாம் சேர்ந்துகொள்ள பாபுவுக்கு திடீரென மூச்சு முட்டி கண்கள் சொறுகி.. மயக்கம் வர, "பாபு..பாபு.." என நானும் ரவியும் கத்தினோம். " டேய்.. இவனுக்கு மயக்கம்டா..அடுத்த நிமிடம் வரிசையிலிருந்து வெளியேற்றப்பட்டோம். 'ச்சே..படம் பார்க்க வந்த சமயத்திலயா இவனுக்கு மயக்கம் வந்துத்தொலையனும்?...சில நிமிடங்களில் அவனுக்கு குடிக்க தண்ணீரெல்லாம் கொடுத்ததும் எழுந்து உட்கார்ந்தான். 'அப்பாடா.. எந்திரிச்சுட்டான்..திரும்பவும் கியூவில் நிற்கலா'மென நாங்கள் நினைக்கும்போது ' வாங்கடா.. வீட்டுக்கு போலாம்' என எங்களை வெறுப்பேற்றி வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போனபோது ஈஸ்வரியின் 'ஓ..மை ஸ்வீட்டி.. ஓ குடுமி அங்கிள்..' பாட்டு மனதில் ஓடியது..

அந்தத்தெருவில் நாங்கள் குடிபோன புதிதில் சின்ன சைக்கிள் ஒரு மணி நேரம் வாடகைக்கு எடுத்து விடுவான் பாபு. எண்ணைக்கடைக்கார வீட்டுப்பையன்கள் இவன் சைக்கிள் சக்கரத்துக்குள் குச்சியை விட தபாலென இவன் கீழே விழுந்து ' ஏன்டா.. சைக்கிள் வீல்ல குச்சியை விட்டா சைக்கிள் எப்பர்றா ஓடும்' என வெகுளியாக கேட்க 'ஆஹா... கண்டுபிடிச்சுட்டார்யா..கொலம்பஸ்..' என கலாய்த்து அன்றிலிருந்து இவன் பெயரையே 'கொலம்பஸ்' ஆக்கினார்கள்.

அந்த வெகுளித்தனம் அவனுக்கு கல்யாணம் ஆகியும் போகவில்லை. 90இல் (பம்பாய்-முலுன்டு) இவனது குழந்தையின் மூன்றாவது பிறந்த நாளன்று அக்கம்பக்கத்து சின்னக்குழந்தைகள் சப்பிட வரிசையாக தரையில் உட்கார்ந்ததும், அண்ணி 'ஏங்க.. குழந்தைங்களுக்கு இட்லி வைங்க' என சொன்னதுதான் தாமதம், மூன்று, நான்கே வயதான குழந்தைகள் எல்லோருடைய தட்டிலும் மூன்று மூன்று இட்லி மற்றும் பெரிய சாம்பார் கரண்டியால் சட்னியை ஊத்தி, எல்லா ஐட்டங்களையும் ஒரே பந்தியில் காலி செய்து மனைவியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டான்.

பாபு படிப்பில் மட்டும் எப்போதும் பயங்கர புலி. ஆனால் தீபாவளியன்று நானும் ரவியும் பாம்பு மாத்திரை விடும்போது இவன் மட்டும் புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டு எங்களை கடுப்பேத்துவான்.

கான்பூர் யுனிவர்சிட்டியில் இளங்கலை பாட்டனி மற்றும் எம்.ஏ படித்து குடும்ப சூழ்நிலையால் பாங்க் எக்ஸாம் எழுதி சீக்கிரம் வேலைக்குப்போனாலும், உடனே சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்தவுடன், ராவ்ஸ் கோச்சிங் இன்ஸ்டிட்டியூட்டில் சேர்ந்து சிவில் சர்வீஸ் (IAS & IPS) தேர்வுக்கு கடுமையாக உழைத்து, ப்ரிலிமினரி மற்றும் மெயின் பரிட்சைகள் பாஸ் செய்து டெல்லி இன்டர்வியூ வரை போய், 961வது ராங்க் வாங்கி சுமார் 15 ராங்க்குகள் பின் தங்கியதால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் அருமையான வாய்ப்பை இழந்தான்.

