Tuesday, October 1, 2019

டைம்பாஸ் கதைகள்-3

ஷார்ஜா நகரம். விடியற்காலை 5 மணி. ‘ஸ்கிப் ரிமூவல்’ எனப்படும் குப்பை அள்ளும் கனரக எந்திர லாரிகள் சாலைகளில் இயங்கிக்கொண்டிருக்கும் நேரம். அல்வாஹ்தா சாலை காலிகட் கஃப்டீரியாவின் பரோட்டா மாஸ்டர் எண்ணெய் தெளித்து ஈரத்துணியில் மூடி வைத்திருந்த மைதா மாவு உருண்டைகளை காற்றில் சுழற்றி வீசி தேய்த்து ச்சொத்தென சூடான கல்லில் போட சட்டென 20,30 பரோட்டாக்கள் ரெடி.
சமோவர் ச்சாய் எனப்படும் பாய்லர் டீ அருந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக கடைக்குள் நுழைந்தார்கள். ஷார்ஜா மற்றும் துபாயில் பெரும்பாலும் அரபிகள் விரும்பும் ஜாஃப்ரா (குங்குமப்பூ) மற்றும் கரக் டீக்கடைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே நம்மூர் பாய்லர் டீக்கடைகள் மிக பிரசித்தி பெற்றவை. அல்ரவாபி பால் லாரியிலிருந்து லபான்(தயிர்) மற்றும் யோகர்ட்(கட்டித்தயிர்) ட்ரேக்களை இறக்கி வைத்த மலையாளி டிரைவர் ஒரு கட்டாஞ்சாய் அடித்தான். சோள எண்ணெய் டின்கள் இறக்கிய பாகிஸ்தானிய சேல்ஸ்மேன் சூடான பரோட்டாவை சுருட்டி டீயில் முக்கி சாப்பிட்டு கல்லாவில் 6 திர்ஹாமை வைத்துவிட்டு மால்ப்ரோ பத்தவைத்தபடி மிட்சுபிஷி வேனில் கிளம்பினான்.
உளுந்நு வடா, உல்லி வடா, உண்டாம் பொறி, பழம்பொறி, எல அடா, சுகியன் என மஞ்சள் மஞ்சளாக சுடச்சுட பக்ஷ்ணங்கள் தயாராகி கடை வாசல் கண்ணாடி கூண்டில் வைக்கப்பட அடுத்த ஓரிரு மணி நேரத்தில் எண்ணை ஊறிய செய்தித்தாள் மட்டுமே மிஞ்சும். பாசுமதி அரிசி, ரெயின்போ பால் டின், டிஷ்யூ டப்பா, தக்காளி விழுது, மினரல் தண்ணீர் பாட்டில், ஈஸ்டர்ன் காரப்பொடி என மளிகை சாமான்கள் சப்ளை செய்யும் கம்பெனி சேல்ஸ்மேன்கள் மற்றும் கட்டுமான தொழிலாளிகளை நம்பி இயங்கும் உணவகம் அது. இட்லி, தோசை, பரோட்டா, ஆட்டா சப்பாத்தி, பாலப்பம், பத்திரி, புட்டு கடலகறி, பிரியாணி,குஸ்கா என இரவு 11 மணி வரை வியாபாரம் ஓடும்.
காலை 9 மணிக்கு கடைக்கு வந்து இன்றைய ஸ்பெஷல் போர்டில் ‘கேமல் பிரியாணி, மரவள்ளி கப்பா-மத்தி மீன் கறி, போ(B)ட்டி, ஆட்டின் தல’ என எழுதினான் ஷிபு, கடையின் முதலாளி. முப்பது வயதை எட்டியிருந்தாலும் சின்ன பையன் போல தெரிந்தான். சிவந்த ஒடிசலான தேகம். 20X 20 அடிக்கு சிறிய உணவகம், தடுப்பிற்க்கப்பால் அடுக்களையில் மூன்று ஃப்ரீ விசா லேபரர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தினான் ஷிபு.
