Tuesday, October 1, 2019

நமக்கு நண்பர்கள் தானே வாழ்க்கையே!

பம்பாய் செட்டாநகர் இருப்பது ஒரு ரெண்டுங்கெட்டான் இடம். செம்பூர் என சொல்லிக்கலாம் ஆனால் இருப்பது காட்கோபர் பெஸ்டம் சாகர் சமீபம். ‘செம்பூர் ஆலி!’ என பஸ்ஸில் யாரோ பேசிக்கொள்ள, அவசரமாக நாம் செட்டாநகரில் இறங்கினால் மறுபடியும் ஆட்டோ பிடித்து தான் செம்பூர்
செல்ல வேண்டியிருக்கும்.
ரயிலை விட்டிறங்கி மேலே பாலம் வழியாக ஸ்டேஷனுக்கு வெளியே வரும் வழக்கம் நிறைய பேருக்கு கிடையாது. ப்ளாட்ஃபார்மிலிருந்து தொப்.. தொப்பென குதித்து தண்டவாளங்களை தாண்டி வெளியே வந்து காந்தா பஜியா, ‘கன்னே கா ரஸ்’ (கரும்புச்சாறு) கடைகளை தாண்டி மேம்பாலத்துக்கு கீழே ‘சௌதாகர்’ சினிமா போஸ்டர்களை பார்த்துக்கொண்டே கோழிமுட்டை கடைகளை மூக்கை பிடித்துக்கொண்டே கடந்து முலுண்டு ஹைவேயை ஒட்டிய ரோட்டில் விடுவிடுவென கால்களை வீசி ஆறேழு நிமிடங்கள் நடந்தால் செட்டாநகர்...
சுமார் 50,60 கட்டிடங்கள், காசெட் கடை, ராஜ் ரெஸ்ட்ரோன்ட் எனும் திருநெல்வேலி அன்னாச்சி மெஸ், பக்கத்திலேயே அவர்களது மளிகைக்கடை, வெங்சர்க்காரின் அண்ணா வீடு, நடுவே பெரிய முருகன் கோவில். இது தான் செட்டாநகர். கோவிலைச்சுற்றி ராதா, விஜயா என்ற பெயர்களில் பழங்கால இரண்டு அல்லது மூன்றடுக்கு குடியிருப்புகள். வாசல் கேட் அருகே கைலியை மடித்துக்கட்டி, ஸ்கேல் வைத்து ட்ரிம் செய்தது போல சன்ன மீசையுடன் சிகரெட் வலித்துக்கொண்டிருக்கும் பாலக்காட்டு அப்பாக்கள்.
அந்த விஜயா பில்டிங்கில் தான் நாலைந்து சி.ஏ பிரம்மச்சாரிகளுடன் நான் தங்கியிருந்தேன். ரெங்கு, முரளி இருவருக்கும் ஶ்ரீரங்கம். சந்துருவும் (Balasubramaniam Chandrasekaran) இருந்தான். காலை நாஷ்டா கிடையாது. வெறும் காபியை குடித்துவிட்டு எல்லோரும் ஆபிசுக்கு ஓடிவோம். சாவகாசமாக 9 மணிக்கு பைக்கில் கிளம்பும் ஶ்ரீராமுக்கு ஆபிஸ் ஒர்லி பக்கம். ஶ்ரீராம் எனக்கு ஒரு வருடம் சீனியர். நல்ல உயரத்திற்கேற்ற பருமனுடன் ஆஜானுபாகுவான் தோற்றம். கபீர்பேடி தாடிக்கு பின்னால் அழகான சிரிப்பு.