பின் பம்பாயில் ரிசர்வ் வங்கியில் வேலை செய்து கொண்டு ஒரே அட்டெம்ட்டில் ICWA ஃபைனல், பின் CFA போன்ற படிப்புகளை அசால்ட்டாக பாஸ் செய்து MBAவும் முடித்து பம்பாய் பங்கு மார்க்கெட்டுக்குத்தாவினான்..ஆனாலும் அதே வெகுளித்தனத்துடன்..

சென்ற மாதம் நாங்கள் மூவரும் திருச்சியில் எங்கள் ஒரே சகோதரி Hemalatha Manoharவீட்டில் கூடினோம். அம்மாவுக்கு முதல் வருட ஸ்ராத்தம்.. வழக்கம்போல வீட்டில் ஒரே அரட்டை..சின்ன வயசில் எவ்வளவு வெகுளியாக இருப்பாய் நீ என பாபுவை கேலி செய்துகொண்டிருந்தோம்.

பூஜைக்கு நேரமாகவே புரோகிதர் 'மூத்தவர் வந்து மொத ஒக்காருங்க' என இவனைக்கூப்பிட்டு, 'சட்டைய கழட்டீட்டு இடுப்புல துண்டை சுத்துங்கோ' என சொன்னவுடன் 'அப்ப வேஷ்டி?' எனக்கேட்டு சாஸ்திரிகளையே கலங்கடித்தான்.

ராமசாமி தாத்தா…


'ரேய்.. ஸ்ரீதர்.. ரேப்பு தாத்த (தாத்தா) ஒஸ்தாரு... தெலுசுனா..' என நைனா கேட்டதும் எனக்கும் தம்பி ரவிக்கும்  ஒரே சந்தோஷம். தாத்தாவுடன் அரட்டை அடிப்பது, அவரை சத்தாய்ப்பது என்பது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அந்த தெருவில் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோருக்கும் தாத்தாவைத்தெரியும்.
1973.. திருச்சி தென்னூர் பட்டாபிராம் பிள்ளைத்தெருவை ஒட்டிய ஜெனரல் பஜார் தெருவின் ஒரு பகுதியான சிறிய சந்து தான் பென்ஷனர்கார தெருவு. மொத்தமே 40 வீடுகள், எண்ணெய்க்கடைக்காரர்கள் வீட்டிலிருந்து வரும் 'ஞீஈஈ....' யென செக்கு சுற்றும் சப்தமும் நல்லெண்ணை வாசனையும், பள்ளிவாசலில் பாங்கு ஓதும் சத்தமும், அடுத்த தெரு மன்னான்பாய் வீட்டுக்கல்யாணத்திலிருந்து ஷைலேந்தரின் இனிமையான குரலில் "பாஹர்ஸெ கொய் அந்தர் நா ஆசக்கே.."யைத்தொடர்ந்து வரும் அக்கார்டியன் இசையும் ...ரம்மியமான சூழ்நிலை.
சூம்பிய போலியோ கால்களுக்கு இரு பக்கமும் கக்கத்தில் வைத்த கட்டைகளை ஊன்றியவாறு கார் ஹாரன் ரிப்பேர் செய்யும் பாஷா வீட்டு திண்ணையில் அன்று காலை கவுன்சிலர் கிருஷ்ணன் வெத்திலை சீவல் போட்டவாறு அரை மணி நேரம் பேசிவிட்டுப்போனால் அன்று மாலைக்குள் ஃப்யூஸ் போன பல்புகள் மாற்றப்பட்டு தெரு விளக்குகள் பளிச்சென்று எரியும்.
ஏழெட்டு வீடுகள் தள்ளி தர்கா..சந்து என்று தான் பேர்.. எப்போதும் ஆள் நடமாட்டம்…. விடியற்காலையில் ‘குடுகுடு’(ப்பைக்காரன்),.. "மா.. கத்தரிக்கா, முருங்கக்கா, வெண்டிக்கா.." சப்தங்கள்.. 8 மணிக்கு "புட்டு.. இடியாப்பேய்..." அடுத்து "முறுக்கு... அதிரச... சுண்டல் வடேய்...." பிறகு பரங்கிக்காய் தம்புராவை மீட்டியபடி நெற்றியில் நாமம், முண்டாசு கட்டி வரும் ஜோசியக்காரர்கள்.. நெற்றி நிறைய பொட்டுடன் வரும் குறி சொல்லும் பெண்கள்..மற்றும் 'பளய இரும்புக்கு பேரீச்சம்பளேய்ய்..'