12ஆம் வகுப்பிற்குப்பின் மேற்படிப்பு இல்லாமல் ஐக்கிய அரபு குடியரசு (UAE) வந்த ஷிபு அங்குமிங்கும் வேன் சேல்ஸ் மேனாக இருந்து விட்டு இந்த உணவகத்தை ஆரம்பித்து கடந்த ஆறேழு வருடத்தில் ஓரளவு முன்னுக்கு வந்தவன். கலியாணம் செய்துகொள்ள அம்மா வற்புறுத்தியும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தான் சாபுவை சந்திக்கும் வரை.
யார் இந்த சாபு!
துபாய் ஜுமேய்ரா கடற்கரை பகுதியில் 20 வருடங்களுக்கு முன் சின்ன கீத்துக்கொட்டாயில் அவன் வறுத்து விற்கும் மீன்களை கடைக்கு எதிரே டொயோட்டோ கிரெசிடாவில் உட்கார்ந்தபடியே சாப்பிடும் அரபி வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி, இன்று சுமார் 40 வாகனங்கள் அடைத்துக்கொண்டு நிற்க, உள்ளே 50 மற்றும் வெளியே 70 ஆள்கார் இருந்நு கழிக்க விசாலமான உணவகத்திற்கு அர்பாப் (முதலாளி) ஆனான் சாபு.
கஸ்டமர்கள் வரிசையில் இடித்துக்கொண்டு முன்னேறி கவுன்ட்டருக்கு அப்பால் பெரிய தாம்பாளத்திலிருக்கும் மீன்களை தேர்வு செய்து பணம் கொடுத்து விட்டு டிவி திரையில் தெரியும் டோக்கன் நம்பருக்காக இருக்கையில் காத்திருக்க, கத்தியால் அங்கங்கே கோடு கிழித்து மசாலை தடவிய, குறைந்தது இரண்டு முழ நீளம் கொண்ட ஹமூர், ஷாரி, சாஃபி மீன்கள் உடனடியாக நீச்சல் குளம் போன்ற ராட்சத கடாயில் கொதிக்கும் எண்ணெயில் செல்லமாக இறக்கப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் நீர்மூழ்கி கப்பல் போல வெளியே எடுக்கப்பட்டு, எலுமிச்சை மற்றும் கிரீன் சாலட் படுக்கையில் கிடத்தி மேசைகளுக்கு போக, ஷார்ஜா, உம்அல் குய்ன், அல் அய்ன், ராசல் கைமா, அபுதாபி பக்கமிருந்து லெக்சஸ் மற்றும் லாண்ட் க்ரூசரில் வரும் எமராட்டிகள், துருக்கிய, சிரிய, லெபனீய அரேபியர்கள், இந்தியர்கள் மற்றும் நெஞ்சுக்கு மேல் இறுக்கிக்கட்டிய குட்டை பாவாடையுடன் வரும் வெள்ளைக்கார யுவதிகள் எல்லோரும் டிஷ்யூ பேப்பரில் மூக்கை துடைத்துக்கொண்டு, பெப்சி கோக்குடன் முள் கரண்டியால் குத்தி எடுத்து கார மீனை சுவைப்பார்கள். கூடவே கேரள மைதா பரோட்டா மற்றும் மீன் குழம்பு. மாரினேட் செய்யப்பட்ட இறால் மீன்களை இரண்டு ஜல்லிக்கரண்டிகளால் அள்ளி எண்ணெயில் வீசி வறுத்து கிலோ 150 திர்ஹாமுக்கு (சுமார் ரூ 3000) விற்க, மலையாளி சாபுவின் கல்லா அரபிகளாலும் ஐரோப்பியர்களாலும் நிரம்பி வழிந்தது.
கேரள வடகராவில் பெரிய நவீன மங்களூர் ஓடுகள் கொண்ட வீடுகளையும் நிலங்களையும் வளைத்துப்போட்டு பெரும்புள்ளியான சாபு வீட்டு வாசலில் தேர்தல் நிதி கேட்டு அனைத்து கட்சிகளும் நில்குந்நது தாங்ஙள் அறியோ?