நெடுநெடுவென உயரம் கொண்ட முரளி ப்ரீஃப்கேசுடன் அந்தேரி சாக்கிநாகாவுக்கு ரிக்ஷா பிடிப்பான். கோலிவாடா பக்கம் அவன் ஒருமுறை ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த போது சிக்னல் ஒன்றில் திருநங்கை ஒருவர் ஆட்டோவில் உட்கார்ந்திருந்த முரளியை அணுகி டப் டப்பென கைகொட்டி ‘காசு குடு ஐய்ரே!’ என கேட்டார். கேட்டுக்கொண்டருக்கும் போதே ஆட்டோ கிளம்ப, சடாரென அவன் சட்டைப்பையில் கையை விட்டு ரூபாய் நோட்டுக்கற்றையை எடுத்துக்கொண்டு ஓட, ‘ஏய்! என் பணம்.. பணம்’ என கத்தியபடியே பின்னால் முரளி ஓட, அடுத்த சில நிமிடங்களில் திருநங்கையை பிடித்து விட்டார்கள். நேராக போலிஸ் ஸ்டேஷன். ஆனால் அதற்குள் பணம் கைமாறி எங்கோ மறைந்து போக, ‘எங்க அப்பா அம்மாவுக்கு அனுப்ப வச்சிருந்த பணம் சார் அது’ என பரிதாபமாக முரளி சொல்ல திருநங்கையை அடி பிண்ணி எடுத்துவிட்டார்கள். அடி வாங்குவதை பார்க்க பரிதாபமாக இருக்கவே, ‘பணம் போனா பரவால்ல.. அடிச்சது போறும்.. அலியை விட்ருங்க!’ என முரளி கேட்டுக்கொண்டதும் விட்டுவிட்டார்கள். கோபம் என்பதே சிறிதளவும் முரளிக்கு கிடையாது. நண்பர்களுக்காக காசுபணம் செலவு செய்ய தயங்க மாட்டான்.
மாலை 7 மணியிலிருந்து வீட்டில் நண்பர்கள் கும்மாளம் தான். அமெரிக்கா விசா கிடைத்து சென்னையிலிருந்து ஶ்ரீரங்கத்து பையன்கள் நேராக எங்கள் அறையில் ஒரு வாரம் தங்கி அமெரிக்காவிற்கு விமானம் பிடிப்பான்கள். நடுவே திரும்ப இந்தியா வரும்போதும் பம்பாய் வழியாகத்தான் பயணம். அமெரிக்க சாக்ஸ், காசெட், சென்ட் என எங்களுக்கு கிடைக்கும். சிடி வந்த புதிது. ‘மீண்டும் மீண்டும் வா!’.... ‘வனிதா மணி’ பாடல்கள் சிடியில் எங்கள் ஹாலில் உரக்க ஒலிக்கும்.
பால்கனில் ஜீன்ஸ் பேண்ட்கள் உலர, பாத்ரூமில் கொழகொழ ரின் சோப், பெர்மனென்டாக ஒரு மூலையில் ஊறிக்கிடக்கும் ஜட்டி, பழுப்பு கலரில் கப்படிக்கும் ஈரத்துவாலை, தரையில் சுட்கேஸ்கள், இறைந்து கிடக்கும் புத்தகங்கள், ஆங்காங்கே காபி தம்ளர்கள்.. இது தான் எங்கள் வீடு.
ஒரு முறை ரெங்குவுக்கு வந்த இன்லேன்ட் லெட்டரை தவறி பிரித்து விட்டேன். (படிக்கவில்லை). ‘இப்ப என்ன பண்றது ஶ்ரீராம்?’ என கேட்டேன். மாலை ரெங்கு அறைக்கதவை திறக்க, தூரத்தில் ஶ்ரீராம் அந்த இன்லேண்ட் லெட்டருடன் ‘டேய்! உனக்கு லெட்டர்டா! பிரிக்கட்டுமா?’ எனக்கேட்டு விரலை விட்டு சரட்டென பிரிப்பது போல செய்ய ரெங்கு ஓடிவந்து லெட்டரை பிடுங்கிக்கொண்டான்.