தொன்னூறு ரூபாய் வாடகைக்கு ஓரளவு வசதியானது எங்கள் வீடு. மண்சுவற்றில் கட்டிய பழைய ஓட்டு வீடு. மாதாமாதம் பீமநகரில் இருந்து வாடகை வசூலிக்க வரும் வீட்டுக்காரம்மா சுலேகா பீவியிடம் 'மழ வந்துச்சுன்னா வீடு ஒழுகுதுங்க' என சொன்னால் உடனே ஓரிரண்டு ஓடுகளை மாற்றி சரி செய்து விடுவார்..
வாசலில் மூங்கில் தட்டிக்கதவு. அடுத்து முன்புறம் திண்ணை.. ஒரு ஆள் கால் நீட்டி படுக்கலாம். பக்கத்தில் அடுப்பெறிக்க கருவேலமர விறகுக்கட்டைகள்.. . அதற்கடுத்து ஒரு சின்ன ரூம், சாமி ரூம், பெரிய பட்டாசாலை மற்றும் பொய்க்காட(அடுப்படி). கொல்லைப்புறம் தொட்டியில் தண்ணீர் ரொப்பியிருக்கும். பக்கத்தில் துணி துவைக்கும் கல் மற்றும் விளக்குமாற்றுக்குச்சி குத்திய சன்லைட் சோப், பெண்களுக்கு மட்டும் குளியலறை.. தினமும் காலை கூடையில் சாம்பல் மற்றும் தகரம் சகிதம் மலம் அள்ளவரும் கக்கூஸ்காரி உள்ளே வர பின்பக்க கதவு.. ரோட்டின் இரு புறமும் மோரி (சாக்கடை)..
இளமைக்காலத்தில் அதிக வருடங்கள் நாங்கள் கழித்தது அந்த தெருவில் தான். "ம்மா... கஞ்சி!" என மூலைக்கொல்லைத்தெருவில் இருந்து தினமும் தன் ஆடுகளுக்கு ஊற்ற வீடு வீடாக கஞ்சி வாங்க வரும் ஜமாலி அம்மாவின் குரல் கேட்டால் மணி பதினொன்று என அர்த்தம். "கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்".. TMS குரல் டிரான்சிஸ்டரில் ஒலிக்க பாடலை கேட்டவாறு வீடுகளில் பெண்கள் பீடி சுற்றுவார்கள்.
வீட்டுக்குப்பின்னால் கோடை காலத்தில் மட்டும் சலசலவென நீரோடும் உய்யகொண்டான் வாய்க்கால்... 'சித்தி' ஜெமினி கணேசன் (வெற்றுடம்புடன் 'பொத்தக்'கென குதித்து 'தண்ணீர் சுடுவதென்ன' பாடுவாரே!) மாதிரி நாங்களும் தண்ணீரில் குதித்து ஆட்டம் போடுவோம்.
நாலைந்து வீடுகள் தள்ளி வசிக்கும் ஆட்டோ டிரைவர் பண்டரிநாதன் தெருமுனைகுழாயில் இரண்டு பக்கெட்டுகளில் தண்ணீர் பிடித்து அவசரமாக வீட்டுக்கு ஓடுவார். துருபிடித்த வாளியின் ஓரங்கள் காலில் சிராய்த்துவிடாமல் இருக்க கையை கொஞ்சம் அகட்டியவாறு பக்குவமாக தண்ணீர் கொண்டுபோகும் அவரை, வெள்ளை ஜிப்‌பா பெந்தகொஸ்தேக்காரர் வழி மறித்து ' பிரதர்... நாளை உலகம் அழியப்போகுது.. உங்களை சுவிசேஷப்பாதையில் அழைத்துச்செல்ல தேவன் இதோ வருகிறார்' என சொல்லும்போதே துருப்பிடித்த வாளியின் ஓரம் பண்டரிநாதன் காலை கிழிக்க, மண்டைவரை ஜிவ்வென்று ரத்தம் ஏறி அவர் 'நீ மொத போய்க்கோய்யா.. சுவிசேஷப்பாதைக்கு நாங்க அப்பறமா வர்றோம்' என காட்டுக்கத்தல் போடுவார்.