காலிகட் கஃப்டீரியா ஷிபுவும் ஃபிஷ் ஃப்ரை சாபுவும் சந்தித்தது தற்செயலாக. பத்தனம்திட்டாவில் ஒரு கலியாண வைபவத்தில் சந்தித்த போது இருவரும் ஷார்ஜா/துபாயில் இருப்பது தெரிந்து கொண்டார்கள். தத்தம் வியாபாரத்தைப்பற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது ‘சேட்டா! ஈ போட்டோவில் யாரானு... ஓர்மையுண்டோ?’ என பழைய ஆல்பத்தை சாபுவிடம் ஓடி வந்து காட்டிய அந்த பெண்ணை ஷிபு பார்த்த மாத்திரத்தில் சட்டென வியர்த்தான்.
வாளை மீன் போல சீராக வளைத்து த்ரெட்டிங் செய்யப்பட்ட புருவங்கள். இயற்கையிலேயே அடர்த்தியான கண் இமை முடிகள், ஓரளவு தடித்த சுண்டுகளால் (அதரங்கள்) கழுத்திலிருக்கும் டாலரை அவள் கடித்துக்கொண்டே பேச எச்சிலை விழுங்கினான் ஷிபு. அந்தக்கால வனிதாவை நினைவுபடுத்தும் பொதக்கென உருவம். அவள் கட்டியிருந்த புசுபுசு புடவை அவளை மேலும் குண்டாக்கி காட்டியது. டங்ங்...கென அண்ணன் சாபு பக்கத்தில் பெஞ்ச்சில் உட்கார்ந்து ஷிபுவின் மனத்தையும் சேர்ந்து அதிர வைத்தாள். அந்த நொடியே ‘ஈ பெண்குட்டி எனிக்கானு!’ என முடிவு செய்தான் ஷிபு. சாபுவின் தங்கையாம். பெயர் ஷைனி. பெயரைப்போலவே மின்னித்தொலைத்து ஷிபுவை ஏகத்துக்கும் சித்ரவதை செய்தாள்.
பரோட்டாவுக்கு ஊறவைத்த மைதா போல மிருதுவான சருமம். ஆவியில் வேகமாக வைத்த மரவள்ளி கால்கள். விரல் நகங்களுக்கு சர்வ ஜாக்கிரதையாக பிசிறில்லாமல் லேசான பிங்க் கலர் பாலிஷ் இட்டிருந்ததை கவனித்த ஷிபு, இவளை இரு கைகளால் அப்படியே அலேக்காக தூக்கினால் எப்படியிருக்குமென கற்பனை செய்து தன்னையுமறியாமல் சிரிப்பதை ஷைனி மட்டுமல்ல அவளது அண்ணன் சாபுவும் பார்த்தான்.
கலியாணமே வேண்டாமென தள்ளிப்போட்ட ஷிபுவா உடனே திருமணம் வேண்டுமென்கிறானென அம்மை வியந்தாள். கிறுஸ்துவப்பெண்ணாயிற்றே..ஏற்றுக்கொள்வார்களா என இவர்கள் யோசிக்க, இந்துவா! வேணாம்ப்பா! என்றது மற்ற தரப்பு. முடிவு எடுக்கத்தெரியாத சேஃபர் சைட் உறவினர்கள் சிலர் ‘பாத்து யோசிச்சு முடிவு எடுங்க’ என அட்வைஸ் (?) கொடுத்து ஒதுங்கிக்கொண்டார்கள்.
ஷைனி படித்தவள், கொல்லஞ்சேரி செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியில் உதவி பேராசிரியை. தன் ஒரே தங்கைக்கு படித்த பையன் தான் வேண்டுமென்று சாபு கட்டன்ரைட்டாக சொன்னது ஷிபுவிற்கு ஏமாற்றத்தை அளித்தாலும் துபாயில் அவனை சந்திக்கும்போதெல்லாம் பெண் கேட்டு ஷிபு நச்சரிக்க ஆரம்பித்தான். ‘ஏம்ப்பா! அவனும் உன்னை மாதிரி ஹோட்டல் வச்சி நடத்தறான். நல்லா போய்ட்டிருக்கு! உந்தங்கைய அவனுக்கு கொடுத்தா என்ன?’ என மற்ற நண்பர்கள் சொல்லியும் சாபு மறுத்தான்.