8 மணிக்கு மேல் சுடச்சுட சாம்பார், தேங்காய் துருவிப்போட்ட கொத்தவரை பொறியல், கட்டித்தயிர் என திவ்யமான சாப்பாடு. சமையலில் பிரதான இடம் எனக்கு. ஞாயிரன்று ரவா தோசையே உண்டு. துபே எனும் வட இந்தியன் ஒரு காலை மட்டும் கிச்சன் மேடையில் வைத்து சப்பாத்தி போடுவான். காபி மற்றும் பத்து பாத்திரம் தேய்ப்பது ரெங்குவின் வேலை. இரவு பத்து மணிக்கு மேல் நடந்து போய் உ.பி பையா கடையில் மசாலா பால் வாங்கித்தருவான் சந்துரு.
பால்கனியில் நின்றுகொண்டு அக்கம்பக்கத்து மாடிகளில் இளம்பெண்களை சைட் அடிக்கும் வழக்கம் எல்லாம் எங்களுக்கு கிடையாது. காரணம் எந்த பெண்ணும் வெளியே வந்து நிற்க மாட்டார்கள். அப்படியே ஏதாவது பால்கனி கதவு திறந்தால் பாலக்காட்டு அப்பா தான் துணி உலர்ந்திக்கொண்டு நம்மை முறைப்பார்.
சென்னையில் ஆடிட்டர் அலுவலகம் புதிய கிளை திறந்து பம்பாயிலிருந்து முரளியை அனுப்பினார்கள். அப்போது தான் தன் காதல் மேட்டரை முரளி மெதுவாக எடுத்தான். பொறாமையுடன் கை குலுக்கினோம். அடுத்து ஶ்ரீராமுக்கு திருமணம் நிச்சயமானது. ரெங்கு அப்ப இன்னும் சின்னப்பையன். அமுக்கமாக அவனும் காதலித்துக்கொண்டிருந்தான். அவள் எங்களது நண்பன் Sridharan Rajaraman இன் தங்கை தான் எனத்தெரியாமல் நானும் ரெங்குவுடன் அவர்கள் வீட்டிற்கு போய் அப்பாவியாக மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, ரெங்கு அவளுக்கு ACS படிக்கலாமா என உபதேசம் செய்துகொண்டிருந்தான். (ACS பண்ணினாளோ இல்லியோ அடுத்த சில வருடங்களில் ரெங்கு அவளை கல்யாணம் பண்ணினான்). எனக்கு 92இல். அடுத்தடுத்து திருமணமாகி எல்லோரும் சட்டென பறந்தோம். அத்துடன் செம்பூர் வாசம் முடிந்தது.
சென்ற மாதம் முரளியிடமிருந்து குறுஞ்செய்தி. எப்படியோ 28 வருடங்கள்
கழித்து என்னையும் ஶ்ரீராமையும் கண்டுபிடித்து விட்டான். பெண்ணுக்கு கல்யாணமாம். அடுத்த சில நாட்களில் மதராஸ் உட்லண்ட்ஸில் இரண்டு நாள் தங்கியிருந்தபோது மூவரும் சந்தித்தோம். நரைமுடி, வழுக்கை, ஹேர்டை போன்ற சில சாமாச்சாரங்களை தவிர எந்தவித மாற்றமுமில்லாமல் அதே முக்கா பேண்ட்டுடன் 28 வருடங்கள் கழித்து சந்தித்தோம். ஶ்ரீகிருஷ்ணாவில் காபியுடன் அரட்டை.. ‘அவன் என்ன பண்றான்.. இவன் என்ன பண்றான்’ என பழைய நண்பர்களைப்பற்றிய விசாரிப்புகள், மறந்து போன கெட்ட வார்த்தைகள்.. அந்த காலத்தில் அடித்த சைட்கள், விட்ட ஜொள்கள், கிச்சன் மேடையில் ஒரு காலை தூக்கி வைத்து சப்பாத்தி இட்ட துபேயின் துர்மரணம், மறக்க முடியாத பழைய சம்பவங்கள்.. தோளுக்கு மேல் வளர்ந்த பையன்களிடம் நண்பர்களை அறிமுகப்படுத்தி.. ஒரு மணி நேரத்திற்கும் மேல் அரட்டை...
நமக்கு நண்பர்கள் தானே வாழ்க்கையே!
சீதாபதி ஶ்ரீதர்

No comments:

Post a Comment