ஊரிலிருந்து தாத்தா வருவதாக சொன்னேன் இல்லையா? தாத்தாவை யாராவது உடுமலை பேட்டையில் பஸ் ஏற்றிவிட்டால் தனியாக திருச்சி பஸ் ஸ்டாண்ட் வந்து விடுவார்.
ராமசாமி தாத்தாவைப்பற்றி....
உடுமலை, தாராபுரம், ஈரோடு, கோவை பகுதிகளில் தெலுங்கர்கள் அதிகம். எங்களுக்கு அப்பகுதிகளில் நிறைய ஒரம்பரை. தாத்தா பல வருடங்கள் முன்பு உடுமையில் உரிமையியல் (ஸிவில்) வழக்குகள் நடக்கும் மாவட்ட முன்சீஃப் கோர்ட்டில் வக்கீல் குமாஸ்தாவாக இருந்தவர். பத்திரம் அருமையாக எழுதுவார். நல்ல வருமானம். விருப்ப ஆவணம் (உயில்), அதன் இணைப்புத்தாள்கள் (Codicil), இந்து வாரிசு உரிமைச் சட்டம், உயில் எழுதாமல் இறந்து போனவரின் (Intestate)வாரிசு உரிமை .. என எல்லா சட்ட விபரங்களும் அவருக்கு விரல் நுனியில். கிடைக்கும் வருமானத்தில் சிக்கனமாக இருப்பார். அப்பப்ப கொஞ்சம் வட்டிக்கும் கொடுப்பார். இன்டிக்கி பாடிகை லேது.. ஓத்திக்கு எடுப்பார்.
அவருக்கு 4 பையன்கள். அவ்வா ஆண்டாளம்மாவுக்கு கடைசி பையனான எங்க நைனா மீது அலாதி பிரியமாம். சின்ன பையனான நைனா கையை பிடித்தவாறே புற்று நோயால் அவ்வா இறக்கும்போது கையை பிரிக்க முடியவில்லையாம். அப்போ நைனாவுக்கு கல்யாணமான புதிது. பெத்த கோடாளு (மூத்த மருமகள்கள்) நீலா, தனம் மற்றும் சேசு பெத்தம்மா தான் குடும்பத்தை நடத்தியவர்கள். கூட்டுக்குடும்பம். கடைசி மருமகளான என் அம்மா, வீட்டு வேலைக்கு அவர்களுக்கு உதவியாக இருந்தார்கள். தினமும் வடித்த சாப்பாட்டுக்கஞ்சியை கீழே கொட்டாமல் குளியலறையில் ஒரு வாளியில் கொட்டுவார்களாம். படுக்கும் முன் இரவில் ஆண்கள் எல்லோரும் தத்தம் அன்டர்வேரை அந்த கஞ்சியில் போட்டுவிட்டால் காலையில் துவைத்து உலர்த்துவது அம்மாவின் வேலை. பெரிதாக பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்தவர்கள்.
நைனா எஸ்செஸ்செல்சி வரை படித்து விட்டு சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருந்ததால், தாத்தா யாரையோ பிடித்து அதே கோர்ட்டில் பெஞ்சு கிளார்க் வேலை வாங்கிக்கொடுத்தார். மாஜிஸ்டிரேட்டுக்கு கீழே தனியாக யாரோ சின்ன பையன் உட்காந்திருக்கானே என எல்லோரும் நைனாவை ஆச்சரியத்துடன் பார்ப்பார்களாம்.
பையன் படு சுறுசுறுப்பு.. மாஜிஸ்டிரேட் பெட்டியை தூக்குவது, நீதி மன்றத்தின் தினப்படி அட்டவணைப்படி வழக்கு எண்களை தயாரிப்பது, கோர்ட்ஆவணங்கள், தஸ்தாவேஜுக்கள், கோர்ட் சீல் அனைத்தும் பெஞ்சுகிளார்க் வசம் தான். வக்கீல் மற்றும் சாட்சிக்காரர்கள் கூண்டில் ஏறியவுடன் சத்தியப்பிரமாணம் எடுக்க அவர்கள் முன் சின்ன பையனாக இவர் போய் நின்றால் 'ஒரேய்..எவரு ரா நுவ்வு.. சின்ன பின்னோடு' என முறைப்பார்களாம்.