‘வளைகுடாவுல ஹோட்டல் தொழில் ஓரளவு லாபகரமாக இருந்தாலும் நிரந்தர வருமானம் என சொல்ல முடியாது ரவியட்டா! .. தவிர அரசு விதிமுறைகள் அதிக கெடுபிடி.. வியாபாரத்தில் போட்டி.. திடீரென உணவு சுகாதாரத்துறையினரின் அதிரடி சோதனையில் சிறிய குறைகளிருந்தாலும் உரிமம் ரத்து.. நெறைய பிரச்னைகள் உண்டு.’ இந்த தொழில் செய்யும் பையனே வேண்டாமென தீர்க்கமாக சொல்லிவிட்டான் சாபு.
ஞாயிறன்று தேவாலயத்திற்கு வரும் படித்த இளம் ஜோடிகளை பார்க்கும் போதும், மாலை 6 மணிக்கு மேல் துபாய் பாலைவனம், ஜுமெய்ரா பீச், சினிமா என சுற்றும் குடும்பங்களின் சந்தோஷம், இரவு பன்னிரண்டு வரை உழைக்கும் ஹோட்டல்காரர்களுக்கு இல்லையென்பதை சாபு உணர்ந்தாலும், தானும் படிக்காததால் இத்தொழிலை விட்டுவிட முடியாமல் இருந்தான். வருமானம் குறைவாக இருந்தாலும் படித்த மாப்பிள்ளையே தங்கைக்கு பார்க்க வேண்டுமென்பதில் கறாராக இருந்தான். ஷிபு பொறுமை இழக்க ஆரம்பித்தான்.
முகநூலில் ஷிபுவின் நடவடிக்கைகள், போட்டோக்கள் என அவனைப்பற்றிய விபரங்களனைத்தும் கண்டறிந்த ஷைனியின் தோழிகள் ‘புள்ளி ஓக்கேயானு.. கொள்ளாம்’ என சிபாரிசு செய்ய, ஷைனியும் அவனை ஏற்றுக்கொள்ள இசைந்து, ஷிபுவின் அம்மா முயற்சி செய்தும் பயனில்லை. சாபு மட்டுமே இந்த கலியாணத்திற்கு குறுக்கே இருந்தான்.
சாபுவை காண ஒருநாள் இரவு 9 மணிக்கு உணவகத்திற்கு வந்த ஷிபு நேராக பின்கட்டிற்கு விரைந்தான். மீன்களை வெட்டிக்கொண்டிருந்த சாபுவிடம் மறுபடியும் கலியாண விஷயத்தைப் பற்றி பேச, சாபு வழக்கம்போல மறுக்க, வார்த்தை முற்றி சட்டென சாபுவிடமிருந்து கத்தியை பிடுங்கினான். நல்லவேளை கடை ஊழியர்கள் வந்து இருவரையும் விலக்கி, ஷிபு அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.
பின் குறிப்பு:
சாபு எதிர்பார்த்தபடியே ஒருநாள் சுகாதாரத்துறையினரின் அதிரடி சோதனையில் விதிமுறைக்கு மாறாக இருந்த ஏதோ ஒரு சிறு காரணத்திற்காக ஷிபுவின் கடை உரிமம் இரத்தானது. சாபுவிற்கு பெருத்த சந்தோஷம். இதை காரணம் காட்டி கல்யாணத்திற்கு மறுப்பு சொல்லிவிடலாம் என நிம்மதியாக சரிந்து உட்கார்ந்த மறு நிமிடம் தொலைபேசி.. உரிமம் ரத்தான மறுநாளே ஷிபுவும் ஷைனியும் திருமணம் செய்துகொண்டார்களாம்.

No comments:

Post a Comment