வழக்குகளின் போது 'கோவிந்தராஜுலு…கோவிந்தராஜுலு…கோவிந்தராஜுலு’ என பெயர்களை மூன்று முறை சத்தமாக விளிக்கும் இவர், ஒரு நாள்'சீதாபதி..சீதாபதி..சீதாபதி' என தன் பேரையே உரக்க கூவி விட்டு மறுகணம் கூண்டில் ஏறி நின்று விட, யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது சைக்கிளில் விளக்கு இல்லாமல் போன மாதிரி ஏதோ ஒருசின்ன குற்றத்துக்கு இவர் மேலேயே வழக்கு பதிவாகியிருந்ததென்று. ஜட்ஜ் சிரித்துக்கொண்டே இவரை மன்னித்து விட்டாராம்.
ஆச்சு.. தாத்தா நாளை வர்றார்..
நைனா திருச்சி பஸ் ஸ்டாண்ட் போய்ச்சேரும்போது எப்போதோ பஸ் வந்து சேர்ந்து தாத்தாவை யாரோ கீழே இறக்கி விட்டிருக்கிறார்கள். 80 வயசுக்கு மேல் இருக்கும் தாத்தாவை 'குர்ரம்பண்டி'யில் ஏற்றி பின்னாலேயே நைனா சைக்கிளில் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.
தாத்தா நல்ல சிவப்பு. வெள்ளைக்காரன் மாதிரி பச்சைக்கண்கள். (நைனாவுக்கும் தான்).. நரம்புத்தளர்ச்சியால் தலை எப்போதும் 'சரி.. சரி..' என சொல்வது போல் ஆடிக்கொண்டிருக்கும். நாங்களும் அவரிடம் பேசும்போது அவரை மாதிரியே தலையை ஆட்டி பேசுவது கண்டு ' அட்ரா.. பொட்டி மவனே' என செல்லமாய் அடிக்க வருவார். கன்னத்தில் 50 பைசா நாணய அளவு 'வில்லன் மனோகர்' மச்சம். வழுக்கையில்லாத வெள்ளை முடி… அத்வானி மாதிரி மேலுதட்டத்தின் நுனியில் ஓட்டிக்கொண்டிருக்கும் வெள்ளைப்பஞ்சு மீசை. காமராஜர் கணக்கா பெரிய சட்டை. உள்ளே பருத்தித்துணியால் தைத்த முண்டா பனியன் மற்றும் பை வைத்த கால்சராய்.
சட்டைப்பையில் சிறிய பொடி மட்டை மற்றும் ஒரு டப்பாவில் நாமக்கட்டி, சூரனம் மற்றும் வெள்ளிக்கம்பி… அவரது தோல் பையிலிருந்து நீலவட்ட வடிவ வெள்ளி தட்டு (சாப்பாட்டுக்கு), சிறிய நீலவட்ட தட்டு (தொட்டுக்கொள்ள) மற்றும் வெள்ளி தம்ளர் வெளியே எடுத்து அம்மாவிடம் கொடுப்பார். வயிற்று வலிக்கு கொஞ்சம் கடுக்காய்வைத்திருப்பார்.
முழு தினமும் அவருக்கு திண்ணையில் தான் வாசம். காலை 6 மணிக்கு எழுந்ததும் படுக்கையிலேயே சில நிமிடங்கள் ஏதோ ஸ்லோகம் சொல்வார். பின் வேடி நீளு (சுடுதண்ணி) குடித்து அடுத்த பத்தே நிமிடத்தில் காலைக்கடன்... 9 மணிக்கு எழுந்து ஸ்நானஞ்சேசி கோசியை (கோமணத்தை) அலசி காயப்போட்டபின் உள்ளே வந்து நாமக்கட்டியை குழைத்து நெற்றியில் பெரிய திருமண்னிட்டு, சில நிமிடங்கள் உட்கார்ந்தவாறே பெருமாளை சேவித்து சரியாக நாலே இட்டிலியுடன் முடித்துக்கொண்டு திண்ணைக்கு வந்துவிடுவார்..
வாசல் கதவு மூங்கில் தட்டியின் நிழல் தரையில் விழும் இடத்தை சாக்கட்டியில் குறித்து வைத்துக்கொண்டு, தினமும் கடிகாரமில்லாமல் 10,11,12 மணியென தெரிந்துகொண்டு டான்னென்று பகல் ஒரு மணிக்கு சாப்பிட எழுந்துவிடுவார்.
ஊரிலிருந்து வரும்போதே பத்திரம் எழுதும் வேலையை கொண்டு வந்துவிடுவார். பகலில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்ற வழக்கறிஞர்களுக்காக உயில் போன்ற சாசனங்கள் எழுதுவார். “உயில் என்பது ஒருவர் இறப்பதற்கு முன்னர், தனது சொத்துக்களை தனது விருப்பப்படி, தனக்குப்பிடித்த நபருக்கு ஏற்படும் உரிமை குறித்து எழுதப்படும் ஆவணம்.. அந்த நபர் இறந்ததும் சொத்துக்கள் பிரிவினை தொடர்பாக , தாவாக்கள், வழக்குகள், சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எழுதி வைக்கப்படுகிற ஆவணமாகும். வெறுமனே சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது” என எங்களுக்கு நீண்ட விளக்கமளிப்பார் தாத்தா.
சொல்ல வந்த வாக்கியத்தை கடேசி வரை நீட்டி மூச்சுமுடியும் வரை சொல்ல எத்தனித்து கடைசி இரண்டு மூன்று வார்த்தைகளை கஷ்டப்பட்டு முடிப்பார். போதாதா எங்களுக்கு! நாங்களும் அவரை மாதிரியே'தாத்தா.. உள்ள சாப்பாடு வெச்சிருக்கு.. கைய கழுவிட்டுசா..ப்..பி..ட...வா..ங்..க..' என மூச்சு முட்டும் வரை பேசிஅவரை கலாய்ப்போம்.
இரவு உணவுக்குப்பின் அவர் படுக்கையை தின்னையில்விரித்து, மேலே மெத்தையை போட்டு, நான்கு பக்கமும்சுவற்றில் உள்ள ஆனியில் கொசுவலையை கட்டி, படுக்கையின் நான்கு பக்கங்களிலும் அடியில்கொசுவலையை சொருகி எல்லாம் தயார் செய்யும் வரை நாங்களிருவரும் பொறுமையாக படித்துக்கொண்டிருப்பது போல பாவ்லாகாட்டுவோம். அவர் மெல்ல எழுந்து புழக்கடைப்பக்கம் பாத்ரூம் போனவுடன் நாங்கள் சடாரென குதித்தெழுந்து ஓடி வந்து கடகடவென கொசுவலையை ஆனியிலிருந்து பிடுங்கி மடித்து, மெத்தை மற்றும் பாயை பழையபடி சுருட்டி உள்ளே அறையில் போட்டு விட்டு மீன்டும் படித்துக்கொண்டிருப்பது போல பாசாங்கு செய்யும்போது தாத்தா திரும்பி வருவார். வெற்றிடத்தைப்பார்த்து ' படுக்கையை இப்பத்தான் விரிச்சுட்டுப்போனோமா.. இல்ல..நேத்து விரிச்ச மாதிரி ஞாபகமா' வென அவர் குழம்பி மெதுவாக திரும்பி எங்களை பார்ப்பார். சிரிப்பை அடக்க முடியாமல் ஹே.. வென பெருங்கூச்சலிட்டு சிரிப்போம். நைனா தாத்தாவிடம் அதிகம் பேச மாட்டார். ஆனாலும் நாங்கள் தாத்தாவை கலாட்டா செய்வது கண்டு ரசிப்பார்.
உயில் மற்றும் பத்திரங்கள் எழுத சில சமயம் எங்களையும் துணைக்கழைப்பார் தாத்தா. கை அவருக்கு நடுங்குவதால் அவர் சொல்ல சொல்ல நாங்கள் எழுதுவோம். “U.R. நாதமுனி நாயுடுவின் புதல்வனான N.சாரங்கபாணி நாயுடு ஆகிய நான் என்னுடைய சுய புத்தியுடனும், பூரண ஞாபக சக்தியுடனும், யாருடைய தூண்டுதலுமின்றி எழுதி வைக்கும் உயில் சாசனமாவது'' என அவர் சொல்ல ஆரம்பித்தால் கிட்டத்தட்ட ஓரிரண்டு மணி நேரங்கள் போகும்.
நடுநடுவே இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என பக்கவாட்டில் சாய்ந்து வயிற்றிலிருந்து வாயுவை பெருஞ்சத்தத்துடன் அவர் வெளியேற்றும் போது நாங்கள்'கெக்கெக்கே'வென விழுந்து விழுந்து சிரிப்பது கண்டு கோபித்துக்கொள்ள மாட்டார் . “ஆ காடுக்காயனி இக்கட கொன்ராப்‌பா..(அந்தகாடுக்காய இங்க கொண்டு வாப்பா!) சரியா வெளிக்கி போவலையாட்ருக்கு”.. "காலையில்இஞ்சி...நண்பகல் சுக்கு..மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண.. கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பரே..''- என்று சித்தமருத்துவப் பாடலை முனுமுனுத்தவாறே வாயில் காடுக்காய்த்தூளை போட்டுக்கொள்வார்.. சின்ன உபாதையென்றாலும் உடனே அதற்கான இயற்கை மருந்தினை எடுத்துக்கொள்வார். மற்றபடி மருத்துவரிடம் போனதே கிடையாது.
ஆச்சு.. தாத்தா உடுமலைக்கு ஒரு நாள் திரும்பிப்போனார். அடுத்து சில நாட்களில் யாரையும் கேட்காமல் தான் சாம்பாரித்த வீடு, பணம் மற்றும் நிலங்களை பிள்ளைகளுக்கு பிரித்துக்கொடுத்து அதற்கான தஸ்தாவேஜுக்கள், பத்திரத்தாள் அனைத்தையும் தயாரித்து சட்டப்படி தன் வாரிசுகளுக்கு பாத்தியதை செய்து கொடுத்து விட்டார்.
' சொத்துக்களை பிரிக்காமே உயில மட்டும் எழுதறத உட்டுட்டு…இப்புடு ஏமி அவசரம் நாயனா?!' என சிலர் கேட்டே விட்டார்கள். கடைசி வரை தான் செய்தது சரியென்றே நம்பினார் தாத்தா.
அடுத்த ஓரிரு வருடங்களில் அவருக்கு வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஆரம்பமாகி 87 வருடங்கள் மருத்துவரிடம் போகாத அவரை ஆசுபத்திரியில் சேர்த்து சட்டென்று போய்ச்சேர்ந்து விட்டார்.
“இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச்சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. உயில் என்பதே உறவுகளைச்சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச்சரியாக பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்” என அடிக்கடிசொல்லும் தாத்தா எதற்காக தான் மட்டும் உயில் எழுதாமல் இறப்பதற்கு முன் சொத்துக்களை பிரித்துக்கொடுத்தார் என்பது விளங்காத புதிர். ஒரு சமயம் உயில் மட்டும் எழுதிவைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் வருடம் உயிரோடிருந்திருப்பாரோ!
யாரிடமோ அவர் இப்படி சொல்லியிருந்ததாக சில நாட்கள் கழித்து எங்களுக்கு தெரிந்தது ' நா மரனாந்தரம் நா பில்லலு ஆஸ்தி கோசம் கோர்ட், கேஸ்ஸூன்னி போத்தாரா தெலிது.. நேனு மரனீஞ்சிலோப்பே ஆஸ்தினீ பஞ்சதம் சேசி வாளு ஆனந்தம்கா கலிசி உன்னாரன்டே நாக்கு சந்தோஷம் காதா?’(எனது மரணத்திற்குப்பிறகு சொத்துக்காக என் பிள்ளைகள் கோர்ட் வாசலை மிதிப்பார்களா தெரியாது.. அதனால் என் மரணத்திற்கு முன்பே ஆஸ்தியை பிரித்துக்கொடுத்து அவர்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்ப்பது எனக்கு சந்தோஷம் தானே?)
ராமசாமி தாத்தா இறந்தவுடன் அவரது பழைய தோல்ப்பையில் கண்டவை : வெள்ளி சாப்பாட்டுத்தட்டு, வெள்ளி தம்ளர், நாமக்கட்டி, மற்றும் சுடுகாட்டுச்செலவுக்கு கொஞ்சம் பணம்….
(ராமசாமி சீதாபதி ஶ்ரீதர்)